Tuesday, 10 September 2013

நிறைநீர நீரவர் கேண்மை

ஈமெயிலும் செல்போனும் வந்த பிறகு தமிழின் எழுத்துப் பயன்பாடு காவல் நிலையத்தில் புகார் எழுத, அரசு அலுவலகத்தில் மனு கொடுக்க, வீடு-நிலம் கிரயம் செய்ய மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டு வந்தது wordpress, blog போன்றவை வரும் வரை.

எழுத்தாளர்களின் மற்றும் எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்களின் எழுத்தை மட்டும் தான் பிறர் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் எழுதலாம், பகிர்ந்து கொள்ளலாம், விமர்சனம் செய்யலாம் என்ற நிலையை wordpress-ம்  blog-ம் உருவாக்கிக் கொடுத்துள்ளன.  இன்ட்லி, தமிழ்மணம், கீற்று உள்ளிட்ட வலைதளங்கள் பகிர்தலை செவ்வனே செய்து வருகின்றன.  தவிர facebook, twitter போன்ற சமூக வலைதளங்களில் தமிழ் உள்ளே நுழைய ஆர்வமுடன் பலரும் தங்கள் நிலைப்பாட்டையும், சிந்தனைகளையும்(!), கருத்துக்களையும், பகடிகளையும், விருப்பு வெறுப்புக்களையும், கோஷ்டிச் சண்டைகளையும் தாய்மொழியில் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது உலகெங்கும் தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ப்ளாக்கர்ஸ் தங்கள் படைப்புகளை, கருத்துக்களை எழுதி வருகின்றனர்.  முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் பெரிய இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.  என்னைப் போல் "ஏனோ தானோ" என எழுதுபவர்கள், கும்மியடிப்பவர்கள், திரைவிமர்சனம் எழுதுபவர்கள், விளையாட்டு விமர்சகர்கள், வம்புச்சண்டைவாதிகள்  நீங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மிக சீரியஸாக வரலாறு, பொருளாதாரம், அரசியல், உலக சினிமா, நூல் விமர்சனம், தொடர்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கணம், இலக்கியம் என பட்டையைக் கிளப்புகின்றனர்.

"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற நிலை மாறி "தமிழ் இனி மிக மிக மெல்லச் சாகலாம்" என்ற நிலைக்கு தமிழ் உயரக் காரணமானவர்களில் இந்த ப்ளாகர்ஸ் முக்கிய இடம் வகிக்கின்றனர்.  இவர்களை ஒன்றிணைத்து அழகு பார்த்தால் என்ன என்ற எண்ணம் உருவாக சில மூத்த (ப்ளாக் எழுதுவதில் மட்டும்) பதிவர்கள் இணைந்து 2012-ல் முதலாம் உலகத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக நடத்தியும் காட்டினர்.  தொடர்ந்து இந்த வருடமும் மேலும் சிறப்பாக, பிரபல சமூக  எழுத்தாளர்கள் பங்கு பெற்று வாழ்த்த சென்னையில் நடத்திக் காட்டினர்.

ப்ளாகர்ஸ் பலரும் இளைஞர்கள் என்பது எதிர்பாரா மகிழ்ச்சி.  கணிசமான அளவில் பெண்களும்,  7 வயது முதல் 70 வயது உள்ள பல பிளாக்கர்களும் விழாவிற்கு வந்திருந்து வியப்பில் ஆழ்த்தினர்.   எழுத்தாளர்கள் பாமரன், வா.மு.கோமு, புலவர் ராமானுசம் போன்றோரை நேரில் சந்தித்து பேசியது பெருமையாக இருந்தது.  முகம் தெரியாத பலரும் தமிழால் இணைந்து, நாள் முழுதும் நேரம் போவது தெரியாமல், வயது வித்தியாசம் இல்லாமல், பல(ர்) கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட அற்புதமான மன நிம்மதியை கொடுத்த நாள் அது.


விழாக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..!


- அன்புடன்
- மலர்வண்ணன்


4 comments :

 1. மிகவும் சந்தோசமான மறக்க முடியாத நாள் ... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி DD .. இங்கே போட்டோவில் இருப்பதை விட நேரில் இன்னும் இளமையாக இருந்தீர்கள்..!!

   Delete
 2. தங்களை சந்தித்து உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான் ஸ்கூல் பாய்...

   Delete