Tuesday 2 January 2018

ஓடிப் போலாமா...!??


அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற...

அப்பாவோட ஆபீசுல மைக்கேல்ன்னு ஒருத்தரு இருப்பாரு, செம ஜாலியான கேரக்டர், அவர் நம்ம வீட்டுக்கு வந்தாலே கொஞ்ச நேரத்துல எல்லாரையும் கலகலப்பாக்கிட்டு தான் போவாரு... அந்த வயசுலயும் மைக்கேல் அவரோட அப்பாவுக்கு ரொம்ப பயந்தவர், அன்ட்ரவேர் கோடு போட்டது வாங்கணுமா, நாடா வெச்சது வாங்கணுமான்னு கூட அப்பாவை கேட்டு தான் வாங்குவாரு... அவங்க அப்பா இப்பவும் கோவம் வந்தா அடிப்பாராம்...!! இதையெல்லாம் எங்கப்பா எங்க கிட்ட பெருமையா வேற சொல்லிக்குவாரு!!

சம்பவத்தன்னைக்கு அப்பா வழக்கம் போல, "நேத்து மைக்கேலோட அப்பா அவரை லேட்டா போனதுக்கு சண்டை போட்டு அடிச்சிட்டாராம்..."ன்னு பெருமையா சொல்ல, டீயை ஒரு முழுங்கு குடிச்சவன், ஜோக் என நினைத்து அதன் வீரியம் புரியாமல், "என்ன இந்த வயசுல கூட எப்போ பாத்தாலும் அடி வாங்கிட்டே இருக்காரு, ஒரு நாளைக்கு திருப்பி ஒன்னு குடுக்க வேண்டியது தானே..."ன்னு சொன்னதுதான் தாமதம்... டீயை ரெண்டாவது முழுங்கு குடிக்கும் முன்னே ஊக்க மருந்து உட்கொண்ட பென் ஜான்சன் மாதிரி ஓடி வந்த அன்புள்ள அப்பா என்னை நோக்கி புரூஸ் லீ போல ஓங்கி விட்ட உதையில், சுடச் சுட கையிலிருந்தும் வாயிலிருந்தும் புரூக் பான்ட் தெறித்தது...

பிறகு பாரதிராஜா படத்துல தாய்மாமன் பெருமையப் பத்தி பேசுறா மாதிரி, "ஏன்டா, உனக்கு எவ்ளோ ஏத்தம், திமிரு, கொழுப்பு, சுகர், சால்ட்டு இருந்தா பெத்து, வளர்த்து, குளுப்பாட்டி, பகுடர் அடிச்சு, ரத்தமும் வேர்வையும் சிந்த, சோறு தண்ணி இல்லாம, ராவும் பகலும் சம்பாதிச்சு ஆளாக்கின ஒரு அப்பாவை எதிர்த்து அடிக்க சொல்லுவ? எல்லாம் இவ குடுக்கிற எடம்... இந்த வீட்டுல இனிமே உனக்கு எடம் இல்ல, வெளியே போடா..." என கேமிரா சுத்தி சுத்தி வராமலேயே வசனம் பேசிவிட்டு புரூஸ் லீ அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக...

பேஸிக்கலாவே நான் பச்சைமிளகாவை பச்சையாவே தின்பேன், அந்த ஒறப்பு ஒடம்பெங்கும் ஏறிப் போயிருந்ததுல குதிரே மாதிரி டக்குன்னு எழுந்துருச்சுட்டேன்... அப்போவெல்லாம் என் தலை மயிர் ச்சும்மா சாய்பாபா கணக்கா சுருள்சுருளா இருக்கும், சீப்பு உள்ள போனா வெளிய வராது, அப்படிப்பட்ட மயிரை தூக்கி அயர்ன் செஞ்சுவிட்டா மாதிரி ரோசத்துல செங்குத்தா நட்டுக்கிட்டு நிக்க 'குட் பை டாடி-மம்மி'ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம போட்டிருந்த டவுசர் டீ-ஷர்ட்டோட 'காந்தி தேசமே... காவல் இல்லையா...'ன்னு கிளம்பிட்டேன்.

காலில் செருப்பு கூட இல்லாமால் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தேன், பச்சை உடையார் காடு வழியே செல்லும் போது சித்தப்பா மகன் எதிர்ப்பட்டு, "என்ன மலரு, இந்த நேரத்துல, உங்கப்பா எப்படி விட்டாரு?", "ஃப்ரண்ட் கிட்ட நோட்டு வாங்கணும்"ன்னு சொல்லிட்டு விறுவிறுவென செல்ல ஆரம்பித்தேன். கண்களின் ஓரத்தில் லேசாக கோர்த்திருந்த ஈரமும் காய்ந்து விட்டிருக்க மனதில் கோபத்தைத் தவிர எந்த சிந்தனையும் இல்லாமால் கோரிமேடு வந்தேன். மீண்டும் எதுவும் யோசிக்காமல் ஏற்காடு மலையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்...

நடை, நடை நடையென்றால் அப்படியொரு நடை, The Way Back படத்துல Jim Sturgess கூட அப்டி நடந்திருக்க மாட்டார். அடிவாரம் வந்தது... யோசிக்காமல் மெயின் ரோடிலே மேலேற ஆரம்பித்தேன். செக் போஸ்ட், நாற்பதடி பாலம் எல்லாம் கடந்து ஏறி அறுபதடி பாலம் வர, அங்கு கொட்டிய அருவியைப் பார்த்து சிறிது நேரம் நின்றேன்... தாகமெடுத்தது, நடக்க ஆரம்பித்தேன்... 'வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ...' எந்தப் பரதேசிப் பய இந்தப் பாட்டை எழுதியிருப்பான்!! இந்தக் குரங்குகள் எல்லாம் எவ்ளோ சந்தோஷமா இருக்கு... நாம மட்டும் ஏன் இப்படி? சே...!!

அவ்வப்போது டூ வீலர்களில் சென்றவர்கள் ஒரு சில வினாடிகள் என்னைப் பார்த்தபடி சென்றனர், இருவர் வண்டியை நிறுத்தி 'மேலே தான் போறேன், வர்றியாப்பா...' என கேட்க, மறுத்து விட்டு நடந்து கொண்டேயிருந்தேன். நடப்பது மட்டுமே எனக்கு அப்போது வடிகாலாக இருந்தது. லேசாக குளிரெடுக்க ஆரம்பித்தது..., வெறுங்கால்களை தரையில் வைத்து நடக்க சற்றே சிரமமாயிருந்தது. அக் கஷ்டமும் சிறிது நேரத்தில் பழக இன்னும் வேகமாக எட்டிப் போட ஆரம்பித்தேன். எஸ்டேட்டுகளையும், குளிரையும், பாத வலியையும் பொருட்படுத்தாது எங்கும் அமராமல், நிற்காமல் ஏற்காடு ஏரிக்கு சுமார் பகல் பன்னிரண்டு மணி போல் வந்து சேர்ந்து அங்கிருந்த புல்வெளியில் கால்களை நீட்டி விட்டு அமர்ந்தேன்...

காலையில் வெறும் ஒரு மிடறு டீ மட்டுமே குடித்திருந்த நிலையில் பசிக்க ஆரம்பித்தது, பாக்கெட்டில் சில்லறை காசு கூட இல்லை. வாழ்க்கையில் முதன்முதலாக கையறுநிலை, நிராயுதபாணி போன்ற நிலைகளுக்கு தள்ளப் பட்டேன்... எழுந்து லேடிஸ் சீட் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், சென்றடைந்தால் அங்கே சுடச் சுட அவிச்ச கடலை, அன்னாசிப்பழ துண்டுகள் விற்பனையில் இருக்க பசி இன்னும் அதிகமாகியது. இந்த இடம் சரிப்பட்டு வராது எனத் தோன்றி மீண்டும் ஏரிக்கு வந்தேன். என்ன செய்வது என்று புரியாமல் மீண்டும் லேடீஸ் சீட். இம்முறை அங்கிருக்கும் வியூ பாயிண்ட்டுக்கு சென்று நின்று அங்கிருந்து அப்படியே விழுந்து விடலாமா என யோசித்தேன்... 'ஒரு வேளை விழுந்து சாகாம போய்ட்டா?!' எண்ணத்தை கைவிட்டு மீண்டும் ஏரிக்கே வந்து சேர்ந்தேன்...

பசி உயிரை எடுத்தது. அப்போ பாத்து அருகே ஒரு கூட்டுக் குடும்பம், கொண்டு வந்த கட்டி சோத்தைப் பிரிச்சு மேய ஆரம்பிக்க, அந்த வாசம் எனக்கு உள்ளே இறங்க, கிட்டத்தட்ட அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்த யாராவது ஒருத்தர் என்னை கூப்பிட்டு 'சாப்பிடுறியாப்பா'ன்னு கேட்க மாட்டங்களான்னு தவியா தவிச்சேன். ம்ஹூம்... கை கழுவிட்டு போயிட்டே இருந்தாங்க. 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்'ன்னு எழுதினவன் மட்டும் அப்போ கையில கெடச்சிருந்தான்னா சங்கை கடிச்சு துப்பியிருப்பேன்.
அன்று முழுவதும் ஐந்து முறை ஏரிக்கும் லேடீஸ் சீட்டுக்கும் நடந்தேன். மாலையாக குளிர் அதிகமாகியது. அருகே இருந்த ஒரு கடையில் சுடச் சுட சோளக்கருது அவித்து விற்க, அதை வாங்கி பருப்பைத் நின்றவர்கள் வெற்றுக் கருத தூக்கியெறிந்து செல்ல அவற்றில் ஏதாவது விடுபட்ட பருப்பு இருக்கிறதா என பார்த்தேன்... பசி!!! மீண்டும் சேலம் போவது என முடிவெடுத்தேன், ஆனால் எப்படி போவது? கையில் சல்லிக்காசு இல்லை, மீண்டும் நடக்க கால்களில் தெம்பில்லை, இரவு அங்கேயே தங்கினாலும் குளிரைத் தாங்க எதுவுமில்லை.

லாரிகள் நிற்குமிடத்திற்கு வந்தேன், நம்ம பக்கத்துக்கு வீடுகள்ல ரெண்டு பேர் லாரி வெச்சிருந்தவங்க, ரெண்டு லாரியும் ஏற்காடு ட்ரிப் அடிக்கிற வண்டிகள் தான், 'அம்மன் அருள்', 'sipco' ரெண்டுமே புறப்பட தயாராக நின்றிருந்தன, ரெண்டு லாரி ட்ரைவர், கிளீனர்ம் தெரிஞ்சிருந்தாலும் சுயமரியாதை(!) தடுத்த காரணத்தால அவர்களை அணுக தயங்கி நின்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு வண்டிகளும் கிளம்பி விட்டிருந்தன. மேலும் இருட்ட ஆரம்பிக்க, பசியோடு சேர்ந்து குளிரும் வாட்டியெடுக்க தயங்கித் தயங்கி ஒரு டிரைவரிடம் சென்றேன்.
"அண்ணே..."
பீடி குடித்துக் கொண்டிருந்தவர் 'என்ன?' என்பது போல் பார்க்க,
"அஸ்தம்பட்டியில எறக்கி விட முடியுமா?"
"காசு?"
"இல்ல..."
"வேற வண்டி பாரு..."
அதற்குள் இன்னொருவர், "ஏம்பா... அதான் லோடு இல்லையே, பாத்த படிக்கிற பையன் வீட்டுல ஏதோ கோவிச்சிட்டு வந்த மாதிரி தெரியுது"
தெய்வமே...!!
"என்ன படிக்கிற?"
"10 th..."
"என்ன ரேங்க்?"
"ஃபர்ஸ்ட்..."
டிரைவர், "சரி, பின்னால ஏறிக்கோ..."
மடமடவென ஏறி ஒரு மூலையில் பொத்தென விழுந்தேன்...


இரவு எட்டு மணி வாக்கில் அஸ்தம்பட்டியில் இறக்கி விட்ட டிரைவர் அண்ணன், "டேய், நேரா வீட்டுக்கு தான் போகணும், என்ன..." என சொல்லிவிட்டு விடைபெற, இறங்கியவன் அருகே உள்ள மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டுக் செல்ல, அங்கே அவர்களின் மகள்கள் மணிமேகலை, மலர்விழி இருவரும் என்னைப் பார்த்து, "மலர்...." என அலறினர். மலர் என் செட்டு, மணிமேகலை எங்கக்கா செட்டு... அக்கா என்னிடம் வந்து, "எங்கடா போன, அப்பா-அம்மா கூட உன்னைத் தேடி தான் போயிருக்காங்க... வா வீட்டுக்கு போகலாம்..." என அழைக்க, "பசிக்குதுக்கா..." என்றேன்.

ஓர் தட்டு நிறைய சோறும் முருங்கைக்காய் சாம்பாரும் ஊற்றி எடுத்து வர கஞ்சா அடித்தவனுக்கு பசி வந்ததுபோல் அனைத்தையும் நொடிகளில் காலி செய்து அவர் முகத்தைப் பார்க்க, ரிப்பீட் செய்தார். அதே வேகத்தில் தின்று முடிக்க சரியாக அவரின் அம்மா-அப்பா வந்தனர். நல்லவேளை சாப்பிடும் முன் வரவில்லை என நினைத்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் என்னை கட்டிக் கொண்டு அழ, ஒரு வழியாக கிருஷ்ணமூர்த்தி மாமா என்னை TVS XL-ல் ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.

நம்ம ஏரியாவுக்குள் வண்டி நுழைய, வீட்டின் முன்னே நூற்றுக் கணக்கில் கூட்டம், கிச்சா மாமா, "சின்னவர் வந்துட்டார்...." என உரக்கக் கத்திக் கொண்டே வண்டியை முறுக்க, கூட்டம் இரண்டாகப் பிளந்து வழிவிட..., "ஹோ..."வென்ற உற்சாகக் குரல்கள் ஏரியாவின் செல்லப் பிள்ளையை வரவேற்க, வாழக்கையில் முதன்முதலாக எனக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாம் ஒன்றாக வந்தது.

வீட்டினுள் நுழைந்தால் அங்க ஒரு ஐம்பது பேர், என்னை அப்படியே வழிநடத்திக் கொண்டு போய் கட்டிலில் அமர வைக்க, ஒரு பக்கம் பேபிக்காவின் தம்பி பாபு அண்ணாவும், இன்னொரு பக்கம் என் நெருங்கிய நண்பனின் அம்மாவும் உட்கார்ந்து கொண்டு "ஏன்டா இப்படி பண்ண..." என் தோளையும் தாவாங்கட்டையையும் தடவிக் கொடுக்க ஆரம்பித்தனர். அம்மா என் காலின் கீழே உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார். ஒரு குத்துவிளக்க எரிய விட்டு தாய்மாமன் தென்னை ஓலை மட்டுந் தான் கட்டல... எனக்கா... வெட்கம் பிடுங்கித் தின்றது.

கிச்சா மாமா ஒரு வழியாக க்ரவுடை க்ளியர் செய்ய, "சரி வாடா சாப்பிடலாம்..." என அனைவரும் அழைக்க, எனக்கோ தொண்டை வரைக்கும் முருங்கைக்காய் நிற்க, அதை மறைத்தபடி கோபமாக, "எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேணாம் என சொல்ல..." மொத்த பேரும் "அம்மா காலையில இருந்து சாப்பிடலடா, நீ சாப்பிட்டாதான் சாப்பிடுவாங்க..."ன்னு குண்டை தூக்கி போட, நானோ எதுவுமே பேசாம இருக்க, "சரி சரி டிபன் கொண்டாங்க..."ன்னு ஒரு குரல் கேட்க, 'அப்பாடா... ஹோட்டல்ல இருந்து புரோட்டா தான் வருது போல'ன்னு நெனைக்க, காலையில அவசரத்துல அம்மா செஞ்ச உப்புமாவை யாரோ தட்டுல போட்டு கொண்டு வர... மறுபடியும் மலையேறிடலாமான்னு யோசிச்சேன்...!!


பி.கு:
ஐந்தாவது படிக்கும் போது அரையாண்டுத் தேர்வில் முதல் முறையாக ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தவன் அதை பத்தாவது படிக்கும் போது இந்த ஏற்காடு சம்பவம் வரை தக்க வைத்திருந்தேன்... பின் பாடப் புத்தகங்கள் நான்காம் பட்சமானது...!! வகுப்பாசிரியர், பிற ஆசிரியர்கள், ஹெட்மாஸ்டர் அனைவரும் என்னை தனித்தனியே கூப்பிட்டு விசாரித்தனர். கடைசிவரை எனக்கு காரணமே தெரியல...!!

பி.கு-க்கு பி.கு:
அப்பா மற்றும் நண்பர்கள் & கோ என்னைத் தேடியது ஓர் தனிக்கதை...

எப்படியும் கொஞ்சநேரத்துல இவன் வந்துடுவான்னு பாத்துட்டு நேரம் ஆக ஆக வீட்டுல இருந்தவங்களுக்கு பதட்டம் அதிகமாக அக்கம்பக்கம் வீட்டுல கேட்க ஆரம்பிக்க...  அவங்க, "என்னது? மலரைக் காணோமோ? எங்க போனான்? எதுக்கு போனான்?" என ஆச்சரியப்பட, அதுக்கு அப்பா என்ன பதில் சொல்லி சமாளிச்சிருப்பார்னு எனக்கு இப்போ நெனச்சாலும் சிரிப்பு வரும்...

இதான் சாக்குன்னு ஏரியா நண்பர்கள் எல்லாரும் லீவு போட்டுட்டு ரெண்டு ரெண்டு பேரா தேட ஆரம்பிச்சுட்டாங்க...
அப்பாவோட ஆபீஸ் நண்பர்கள் தனியா ஒரு பக்கம் தேட ஆரம்பிச்சுட்டாங்க...
ஸ்கூல்ல போயி விசாரிக்க, நம்ம வாத்தியார் பத்து சைக்கிள்ல இருவது நண்பர்களை அனுப்பி தேடச் சொல்லிட்டாரு...
ரெண்டு பேரை பஸ் ஏத்தி கிராமத்துக்கு அனுப்பி அம்மாயி வீட்டுக்கு ஏதும் போயிருப்பானோன்னு அனுப்பிட்டாங்க...

பஸ் ஸ்டேன்ட், ரயில்வே ஸ்டேஷன், காந்தி ஸ்டேடியம், ஆர்ட்ஸ் காலேஜ் கிரௌண்ட்...  மலரைக் காணோம்... மலரைப் பாத்தீங்களா... மலர் வந்தானா...  இடைப்பட்ட நேரத்தில் வசந்திகள் வேறு உலவ ஆரம்பித்து விட்டாள்கள்.
'வீட்டுல காசு திருடி மாட்டிக்கிட்டானாம்...'
'பரீட்சையில ஃபெயிலாகிட்டானாம்...'
'ட்யூஷன்ல கூட படிக்கிற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்துட்டானாம்...'
நான் யாரையும் இழுத்துட்டு ஓடுலங்கிறதை தவிர எல்லாத்தையும் போட்டு மென்று விட்டார்கள்...

குதிரை என அன்போடு எங்களால் அழைக்கப்படும் நண்பன் சுரேஷ்பாபு சேலம் டவுனிலிருந்த அத்தனை பொதுக் கிணறுகளையும் எட்டிப் பார்த்துவிட்டு வந்து விட்டான்.  சிலபேர் என்னைத் தேடுற சாக்கில் சினிமாவுக்கு போயிட்டானுங்க...  எங்கப்பா ஏற்காடு ரோடில் செக் போஸ்ட் வரை வந்தவர் அங்கிருந்து மேல் நோக்கி கையைக் குவித்து, "மலர்... மலர்... மலர்..." கூவிப் பார்த்து விட்டு சென்று விட்டாராம்.

இதுல வேற எங்கம்மாவுக்கு ஆதரவா இருந்த ஆண்ட்டீஸ் எல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்லி குழப்ப ஆரம்பித்து விட்டனர்...
"இப்படித்தான் எங்கூர்ல ஒரு பையன், பதினாறு வயசு தான்..., என்ன பண்ணான் தெரியுமா...!"
"நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க, மை போட்டு பாத்தாச்சு, பையன் மேக்கால தான் போயிருக்கான், விடியறதுக்குள்ள வந்துருவானாம்..."
"அந்த புள்ளை கோகிலாவை கேட்டீங்களா, அவங்க ரெண்டு பேரும் தான் எப்பவும் ஒன்னா இருப்பாங்க..."

ஒரு வழியா ராத்திரி போலீசுக்கு போக இருந்த அந்த தருணத்தில் வந்து சேர்ந்துட்டேன்.


அன்புடன்
- மலர்வண்ணன்