Thursday, 26 July 2012

ரேடியோவும் நானும்

"Philips" - இந்தப் பெயரோடு எனக்கிருந்த பரிச்சயம், பந்தம், உறவு, அப்பப்பா... சொல்லி மாளாது.  பொற்காலம் என்பதற்கு மேல் ஏதாவது உண்டு என்றால் அது நான் "Philips" உடன் இருந்த காலம் தான்.  ஏழாவது வயதில் திரைப் படப் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.  "காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" என்பதை பாரதி எனக்காக மட்டுமே பாடியுள்ளார் என்று நினைத்த காலம் அது.  

ஒன்றரைக்கு முக்கால் என்ற நீள அகலத்தில் பிஸ்கட் கலரில் சும்மா பளபளவென்று மினுக்கும்.  ஒரு சின்ன கீறல் கூட அதன் மீது இருக்காது.  ஒரிஜினல் லெதர் கவர் போட்டு தகுந்த பந்தோபஸ்துடன் பக்காவாக பராமரிக்கப்பட்டு வந்தது.  கையில் தூக்கிச் செல்லுமாறும், தோளில் தொங்கவிட்ட படியும்  எடுத்துச் செல்லும் வசதியுடன் உள்ள தோல் பைக்கு உள்ளே அடக்கமாக இருக்கும்.  மாதம் ஒரு முறை அப்பா அந்த கவரை கழட்டி "Philips"ஐ துடைப்பார்.  பர்தாவுக்குள் இருந்து மோனலிசா வெளிப்பட்டால் தோன்றும் பரவசத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  பின்புறம் இரண்டு பெரிய ஸ்க்ருக்கள் இருக்கும்.  பழைய ஐந்து பைசாவை வைத்து அவற்றை வலிக்காமல் கழட்டுவார்.  உள்ளே சிவப்பு கலரில் இருக்கும் 4 EverReady  பாட்டரிகளை எடுத்து விட்டு அந்தக் காலியிடத்தில் நன்றாக ஊதித் துடைத்து மீண்டும் மாட்டுவார். 

மின் இணைப்பு கிடைக்கப் பெற்றதும் பாட்டரிகளை தூக்கி விட்டு eliminator-ல் "Philips" இயங்க ஆரம்பித்தது.  என்ன, பழையபடி நினைத்த இடத்திற்கு தூக்கி செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், முன்பைவிட சற்று உரக்கப் பாட ஆரம்பித்தது.  "Philips" உடன் நான் நெருக்கமாக ஆரம்பித்த கால கட்டத்தில் எங்கள் வீட்டில் எனக்குத் தெரிந்து எங்கப்பாவின் சைக்கிளுக்கு அடுத்தபடியான விலை உயர்ந்த பொருள் "Philips"தான்.

MW, SW1 மற்றும் SW2 என மூன்று பேண்டுகள் அதன் உச்சந்தலையில் இருக்கும்.  MWவில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் வானொலி நிலையங்கள் நன்கு கிடைக்கும்.  SW2வில் நம்ம சிலோன் கிடைக்கும்.  சேலத்தில் சென்னை மற்றும் விவித பாரத ஒலிபரப்புகள் எடுக்காது.  இது தவிர புரியாத பலமொழிகளில் கர்ர்ர் புர்ர்ர் என்று வந்தாலும், இந்த மூன்று அலைவரிசைகளில் ஒன்றுதான் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

காலையில் அப்பா அதை சரியாக 6:30க்கு ஆன் செய்து திருச்சியில் வைப்பார்.  வேளாண் அரங்கம் போய்க் கொண்டிருக்கும்.  6:45க்கு "கொட்டும் முரசு" வரும்.  6:50க்கு "மாநில செய்திகள்-சென்னை அஞ்சல்" என்ற அறிவிப்பைத் தொடர்ந்து "ஆல் இந்திய ரேடியோ மாநிலச் செய்திகள் வாசிப்பது" என ஆரம்பித்து ஜெயா பாலாஜியோ, பத்மநாபனோ செய்திகள் வாசிப்பார்கள்.  7.00 மணிக்கு ரேடியோ நிறுத்தப்படும்.  மீண்டும் 7:15க்கு போட்டால் "ஆக்காசவானி" செய்திகளை டெல்லியிலிருந்து சரோஜ் நாராயணசாமி கரகரவென அடித் தொண்டையில் வாசிப்பார்.  7.25க்கு சேவை செய்திகள்.  அதன்பின் சரியாக வரும் 7.30க்கு நம்ம மேட்டர்.

அதுவரை படிக்கவோ, அல்லது படிப்பது போல பாவ்லா செய்து கொண்டிருந்தாலோ, அதை விட்டு ரேடியோவிடம் வந்துவிடுவேன்.  நேரம் "ஏழு மணி முப்பது நிமிடம், திரைப்பட பாடல்கள்" என அறிவிப்பாளர் அறிவிக்கும் போதே உள்ளுக்குள் ஜிவ்வென்று இருக்கும்.  முழுதாக 6 பாடல்கள் கேட்கலாம்.  ஏன் இந்த ஆர்வம் என்றால், எங்க அப்பா மேஜர் சுந்தர்ராஜனை விட பயங்கர ஸ்ட்ரிட்டு.  வீட்டுல டேப் ரெகார்டர் இருந்தா நாங்க பாட்டு கேட்டே கெட்டு போயிடுவோம்னு வீட்டுல கடைசியான நான் +2 முடிக்கிற வரை வாங்கவே இல்லை.  அதற்கப்புறமும் வாங்கவில்லை.  அண்ணன் தான் வேலைக்கு சென்றவுடன் அதை வாங்கினாப்ல.  அதுவும் "Philips" தான்.  நடுவில வீட்டுல டிவி கூட வாங்கியாச்சு, ஆனா டேப் ரெக்கார்டர் வாங்கல.  டிவி-ல வெள்ளிக் கிழமைல வர்ற ஒளியும் ஒலியும்க்கு தேவுடு காத்தது தனிக்கதை.

அதுக்குத் தான் நாங்க அப்பவே கிரிமினலா யோசிப்போம்.  படிக்க வேண்டியதை ராத்திரியே முடித்துவிட்டு, எழுத்து வேலையை காலைல வெச்சுக்கிவோம்.  அப்படியே படிக்கிறது எதுனா பாக்கி இருந்தா அது எட்டு மணிக்கு அப்புறம்தான்.  அப்போது பள்ளி நேரம் காலை பத்திலிருந்து ஒன்று வரை, மதியம் இரண்டிலிருந்து நாலேகால் வரை, ஏழு வகுப்புகள் மட்டுமே.  So, வீட்டிலிருந்து ஒன்பதேகாலுக்கு கிளம்பினால் போதும்.  நண்பர்களுடன் அரட்டையடித்தவாறே மூன்று கிலோமீட்டரை இருபது நிமிடங்களில் கடந்து விடுவோம்.  அப்பா காலை 4:30க்கு எழுந்து விடுவார்.  அவருக்கு தூக்கம் வராதபடியால் எங்களையும் 5 மணிக்கு எழுப்பி படிக்கச் சொல்வார்.  பெரும்பாலும் படிப்பது போல் நடிப்பேனே ஒழிய பாதி தூக்கத்தில் தான் இருப்பேன்.  சரியாக 5:30க்கு காய்கறி வாங்க சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.  அப்படியே படுத்துக் கொண்டு விடுவேன்.  6:15க்கு அவர் வருவதை வெண்பாவின் செப்பலோசை போல அப்பாவின் சைக்கிளோசை காட்டிக் கொடுத்துவிடும்.  கைக்கிளைத் திணை போல இது சைக்கிளைத் திணை.  விருட்டென்று எழுந்து கையில் ஆலங்குச்சியையோ, வேலங்குச்சியையோ எடுத்துக் கொண்டு தூக்கத்தை விரட்ட ஆரம்பிப்பேன்.

படிக்கிற நேரத்தில் எதுக்கு சினிமா பாட்டு என்ற கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே "எழுதிட்டு தானே இருக்கேன், பாட்டு கேட்டா என்ன" என்ற தோரணையில் இருப்போம்.  அதுவும் SPB, ஜேசுதாஸ், ஜானகி, ஷைலஜா பாடல்கள் என்றால் ஒரே குதூகலம் தான்.  5 வருடங்களுக்குட்பட்ட பாடல்களாகத்தான் இருக்கும்.  அதில் பெரும்பான்மை ரஜினி, கமல் பாடல்களாக தான் இருக்கும்.  நம்ம கெட்ட நேரம், அன்று TMS - சுசீலா பாடல்கள் என்றால் பேசாமல் எழுந்து போய் விடுவேன்.  அந்த காலகட்டத்தில், ஏன் இப்போது கூட TMS குரல் என்னை பெரிதாக ஈர்க்கவே இல்லை.

எட்டு மணிக்கு, டெல்லி அஞ்சல் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து 5 பீப் ஒலி வரும், "யே, ஆகாஸ்வானி" என்று கர்ண கடூரமாக ஹிந்தியில் பேச ஆரம்பிக்கும் போதே முன்னறிவிப்பின்றி நம் வீட்டில் நிறுத்தப் பட்டாலும் தொலைவில் ஏதாவது ஒரு வீட்டில் அது தொடரும்.  சரியாக 8:25க்கு புத்தகத்தை பையில் திணித்துவிட்டு குளிக்கக் கிளம்புவேன்.  கிளம்பும் முன் ரேடியோவை கோயம்புத்தூரில் திருப்பி வைத்து விடுவேன்.  8:25 முதல் 9:10 வரை திரைப் பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  சும்மா சொல்லக் கூடாது, கோயம்புத்தூர் கொஞ்சம் எப்பெக்ட் குறைச்சலாக இருந்தாலும் TMS பாடல்களைப் போட மாட்டார்கள்.

மாலை வீடு திரும்பியதும் முதலில் அம்மாவிடம் கேட்கும் கேள்வி, "சாப்பிட என்ன இருக்கு?"  இப்போது நம் குழந்தைகளுக்கு வாங்கித் தருவது போல ஸ்நாக்ஸ் எல்லாம் கிடையாது.  கடையில் எனக்கு வாங்கித் தரப்பட்ட அதிகபட்ச தீனி பொரி & காராசேவு.  ஆனால் வீட்டில் நிச்சயமாக ஏதோ ஒன்று இருக்கும்.  அம்மா வழக்கமாக எங்களுக்கு செய்து தரும் தின்பண்டங்கள் ஆரிய ரொட்டி(ராகி), இனிப்பான கம்பு உருண்டை, ரொட்டிமாவில் செய்யப்பட இனிப்பு அல்லது காரமான கலகலா, வேகவைத்த குச்சி கிழங்கு(மரவள்ளி), வேகவைத்த சக்கரவள்ளிக் கிழங்கு, வறுத்த அல்லது வேகவைத்த நிலக்கடலை, வேகவைத்த சோளக் கருது(கார்ன்) இவைகளில் ஏதாவது ஒன்று இருக்கும்.  இவற்றிற்கான மூலப் பொருட்கள் கிராமத்திலிருந்து என் தாய்மாமாவினால் தரப் பட்டதாக இருக்கும்.  இது எதுவும் இல்லையென்றாலும் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கொய்யா, சீதா, ராமசீதா, பப்பாளி, நெல்லி இவற்றில் ஒன்று காப்பாற்றிவிடும்.  அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கிறது அருகிலுள்ள அமுதசுரபி மாந்தோப்பு.  அந்த மாந்தோப்பு யாருடையது என்று கண்டுகொள்ள எனக்கு பல வருடங்கள் பிடித்தது.

சாப்பிட சைடு டிஷ் வேண்டாமா?  ரேடியோவைப் போடு.  SW2, "இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை, நேரம் 4மணி 45நிமிடங்கள், 24வினாடிகள்" என்று களைகட்டும்.  வெறும் 15 நிமிடங்கள் மட்டும் கேட்டுவிட்டு விளையாடச் சென்று விடுவேன்.  ஆனால் என் அம்மா 6 மணி வரை கேட்டுக் கொண்டிருப்பார்.  60கள், 70கள், ஏன் 80களில் திருமணம் செய்து கொண்ட பெண்கள் பலருக்கும் ரேடியோ மட்டுமே பெருந்துணையாக இருந்துள்ளது.  அதுவும் குறிப்பாக சிலோன் ரேடியோ.  யப்பா!! அந்தத் தமிழ் சும்மா விளையாடும்.  நேயர் விருப்பத்தில் இடம் பெற்றவர்களின் பெயரை அவரின் ஊர்ப் பெயரோடு சேர்த்து சொல்வது கொள்ளை அழகாக இருக்கும்.  இப்படிப்பட்ட பெயர்களில் எல்லாம் ஊர்கள் இருக்கிறதா என்று ஆச்சரியமாகவும் இருக்கும்.  அதுவும் பல நேரங்களில் ஊர்ப் பெயரை சந்தத்துடனும் எதுகை மோனையுடனும் சொல்வார்கள்.  உதாரணமாக "மட்டக்களப்பு ராஜேஷ்வரன், பட்டுக்கோட்டை ராஜேஸ்வரி".

அதிலும் 5 மணிக்கு "பிறந்தநாள், இன்று பிறந்தநாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என்ற பாடல் வரியைத் தொடர்ந்து பாடல்களின் ஊடே பிறந்தநாள் வாழ்த்துக்களை அறிவிப்பார்கள்.  "அம்மா, அப்பா, அண்ணன், அக்காள், அம்மம்மா, அப்பப்பா" போன்ற வார்த்தைகளை அவர்கள் உச்சரிப்பைக் கேட்க சுவாரசியமாக இருக்கும்.  மாமாவிற்கு பெண்பால் மாமி ஒன்று உண்டு என்பதை முதலில் நான் சிலோன் ரேடியோவின் மூலமே அறிந்து கொண்டேன்.  அதற்கு முன் நானறிந்த இலக்கணம் "அத்தை" மட்டுமே. 

"சின்ன மாமியே, உன் சின்ன மகளையே, பள்ளிக்குத் தான் சென்றாள், படிக்கச் சென்றாளோ"
"அட வாட மருமகா, என் அழகு மன்மதா..."
என வரும் சிலோன் மனோகர் பாடிய பாடலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒலிபரப்புவார்கள்.  புகழ் பெற்ற "சுராங்கனி" பாடலை பாடியவர் இந்த சிலோன் மனோகர்.  கமலின் குரு படத்தில் நம்பியார் கூட தலை நிறையை புட்டபர்த்தி சாய்பாபா ரேஞ்சுக்கு முடி வைத்து வருவாரே, அவர் தான்.

அப்போதெல்லாம் மாதத்தில் 3 சனிக் கிழமைகள் பள்ளி அரைநேரம் இருக்கும்.  பள்ளிவிட்டு விளையாடிவிட்டு மூன்று மணிபோல் வீடு திரும்புவோம்.  சரியாக அதே நேரத்திற்கு நம்ம சிலோனில் "பாட்டுக்குப் பாட்டு" ஆரம்பமாகி விடும்.  அப்துல் ஹமீதின் குரலுக்கு மந்திரத்தில் கட்டுண்டவர் போல் கிடப்போம்.  "அடுத்ததாக நாம் அழைப்பது(ம்), மன்னார்குடியைச் சேர்ந்த சன்னதி தெருவில், இலக்கம் பதின்மூன்றில் இருக்கும் பாவாடை என்கிற ரங்கசாமி" என்று அவர் அழைக்கும் அழகிற்கே அதை ஆவலுடன் கேட்போம்.  "உங்களுக்குக் கிடைத்திருக்கும் சொல் கு குறில் அல்ல, கூ நெடில்" என்று சொல்லி பாடகர் சொதப்பி விட்டால், "கூ கூ என்று குயில், கூட வருவியா போன்ற பாடல்கள் இருக்கிறன்றன" என்று சொல்லி அசத்துவார்.  "வே என்ற இடத்தில் மணி ஒலித்திருக்கிறது(ங்), உங்களுக்கான சொல் வே நெடில் அல்ல, வெ குறில்" என்பார்.  இரண்டு மணிநேர நிகழ்ச்சி, போவதே தெரியாது.  இப்போது விஷுவலாகப் பார்த்தாலும் அன்று கேட்ட சுகம் சுத்தமாக இல்லை.

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அப்பா வழக்கம் போல் 5 மணிக்கு எழுப்பி விட்டு விடுவார்.  வழக்கம் போல் ஏழரைக்கு திருச்சியில் திரைப் படப் பாடல்கள்.  கோயம்புத்தூரில் அன்று பாடல்கள் 9:45 வரை போடுவார்கள்.  பத்து மணிக்கு மேல் செம பிஸியா இருப்போம்.  வீட்டிலுள்ள நாட்டுக் கோழிகளுள் ஏதாவது ஒன்று அன்று அறுபடும்.  அல்லது அருகிலுள்ள வற்றாத பெரிய்ய்ய்ய கிணற்றில் தூண்டில் மூலம் கெண்டையும் கெழுத்தியும், அப்பாவும் அண்ணனும் உள்ளே உட்கார்ந்து  பிடித்து வெளியே வீச, நானும் அக்காவும் அந்த மீன்களை பொறுக்கி பக்கெட்டில் போட்டு வைப்போம்.  சிறு மீன்கள் எங்கள் கிணற்றில் விடப்படும்.  உறு மீன்கள் வறுபடும்.  மீனை உயிருடன் துள்ளத் துள்ள கையில் எடுத்து சரக்கென்று வயிற்றைக் கிழித்து சுத்தம் செய்ய நாங்கள் அனைவரும் பழக்கப் பட்டிருந்தோம்.  மீன்பிடி வைபவம் மாதம் ஒருமுறை நடைபெறும்.  இல்லாத நாட்களில் விளையாடச் சென்று விடுவேன்.  பட்டம், பம்பரம், கில்லிதாண்டில், புட்பால், கிரிக்கெட் என்று தட்பவெப்ப நிலைக்கேற்ப எங்கள் விளையாட்டு மாறிக் கொண்டே இருக்கும்.  எங்கு இருந்தாலும் சரியாக 1 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன்.  12:10 சூர்யகாந்தி, 12:50 செய்திகளுக்குப் பிறகு சரியாக 1 மணிக்கு "நீங்கள் கேட்டவை"

ஒரு மணி நேரத்திற்கு புதுப் புதுப் பாடல்களாக போட்டுத் தள்ளி விடுவார்கள்.  எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, ஒரு முறை அறிவிப்பாளர், "நேரம், ஒரு மணி, நீங்கள் கேட்டவை... இறுதியில் கேட்ட இரண்டு வார்த்தைகள் கொண்ட படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய பாடல்" என்றவுடன் குதித்தே விட்டேன்.  அதற்கு 2 நாட்கள் முன்னர்தான் அந்தப் படத்தைப் பார்த்திருந்தபடியால் பாடல்களை எப்போது கேட்பேனோ என்ற ஆவலில் இருக்கும் போது சரியாக வழங்கினார்கள்.  "ஓ...வசந்த ராஜா..." என்ற பாடல் அது.  பல சமயங்களில் பாடல் ஒலிக்கும் போதே படு வேகமாக அவற்றை நாங்கள் எழுதியதும் உண்டு.

சரியாக ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு திரைப் படத்தின் கதை-வசனம் அல்லது நாடகம் ஒலிபரப்பாகும்.  அன்பே வா, திருவிளையாடல், விதி, சரஸ்வதி சபதம், வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களின் வசனங்கள் "மறு ஒலிபரப்பு" என்ற பெயரில் எத்தனை முறை போட்டாலும் சுற்றியமர்ந்து கேட்போம்.  இரவுக்குள் ஒரு பகல், நிலவைத் தொடாத வானம் போன்ற வகையறா சமூக(!) நாடகங்கள் போட்டாலும் விடாமல் கேட்போம்.  ஆனால், "ராஜாதி ராஜ, ராஜகுல திலக....." என ஆரம்பிக்கும் சரித்திர நாடகங்களைக் கேட்டால் எழுந்து போய்க் கொண்டே இருப்பேன்.  அந்த சண்டே வெறுமையாக போய்விடும்.

இது தவிர ஒவ்வொரு வருடமும் சரியாக பொங்கல் விடுமுறை தருணத்தில் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா இங்கிலாந்திடமோ, ஆஸ்திரேலியாவிடமோ, வெஸ்ட்இண்டீசிடமோ செம உதை வாங்கும்.  எனக்கு கிரிக்கெட் ஆர்வம் வந்து ஆடத் துவங்கிய தருணத்தில், இங்கிலாந்தின் கேப்டன் மைக் கேட்டிங், ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆலன் பார்டர், வெஸ்ட்இண்டீசின் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்.  இந்த மூவரின் அணிகளும் "World Beaters" என்று சொல்லும் அளவிற்கு இருந்தன.  ஸ்ரீகாந்த், கவாஸ்கர், அமர்நாத், வெங்க்சர்க்கார், சந்தீப்படீல்,  கபில்தேவ், ரவிசாஸ்திரி, ரோஜெர்பின்னி, மதன்லால் என இந்திய அணியும் நட்சத்திரப் பட்டாளத்தோடு இருந்தாலும் எதிரணியினர் சொல்லி சொல்லி அடிப்பார்கள்.  வருடம் ஒருமுறை நடக்கும் இந்த குனிய வைத்து குமுறும் வைபவத்துக்கு தமிழில் கமெண்டரி நமது ரேடியோவில் ஒலிபரப்பாகும்.  பொங்கல் எப்போதும் எங்கள் அம்மாயி வீட்டில்தான் என்பதால், கிராமத்திலுள்ள மாமாவின் ரேடியோவே கதியென்று கிடப்பேன்.

டாஸில் இருந்து அப்துல் ஜாபர் ஆரம்பிப்பார், உடன் ராமமூர்த்தியும் தொற்றிக் கொள்வார். ஒவ்வொரு பந்தையும் வர்ணிப்பார்கள், ஒவ்வொரு ஷாட்டையும் வர்ணிப்பார்கள், மைதானத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் வர்ணிப்பார்கள்.  நாமே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்கள்.  இவர்களுடைய ரன்னிங் கமெண்டரியைக் கேட்காத தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்க்கையில் நிச்சயம் அதை இழந்தவர்களாகவே கருதப்படுவர்.  "ஆப் சைடிற்கு சற்றே வெளியே வீசப் பட்ட பந்து, அதை ஒரு அவுட் ஸ்விங் என்றும் சொல்ல இயலாது, நன்கு எழும்பி வந்த பந்து, அமர்நாத் அதை கல்லிக்கும் பாயிண்ட்டுக்கும் இடையில் மிக அழகாக, லாவகமாக அடித்து, அடித்து என்பதை விட சற்று வேகமாக தள்ளி விட்டார் என்று சொல்லலாம், நான்கு ரன்களைப் பெறுகிறார், இத்துடன் அமர்நாத்தின் ஸ்கோர் 38 , இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்பிற்கு 217.  Follow On-ஐத் தவிர்க்க இன்னும் 63 ரன்கள் தேவைப் படுகிறது". 

இந்த வர்ணனையாளர்கள் மத்தியில் ரங்காச்சாரி என்ற ஒரு expert இருப்பார்.  அவர் விக்கெட் விழுந்தாலோ, நான்கு அல்லது ஆறு அடித்தாலோ அதைப் பற்றி சிலாகித்து டெக்னிகலாக பேசுவார்.  "யோர்கர்ன்ற இந்த வகைப் பந்து வீச்சில் வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் திறமை வாய்ந்தவர்கள்.  ஆனால் இன்னைக்கு அதே முறையில இயான் போத்தம் வெங்சர்க்காரை அவுட் செய்திருக்கிறார்,  இந்தப் பந்து full டாஸ் மாதிரி வந்து கால் காப்பில் படுவது போல தோன்றினாலும் கடைசி வினாடியில் காற்றிலே திரும்பி உள்ளே நுழைந்தது, ஏமாற்றி உள்ளே நுழைந்தது என்று கூட சொல்லலாம்,  1978 -இல் ஒருமுறை இப்படித்தான்..."என்று அவர் வர்ணனை தொடரும்.  வர்ணனையை ஆவலுடன் கேட்கும் நம் முகரைகளைப் பார்த்து சும்மா போகிறவர்கள் கூட கவாஸ்கர் எத்தனை கோல் போட்டான் என்று கேட்பார்கள். 

டெல்லி, பம்பாயில் நடக்கும் போட்டிகளின் வர்ணனையும் விட மாட்டோம்.  ஆகாஸவானியில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலிபரப்புவார்கள்.  ஆங்கிலத்தில் ஓரளவுக்கு புரிந்து கொள்வேன்.  ஹிந்தியில்!!
"கோயி ரன் நஹி, சார் ரன் கேலியே, ஏக் ரன் கேலியே, தோ ரன் கேலியே, தீன் ரன் கேலியே, அவுர் யே சக்கா, அவுர் யே அவுட்"  இவை மட்டுமே எனக்கு புரியும்.  இன்று வரை...  இருந்தாலும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போல் கேட்டுக் கொண்டே இருப்பேன்.  பல நேரங்களில் ஒரு குழுவாக அமர்ந்து கேட்டுக் கொண்டு இருப்போம். 

என்னதான் ரேடியோவில் பாட்டு கேட்டாலும் டேப் ரெகார்டில் கேட்பது என்பது கொஞ்சம் உசத்தியாத்தான் அப்போது கருதப் பட்டது.  நமக்கு புடிச்ச பாட்டை பதிவு பண்ணி வெச்சு புடிச்ச நேரத்துல எத்தினிவாட்டி வேணாலும் திரும்ப திரும்ப போட்டு கேட்கலாம்.  சமயத்துல நாமளே பாடி ரெகார்ட் பண்ணி கேட்டுக்கலாம்.  இந்த ஆசை ஒரு பெரும் நிராசையாகவே இருந்து வந்தது.  அந்த சமயத்தில் மாமா ஒரு டெல்லி செட் டேப் ரெகார்டரை வீட்டுக்கு கொண்டு வந்தார்.  அப்பாவிடம், "கொஞ்ச நாளைக்கு வைச்சு கேளுங்க, நல்லா இருந்தா அப்புறமா காசு கொடுங்க" என்று சொல்லிவிட "Philips"க்கு உண்டான plug பிடுங்கப்பட்டு டெல்லி செட்டில் சொருகப்பட்டது.  மாமா நாலைந்து கேசட்டுகள் கொண்டு வந்திருந்தார்.  பெரும்பாலும் MGR பாடல்கள்.  அவற்றில் ஒன்று "முந்தானை முடிச்சு - கதை வசனம்". 

குடும்பத் தலைவர்கள் "அலைகள் ஓய்வதில்லையையும்", "முந்தானை முடிச்சையும்" ஜீரணிக்க முடியாமல் துவைத்துக் காயப் போட்டுக் கொண்டிருந்த காலம் அது.  இருந்தாலும் படமும், பாடல்களும் திரும்பிய பக்கமெல்லாம் முழங்கின.  முந்தானை முடிச்சை என் அம்மா, சரோஜா அக்கா, மற்றும் செல்வமணி அக்கா மூவரும் சென்று பார்த்து விட்டனர்.  மூவரின் கணவன்மாரும் ஒன்றாக வேலை பார்ப்பர்வர்கள்.  இம்மூவருக்கும் இரண்டிரண்டு பையன்கள் (எனக்கு மட்டும் ஒரு அக்கா extra).  அனைவரும் ஒரே பள்ளியில் சில வருட இடைவெளியில் படித்து வந்தோம்.  கான்வென்ட்டில் படிக்காததால் அங்கிள், ஆன்ட்டி என்று கூப்பிட வராது.  பெற்றோர், சொந்தங்களைத் தவிர அனைவரும் அக்கா-அண்ணன் தான்.  முந்தானை முடிச்சு கதை வசனம் வீட்டில் இருப்பதை அம்மா தன் நண்பிகளிடம் சொல்லிவிட, சரோஜா அக்கா நாங்கள் பள்ளிக்கு சென்றதும் அவர் வீட்டருகினில் இருக்கும் ஒன்றிருவரைக் கூட்டிக் கொண்டு கதை வசனம் கேட்டு பார்த்தவர்களிடம் சிரித்து, பார்க்காதவர்களிடம் சொல்லி மகிழ்ந்து அனுபவித்தார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ஓசி கேசட் வாங்கி வந்து பாட்டு கேட்பதைப் பார்த்து, முதன் முதலாக அப்பா மனசு வந்து, "பிடிச்ச பாட்டு எழுதிக் கொடுடா, ரெகார்டிங் கொடுக்கலாம்" என்றார். இரண்டு நாட்கள் உட்கார்ந்து யோசித்து எழுதிக் கொடுத்தேன்.  பத்து நாட்கள் கழித்து ஒரு இரவில் கேசட் வந்தது.  அப்பா பெருமையுடன் அதை என்னிடம் கொடுக்க, பவ்யமாக வாங்கி ஓட விட்டேன்.   அண்ணன் சிறிது நேரம் கேட்டுவிட்டு ரெகார்டிங் நல்லா பண்ணியிருக்கான் என்று சொல்லிட்டு போயிட்டாப்ல.  அம்மாவுக்கு ஒரே நமட்டு சிரிப்பு.  அப்பா எனக்கு ரெகார்டிங் பண்ணிக் கொடுத்த முதலும் கடைசியுமான கேசட் அதுதான்.  அந்த கேசட்டின் A சைடில் முதல் பாடல், "விளக்கு வெச்ச நேரத்தில மாமன் வந்தான், மறைஞ்சு நின்னு பாக்கையில தாகம் என்றான்".  அந்தப் பாடல் இடம் பெற்ற  படம் "முந்தானை முடிச்சு".

இதனிடையே அப்பா தன் சகாக்களிடம் ரேப் ரெகார்டரை என்ன விலைக்கு வாங்கலாம் என்று விசாரிக்க, அவர்களோ பேனாசோனிக், சோனி, நேஷனல் தவிர எதையும் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி விட்டார்கள்.  டெல்லி செட் மறுபடியும் மாமாவிடமே சென்றது.  ஒண்டிக் கட்டையான அந்த ஒத்த கேசட் என்னைப் பல நாட்கள் கேலி செய்தது.   "Philips" தாற்காலிகமாக விட்ட இடத்தை இப்போது மறுபடி கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டது.  "என்னைவிட்டால் யாருமில்லை...." எனப் "பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்..." என்று மீண்டும் கொஞ்சிக் குலாவ ஆரம்பித்தது.

டிவி வந்தபிறகு கூட எங்கள் உறவு வழக்கம் போல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  திடீரென்று அரசாங்கம் வானொலி, தொலைக்காட்சிகளின் மீதான வரியை ரத்து செய்கிறோம் என அறிவித்தது.  அப்போது தான் எனக்குத் தெரியும், ரேடியோ வைத்திருக்க வரி கட்ட வேன்றுமென்று.  விளம்பரங்கள் உள்ளே நுழைய ஆரம்பித்தன.  அரைமணி நேரத்தில் ஆறு பாடல்கள் என்பது இரண்டரை பாடல்களானது.  ஒரு மணி நேரத்தில் பதிமூன்று பாடல்கள் என்பது வெறும் ஐந்து பாடல்களானது.  அதுவும் அனைத்து விளம்பரங்களுக்கும் அதே ஒன்றிரண்டு குரல்கள் மட்டுமே.  வெறுத்துப் போனேன்.

+2 முடித்தவுடன் கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வந்து விட்டேன்.  வேலை கிடைத்த அண்ணன் வட இந்தியாவில் பயிற்சி முடித்து விடுப்பில் சேலத்திற்கு வர, பாத்துட்டு வந்துருவோம்ன்னு நானும் சேலத்திற்குப் போக, வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு புதிய "Philips 2-in-1" என்னை அன்புடன் வரவேற்றது.  சுற்றிலும் ஹிந்தி கேசட்டுகள் இறைந்து கிடந்தன.  Play பட்டனை அமுக்கினேன்.  பாடத் துவங்கியது...
"papa kehate hain bada nam karega
beta hamara aisa kam karega
"


- அன்புடன்
- மலர்வண்ணன்