Wednesday 27 December 2017

திருட்டுப் பய



2009-ன் செப்டெம்பர் மாதம், புள்ளைங்களோட காலாண்டு லீவுக்கு ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு ஒரு நாள் இருந்துட்டு, மறு நாள் காலையில திரும்பி வந்து கேட்-ல இருந்த பூட்டை திறக்க போனா அது ஆல்ரெடி திறந்து தொங்குச்சு...!! சரி நாம தான் மறதியா பூட்டாம விட்டிருப்போம் போலன்னு நெனச்சுட்டு கதவுல இருக்க பூட்டுக்குள்ள சாவிய விட்டு திருப்பினா, எங் கெரகம் அதுவும் வேலை செய்யல... காலை உந்துதலின் அடக்க முடியா அவஸ்தை வேற ஒரு பக்கம்!!

பளிச்ன்னு ஒரு யோசனை வந்து, சாவி துவாரத்தின் வழியா உள்ளே பாக்க, பின் வாசல் கதவு பராச்சுன்னு திறந்து கிடக்க..., அடக் கொடுமையே பின்கதவை கூட சாத்தாமலா ஊருக்கு போயிட்டோம்னு ஒரு நொடி கேனத்தனமா யோசிச்சாலும், கண நேரத்தில் சுயநினைவு திரும்பி ஆளில்லா வூட்டுக்குள்ள எவனோ பூந்துட்டாண்டான்னு ஏழாம் அறிவுக்கு சுர்ருன்னு உறைக்க உடனே ஊர்ல இருந்த அம்மணிக்கு போனை போட்டேன்.

தூக்கத்துல போன எடுத்து, "என்ன அதுக்குள்ள போய் சேந்துட்டியா?"ன்னு கேட்க,
"வீட்டு கதவு உள்பக்கமா தாப்பா போட்டிருக்கு, பின் வாசல் தொறந்து கெடக்கு"
"சரி... ஃபிரிட்ஜ்ல மாவு இருக்கும், கிச்சன்ல லெஃப்ட்ல ரெண்டாவது ரோ மூணாவது டப்பா இட்லி பொடி... ..."
"அடியேய்... வீடு ஆல்ரெடி தொறந்து கெடக்கு"
"யார் வீடு?"
"நம்ம வீடு தான்"
"நான் நல்லாத்தானே சாத்தி தாப்பா போட்டுட்டு வந்தேன்"
"எவனோ உடைச்சிருக்கான்..."
"அய்யய்யோ, திருடனா இருக்குமோ!"
"அப்படித்தான் நெனக்கிறேன், எதுக்கும் பின் வாசல் பக்கமா உள்ளே போய் பாக்குறேன், பாத்துட்டு திரும்ப கூப்பிடுறேன்..."
"உள்ள ஏதும் ஒளிஞ்சிட்டு இருக்கப் போறான், பாத்து ஜாக்கிரதையா போ..."

பொண்டாட்டி சொன்னா சரியாத்தான் இருக்குமின்னுட்டு பேக்கை வெச்சுட்டு ஒரு உருட்டுக் கட்டையை கையில எடுத்துக்கிட்டு பின்வாசல் வழியா சொந்த வீட்டுக்குள்ளேயே திருடன் மாதிரி நுழைஞ்சேன். திருட வந்தவன் இன்னமும் உள்ளே இருப்பான்ற நெனப்புலியே அடி மேல அடி வெச்சு பூனை மாதிரி கிச்சன், ஸ்டோர் ரூம், ஹால்ன்னு ஒவ்வொண்ணா க்ளியர் பண்ணிட்டு பெட்ரூமுக்குள்ள போறதுக்கு முன்னாடி கையிலிருந்த உருட்டுக் கட்டையால கூர்க்கா மாதிரி கீழ ரெண்டு தட்டு தட்டிட்டு, ரியாக்சன் எதுவும் இல்லன்னு உறுதி படுத்திட்டு உள்ள போய் பாத்தா ஷெல்ப், பீரோல இருந்த துணியெல்லாம் கட்டில் மேல அலங்கோலமா இறைஞ்சு கிடந்தது... பின்ன திருட வந்தவன் அயர்ன் பண்ணி அடுக்கி வெச்சுட்டா போவான்னு நெனச்சுட்டே டாய்லெட், இன்னொரு பெட்ரூம் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி பாத்ததுல நோ ஹ்யுமன் ஃபவுன்ட்- ன்னு ரிசல்ட் வந்துச்சு...!!

திரும்பவும் அம்மணிக்கு போன் பண்ணேன்...

"திருடன் இருந்தானா?"
"பீரோவுல பணம் வெச்சிருந்தியா?"
"ரெண்டாயிரத்து ஐநூறு ரூவா வெச்சிருந்தேன், இருக்கா?"
"இல்ல... நகை?"
"இன்னோரட கல்யாணம் இருந்ததுனால எடுத்திட்டு வந்துட்டேன், புள்ளைங்களோட கம்மல் மட்டும் நாலு செட் இருக்கும், அப்புறம் காயின்ஸ் கொஞ்சம்..., இருக்கா?"
"இல்ல, எவ்ளோ தேறும்?"
"கம்மல் கம்மி தான், காயின்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு அஞ்சாறு பவுன் வரும்..."
"சரி திருப்பி கூப்பிடுறேன்..."
"ஒரு நிமிஷம்..."
"ம்ம்..."
"பெட் ரூம், டாய்லெட் லாஃப்ட் எல்லாம் ஒரு வாட்டி செக் பண்ணு"
"அங்க ஏதும் வெச்சிருக்கியா?"
"இல்ல... திருடன் ஏதும் ஒளிஞ்சிட்டு இருக்க போறான்"

போனை வைத்தேன். 'நோ தங்கமணி என்ஜாய்' என நினைத்து உள்ளே வந்தவனுக்கு ஒருத்தன் மெய்யாலுமே 'நோ தங்கமணி டா' என சொல்லி விட்டு போயிருந்தான். இயற்கை உந்துதல் அடங்கி வெகு நேரமாகியிருந்தது, ஹாலுக்கு வந்து பார்த்தேன், டிவியில் ஆதித்யா சேனல் மெளனமாக ஓடிக் கொண்டிருந்தது, டீபாய் மேல் பிரித்து போட்ட பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் பாதி குடிக்கப் பட்டு மீதமிருந்த தண்ணீர் பாட்டில்... திருடனார் நிதானமாக வேலையை முடித்து விட்டு, ஆற அமர்ந்து பிஸ்கட், ஐஸ் வாட்டர் சகிதம் டிவி பார்த்து விட்டு அதிகாலையில் யாருக்கும் சந்தேகம் வராதவாறு சென்றிருக்கிறார் என புரிந்தது.

ஏரியா கவுன்சிலர்க்கு போன் செய்தேன், அவர் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொன்னார். மேல் வீட்டில் ஹவுஸ்ஓனர் பாட்டியம்மாவிடம் சொல்ல, அவர் வைத்த ஒப்பாரியில் அக்கம் பக்கத்து வீடுகள் விழித்துக் கொண்டு கூட ஆரம்பித்தனர். தெரிந்த ஏசி ஒருவருக்கு போனை போட, அவரும் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி உடனே பார்க்கலாம் என சொன்னார். நண்பர் ஒருவருக்கு போன் செய்து அவரையும் உடனே வரச் சொன்னேன், என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பிளைக்கு தானே புரியும்!!

சில நிமிடங்களில் ஜீப் வந்தது. வாக்கிடாக்கிகள் சத்தம் சூழ உடலை அசக்கி கசக்கி இறங்கினார் இன்ஸ்பெக்டர். கூடி நின்றிருந்தவர்களை சில நொடிகள் டிசிபி ராகவன் போல் பார்த்தவர், பின் காம்பவுண்ட், கேட் என ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த இன்ஸ் என்னைப் பார்த்து "எதையும் நீங்க தொடல தானே" எனக் கேட்டு பின் என் கையிலிருந்த உருட்டுக் கட்டையைப் பார்த்து "இது எதுக்கு கையில வெச்சிருக்கீங்க?" என கேட்க...

அந்த உருட்டுக்கட்டை கையில இருந்ததையே அப்போதான் உணர்ந்தவனாக ஒரு ஓரத்தில் வைத்து விட்டு இன்ஸை உள்ளே அழைக்க அவர் என்னமோ பொண்ணு வாழப் போற வீட்டை மாமனார் நோட்டம் விடுவது போல இன்ச் இன்ச்சாக பார்த்துக் கொண்டே வந்தார். ஏ.சி.-யின் பெயரைச் சொல்லி, "அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?"
"ஃப்ரண்ட் தான்...", இந்த கேஸுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வீடு முழுக்க லவ் பேர்ட்ஸ் பாட்டுக்கு சரோஜாதேவி போட்டிருந்ததை போல பவுடர் போட ஆரம்பித்து விட்டார்கள். அதுல ஒருத்தரு என்னை உட்கார வெச்சு "கைய ரெண்டும் நீட்டுங்க"ன்னு சொல்லி உள்ளங்கையில கருப்பா எதையோ அப்பி உள்ளுக்குள்ள நான் கதறக் கதற என்னோட கைரேகையை எடுத்துக் கொண்டார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொன்ன இன்ஸ், "நான் சொல்றா மாதிரி எழுதுங்க..."ன்னு கம்பளைண்ட் எழுதச் சொல்ல, இம்போசிஷனுக்கு தயாரானேன். "உயர்திரு காவல் துறை ஆய்வாளர் அய்யா அவர்களுக்கு... .... ...." வைதேகி காத்திருந்தாள் படத்துல செந்தில் கவுன்ட்டரை பார்த்து "அண்ணே நீங்க எவ்வளவு நல்லவரு..."ன்னு சொல்லயில பின்னால ரெண்டு பேர் சிரிப்பாங்களே, அது மாதிரி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

இந்த நேரத்துல அங்க இருந்த ஒவ்வொருத்தரும் தங்களுடைய திருட்டு அனுபவங்களை சிலாகித்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.
"இப்படித்தான் எங்க பெரியம்மாவோட நாத்தனார் வீட்டுல ஒருத்தன் பட்டப் பகல்ல...",
"சார் அப்படியே நம்ம கோவிலம்பாக்கம் கோவிந்தன் மாதிரியே இருக்கு...",
"அவன் இப்போ புழல்ல இருக்கான்...",
"சில பேரு கும்பலா வந்து இருந்து சமைச்சு சாப்பிட்டுத்தான் போவானுங்க...."
"உடம்பெல்லாம் எண்ணெயை தடவிக்கிட்டு ஜட்டியோட வந்தான்...",
"நாலு பேரு, அதுல ஒருத்தி பொம்பளை, பாத்தா திருடின்னே சொல்ல முடியாது..."

வீட்டருகே அயர்ன் பண்ணுபவர், வாசல் பெருக்கும் கிழவி என முதற்கட்ட விசாரணை முடிந்து, "ஸ்டேஷனுக்கு வாங்க FIR போட்டுடுவோம், வரும் போது witness-க்கு ரெண்டு பேரை கூட்டிட்டு வந்துடுங்க..."ன்னு ஜீப்பை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் கிளம்ப, எஸ்.ஐ, ஏட்டு என ஆளாளாளுக்கு, "ஏங்க, வெளியூர் போகும்போது ஸ்டேஷன்ல சொல்லிட்டுப் போகத் தேவையில்லையா, படிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா..." என SSLC பாஸ் பண்ண நான் பட்ட கஷ்டம் தெரியாம அட்வைஸ் மழை.

ஒரு வழியாக FIR போடப்பட்டு, "கவலைப் படாம போங்க சார், கண்டிப்பா புடிச்சிடலாம், ஏ.சி. ஏதும் கேட்டார்ன்னா சொல்லுங்க, பாத்துக்கலாம்..." என வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் தினமும் போன், "சார், உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" என்கிற ரேஞ்சில், பிறகு நான்கைந்து முறை விசாரணை என்ற பெயரில் இரண்டிரண்டு காவலர்கள் வீட்டிற்கு வந்து ஆட்டோகிராப் வாங்கிச் சென்றனர்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் புது இன்ஸ்பெக்டர் பதவியேற்க மீண்டும் அழைக்கப்பட்டேன். அவர் முதலிலிருந்து கேட்க, "ஜானி ஜானி எஸ் பாப்பா... ஓபன் யுவர் மவுத் ஹா..ஹா..ஹா..." வரை மறுஒளிபரப்பு செய்து விட்டு வர அதே கிணற்றில் போட்ட கல்...  அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு சு.சு., புது இன்ஸ், ஜானி ஜானி...!!

முதல் வருட anniversary கொண்டாடப்படவிருந்த அந்த நேரத்தில் இன்பத் தேனாய் ஒரு போன், "சார், இன்னைக்கு வந்துடுங்க முடிச்சிரலாம்..." ஆபிசிலிருந்து அப்படியே ஓடினேன். ஸ்டேஷனில் ஒரு துணி விரிக்கப்பட்டு அதில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த மெசபடோமியா காலத்து நகைகள் இருந்தன. "இதுல எதுவும் என்னது இல்லீங்களே..."
"அது எங்களுக்கும் தெரியும் சார், உங்க நகையெல்லாம் இனிமேல் கிடைக்காது, திருடுன சில மணி நேரத்துல உருக்கிடுவானுங்க, இதை எடுத்திட்டு நகைக் கடைக்குப் போறோம், இதை அங்க போட்டுட்டு காணாமப் போன உங்க நகை மாதிரியே வாங்குறோம்..."
"அப்போ இந்த நகையெல்லாம் யாருது?"
"அதெல்லாம் எதுக்கு சார்? உங்க நகை வேணுமா வேணாமா?"
"வேணும்"
"அப்போ வாங்க..."

கடையில எடை எல்லாம் போட்டு நகையெல்லாம் எடுத்து முடிக்க, அந்த பீடா சேட்டு பழைய நகை, செய்கூலி, செய்யாத கூலி, சேதாரம், ரெண்டாந்தாரம் எல்லா கணக்கு வழக்கும் போட்டு, "டுவென்டி தவுஜன்ட் வர்து, எய்ட்டின் குடுங்கோ ஜீ..."ன்னு கேட்க,
நான் அப்பாவியாக ஏட்டைப் பார்த்து, "என்ன சார், நகை தரேன்னு சொல்லிட்டு காசு கேட்குறீங்க..."ன்னு உருக,
"வேற வழியில்லை இல்ல சார், குடுத்து தான் ஆகணும்..."
"சரி அப்போ இந்த நகையெல்லாம் நான் இப்போவே வீட்டுக்கு கொண்டு போலாமா?"
"அப்படி பண்ண முடியாது சார், நாங்க எடுத்திட்டு போய் கோர்ட்ல ப்ரோடியுஸ் பண்ணுவோம், அங்க வந்து வாங்கிக்கோங்க, நாளைக்கே கேஸை முடிச்சிடலாம்..."

சிறிது நேரம் யோசித்தவன் "எனக்கு இந்த டீலிங் வேணாங்க, ஒரு வேளை உங்களுக்கு கேஸ் முடியணும்னா நீங்க காசு போட்டு வாங்கி கோர்ட்டுக்கு கொண்டு வாங்க, அங்க நான் காசு குடுத்து வாங்கிக்கறேன்..."ன்னு நோடீஸ் பீரியட்ல இருக்கும் போது தெனாவெட்டா பாஸ் கிட்ட பேசுற மாதிரி சொல்லிட்டு வந்துட்டேன்...

கேஸ் இன்னும் நிலுவையில் தான் இருக்கு!!!

- அன்புடன்
- மலர்வண்ணன்

பி.கு: இந்த நிகழ்விற்கு தேவையற்ற ஆனால் சம்பந்தமுள்ள செய்தி... அடுத்த சில மாதங்கள்ல சென்னையில் உள்ள ஒரு ஸ்டேஷனில் வேலை பார்த்த அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் ஒட்டுக்காக மாற்றினர். வந்த தகவல் இதுதான்:
மேலே சொன்னபடி நகைக்கடையில் ஒரிஜினலாக வாங்கி பிறகு கோர்ட்டில் ஒப்படைத்தவை கல்யாணியில் வாங்கியது என ஒருவர் கண்டுபிடித்து கேஸ் போட, கவரிங்மான்கள் இடம் பெயர்க்கப்பட்டனர்...

2 comments :

  1. அனுபவம் நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. இப்படியுமா ...ஆஹா....

    கீதா

    ReplyDelete