Saturday, 27 February 2016

தீபன் - ஈரமும் கொஞ்சம் ஈழமும்


ஈழப் போரின் முடிவில் பல செய்திகளும் காணொளிகளும் இலங்கை அரசின் போர்க்குற்ற அட்டூழியங்களை உலகம் முழுதும் எடுத்துக்காட்டி, பின் ஐ.நா., நார்வே, கனடா, போர்க்குற்றவாளி, நடவடிக்கை, மறுவாழ்வு என சில காலம் செய்திகளில் அடிபட்டு பின்னர் மறக்கடிக்கவும் பட்டது.

இலங்கையில் யுத்தம் முடிந்து பலியான விடுதலை புலிகளை பனைஓலை கொண்டு எரிக்கும் நிகழ்வுடன் படம் துவங்குகின்றது. சிவதாசன் என்கிற புலி அந்த வேலையைச் செய்து முடித்து ரத்தக் காயங்களுடன் முகாமிற்குச் செல்கிறான். அங்கு யாழினி ஆதரவற்ற குழந்தை ஒன்றைத் தேடுகிறாள். போரில் பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி இல்லயாள் அகப்படுகிறாள். சிவதாசனுக்கு தீபன் என பெயர் மாற்றி மூவரும் கணவன்-மனைவி-மகள் எனச் சொல்லி தப்பித்து France-க்கு கப்பலில் பயணமாகின்றனர்.

அங்கே மூவருக்கும், மூவருக்குள்ளும், மூவரைச் சுற்றிய உணர்வுகளையும் நிகழ்வுகளையும் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் french இயக்குனர் Jacques Audiard.

ஈழப் போரின் பாதிப்புகளை பலவாறு கேள்விப்பட்டும், செய்திகளில் பார்த்தும் இருந்தாலும் இப்படத்தில் ஒரு சிறு காட்சி மூலம் அக் கொடுமையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது அபாரம்.
இல்லயாளை பள்ளியில் சேர்க்கும் இடத்தில் டீச்சர் அவர்களிடம்
"ஸ்ரீலங்காவில school-க்கு போனாளா?"
 
அதற்கு இல்லயாள், "இல்ல.."
"ஏன்?"
"school எரிக்கப் பட்டு விட்டது..."
"உன்னோட school-ஆ? எரிச்சுட்டாங்களா...!!  ஏன்? யார் எரிச்சது?!"

அவள் சற்றே யோசித்து அப்பாவிடம், "அரசாங்கம்"ன்னு english-ல எப்படி சொல்றது"ன்னு கேட்டுட்டு, "Govrenment"ன்னு சொல்லும் போது நமக்கு அதிர்வு அடங்க நேரம் பிடிக்கும்.

புலிகளின் ஒரு கர்னல் சேரன் என்பவரை தீபன் சந்தித்து உரையாடும் போது
"சிவதாசா, ஆயுதங்கள் வாங்க லெபனான்ல இருந்து 1 மில்லியன் டாலர் தயார் செய்திருக்கிறேன், இங்க இருக்க நாம தானே அங்க இருக்க நம்ம மக்களுக்கு உதவணும்..."
"ஆயுதங்கள் யாருக்கு கர்னல்..?"
"நம்ம தாயகத்துக்கு..."
"எந்த தாயகத்துக்கு?"
"நம்ம போராளிகளுக்கு..."
"கர்னல், எல்லாம் முடிஞ்சு போச்சு..., நந்திக்கடல்ல என்னோட படையை இழந்துட்டேன், மனைவி, குழந்தைகள் எல்லோரையும் இழந்துட்டேன்..."

யாழினி வேலை பார்க்கும் வீட்டில் இருக்கும் ப்ரஹிம் என்பவன், அவளிடம், அவள் உருவத்தை பார்த்துக் கொண்டே,
"நீ இந்தியாவா, பாகிஸ்தானா?"
"ஸ்ரீலங்கா"
"அது எங்க இருக்கு...?!"
"இந்தியா இங்க..., ஸ்ரீலங்கா..., ...., இங்க..."
 "ஓ... இந்தியா மாதிரியா !?"
"இல்ல..., இந்தியாக்கு கீழே..., ..."
"சரி விடு..."
வளர்ந்த நாடுகளிலுள்ள பெரும்பான்மையான மக்களின் உலக அறிவையும், பொதுப் புத்தியையும் ஒரே நொடியில் சுரீன்று உணர்த்திய காட்சியது.

இறுதிக் காட்சிகளில் தன்னை கூட்டத்தின் தலைவனாக அறிவித்துக் கொள்ளும் ப்ரஹிம்மிடமிருந்து யாழினியைக் காப்பாற்ற தீபன் கொரில்லாத் தாக்குதலை ஆரம்பிக்க, தொற்றிக் கொள்கிறது பதற்றம்...

அனைத்தையும் இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர் பலரின் நிலையை போகிற போக்கில் நமக்கு உணர்த்தி அதில் பரிதாபமோ பச்சாதாபமோ வராமல், மாறாக, ஆற்றாமையும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலாமல் செய்து விடுகிறது "தீபன்"

புலிகளின் உத்வேக ஊக்குவிப்புப் பாடல் ஒன்றை தீபன் அனைத்தையும் இழந்த வேதனையில் வெறி கொண்டு பாடும் காட்சி...
 
 A Prophet , Rust & Bone படங்களின் மூலம் பல விருதுகளை வாங்கிக் குவித்த Jacques Audiard ன் "தீபன்"னும் Cannes -ல் வென்றுள்ளது. பல சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறது. பேருக்குத்தான் french படமே தவிர முக்கால்வாசிப் படத்தின் வசனம் இலங்கைத் தமிழில் தான்... Subtitle இல்லாமலே பார்க்கலாம்.

6 comments :

 1. வணக்கம்
  நல்ல படம் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கிறது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. படம் பார்க்கத் தூண்டும் விதமாக இருக்கிறது. பார்க்க முயல்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் பாருங்க வெங்கட்ஜி

   Delete
 3. நல்ல விமர்சனம். அருமையான படமும் கூட. நல்ல காட்சியமைப்பு.

  இப்படத்தைப் பற்றி எங்கள் தளத்திலும் சில மாதங்களுக்கு முன்பே பகிர்ந்திருக்கின்றோம் மலர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசியாரே...

   உங்க விமர்சனத்தை மிஸ் பண்ணிட்டேனே..., உடனே வாசிக்கிறேன்

   Delete