Saturday, 25 August 2012

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 1

இசையை ரசிப்பதைத் தவிர வேறொன்றுமே அறியாத பலபேரில் நானும் ஒருவன்.  சிறுவயதில் All Iyer Radio வில், ச்சே..., All India Radio வில் மங்கள இசை, வாத்திய இசை, பாமாலை என்று எந்நேரமும் யாராவது இழவு வீட்டில் ஒத்தைக் கிழவி அழுவது போல  பாடுவதைத் தான் சங்கீதம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒப்பாரி துவங்கும் முன் அறிவிப்பாளர், அது இன்ன கீர்த்தனை, இன்ன ராகம் என்று சொல்லுவார்.  பெரும்பாலும் கல்யாணி ராகம், ஆதி அல்லது ரூபக தாளங்களை அறிவித்துத் தான் கேட்டிருக்கிறேன். சாஸ்த்ரிய சங்கீதத்தின் அறிவு இன்றுவரை எனக்கு அவ்வளவே...!!  வயதும் அனுபவமும் வளர வளர ஒவ்வொரு திரைப் பாடலும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராகங்களைக் கொண்டதுதான், ஒப்பாரியில்(!) நன்கு கற்றுத் தேர்ந்தவர்களால் தான் சினிமா பாடலும் பாட முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

கீரவாணியையோ, அம்ருதவர்ஷிணியையோ ஆராய்வதல்ல இப்பதிவின் நோக்கம்.  என்னை முழுவதுமாக எடுத்து ஆட்கொண்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களின் தொகுப்பும் பகிர்வும்தான் இது.  சில பாடல்கள் கேட்டவுடன் துள்ள வைக்கும், சில ஆட வைக்கும், சில ஓட வைக்கும், சில பாட வைக்கும், சில தாளம் போட வைக்கும், சில அமைதியாக ரசிக்க வைக்கும், சில சந்தோஷத்தை அல்லது துக்கத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும், சில தொடர்ந்து கேட்க வைக்கும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  பாடல்களும் ரசனையும் ஒருவருக்கொருவர் அவருடைய குணநலன்களுக்கு, மனநிலைக்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டே இருக்கும்.

சில பாடல்களை எப்போது எங்கே கேட்க நேர்ந்தாலும் அங்கே அப்படியே நின்றுவிடுவேன்.  அப்பாடல் எனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ நிச்சயம் இருக்கும்.  எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.  இருந்தாலும் நின்று கேட்பேன்.  சில பாடல்களில் குறிப்பிட்ட இடங்களைக் கடக்கும் போது அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்து விடும்.  அவை காதல் பாடல்களாகவோ, சோகப் பாடல்களாகவோ, வருணனைப் பாடல்களாகவோ, எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கண்ணில் நீரை வரவழைத்து விடும்.  பாடகரா, கவிஞரா, இசையைமைப்பாளரா யார் உருக வைத்தார் என்று சொல்வது கடினம்.  அவற்றில் சில.....


சேலத்திற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு வந்த புதிதில் பக்கத்து வீட்டில் உள்ள கருப்புவெள்ளை டிவியில் அப்பப்போ சென்று அதில் என்ன ஓடினாலும் பார்ப்பது வழக்கம், ஒரு விடுமுறை நாளன்று அவர்கள் வீட்டில் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து பல படங்களைப் போட்டு விடிய விடிய பார்த்தார்கள்.  அதில் நான் பார்த்த படம் "நினைவெல்லாம் நித்யா".  வெறும் பாடல்களுக்காக ஓடிய பல படங்களில் அதுவும் ஒன்று.  வைரமுத்து+இளையராஜா=கேட்கவே வேண்டாம்.   "ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்..." பாடலை SPBயும் ஜானகியும் பாடியிருப்பார்கள்.  எப்போது கேட்டாலும் இப்பாடலில் வரும் இரண்டாவது சரணம் என்னை உருக்கி விடும்.

பெண்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன், இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் (2)
ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன்! கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்!(2)
 

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் நான்...
SPB, "நீ  கட்டும் சேலைக்கு நூலாவேன் நான்" என முடிக்கும் போது என்னை என்னால் கட்டுப் படுத்தவே இயலாது.  நானும் கூடவே பாடிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொள்வேன்.

1983 -இல் வந்த "ஆனந்தக் கும்மி" என்று ஒரு படம்.  இதுவரை அந்தப் படத்தைப் பார்த்ததில்லை.  "ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது....", "ஊமை நெஞ்சின் ஓசைகள், காதில் கேளாதோ..." போன்ற super hit பாடல்களைக் கொண்டும் ஊத்திக் கொண்ட ஒரு படம்.  அதில் "ஓ.. வெண்ணிலாவே வா ஓடி வா..." என்ற ஒரு பாடல்.  இதுவும் இளையராஜா+வைரமுத்து+SPB+ஜானகி கொண்ட கூட்டணி.   இப்பாடலின் இரண்டாவது சரணம்,

ஆண்: இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு இதுதான் முடிவு வேறேது
பெண்: இறக்கும்போதும் இதுவே போதும் இனிமேல் பிறவி வாராது
ஆண்: காதல் மாலை சூடும் வேளை அழுகை ஏனோ கூடாது
பெண்: நிலவே நீயும் தூங்காதே...ஹோய் 

 
"இது தான் முடிவு வேறேது" என SPB உருக்க, "இறக்கும் போதும் இதுவே போதும்", என்பதில் அந்த "இதுவே...ஏ...ஏ..." என ஜானகி கொஞ்சி கொஞ்சி இழுப்பார் பாருங்க...
திருவாசகத்திற்கு உருகாதவரும் உருகி விடுவார்.  

தில்லுமுல்லு படத்திற்குப் பிறகு வந்த ரஜினியின் முழுநீள நகைச்சுவைப் படம் "தம்பிக்கு எந்த ஊரு""காதலின் தீபம் ஒன்று..." பாடலை இன்று கூட இரவு பத்து மணிக்கு மேல் எப்.எம்.லும் மியூசிக் சேனல்களிலும் தினமும் கேட்கலாம், பார்க்கலாம்.  இப்பாடலைப் பற்றியே தனியே ஒரு பதிவு போடலாம்.  இளையராஜா +SPB +பஞ்சு அருணாசலம்+ரஜினி கூட்டணி இது.  இப்பாடல் இன்றும் கொடிகட்டிப் பறக்க காரணம், ராஜாவின் உலுக்கும் இசையா, SPBயின் மயக்கும் குரலா, ரஜினியின் இயல்பான காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் நடிப்பா என பட்டிமன்றமே வைக்கலாம்.  இப்பாடலின் இரண்டாவது சரணம்,

என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன் (2)
பொன்னிலே பூவை அள்ளும் ஆ ஆ ஆ ஆ....
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல...வா...

 இப்பாடலில், "பொன்னிலே பூவை அள்ளும்"க்குப் பிறகு ஒரு ஹம்மிங்கா, ஆலாபனையா என்ற வகையில் "ஆ..ஆ..ஆ..ஆ.ஆ.." என்று இழுத்து கேட்பவரை நிலைகுலையச் செய்வார் SPB.

அப்பா - மகன் இரு வேடங்களில் ரஜினி கலக்கிய படம் "நெற்றிக் கண்".  "தீராத விளையாட்டுப் பிள்ளை", "மாப்பிள்ளைக்கு மாமன் மனசு" போன்ற துள்ளல் பாடல்கள்.  ஸ்திரீலோலானான அப்பா ரஜினிக்கு டிரைவராகவும், "எல்லாமே" ஏற்பாடு செய்து தருபவராகவும் கவுண்டமணி வருவார்.  "மாப்பிள்ளைக்கு" பாட்டில் கர்னாடிக்கும் வெஸ்டர்னும் கலந்துகட்டி அடிக்கும்.  இளையராஜா+கண்ணதாசன்+ஜேசுதாஸ்+ஜானகி கூட்டணியில் "ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்" என்ற மெலோடியின் இரண்டாவது சரணத்தில்,

ஆண்: இடையும் கொடியும், குலுங்கும் நடையும் மொழியும்
பெண்: ஹ ஆ ஆ....
ஆண்: எடை போட கம்பன் இல்லை, எனக்கந்த திறனும் இல்லை, இலை மூடும் வாழை பருவம்
பெண்: மடி மீது கோவில் கொண்டு....
ஆண்: லல லல லல லல லா...
பெண்: மடி மீது கோவில் கொண்டு, மழைகாலம் வெயில் கண்டு, சிலையாக நான் நிற்பதே அற்புதம்...


 இடையும் கொடியும், குலுங்கும் நடையும் மொழியும் என ஜேசுதாஸ் முடிக்கும் பொழுது, ஜானகி ஹஸ்கியான குரலில் "ஹா..ஆ...ஆ..." என்பதாகட்டும், சரணத்தை முடிக்கும் பொழுது குரலை தாழ்த்தி "சிலையாக நான் நிற்பதே அற்புதம்"  என கொஞ்சுவதாகட்டும், சும்மா உருக்கி எடுத்துவிடுவார்...

1991 -இல் ஸ்ரீதர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக (நம்ம சீயான் விக்ரமே தான்) நடித்து வெளிவந்த வேகத்தில் பெட்டிக்குள் போன படம் "தந்து விட்டேன் என்னை".  இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரணகளமாக இருக்கும்.  துரதிஷ்டவசமாக இப்படமும் ஓடவில்லை, பாடல்களும் ஹிட்டடிக்கவில்லை.  இப்படத்தில் "கண்களுக்குள் உன்னை எழுது" என்று ஜானகி பாடிய பாடலில் முதல் சரணம் மற்றும் சரணம் முடிந்து மீண்டும் பல்லவியும் அனுபல்லவியும் தொடரும் இடத்தில்...

கண்ணிலே போதை ஏற்றினாய், நெஞ்சிலே காதல் மூட்டினாய்(2)
பெண்மையின் வீணையை மீட்டினாய்,
ஆண்மையின் தூண்டிலில் மாட்டினாய்
ஏனிந்த மயக்கம், ஏனிந்த குழப்பம், ஏனென்று தானென்று என் மனம் தவிக்கும்
கண்களுக்குள் உன்னை எழுது, நெஞ்சமெங்கும் உந்தன் நினைவு(2)
பகலில் ஏதோ கனவு, அலைபோல் மோதும் நினைவு....
என்ன இது, என்ன இது புது புது மயக்கம்


"கண்ணிலே போதை ஏற்றினாய்" என்பதை இரண்டாம் முறை பாடும் போது "ஏற்றினாய்" என்பதை முடிக்கும் தருவாயில் "....ஆய்......ஆய்.." என்று மழலையில் பாடுவார் ஜானகி.  பல்லவியில் "அலைபோல் மோதும் நினைவு" என்பதில் "அலை போ..ஓ..ஓ..இல், மோதும் நினைவு...ஊ..ஊ..ஊ" கொஞ்சும் போது உணர்ச்சிவசப் படாமல் இருக்க இயலாது. 

90-களின் ஆரம்பத்தில் "புதிய ஸ்வரங்கள்" என்று ஒரு படத்தின் ஆடியோ காசெட் மட்டுமே ரிலீஸ் ஆனது.  இளையராஜாவின் இசையில் "ஓ...வானம் உள்ள காலம் மட்டும்", "ஒரு காதல் ராகம் பாடும் பூவிது" போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த காசெட் அது.  SPB யும், சித்ராவும் பாடிய பாடல் """"""" புது காவேரி கரை மீது அமராவதி"   பாடலின் இரண்டாவது சரணத்தில்...

ஆண்:காளிதாசன் போல நானும் மாற வேண்டும் காதலி, கவிதை போல என்னைக் காதலி
பெண்: ஏழுஜென்மம் அல்ல நூறுஜென்மம் சேர்ந்து வாழலாம், காதல் என்ற தேசம் ஆளலாம்
ஆண்: பாலும் தேனும் மூடிவைத்து பாவை என்று ஆனதோ, பாசமோடு என்னைச் சேருதோ
பெண்: நானும் நீயும் சேர வேண்டும் என்று தேவன் ஆணையோ, நாளும் சூடும் நாத மாலையோ
ஆண்: இது காதல் ஸ்வரம், பல காலம் வரும், இது சுகமான சுகமே தரும்..

 
இப்பாடலில் ஆண் குரலை echo எபக்டிலும் பெண் குரலை வழமையாக உள்ளவாரும் செய்திருப்பார் ராஜா.  இரண்டாவது சரணத்தின் முடிவில் "இது காதல் ஸ்வரம், பல காலம் வரும்" என்று SPB பாடுவதைக் கேட்டால் காதல்வயப் படாமல் இருக்க முடியாது.

காலம் போன காலத்தில் நம்ம ஜிவாஜி இளைய ஹீரோவாக ஸ்ரீப்ரியாவுடன் சோடி போட்டு நடித்து 1979 இல் வெளிவந்த படம் "பட்டாக் கத்தி பைரவன்."  இது ஒரு தெலுங்கு ரீமேக் படம் என்று நினைக்கிறன்.  இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் SPBயும் ஜானகியும் பாடிய இரண்டு பாடல்கள் செம ஹிட்.  "தேவதை...ஒரு தேவதை....பறந்து வந்தாள்", மற்றும் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்".  இதில் "எங்கெங்கோ" பாடலில்
 

பெண்: ஆ.. நான் காண்பது உன் கோலமே அங்கும்... இங்கும்... எங்கும்...
ண்: ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும்... இன்றும்... என்றும்...
பெண்: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ.. நீ..நீ..


 அங்கும்...இங்கும்...எங்கும்... என்ற இடத்தில் அங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்..., இங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.., எங்கும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. என ஜானகியும்
அன்றும்..இன்றும்..என்றும்... என்ற இடத்தில் அன்றும்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. இன்றும்..ம்ம்..ம்ம்..ம்ம்.., என்றும்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. என SPBயும்  பிரித்து மேய்ந்திருப்பார்கள்.  இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.  ஏனென்றால் அந்த "ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்.." ஹம்மிங்கிற்கு நம்ம நடிகர் திலகம் ஜிவாஜி வாயைக் குவித்துக் கொண்டு செய்யும் சேஷ்ட்டையைப் பார்த்தால் நிச்சயம் ஜெலுஸிலோ, டைஜினோ தேவைப் படும்.

அலையலையாக மனதைச் சுற்றி வரும் பல பாடல்கள் இதுபோல் எழுத எழுத வந்துகொண்டே இருக்கின்றன.   மேலே பகிரப்பட்ட பாடல்கள் வெகு சொற்பமே.  மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாம் பாகத்துடன் தொடர்கிறேன்.

அன்புடன்
மலர்வண்ணன்


Saturday, 11 August 2012

மதுபான கடை - ஓர் உன்னத அனுபவம்

 

ஈரோடுக்கும் பெருந்துறைக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் காந்திஜெயந்திக்கு முந்தின நாள் ஒரு டாஸ்மாக் பார் ஷட்டர் திறந்து இரவு மூடும் வரை அங்கு நடைபெறும் சம்பவங்களை மட்டும் திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.  கதை என்பதைத் தேடாதீர்கள் என்ற துணிச்சலான அறிவிப்புடன் தான் படம் துவங்குகிறது.  கோடிகளில் புரளும் ஹீரோ, ஐட்டம்/குத்து பாடல், புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள், சந்தானம் இவை எதுவும் இல்லாமல் ஒரே ஒரு 7D கேமராவில் இரண்டு மணி நேர சுவாரசியத்தை வழங்கியிருக்கிறார்கள்.  கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆவணப்பட வகைக்குள் சென்றுவிடும் அபாயமுள்ள கருவை அற்புதமான திரைக்கதை, இயல்பான நடிப்பு, மாறுபட்ட இயக்கம் மூலம் அநாயசமாக கடந்து ஜெயித்திருக்கிறார்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக எவரும் செய்யத் துணியாத கிளைமேக்ஸ் என்ற ஒன்று இல்லாமலே படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.


இப்படத்திற்கு சென்ஸார் "A" சான்றிதழ் வழங்கியுள்ளது.   படத்தில் குடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளதால் அப்படிக் கொடுத்தார்களாம்.  அப்போ, "அஞ்சாதே", "சிவா மனசுல சக்தி", "சென்னை-28" படங்களை எல்லாம் என்னடா சொல்வீங்க..?  படத்தின் பெயர் "மதுபான கடை" என்று இருப்பதால் மாயாஜால், ags , சத்யம், ஐநாக்ஸ், அபிராமி  மல்டிப்ளெக்ஸ் முதலாளிகள் இதை தங்கள் திரையரங்குகளில் திரையிட்டு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லையாம்.  அடப் பன்னாடைகளா, Cocktail , Hang Over என்ற படங்களை மட்டும் எந்த மயிருக்கு ரிலீஸ் செய்து அழகு பார்த்தீர்கள்.  ஒருவேளை இந்த படத்திற்கு Cheers, Bottom"s Up என்று பெயரிட்டிருந்தால் இந்த ஆங்கில அடிவருடிகள் வாங்கியிருப்பார்களோ என்னமோ!!

படத்தின் பிரதான கேரக்டர்கள் போலிஸ் ஸ்டேஷனில் பெட்டிஷன் எழுதும் மணி மற்றும் பார் கஸ்டமர்களிடம் ஆட்டையைப் போட்டு குடிக்கும் ஒரு பெரிசு.  இவர்களுடன் மூன்று சப்ளையர்கள், ஒரு சமையல்காரன், பாத்திரம் கழுவும் ஆயா, டேபிள் துடைக்கும் பையன், டாஸ்மாக் கடை ஊழியர், பெட்டிக் கடைக்காரர், பொய் சொல்லி ஓசி குடி குடிக்கும் இளைஞன், மாமூல் போலிஸ், பார் முதலாளி, அவரின் பெண், கடவுள் வேடம் போட்ட இரண்டுபேர், மனநிலை பாதிக்கப் பட்டவர், இவர்களுடன் அங்குவரும் கஸ்டமர்கள்.  இவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்படம்.

கடை மூடியாச்சு எல்லாம் வெளியே போ என்று சொல்லும் பாரின் முதாளியைப் பார்த்து பெட்டிஷன் மணி
"உழைக்கும் மக்களே, குடிகார தொழிலாளர்களே, பணம் குடுத்து குடிப்பவனை அடித்து விரட்டும் இந்த முதலாளி மூர்த்திக்கு எதிராக ஒன்று சேர், நாம ஸ்ட்ரைக் பண்ணுவோம், உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்" என்ற உரையுடன் ஆரம்பிக்கும் தனது ஆளுமையையை  இறுதிவரை விடாமல் தொடர்கிறார்.  பார் முதலாளியிளிருந்து டாஸ்மாக் ஊழியர் வரை இவர் அனைவரையும் தன்னுடைய பேச்சாற்றலால் படுத்தியெடுப்பது படத்திற்கு சரியான சைடு டிஷ்.

மணியின் சில மணியான வசனங்கள்...
"நம்ம இன்னைக்கு நேத்தா குடிக்க ஆரம்பிச்சோம், சங்க காலத்தில இருந்து குடிக்கிறோம்..."
"அவ்வையாரும் அதியமானும் ஒன்னா குடிச்சிருக்காங்க தெரியும்ல..."

"நீ குழந்தைத் தொழிலாளி, நீ சப்ளை செய்ய வேண்டாம்..."
"நம்ம தள்ளாடருதுனாலதான் கவர்மெண்ட்டு ஸ்டெடிய நிக்குது, நம்ம ஸ்டெடி ஆகிட்டோம்னா, கவர்மெண்ட்டு தள்ளாட ஆரம்பிச்சுடும்..."
"குடிகாரனை தனி ஆள்ன்னு நெனச்சிடாதீங்க, அவன் ஒரு சமூகம்..."
"நாங்க இங்க பணத்தை கொட்டுறதாலதான் அரசாங்க வேலை  செய்யறவன் மாசம் பொறந்த கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கறான்..."

இவரைக் கண்டாலே அனைவரும் விலகி இருக்க, காதல் தோல்வியில் முதல் முறையாக சரக்கடிக்க வந்த இளைஞன் இவரை படுத்தி எடுப்பது தேர்ந்டுத்த  ஒயின்ஷாப் நகைச்சுவை. 


பக்தர்களிடம் வசூல் நடத்தும் ராமனும், அனுமனும் அதே கெட்டப்பில் பாரில் முட்டை மற்றும் மூளை வறுவலுடன் சரக்கடித்து திடுக்கிட வைக்கிறார்கள்.  ராமன் அதிலும் ஒருபடி மேலே போய் சரக்கு பத்தாமல் பாரில் வேலை செய்யும் பையனிடம் "கட்டிங்" கடன் கேட்கிறார்.  அப்போது ராமன் சொல்லும் வசனம், "கஞ்சிக்கே  லாட்டரி அடிக்கும் போது, கட்டிங் கொடுப்பவனே கடவுள்" (இந்து அறநிலையத் துறை என்னப்பா செய்றீங்க, உங்க கடவுள் இங்கே பிச்சை எடுக்கிறார்)

வெள்ளையும் சொள்ளையுமாக வந்து உட்காரும் ஒரு தெனாவெட்டுப் பார்ட்டி சப்ளையரை  "வாடா, போடா" என அழைத்து வெயிட்டு காட்ட, ஒரு கட்டத்தில் சப்ளையர் எதிர்த்து பேச, நம்ம பார்ட்டி டேய் நான் யார் தெரியுமா,
"காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் க...." என்று சொல்லி முடிக்கும் முன் பொளேர் என அதன் மூஞ்சியில் ஒரு அறை விழுகிறது.  மூன்று சப்ளையர்கள் சேர்ந்து அந்த ஜந்துவை ரவுண்டு கட்டுகிறார்கள்.  மீண்டும் அது, "டேய்.. எம் மேலே கைய வெச்சுடீங்களா", என மீண்டும் அந்த சொலவடையை சொல்ல ஆரம்பித்து "காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் க...." என முடிக்கும் முன் அதேபோல் இன்னொரு அறை விழுகிறது.  பெரிய பெரிய ஜாம்பவான் இயக்குனர்கள் எல்லாம் சொல்லத் தயங்கிய விஷயங்களை கமலக் கண்ணன் இதுபோல் ஜஸ்ட் லைக் தட் காட்டி விட்டார்.ஒரு சப்ளயைர் பையனுக்கும் பார் ஓனர் பெண்ணுக்கும் இடையே ஒரு காதலும் இடையிடையே ட்ராக்கில் ஓடுகிறது.  பாரிலுள்ள மூத்திர சந்துதான் இருவருக்குமான ரெகுலரான சந்திப்பு நிகழும் இடம் போல.  அந்தப் பெண்ணும் சரியான தேர்வு.  முத்தமிட்டு முடித்தவுடன் செல்வது போல் சென்று மனமில்லாமல் திரும்ப வந்து முத்தமிடுவது, யப்பா..!! சான்சே இல்லை.   திருமணத்திற்கு முன்பான காதலில் களவொழுக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயம் ஞாபகப் படுத்தும். 

பாக்கெட்டில் பத்து காசு இல்லாமல் பாருக்கு வருபவர்களின் சுக துக்காத்தில் பங்கு கொண்டு அவர்களை எண்ட்டர்டெயின் செய்து ஓசி குடி குடிக்கும் பெரியவர்,  மாணவர்கள் மூன்று பேர் ஒரு பியரை வாங்கி அதற்கு மிக்சிங் கோக் வாங்கலாமா என பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நேரே பாருக்கு வந்து அங்கு குடித்துக் கொண்டு இருக்கும் ஆசிரியரிடம்,
"""உங்க பேரே கேட்டுப் போச்சு சார், பசங்களுக்கு எப்படி குடிக்கறதுன்னு சொல்லித் தர மாட்டீங்களா" " எனக் கேட்க அதற்கு ஆசிரியர், "என்னது என் பசங்கள் குடிக்கிறாங்களா?" என அதிர்ச்சியைக் குடுக்க "அட விடுங்க சார், நீங்க குடிச்சிட்டுப் பாடம் நடத்தும் போது, அவங்க குடிச்சிட்டு படிக்க மாட்டாங்களா" என்று சொல்லி எழுந்து போய்க் கொண்டே இருப்பார்.

தன் மகள் சப்ளையரை முத்தமிடுவதை பார்த்து விட்ட பார் முதலாளி உணர்ச்சிவசப் படாமல் சென்று விட்டு அன்று இரவு ஆட்களை வைத்து அவனை அடிக்க ஏற்பாடு செய்ய, புரிந்து கொண்ட மற்ற சப்ளையர்கள் சேர்ந்து, அடிக்க வந்தவர்களை துவைத்து விட்டு திரும்பி பாருக்குள் வர, முதலாளி அதிர்ச்சியாக, அதில் ஒருவன் மட்டும் வந்து அவரை சமாதானம் செய்கிறான்.  இந்த காட்சி முழுவதும் ஒரே நிமிடத்தில் எந்த வசனமோ, சண்டையோ இல்லாமல் விஷுவலாக ஒவ்வொரு கேரக்டரின் பார்வையின் மூலமே நமக்குப் புரிய வைத்தது இயக்குனரின் திறமைக்கு மிகச் சிறந்த சான்று.

கோயமுத்தூர் வங்கியில் வேலை செய்வதாகவும், வந்த இடத்தில் பர்ஸ் தொலைந்துவிட்டது என ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றி காசு வாங்கி சரக்கடிக்கும் இளைஞன்,
காலையில் கடை திறக்கும் முன்பே வந்து திறக்க சில நிமிடங்கள் தாமதமாக அதைக் குறை சொல்லி ரூல்ஸ் பேசி முதல் ஆளாக சரக்கு வாங்கும் நபர்,
கட்சியின் மாவட்டச் செயலாளர் போலி சரக்கை அதிக அளவில் இறக்கச் சொல்லி பார் முதலாளிக்கு பிரஷர் கொடுப்பது,
காய்கறி அழுகியிருப்பதாக சமையல் ஆள் சொல்ல, அதற்கு பார் முதலாளி, "குடிகார நாய்ங்களுக்கு எதைக் கொடுத்தா என்ன?" என்பது,
சர்வ சாதரணமாக போலி சரக்கை விற்பது,
கூசாமல் போலிஸ் கான்ஸ்டபள் மாமூல் வாங்குவது,
இயந்திரத்தில் அடிபட்டு கட்டுப் போட்ட உடைந்த கையுடன் ஒரு தொழிலாளி மற்றும் அவர் உடன் பணியாற்றுபவர்கள் முதலாளித்துவம், ஏழ்மை, வேலை பற்றி பேசிக் கொள்வது,
எனப் பல நிகழ்வுகள் போகிற போக்கில் திரையில் வந்து போகின்றன. 

படத்தின் துவக்கத்தில் துப்புரவுப் பணியாளர்கள் இரண்டு பேர் குடித்துவிட்டு பணிக்குச் செல்கிறார்கள்.  படத்தின் இறுதியில் அவர்கள் பணி முடித்து மீண்டும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போ  நம்ம "காட்டை வித்துக் கள்ளு குடிச்சவர்களில்" ஒருவர் அந்த துப்புரவுப் பணியாளரை சாதி வேறுபாடு காட்டி கலாய்த்து விட பாதிக்கப் பட்டவர் வெகுண்டெழுந்து பாட்டிலை உடைத்து "நான் காட்டை வித்து கள்ளு குடிச்சவன் இல்லடா, ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சவன், இவனுங்க பீ, மூத்திரத்த சொமக்க நாம்ப வேணும், கொஞ்சூண்டு தண்ணி கேட்ட தெனாவெட்டு மயிராப் பேசுவானா?  நீங்க எல்லாம் அப்பன் பாட்டன் சொத்துல குடிக்கிரவனுங்க, நான் என் வேதனைக்கு குடிக்கிறேன்.  சாராயமும் கள்ளும் எங்க குல சாமிடா,  கொஞ்சம் கொஞ்சமா எங்களை விட்டு போய்டுச்சு, இந்த கன்றாவியைத் தான் குடிக்க வேண்டியிருக்கு, உங்க நாத்தத்தை மறக்கத் தான்டா குடிக்க வர்றோம், இந்த இடத்திலும் குத்திக் காட்டுவீங்களா?" என்ற விளிம்புநிலை மனிதன் ஒருவனின் உணர்வோடு படம் முடிகிறது.


விடிந்தால் காந்திஜெயந்தி, இரவோடு இரவாக ஒரு ஜோடி ஊரை விட்டு ஓடுகிறது.

"பாலை" படத்திற்கு இசை அமைத்த வேத்சங்கர் தான் இப்படத்திற்கு பணியாற்றியிருக்கிறார்.  "சமரசம் உலாவும் இடமே" பாடல் தாளம் போட வைக்கிறது.  ஒத்தைக் கேமிராவை வைத்து வித்தை காண்பித்த ஒளிப் பதிவாளர் சுமீ பாஸ்கரனுக்குப் பாராட்டுக்கள்.   உலக சினிமாவுக்கான முதல் தகுதி  அப்படம் அந்நாட்டிற்குண்டான அல்லது கதைக்களம் நடைபெறும் பகுதிக்குண்டான நேட்டிவிட்டியுடன் இருக்க வேண்டும் என்பது.  அப்படிப் பார்த்தால் மதுபானக் கடை நிச்சயாமாக ஒரு உலக சினிமாதான்.  

டாஸ்மாக் பாருக்குச் சென்று குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், டிவி சீரியலில் மூழ்கியிருக்கும் பெண்களுக்கும், அதன் உள்ளே என்னதான் நடக்கிறது என்ற ஆவல் உள்ளவர்களுக்கும் நிச்சயம் இத் திரைப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.  இப் புதிய முயற்சிக்காக இயக்குனர் கமலக் கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அன்புடன்

மலர்வண்ணன்