Sunday 17 June 2012

தொலைந்து போனவர்கள்: "கல்லப் பொரியேயேயேய்"

சென்னையில் வீட்டிலிருக்கும் பொழுது எப்போதாவது தெருவில் எதையேனும் விற்கும் பொருட்டு கூவிக்கொண்டே சைக்கிளில் செல்பவர்களின் குரல் கேட்டவுடன், சேலத்தில் சிறுவயதில் நம் தெருவில் இதுபோன்று கூவிக் கொண்டு சென்றவர்களின் ஞாபகம் வந்து செல்லும்.  ஒருபுறம் ஊர் நினைப்பு வந்தாலும் மறுபுறம் அவர்கள் இன்று எப்படி இருப்பார்கள் என்ற ஆவல் எழும்.  நிறைய நபர்கள் இதுபோல் நினைவில் இருந்தாலும் ஒருசிலர் என்றுமே மறக்காத அளவிற்கு மனதில் பதிந்து விட்டார்கள்.

பள்ளிப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் சரியாக மாலை டீ குடிக்கும் நேரத்திற்கு "கல்லப் பொரியேயேயேய்" என்று அடித்தொண்டையிலிருந்து ஒரு ஆண்குரல் வெளியே ஒலிக்கும்.  கிட்டத்தட்ட "பருத்திவீரனில்" தலையில் குட்டு வாங்கும் பெரிசு சற்று உரக்கக் கத்தினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு குரல்.  ஒரு சைக்கிள், கேரியரின் இரு புறமும் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய பொரி, முன்னால் ஹான்டில்பாரின் இருபுறமும் இரண்டு பெரிய பைகள், ஒன்றில் பொட்டுக்கடலை, மற்றொன்றில் வேர்க்கடலை.  சைக்கிள் பாரில் ஒரு பட்டாணி மூட்டை தொங்கவிடப் பட்டிருக்கும்.  பின் கேரியரில் மடித்து வைத்த பிளாஸ்டிக் சாக்குகள் (மழை வந்தால்...), சனல் கயிறு மற்றும் ஒரு துண்டு இருக்கும்.  முன் கேரியரில் பொரிகடலை கட்டிக் கொடுக்கப்படும் பேப்பர் பைகள் இருக்கும்.  இவையெல்லாம் போக உட்காருவதற்கு சீட் என்று ஒன்று இருக்குமே, அது எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் அதில் அமர்ந்து அவர் கூவிக்கொண்டே வருவார்.  ஆறடிக்கும் சற்று குறைவான உயரத்தில், கருகருத்த மேனியுடன், குறைந்தபட்சம் 90 கிலோ எடையுடன், வெள்ளை சட்டை, கட்டம் போட்ட லுங்கியுடன் கம்பீரமாக வருவார்.

யாரைப் பார்த்தும் பொரி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்க மாட்டார்.  ஏனென்றால் அப்போதெல்லாம் பொரி வாங்குபவர்கள் வீட்டிலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே வருவர்.  அதைப் பார்த்ததும் அவ்வீட்டின் முன்னாள் சைக்கிளை நிறுத்தி, இறங்கி தன் இடுப்பில் சாய்த்து நிறுத்திக் கொள்வார்.  பொரி வாங்க மட்டுமல்ல, பால், தயிர், புளி போன்ற எதை வாங்கினாலும் பாத்திரத்தில் தான் வாங்க வேண்டும்.  காய்கறி, பழங்கள் போன்றவற்றை பெண்கள் தங்களுடைய முந்தானையிலோ, முறத்திலோ வாங்கிச் செல்வர்.  ஹோட்டலுக்கு பார்சல் வாங்கச் சென்றால் சாம்பாருக்கு பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும்.  கறி வாங்க சென்றாலும் டிபன் பாக்ஸை ஒயர் பையில் போட்டு எடுத்துச் செல்வோம்.  பக்கெட், குடம், நாற்காலி எதுவுமே பிளாஸ்டிக் கிடையாது.  துணிக் கடைகளில் கூட மஞ்சள் பை தான் தருவார்கள்.  வீடுகளில் அதிக பட்ச பிளாஸ்டிக் உபயோகம் எதுவென்று பார்த்தால், எலெக்ட்ரிக் ஒயர் செல்லும் பைப், மற்றும் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றும் குழாய் மட்டுமே.  Chick Shampooவிலும், Bisleriயிலும்  ஆரம்பித்த பிளாஸ்டிக் உபயோகம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை.

சைக்கிளை நிறுத்தியவுடன் சுற்றி ஒருமுறை பார்த்து "கல்லப் பொரியேயேயேய்" என்று கூவுவார்.  அவரிடம் சென்றால் என்ன வேண்டும் என்று கேட்க மாட்டார்.  என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  பொரி மூட்டையில் முழு ஒரு படியும் அரை படியும் இருக்கும்.  பொட்டுக்கடலை பையில் கால் படி ஒன்று இருக்கும்.  பட்டாணி பையில் கால் படியில் பாதி உள்ள ஒரு வஸ்து இருக்கும்.  பொரியை படியில் கூம்பு போல நிறுத்தி அளந்து கொடுப்பார்.  ஆனால், கடலை வகைகளை தலை தட்டித்தான் அளந்து கொடுப்பார்.  தலை தட்டுவது என்றால் கூம்பு வாக்கில் நிரப்பி அந்த கூம்பை நிரவி விட்டு அளப்பது.  என்னதான் வீடுதோறும் சென்று விற்கும் வியாபாரி ஆகினும் அவரிடம் பேரம் என்பதே கிடையாது.  கொடுக்கும் காசை தன் லுங்கியை லேசாக விலக்கி கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு "கல்லப் பொரியேயேயேய்" என்று சைக்கிளை கிளப்பி விடுவார். 

அப்போது நாங்கள் இருந்த வீட்டில் திண்ணை இருந்தது.  திண்ணையில் ஏறி உட்கார்ந்து கால்களை தொங்க விட்டுக் கொண்டு எங்களுக்குக் கிடைக்கும் அதிக பட்ச தீனியான பொரியை ஒவ்வொன்றாக எடுத்துக் கொறிப்பது அலாதி சுகம்.  அதுவும் சூடான டீயில் கொஞ்சம் பொரியைக் கொட்டி ஊற விட்டு கடைசியில் அதை சாப்பிடும் சுவைக்கு நான் இன்றும் அடிமை.  இன்று திண்ணைக்கு மேலே ரோடு வந்துவிட்டது.  புதிதாகக் கட்டும் எந்த வீடுகளிலும் திண்ணை இருப்பதில்லை.

வகுப்பில் என்னுடன் படிக்கும் நண்பர்கள் பெரும்பாலும் அஸ்தம்பட்டி, கோரிமேடு, சின்னத்திருப்பதி, புதூர், அழகாபுரம், மணக்காடு, ஜான்சன்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, லைன்மேடு, மரவனேரி, குகை, கோட்டை, வின்சென்ட், அரிசிபாளையம்  பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.  எனது பள்ளி இந்த இடங்களுக்கு மத்தியில் பொதுவாக அமைந்திருக்கும்.  நண்பர்களின் அன்றைய கூற்றுப்படி இவர் ஒருவர்தான் இந்த எல்லா பகுதிகளுக்கும் பொரிகாரர்.  இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.  எப்படி ஒரு மனிதன் சைக்கிளில் சென்று இவ்வளவு பகுதிகளையும் மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் cover செய்தார் என்று..!!

என் மனைவியிடம் ஒரு நாள் இவரைப் பற்றி பேசிய பொழுது, "அய்.. நாங்களும் சின்ன வயசுல இருந்த போது அவர் தான் பொரி தருவார்" என்றதோடு மட்டுமல்லாமல், பொரிகாரருக்கு அவரைப் போலவே ஒரு தம்பி இருப்பதாகவும் அவரும் பொரி வியாபாரிதான் என்றும் தம்பி பொரிகாரர் என் மனைவி வசித்த பகுதியில் பொரி விற்றவர் என்ற  கூடுதல் தகவல் வேறு தந்தார்.  "The Prestige" படத்தில் வரும் twist போல இருந்தது.

2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி, தம்பி பொரிகாரரை  சேலத்தில் உள்ள ஒரு  துணிக்கடையில் எதிர்பாராமல்  சந்தித்திருக்கிறார்.  என் மனைவியை அடையாளம் கண்டுகொண்ட அவர் நலம் விசாரித்துப் பேசியிருக்கிறார்.  தனக்கு சமீபத்தில் மூளையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்  தன் பிள்ளைகள்  தன்னை இனிமேல் பொரி விற்க செல்லக் கூடாதென்று சொல்லிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.  அவர் அண்ணனைப் பற்றி விசாரிக்கையில் அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.  காதுக்குள் "கல்லப் பொரியேயேயேய்" என்று அவர் கூவியது மீண்டும் மீண்டும் பலமுறை ஒலித்தது.  இனி அதை என்றும் திரும்பக் கேட்க மாட்டோம் என்பதை நினைத்தவுடன் மனது லேசாக வலிக்கவும் செய்தது...

இன்று என் குழந்தைகள் பேல் பூரி என்று சேட்டு கடையில் அதையே வாங்கி தின்றாலும் அன்று நான் எனது ஆஸ்தான பொரிகாரரிடம் வாங்கித் தின்ற சுகம் அவரகளுக்கு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை... கால ஓட்டத்தில் இப்படி தொலைந்து போனவர்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருப்பர்.  அந்த நிகழ்வுகளை rewind  செய்து அசை போட்டு பாருங்கள்.

- அன்புடன்
- மலர்வண்ணன்

10 comments :

  1. உண்மை தான். பொரி கடலை, கோல பொடி, கீரைக்கட்டு, பலூன், குறி ஜோசியம், சேமியா ஐஸ், சீலை, வளையல், பால் வண்டி மணி சத்தம் என்று பொருள்களும், வியாபாரிகளும், அந்த சிறிய வணிக உலகம் எல்லாமே வேறு வடிவங்கள் எடுத்து விட்டன. துணி காயப் போடும் கொடிக்கயிறு முதற்கொண்டு Departmental store -இல் வாங்க ஆரம்பித்து விட்டோம். இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த ஆனந்த விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரில் இதையே தான் எழுதியுள்ளார். தெருவில் ஒன்றாக பம்பரம், கில்லி, கோலி, பட்டம் என்று விளையாடியதும் இனிய நாட்களே. எல்லாமே போய்டுச்சு. மின்வெட்டு பிரச்சனையால் விளைந்திருக்கும் ஒரே நன்மை மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஊர்களில் மீண்டும் கூடி சுற்றும், விளையாடும் போக்கு உள்ளது தான். ஆனால் சிறு வணிகர்களை காப்பாற்றும் வழி நம் வீட்டு தாய்மார்களிடம் தான் உள்ளது.

    இடித்துரைக்க ஏதும் இன்றி நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. "பொரி கடலை, கோல பொடி, கீரைக்கட்டு, பலூன், குறி ஜோசியம், சேமியா ஐஸ், சீலை, வளையல், பால் வண்டி மணி சத்தம் என்று பொருள்களும், வியாபாரிகளும்"
      -
      யப்பா!! ராஜ்மோகன், தொடராகவே எழுதலாம் போலிருக்கே...
      இதே காலகட்டத்தில் ஒரு வளையல் வியாபாரியும் மாதத்திற்கு இரண்டு முறை வருவார். சிறு பிள்ளைகளும், வளையல் வாங்கும் பெண்களும் அவரை வளையல் தாத்தா எனவும், அவர் வயதையொத்தவர்கள் நாயுடு எனவும் அழைப்பர். பிறிதொரு சமயத்தில் விரிவாக காணலாம்.
      விமர்சனத்திற்கு நன்றி..

      Delete
  2. "இன்று திண்ணைக்கு மேலே ரோடு வந்துவிட்டது. புதிதாகக் கட்டும் எந்த வீடுகளிலும் திண்ணை இருப்பதில்லை" உண்மை தான் நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி "நண்பேண்டா..."

      Delete
  3. நான் எனது ஆஸ்தான பொரிகாரரிடம் வாங்கித் தின்ற சுகம் அவரகளுக்கு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை.// அடுத்த தலைமுறை இழந்து விட்ட எத்தனையோ சந்தோஷங்களில் இது போன்றவையும் அடக்கம். பால்ய நினைவுகள் சுகமானவை. அதுவும் பால்ய கால நண்பன் கிடைத்து விட்டால் சொல்லவே வேண்டாம். அருமை நண்பா, எழுதுங்கள் இது போல நிறைய...

    ReplyDelete
    Replies
    1. //அதுவும் பால்ய கால நண்பன் கிடைத்து விட்டால் சொல்லவே வேண்டாம்//

      நான்காம் வகுப்பிலிருந்து இன்றுவரை நட்பில் இருக்கும் நண்பனைப் பற்றி எழுத வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆரம்பிக்கவே திணறி விடுவேன்.

      Delete
  4. அன்பின் மலர் வண்ணன் - சிறு வயது நிகழ்வுகள் - மலரும் நினைவுகள் அசை போட்டு ஆனந்தித்து புத்துணர்வுடன் நாட்களைத் துவக்குவது நன்று - தலைமுறைகள் மாற மாற நிகழ்வுகளூம் மாறுகின்றன - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா..

      Delete
  5. good post malar

    ReplyDelete