Tuesday 17 December 2013

பாம்பின் கால்...!!!

இரண்டு நாட்களுக்கு முன் எமது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் வழக்கம் போல் காலை அலுவலகத்தைத் திறந்தால், நடு ஹாலில் சுமார் எட்டடியிலிருந்து பத்தடி நீளமுள்ள கருநாகம் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருந்திருக்கிறது.  அடிப்பதற்கு குறைந்தது மூன்று பேராவது வேண்டும், அவ்வளவு நீளம், மற்றும் உடல்வாகு கொண்ட முரட்டு ஜீவன்.  கதவைத் திறந்து விட்டு ஒரு தடியை வைத்து விரட்டியிருக்கிறார், முதலில் சீறிய நாகம் பின்பு பணிந்து வெளியே ஓடி விட்டிருக்கிறது.  நம்மாளு அதை பின்னால் சென்று விரட்டியபடி வீடியோ எடுத்திருக்கிறார்... அது காம்பவுண்ட் ஓரத்தில் உள்ள எலி வளையின் உள்ளே புகுந்து விட்டது.

இங்கு வீடியோவில் காட்டப் பட்டுள்ளது அப் பாம்பின் ஒரு பகுதி மட்டுமே...!!
நான் அலுவலகம் வந்த பின்பு சிறிது நேரம் இந்தக் கதை ஓடி அடங்கி அவரவர் வேலையைப் பார்க்க செல்ல, ஒரு 10.30 மணி வாக்கில் அதே வளையின் வழியே தலையை மட்டும் அது காட்டி உள்ளே சென்று விட,  மீண்டும் ஏரியாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  நான் கிண்டியிலுள்ள வன அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன்.

போனை எடுத்தவர்கள் பாம்பின் குலம், கோத்திரம், ஜாதகம், பிறந்த நேரம், நட்சத்திரம், ருதுவான நேரம், அங்க அடையாளம், எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு இன்னொரு செல் நம்பர் கொடுத்து அவரை தொடர்பு கொள்ளமாறு கூறினார்கள்.  அந்த எண்ணிற்கு அழைக்க ஒரு பெண்மணி எடுத்தார்...

"நான் ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, பாம்பு புடிக்கிறவர் இருக்காருங்களா.."
"அவரு இப்போ பாம்பெல்லாம் புடிக்கிறதில்லீங்க..."
"இல்லீங்க, ஆபீஸ்ல இந்த நம்பர் தான் கொடுத்தாங்க..."
"அய்யே... இந்தா உனக்குத்தான், பாம்பு புடிக்கனுமாம்...; (சிறிது நேரம் கழித்து ஓர் ஆண் குரல்), சொல்லுங்க சார், எங்க இருந்து பேசறீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."

மறுபடி இவர் பாம்பின் வயது, marital status , கல்வியறிவு, அனுபவம், சம்பளம், notice period, job location எல்லாவற்றையும் கேட்டுவிட்டு,
"சார்.. இப்போ நான் வேலைக்குப் போறதில்ல, நான் ஒரு நம்பர் தர்றேன், அவரான்ட பேசுங்க, வந்து பிடிப்பார்..." என்று சொல்லி ஒரு நம்பர் தந்தார். 

சூரியன் படத்தில் கவுண்டமணி "சத்திய சோதனை"ன்னு சொல்லும் காட்சி கண்முன் வந்து போனது... விக்கிரமாதித்தன் கணக்கா மறுபடியும் கொடுத்த எண்ணிற்கு அழைத்தேன்.
"ஹலோ..."
"பாம்பு புடிக்கிறவருங்களா..."
"ஆமா, நீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."
"இந்த நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தா..." (அடேய்ய்ய்ய்ய்...)
"ஆபீஸ்ல கொடுத்தாங்க..."
"என்ன பாம்பு?"
"கரு நாகமுங்க..."
"எவ்வளவு நீளம்?"
"எட்டடி இருக்கும்..."
"வீட்டுக்குள்ள இருக்கா...?"
"வீட்டு காம்பவுண்டுக்குள்ள இருக்கு..."
"மேலேயே இருக்கா.."
"இல்ல, எலி பொந்துக்குள்ள போயிடுச்சி..."
"எலி பொந்து, எவ்ளோ பெரிசு இருக்கு?
"தெரியாது..."
"எலி பொந்து கால்வாயோட சேர்ந்திருக்கா?" (யப்பா சிபிஐ, நான் வேணா உள்ள பூந்து பாக்கவா..?)
"தெரியாது..."
"இப்போ வெளிய இருக்கா, உள்ள இருக்கா?"
"உள்ள போயிட்டு, வெளிய வந்துட்டு மறுபடி உள்ள போயிடுச்சி..."
"நீங்க ஒன்னு பண்ணுங்க..."
"சொல்லுங்க..."
"அது மறுபடி வெளிய வந்தா, என்னான்ட போன் பண்ணி சொல்லுங்க..."
"சொன்ன உடனே வந்து புடிப்பீங்களா?"
"இல்ல, போன் பண்ணி சொல்லிட்டு என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போங்க..."
"நீங்க எங்க இருக்கீங்க?"
"வேளச்சேரி செக்போஸ்ட் கிட்ட"
"ஒரு ஆட்டோ புடிச்சு வந்துருங்க, நான் அதுக்குண்டான காசை கொடுத்திர்றேன்..."
"அப்படியெல்லாம் நாங்க வரக் கூடாதுங்க, பார்ட்டி தான் வந்து எங்கள இட்டுக்கினு போகணும்..."
"அய்யா பாம்பு புடிக்கிறவரே, ஒன்னு சொல்லட்டுங்களா..!!"
"சொல்லுங்க..."
"மறுபடி பாம்பு வந்தா நானே புடிச்சு ஒரு சாக்குல போட்டு கட்டி எடுத்துட்டு வந்து உங்ககிட்ட கொடுத்திர்றேன், ஓகேவா?!"
"இன்னா சார், தமாஷ் பண்றீங்களா?"
"யோவ்... இவ்ளோ நேரம் நீ பண்ண, நான் இப்போ பண்ணக் கூடாதா?"

ம்ஹ்ம்ம்... பாம்பு இன்னும் வெளிய வரல....
பாம்பின் கால்......, சத்தியமா எனக்குத் தெரியல...!!


- அன்புடன்
- மலர்வண்ணன்


27 comments :

  1. வணக்கம்

    மிகச் சிறப்பாக நகைச்சுவை கலந்த வடிவில் பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. என்னடா அம்பி!
    ரொம்ப நாளை ஆளை ஆத்துப்பக்கம் காணோம்! நேரம் ஒழியர போது சித்த ஆத்து பக்கம் வந்து போறது?
    ____________________
    நான் என் வயது ஒத்த என் நண்பர்களையே என்னடா அம்பி என்று சொல்வேன்; அவர்களும் தான், உங்களை என்னடா அம்பி என்று விளித்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால்..இந்த பின்னூட்டத்தை நீக்கி விடவும்!

    இந்த உலகமே ஒரு தமாஷ்! நம்ம பிறந்ததும் ஒரு தமாஷ் ( we are all by products of அஜால் குஜால்ஸ்!)

    மேலும் உங்களைப் பார்த்தல் சின்னப் பையன் மாதிரி இருக்கு! அதானால், உரிமை எடுத்திண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி மாமா!!
      புது வேலை, அதிக பொறுப்புன்னால சித்த நாளா வர முடியாம போயிடுத்து... இனிமே ரெகுலரா வந்துடுட்றேன்...
      _____________________
      பெரியவா நீங்க பின்னூட்டத்துல என்ன வேணும்னாலும் எழுதலாம், நான் பேஷா ஏத்திண்டு போவேன்... உரிமை அது இதுன்ட்டு பேசப் படாது...
      _____________________
      ஆத்துல மாமி கிட்ட சொல்லி ஒரு நல்ல டாக்டர் கிட்ட அழைசிண்டு போக சொல்லுங்கோ, எனக்கு 41 வயசாறது... இருந்தாலும் உங்களை விட சின்னவன் தானே, "வாடா, போடா"ன்னே கூப்பிடுங்கோ..!! (btw இந்த போட்டோ 40 வயசுல எடுத்தது)

      Delete
    2. பார்த்தா பச்ச புள்ள மாதிரி இருக்கீங்கா! இந்த பூனையும்...என் மூத்த மகனுக்கே 28 வயசு தான் ஆகுது; அதனாலே அண்ணா என்றும் கூப்பிடலாம். இல்லை நீங்க ஐயரா இருந்தால் மாமான்னு கூப்டுங்கோ>
      Please take that Namblaki 'out' when you address me. When you respond to my blog post it is meant for me. I don't believe in all these formalities!

      Delete
    3. //இந்த பூனையும்...//
      அதெல்லாம் நல்லா..... ஆங்...!! (SJ சூர்யா மாடுலேஷனில் படிக்கவும்)

      //நீங்க ஐயரா இருந்தால் மாமான்னு கூப்டுங்கோ//
      அய்யே..!!

      //lease take that Namblaki 'out'//
      ok மாமா

      Delete
  4. உங்கள் இந்த இடுகையை நான் சில திருத்தங்கள் செய்து வெளியிடலாமா?
    உங்கள் அனுமதி அவசியம் தேவை!!

    நல்ல பதிவு!
    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டரே..., "சில" இல்லை, "பல" திருத்தங்கள் செய்து கூட நீங்கள் வெளியிடலாம்...
      "நல்ல(!!) விஷயம்" நாலு பேரை சென்றடைஞ்சா அதுவே எனக்கு போதும்...

      Delete
  5. ஹா... ஹா... சுவாரஸ்யம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. DD, பாம்பு கூட பழகின மாதிரி தெரியுதே...!!

      Delete
  6. பாம்புன்னா ...படையும் நடுங்குமே... !

    ReplyDelete
    Replies
    1. வாங்க உஷா...
      நமக்கெல்லாம் அனகொன்டாவே அட்டப் பூச்சி மாதிரி...!!

      Delete
  7. Replies
    1. விரைவில் டைரக்டராக சிறக்க வாழ்த்துகிறேன்...

      Delete
  8. ha ha ha ha .....
    sema comedy sir
    nice writing

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா!! ஒரு உண்மைச் சம்பவம் ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வுடன் உள்ள பதிவு! ரொம்பவே ரசித்தோம்! இதே போன்று அடையாரில் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு செங்குரங்கும் அதன் கூட்டாளிகளும் செய்த அட்டகாசங்கள் ரசிக்கும் படியாக இருந்தாலும் அது மக்களைக் கடிக்க ஆரம்பித்ததால் வனவிலங்குத் துறைக்கு ஃபோன் செய்து செய்து.....கிட்டத்தட்ட இதே அனுபவம்தான்......அந்தக் குரங்கின் குலம் கோத்திரம் எல்லாமே கேட்டு எங்களுக்கு செவி சாய்க்காதத் துறை, வீணை வித்துவான் ராஜேஷ் வைத்தியா அவர்கள் ஃபோன் செய்ததால் (குரங்கு பிடிப்பதற்கு கூட influence உள்ள மக்கள் வேண்டு போல) இறுதியில் கூண்டு வைத்து, அது டிமிக்கி கொடுக்க, அதுவும் experienced குரங்கு போல, தப்பித்து வீடு வீடாக அது எந்த வ்ட்டீடிற்குச் சென்றதோ அங்கெல்லாம் வைத்து, பிடிபட்டதா இல்லையா என்றுத் தெரியவில்லை! உங்கள் பதிவு அருமையான பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு... நாங்களும் யாராவது வித்துவானைத் தேட ஆரம்பிக்கிறோம். அடையார்ல வீணை வித்துவான் கிடைக்கும் போது ஆதம்பாக்கத்துல ஒரு பானை வித்துவான் கூடவா கிடைக்காமலா போயிடுவாரு..!! வாசிப்பு பாம்பு காதுல(!!) விழுந்து கொலைவெறியோட வெளிய வந்தாலும் வரலாம்...
      நீங்க சொல்லியிருக்கிறதப் பாத்தா அந்த செங்குரங்கு செம சேட்டை பண்ணியிருக்கும் போல... RAW, CIA-ன்னு ஏதாவது பெரிய எடத்து influence பயன்படுத்தி விரைவில் குரங்கைப் பிடித்து நலம் பெற வாழ்த்துகிறேன்...

      Delete
    2. //ஆதம்பாக்கத்துல ஒரு பானை வித்துவான் கூடவா கிடைக்காமலா போயிடுவாரு..!! வாசிப்பு பாம்பு காதுல(!!) விழுந்து கொலைவெறியோட வெளிய வந்தாலும் வரலாம்...//

      வயிறு வலிக்கச் சிரித்து முடியல....ஏற்கனவே உங்கள் இடுகை.... சிரித்து முடியல ...இப்போ உங்கள் பதில்.....ஐயோ அந்தச் செங்குரங்கு செம சேட்டை....இப்போது அந்தக் கூட்டத்தைக் காணவில்லையாம்...ஸோ ஒன்று ஏரியா மாத்திருக்கும்.....இல்ல பிடிபட்டிருக்கும்.....

      நன்றி!!

      Delete
    3. ஏரியா மாதியிருந்தா கு.கூ. க்கு நல்லது...
      பிடிபட்டிருந்தா ஏரியாவுக்கு நல்லது...!!!
      But I support செங்குரங்கு....!!!!

      Delete
  10. தொடர்கிறோம் உங்களை!

    ReplyDelete
  11. பாம்பு வெளியே வந்தா கால் பண்ணுங்க!

    அடடா..... :)

    நெய்வெலியில் வசித்தபோதும் அவ்வப்போது பாம்புகள் வீட்டுக்குள் வர, ஒரே ரகளையாக இருக்கும். எனது பக்கத்தில் கூட சில பாம்பு பற்றிய நினைவுகளைப் பகிர்ந்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்
      அரசுப் பணியில் இருந்தாலே அசர வேண்டியதில்லை
      பாம்பாவது "bomb"ஆவது... எல்லாம் ஒன்னு தான்...!!!

      Delete
  12. சார். உங்க கதையப்படிச்சேன். நம்ம கதைய விட டக்கரா இருக்குது சார்!

    ReplyDelete