Saturday, 25 August 2012

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 1

இசையை ரசிப்பதைத் தவிர வேறொன்றுமே அறியாத பலபேரில் நானும் ஒருவன்.  சிறுவயதில் All Iyer Radio வில், ச்சே..., All India Radio வில் மங்கள இசை, வாத்திய இசை, பாமாலை என்று எந்நேரமும் யாராவது இழவு வீட்டில் ஒத்தைக் கிழவி அழுவது போல  பாடுவதைத் தான் சங்கீதம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒப்பாரி துவங்கும் முன் அறிவிப்பாளர், அது இன்ன கீர்த்தனை, இன்ன ராகம் என்று சொல்லுவார்.  பெரும்பாலும் கல்யாணி ராகம், ஆதி அல்லது ரூபக தாளங்களை அறிவித்துத் தான் கேட்டிருக்கிறேன். சாஸ்த்ரிய சங்கீதத்தின் அறிவு இன்றுவரை எனக்கு அவ்வளவே...!!  வயதும் அனுபவமும் வளர வளர ஒவ்வொரு திரைப் பாடலும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராகங்களைக் கொண்டதுதான், ஒப்பாரியில்(!) நன்கு கற்றுத் தேர்ந்தவர்களால் தான் சினிமா பாடலும் பாட முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

கீரவாணியையோ, அம்ருதவர்ஷிணியையோ ஆராய்வதல்ல இப்பதிவின் நோக்கம்.  என்னை முழுவதுமாக எடுத்து ஆட்கொண்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களின் தொகுப்பும் பகிர்வும்தான் இது.  சில பாடல்கள் கேட்டவுடன் துள்ள வைக்கும், சில ஆட வைக்கும், சில ஓட வைக்கும், சில பாட வைக்கும், சில தாளம் போட வைக்கும், சில அமைதியாக ரசிக்க வைக்கும், சில சந்தோஷத்தை அல்லது துக்கத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும், சில தொடர்ந்து கேட்க வைக்கும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  பாடல்களும் ரசனையும் ஒருவருக்கொருவர் அவருடைய குணநலன்களுக்கு, மனநிலைக்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டே இருக்கும்.

சில பாடல்களை எப்போது எங்கே கேட்க நேர்ந்தாலும் அங்கே அப்படியே நின்றுவிடுவேன்.  அப்பாடல் எனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ நிச்சயம் இருக்கும்.  எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.  இருந்தாலும் நின்று கேட்பேன்.  சில பாடல்களில் குறிப்பிட்ட இடங்களைக் கடக்கும் போது அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்து விடும்.  அவை காதல் பாடல்களாகவோ, சோகப் பாடல்களாகவோ, வருணனைப் பாடல்களாகவோ, எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கண்ணில் நீரை வரவழைத்து விடும்.  பாடகரா, கவிஞரா, இசையைமைப்பாளரா யார் உருக வைத்தார் என்று சொல்வது கடினம்.  அவற்றில் சில.....


சேலத்திற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு வந்த புதிதில் பக்கத்து வீட்டில் உள்ள கருப்புவெள்ளை டிவியில் அப்பப்போ சென்று அதில் என்ன ஓடினாலும் பார்ப்பது வழக்கம், ஒரு விடுமுறை நாளன்று அவர்கள் வீட்டில் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து பல படங்களைப் போட்டு விடிய விடிய பார்த்தார்கள்.  அதில் நான் பார்த்த படம் "நினைவெல்லாம் நித்யா".  வெறும் பாடல்களுக்காக ஓடிய பல படங்களில் அதுவும் ஒன்று.  வைரமுத்து+இளையராஜா=கேட்கவே வேண்டாம்.   "ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்..." பாடலை SPBயும் ஜானகியும் பாடியிருப்பார்கள்.  எப்போது கேட்டாலும் இப்பாடலில் வரும் இரண்டாவது சரணம் என்னை உருக்கி விடும்.

பெண்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன், இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் (2)
ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன்! கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்!(2)
 

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் நான்...
SPB, "நீ  கட்டும் சேலைக்கு நூலாவேன் நான்" என முடிக்கும் போது என்னை என்னால் கட்டுப் படுத்தவே இயலாது.  நானும் கூடவே பாடிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொள்வேன்.

1983 -இல் வந்த "ஆனந்தக் கும்மி" என்று ஒரு படம்.  இதுவரை அந்தப் படத்தைப் பார்த்ததில்லை.  "ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது....", "ஊமை நெஞ்சின் ஓசைகள், காதில் கேளாதோ..." போன்ற super hit பாடல்களைக் கொண்டும் ஊத்திக் கொண்ட ஒரு படம்.  அதில் "ஓ.. வெண்ணிலாவே வா ஓடி வா..." என்ற ஒரு பாடல்.  இதுவும் இளையராஜா+வைரமுத்து+SPB+ஜானகி கொண்ட கூட்டணி.   இப்பாடலின் இரண்டாவது சரணம்,

ஆண்: இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு இதுதான் முடிவு வேறேது
பெண்: இறக்கும்போதும் இதுவே போதும் இனிமேல் பிறவி வாராது
ஆண்: காதல் மாலை சூடும் வேளை அழுகை ஏனோ கூடாது
பெண்: நிலவே நீயும் தூங்காதே...ஹோய் 

 
"இது தான் முடிவு வேறேது" என SPB உருக்க, "இறக்கும் போதும் இதுவே போதும்", என்பதில் அந்த "இதுவே...ஏ...ஏ..." என ஜானகி கொஞ்சி கொஞ்சி இழுப்பார் பாருங்க...
திருவாசகத்திற்கு உருகாதவரும் உருகி விடுவார்.  

தில்லுமுல்லு படத்திற்குப் பிறகு வந்த ரஜினியின் முழுநீள நகைச்சுவைப் படம் "தம்பிக்கு எந்த ஊரு""காதலின் தீபம் ஒன்று..." பாடலை இன்று கூட இரவு பத்து மணிக்கு மேல் எப்.எம்.லும் மியூசிக் சேனல்களிலும் தினமும் கேட்கலாம், பார்க்கலாம்.  இப்பாடலைப் பற்றியே தனியே ஒரு பதிவு போடலாம்.  இளையராஜா +SPB +பஞ்சு அருணாசலம்+ரஜினி கூட்டணி இது.  இப்பாடல் இன்றும் கொடிகட்டிப் பறக்க காரணம், ராஜாவின் உலுக்கும் இசையா, SPBயின் மயக்கும் குரலா, ரஜினியின் இயல்பான காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் நடிப்பா என பட்டிமன்றமே வைக்கலாம்.  இப்பாடலின் இரண்டாவது சரணம்,

என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன் (2)
பொன்னிலே பூவை அள்ளும் ஆ ஆ ஆ ஆ....
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல...வா...

 இப்பாடலில், "பொன்னிலே பூவை அள்ளும்"க்குப் பிறகு ஒரு ஹம்மிங்கா, ஆலாபனையா என்ற வகையில் "ஆ..ஆ..ஆ..ஆ.ஆ.." என்று இழுத்து கேட்பவரை நிலைகுலையச் செய்வார் SPB.

அப்பா - மகன் இரு வேடங்களில் ரஜினி கலக்கிய படம் "நெற்றிக் கண்".  "தீராத விளையாட்டுப் பிள்ளை", "மாப்பிள்ளைக்கு மாமன் மனசு" போன்ற துள்ளல் பாடல்கள்.  ஸ்திரீலோலானான அப்பா ரஜினிக்கு டிரைவராகவும், "எல்லாமே" ஏற்பாடு செய்து தருபவராகவும் கவுண்டமணி வருவார்.  "மாப்பிள்ளைக்கு" பாட்டில் கர்னாடிக்கும் வெஸ்டர்னும் கலந்துகட்டி அடிக்கும்.  இளையராஜா+கண்ணதாசன்+ஜேசுதாஸ்+ஜானகி கூட்டணியில் "ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்" என்ற மெலோடியின் இரண்டாவது சரணத்தில்,

ஆண்: இடையும் கொடியும், குலுங்கும் நடையும் மொழியும்
பெண்: ஹ ஆ ஆ....
ஆண்: எடை போட கம்பன் இல்லை, எனக்கந்த திறனும் இல்லை, இலை மூடும் வாழை பருவம்
பெண்: மடி மீது கோவில் கொண்டு....
ஆண்: லல லல லல லல லா...
பெண்: மடி மீது கோவில் கொண்டு, மழைகாலம் வெயில் கண்டு, சிலையாக நான் நிற்பதே அற்புதம்...


 இடையும் கொடியும், குலுங்கும் நடையும் மொழியும் என ஜேசுதாஸ் முடிக்கும் பொழுது, ஜானகி ஹஸ்கியான குரலில் "ஹா..ஆ...ஆ..." என்பதாகட்டும், சரணத்தை முடிக்கும் பொழுது குரலை தாழ்த்தி "சிலையாக நான் நிற்பதே அற்புதம்"  என கொஞ்சுவதாகட்டும், சும்மா உருக்கி எடுத்துவிடுவார்...

1991 -இல் ஸ்ரீதர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக (நம்ம சீயான் விக்ரமே தான்) நடித்து வெளிவந்த வேகத்தில் பெட்டிக்குள் போன படம் "தந்து விட்டேன் என்னை".  இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரணகளமாக இருக்கும்.  துரதிஷ்டவசமாக இப்படமும் ஓடவில்லை, பாடல்களும் ஹிட்டடிக்கவில்லை.  இப்படத்தில் "கண்களுக்குள் உன்னை எழுது" என்று ஜானகி பாடிய பாடலில் முதல் சரணம் மற்றும் சரணம் முடிந்து மீண்டும் பல்லவியும் அனுபல்லவியும் தொடரும் இடத்தில்...

கண்ணிலே போதை ஏற்றினாய், நெஞ்சிலே காதல் மூட்டினாய்(2)
பெண்மையின் வீணையை மீட்டினாய்,
ஆண்மையின் தூண்டிலில் மாட்டினாய்
ஏனிந்த மயக்கம், ஏனிந்த குழப்பம், ஏனென்று தானென்று என் மனம் தவிக்கும்
கண்களுக்குள் உன்னை எழுது, நெஞ்சமெங்கும் உந்தன் நினைவு(2)
பகலில் ஏதோ கனவு, அலைபோல் மோதும் நினைவு....
என்ன இது, என்ன இது புது புது மயக்கம்


"கண்ணிலே போதை ஏற்றினாய்" என்பதை இரண்டாம் முறை பாடும் போது "ஏற்றினாய்" என்பதை முடிக்கும் தருவாயில் "....ஆய்......ஆய்.." என்று மழலையில் பாடுவார் ஜானகி.  பல்லவியில் "அலைபோல் மோதும் நினைவு" என்பதில் "அலை போ..ஓ..ஓ..இல், மோதும் நினைவு...ஊ..ஊ..ஊ" கொஞ்சும் போது உணர்ச்சிவசப் படாமல் இருக்க இயலாது. 

90-களின் ஆரம்பத்தில் "புதிய ஸ்வரங்கள்" என்று ஒரு படத்தின் ஆடியோ காசெட் மட்டுமே ரிலீஸ் ஆனது.  இளையராஜாவின் இசையில் "ஓ...வானம் உள்ள காலம் மட்டும்", "ஒரு காதல் ராகம் பாடும் பூவிது" போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த காசெட் அது.  SPB யும், சித்ராவும் பாடிய பாடல் """"""" புது காவேரி கரை மீது அமராவதி"   பாடலின் இரண்டாவது சரணத்தில்...

ஆண்:காளிதாசன் போல நானும் மாற வேண்டும் காதலி, கவிதை போல என்னைக் காதலி
பெண்: ஏழுஜென்மம் அல்ல நூறுஜென்மம் சேர்ந்து வாழலாம், காதல் என்ற தேசம் ஆளலாம்
ஆண்: பாலும் தேனும் மூடிவைத்து பாவை என்று ஆனதோ, பாசமோடு என்னைச் சேருதோ
பெண்: நானும் நீயும் சேர வேண்டும் என்று தேவன் ஆணையோ, நாளும் சூடும் நாத மாலையோ
ஆண்: இது காதல் ஸ்வரம், பல காலம் வரும், இது சுகமான சுகமே தரும்..

 
இப்பாடலில் ஆண் குரலை echo எபக்டிலும் பெண் குரலை வழமையாக உள்ளவாரும் செய்திருப்பார் ராஜா.  இரண்டாவது சரணத்தின் முடிவில் "இது காதல் ஸ்வரம், பல காலம் வரும்" என்று SPB பாடுவதைக் கேட்டால் காதல்வயப் படாமல் இருக்க முடியாது.

காலம் போன காலத்தில் நம்ம ஜிவாஜி இளைய ஹீரோவாக ஸ்ரீப்ரியாவுடன் சோடி போட்டு நடித்து 1979 இல் வெளிவந்த படம் "பட்டாக் கத்தி பைரவன்."  இது ஒரு தெலுங்கு ரீமேக் படம் என்று நினைக்கிறன்.  இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் SPBயும் ஜானகியும் பாடிய இரண்டு பாடல்கள் செம ஹிட்.  "தேவதை...ஒரு தேவதை....பறந்து வந்தாள்", மற்றும் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்".  இதில் "எங்கெங்கோ" பாடலில்
 

பெண்: ஆ.. நான் காண்பது உன் கோலமே அங்கும்... இங்கும்... எங்கும்...
ண்: ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும்... இன்றும்... என்றும்...
பெண்: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ.. நீ..நீ..


 அங்கும்...இங்கும்...எங்கும்... என்ற இடத்தில் அங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்..., இங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.., எங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. என ஜானகியும்
அன்றும்..இன்றும்..என்றும்... என்ற இடத்தில் அன்றும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. இன்றும்..ம்ம்..ம்ம்..ம்ம்.., என்றும்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. என SPBயும்  பிரித்து மேய்ந்திருப்பார்கள்.  இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.  ஏனென்றால் அந்த "ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்.." ஹம்மிங்கிற்கு நம்ம நடிகர் திலகம் ஜிவாஜி வாயைக் குவித்துக் கொண்டு செய்யும் சேஷ்ட்டையைப் பார்த்தால் நிச்சயம் ஜெலுஸிலோ, டைஜினோ தேவைப் படும்.

அலையலையாக மனதைச் சுற்றி வரும் பல பாடல்கள் இதுபோல் எழுத எழுத வந்துகொண்டே இருக்கின்றன.   மேலே பகிரப்பட்ட பாடல்கள் வெகு சொற்பமே.  மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாம் பாகத்துடன் தொடர்கிறேன்.

அன்புடன்
மலர்வண்ணன்


8 comments :

 1. அடடா..! அண்ணே இவ்வளவு நாள் எங்கண்ணே இருந்தீங்க.. உங்களைத்தான் நான் தேடிட்டு இருந்தேன்.. நீங்க குறிப்பிட்ட ஒவ்வொரு பாடலும் எனக்கும் பிடிக்கும். ஒவ்வொரு வரியும் எனக்கும் பிடிக்ககும்.. ஏன்.. இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொரு தமிழனும் ரசிச்சு கேட்கிற வார்த்தைகள், வரிகள்.. உயிர்ப்புடன் கூடிய இளைராஜாவின் இசையும் சேரும் போது கண்கள் என்ன? மனமும் கலங்கவே செய்யும்.. அற்புதம் போங்க..!

  நல்லாவே தொகுத்து கொடுத்திருக்கீங்க.. ஒவ்வொரு பாட்டையும் போட்டு கேட்கும் போது நீங்கள் சொன்னதுபோலவே மனசை ஆழமாக பாதிக்குது..!!!


  ரொம்ப நன்றிங்கண்ணே..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தங்கமே...!!
   தமிழால், இசையால் இணைவோம்...
   இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

   Delete
 2. நீங்கள் சொன்ன அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை...
  நானும் ராஜா ரசிகன் தான்..

  ReplyDelete
  Replies
  1. ராஜாவை ரசிக்காமல் இருக்க முடியுங்களா ?! பல தருணங்களில் என் சுவாசமே ராஜாவின் இசை தான்...

   Delete
 3. இது பதிவிற்குத் தொடர்பில்லாதது..
  ஒரு பதிவில் நீங்கள் அனந்து-பால சந்தரின் உதவியாளர் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்; அவரது மறைவிற்குப் பின்னர் பாலச்சந்தர் தொடர்ந்து ஊத்திக் கொள்வதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்...

  சிறிது ஆர்வத்தில் தேடியபோது அவரைப்பற்றி எந்த செய்தியும் இணையத்தில் இல்லை;பாலச்சந்தரின் விக்கி பக்கத்தில் கூட அவரது பெயருக்கு தொடுப்பு இல்லை,மற்ற அனைவருக்கும் தொடுப்புடன் செய்திப் பக்கங்கள் இருக்கின்றன.

  அவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் இருந்தால் அறியத்தரவும்..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அனந்தின் மறைவிற்குப் பிறகு, இல்லாமல் பாலச்சந்தர் எடுத்த படங்கள் கல்கி, பார்த்தாலே பரவசம் & பொய்... மூன்றும் ஊத்திக் கொள்ள, கவிதாலாயாவிலும் பட்ஜெட் இல்லாமல், வேறு இளிச்சவாய் தாயாரிப்பாளர்களும் கிடைக்காமல் சின்னத் திரையிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
   யார் இந்த அனந்து? கவிதாலயா தயாரிப்பில் "சிகரம்" என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். SPB இசையமைப்பாளராக நடித்ததோடு மட்டுமல்லாமல் அப்படத்திற்கு இசையும் அவர்தான். அனந்து இயக்கிய முதலும் கடைசியுமான படம் அதுதான். படத்தை காட்சிக்குக் காட்சி நன்கு கவனத்தீர்களானால் பாலச்சந்தரின் கைவண்ணம் படம் முழுவதும் விரவியிருப்பது தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால் பாலச்சந்தர் இயக்கிய பல படங்கள் அனந்தின் கைவண்ணமே... சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள், புன்னகை மன்னன், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், அழகன், வானமே எல்லை, ஜாதி மல்லி என பல படங்களின் டைட்டில் கார்டுகளை மீண்டும் பார்க்க நேரிட்டால் நன்கு கவனியுங்கள், அனந்துவின் பெயர் அதில் இருக்கும்... அளவுக்கதிகமான குருபக்தியா? வெளியே சென்றால் நசுக்கி விடுவாரோ என்ற பயமா? அடிமை சாசனமா? அனந்துவின் அமுக்கலுக்குக் காரணம் எதுவென்றே தெரியவில்லை...
   பவித்ரன் வெளிவந்ததில் எஸ்.ஏ.சந்திரசேகர் வீழ்ந்ததும், ஷங்கர் வெளிவந்ததில் பவித்ரன் வீழ்ந்ததும், மணிவண்ணன் வெளிவந்ததும் பாரதிராஜா த்ரில்லர் படங்கள் எடுப்பதை நிறுத்தியதும் (அப்படியும் "கேப்டன் மகள்" என ஒன்று எடுத்து ஊத்திக் கொண்டது), லிங்குசாமி வெளிவந்ததில் எழிலும், விக்ரமனும் வீழ்ந்ததும் போல அனந்துவின் மறைவிற்குப் பிறகு பாலச்சந்தரால் எழ முடியவில்லை, அது நடவாத ஒன்று...

   Delete
 4. அருமை... ஜேசுதாசையும், உன்னி மேனனையும் கலாய்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவோம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விஜய்

   ஜேசுதாஸ், உன்னிமேனன், உதித் நாராயணன், என பல டிக்கெட்டுகள் இருக்கின்றன... ஒரு தனிப் பதிவில் இவர்களை ஒட்டுமொத்தமாக கலாய்த்து விடலாம்.

   Delete