Sunday, 9 September 2012

காதலை மீறிய காதல்கள்காதலைப் பற்றி உருகுவதோ, காதலின் புனிதம்(!) பற்றியோ, என் காதல் அனுபவங்களோ இப்பதிவின் நோக்கம் இல்லை.  2004 -இல் வந்த "காதல்" திரைப் படத்தை பெரும்பாலோனோர் பார்த்திருக்கலாம்.  நான் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலைக் காட்சி சென்று பார்த்தேன்.  முதல் நாள் தாம்பரம் வித்யா, அடுத்த நாள் டிரைவ் இன் பிரார்த்தனா, மூன்றாம் நாள் தேவி.  "இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டது" என பட வெற்றிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் பேட்டியில் சொன்னார்.  நான் இங்கே எழுதப் போவதும் நான் சந்தித்த "காதல்" திரைப் படத்திற்கு சமமாகவோ அல்லது அதைவிட தீவிரமான காதலர்களைப் பற்றியது...(அப்பாடா, ஒரு வழியாக பதிவின் தலைப்பிற்கு விளக்கம் கொடுத்தாயிற்று).  படித்து, பிடித்து இதை ஹாலிவுட்டிலோ, கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ திரைக் காவியமாக்கும் எண்ணம் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையின் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு சேலத்தில் ஒரு கடையை போட்டு பொழுதை ஒட்டிக் கொண்டிருந்த தருணத்தில் எனக்குண்டான பல ரெகுலர் காஸ்டமர்களில் ஒருவர் நாளடைவிலான பழக்கத்தினால் சற்று நெருக்கமானார்.  அவர் ஒரு எஞ்சினியர், பெயர் வேண்டாம், எஞ்சினியர் என்றே வைத்துக் கொள்வோம்.  அவர் மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை.  என்ஜினியருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி, இவர் மட்டும் அப்பா, அம்மா, மனைவி சகிதம் கூட்டுக் குடும்பமாக இருந்தார்.  ஒரு நாள் சகஜமாக பேசிக் கொண்டிருந்த பொழுது நான், "என்ன சார், ஸ்கூல் லீவுல டீச்சர் அவங்க அம்மா வீட்டுக்கு போகலியா?" என்று நான் கேட்க எஞ்சினியர் தன் காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

சேலத்தை அடுத்த திருச்செங்கோட்டில் நமது எஞ்சினியர் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி சகிதம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே பக்கத்து வீட்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த டீச்சர் மீது ரூட் விட ஆரம்பித்து விட்டார்.  டீச்சரின் குடும்பத்தாரும் எஞ்சினியர் குடும்பத்துடன் நன்கு அன்யோன்யமாக பழகி வந்துள்ளனர்.  கணக்கு பாடத்தில் டீச்சருக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் நம்ம எஞ்சினியர் தான் தீர்த்து வைப்பார்.  அப்போ டீச்சர் பத்தாவது, எஞ்சினியர் +2 .  டீச்சரும் "அண்ணா அண்ணா" என்றே என்ஜினியரை விளிக்க இரு வீட்டாரும் கண்டுகொள்ளாமல் விட்டனர்.


பொதுத் தேர்வு முடிந்து விடுமுறையில் கணக்கு சொல்லித்தர வாய்பில்லா நிலையில் எஞ்சினியர் கணக்கு பண்ணத் துவங்கி அதை டீச்சரிடம் சொல்லியும் விட்டார்.  வழமையான  எல்லா இளம்பெண்களைப் போல டீச்சர் ஆரம்பத்தில் பிகு பண்ணி பாராமல், பேசாமல், கொள்ளாமல் இருந்து விட்டார்.  ஒரு வருடமாக தினமும் அனுபவித்த எஞ்சினியரின் லேசான ஸ்பரிசங்களும், அருகாமையும், ஆண் வாசனையும் திடீரென்று காணாமல் போனதில் டீச்சர் பாவம் தவித்துத்தான் போய்விட்டார்.  நம்ம என்ஜினியரும் விடாமல் துரத்தி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்வையாலே பதிலுக்கு ஏங்குவது, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எங்கோ வெறிப்பது, இரவானால் மொட்டை மாடிக்கு சென்று குடல் வெளியே வருமளவிற்கு இருமி இருமி சிக்னல் கொடுப்பது என்று தனக்குத் தெரிந்த எல்லா வழியிலும் முயற்சி செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரே நேரத்தில் எஞ்சினியரிங் காலேஜ் சீட்டையும், டீச்சரின் காதலையும் பெற்று விட்டார்.

கோயம்புத்தூர் காலேஜில் சேர்ந்ததிலிருந்து எஞ்சினியர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வர முடிந்தது.  அவர் வருவதே டீச்சரைப் பாக்கத்தான்.  ஐந்து வருடங்கள் கடந்து சென்று விட, இருவரும் ஓருயிர் ஈருடல் ரேஞ்சிற்கு ஆகிவிட்டிருந்தனர்.  எஞ்சினியர் கேரளாவின் கொச்சியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டிருந்தார்.  டீச்சரும் டிகிரி முடித்து விட்டிருக்க அவர் வீட்டில் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாயிற்று.  என்னதான் இரு குடும்பமும் நன்கு பழகி வந்தாலும் நம் எஞ்சினியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.  டீச்சர் காட்டை வித்துக் கள்ளு குடிச்சவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்.  அந்தப் பகுதியில் எல்லாம் கா.வி.க.கு. பிரிவினர் தாழ்த்தப் பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதே பெரிய விஷயம், இந்த லட்சணத்தில் எங்கே போய் பொண்ணு கேட்பது?  அப்படியே துணிந்து டீச்சர் தன் வீட்டில் சொன்னாலும் முதலில் அவரைக் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பார்கள், அல்லது தீர்த்து விடுவார்கள், அத்தோடு விடாமல் பையனையும், அவன் குடும்பத்தாரையும் காலி செய்ய தயங்க மாட்டார்கள்.  இதுதான் அங்கு தொடர்ந்து நடக்கும் வரலாறு.

டீச்சருக்கு மாப்பிள்ளையும் பார்த்தாயிற்று.  மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்கையில் மரியாதை நிமித்தமாக எஞ்சினியரின் அப்பா அம்மாவும் அழைக்கப்பட்டு இருந்தனர்.  டீச்சர் கல்யாணம் வேண்டாமென்று முரண்டு பிடித்து பார்த்தார், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிப் பார்த்தார், யாரும் அவர் பேச்சை கேட்பதாக இல்லை.  இந்த லட்சணத்தில் எஞ்சினியரின் பெற்றோரை வேறு டீச்சரை கன்வின்ஸ் செய்யும் படி கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தனர்.  அடுத்து வந்த நாட்களில் வந்த என்ஜினியரை டீச்சரின் அம்மா, "நீயாவது இவளுக்கு புத்திமதி சொல்லுப்பா" என்று சொல்ல இருவரும் சேர்ந்து பல திட்டங்களை ரெடி செய்தனர்.  ஆனால் எதை செயல்படுத்துவது?


நிச்சயதார்த்தம் முடிந்தது.  ஒரு நாள் இரவு டீச்சர் எஞ்சினியரின் அம்மாவிடம் என்ஜினியரை விரும்புவதாகக் கூற அந்த அம்மா அதிர்ந்து விட்டிருந்தார்.  மேலும் டீச்சர் தான் மட்டுமே விரும்புவதாகவும் அதனால்தான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தில் விருப்பம் இல்லை எனவும் கூற, அம்மா டீச்சரை அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்.  ஆனால் பாவம் அவருக்குத் தெரியவில்லை இது திட்டத்தின் ஒரு பகுதியென்று...  மண்டபம், பத்திரிக்கை, உறவினர், சாப்பாடு, பட்டு, நகை, சீர் என கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தன.  டீச்சரின் அம்மா என்ஜினியரை கல்யாணத்துக்கு நிச்சயம் வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்க, எஞ்சினியரோ தனக்கு முக்கியமான பணி இருப்பதன் காரணமாக வர இயலாது என தன் வராமையை உறுதி செய்தார்.

விடிந்தால் கல்யாணம்...  பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என அத்தனை சனமும் பெண் வீட்டிலும், மண்டபத்திலும் உறக்கத்திலும், சீட்டாட்டத்திலும், மதுவிலும், சமையலிலும், கிழவிகளின் அரட்டையிலும் இருக்க டீச்சர் சந்தடியில்லாமல் காணாமல் போனார்.  சிறிது நேரத்தில் விஷயம் விஷம் போல் பரவ வீரர்கள் ஆயுதங்களுடன் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வேட்டைக்கு கிளம்பினர்.  அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அசைன்மென்ட், "ஜோடியாப் புடிச்சா பையன போட்டுத் தள்ளிட்டு பொண்ண கொண்டு வந்து சேக்கணும், கல்யாணம் பண்ணியிருந்தா ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிறனும்."

திருசெங்கோட்டையே சல்லடை போட்டு தேடினர்.  வீடு வீடாக, கோவில் கோவிலாக, பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மலைக்கோவில், கடைகள், ஹோட்டல்கள் என அலசி ஓய்ந்தனர்.  இரவு ஒரு மணிக்கு வெளியேறிய ஒரு பெண் எப்படி ஒரு சிறிய டவுனிலிருந்து அரை மணி நேரத்தில் காணாமல் போனாள் என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.  விடியற்காலை முதல் பஸ்சிற்கு முன்பாக பஸ் ஸ்டாண்டில் காவலுக்கு ஆட்களை வைத்து விட்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.  விடிந்தும் பெண் கிடைக்கவில்லை, ஒரு வாரம் ஆகியது, மாதமாகியது, பெண்ணைப் பற்றிய ஒரு சிறு தகவல் கூட இல்லை.  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா என யோசித்து பிறகு வேண்டாம் என முடிவானது.  பெண்ணைத் தலை முழுகி விடலாம் என்று முடிவாகி, குறைந்த பட்ச வெற்றியாக அதை நடத்திக் காட்டி விட்டார்கள்.

எனக்குள் பல கேள்விகள், டீச்சர் எஸ்கேப் ஆகி உடனே எப்படிக் காணாமல் போனார்? எஞ்சினியர் அப்போ எங்கே இருந்தார்? ஊர் முழுக்க ஒரு இன்ச் விடாமல் தேடியும் எப்படி அகப்படவில்லை?  இவர்களின் திட்டப் படி எஞ்சினியர் இரவு 12 மணிக்கு ஊருக்குள் வந்து யாருக்கும் தெரியாமல் முன்பே முடிவு செய்த ஓர் இடத்தில் பதுங்கி விட வேண்டியது.  சரியாக இரவு 1 மணிக்கு டீச்சர் அங்கு வந்து விட வேண்டியது.  இரவு முழுதும் அங்கே ஒளிந்திருந்து விடியற்காலையில் ஏற்பாடு செய்திருந்த லாரியில் எஸ்ஸாகி விட வேண்டியது.  வண்டி நேரே கேரளாவிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு எஞ்சினியரின் இரு வட இந்திய நண்பர்களின் முன்னிலையில் திருமணம்.  பிறகு தம்பதிகள் எஞ்சினியர் வீட்டுக் சென்று புது வாழ்வைத் துவங்க வேண்டியது.  இது அச்சு பிசகாமல் அப்படியே நடந்தது.  "எல்லாம் சரி, ராத்திரி எங்க ஒளிஞ்சு விளையாண்டீங்க" என்று கேட்டதுக்கு அவர் சொன்ன பதில்,
"சுடுகாடு..."


"திடுக்"கென அதிர்ந்தேன்.. அடப் பாவிகளா.. சுடுகாட்டிலுள்ள மயான ஊழியரிடம் ஏற்கனவே க்வார்ட்டர், கோழி பிரியாணி, கொஞ்சம் பணம் எல்லாம் கொடுத்து ரெடி செய்து விட்டார்கள்.  இவங்க நேரம் பார்த்து அன்று சுடுகாட்டில் இரண்டு உடல்கள் எரியூட்டப் பட்டுக் கொண்டிருந்தன.  அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஊரை விட்டு தப்பித்து ஓடி காதலில் ஜெயித்துவிட்டதாக பெருமையுடன் சொன்னார்.  இவர்களைத் தேடி அதே சுடுகாட்டுக்கும் ஒரு குழு வந்தது.  எரிந்து கொண்டிருந்த உடல்களைப் பார்த்து அப்படியே திரும்பிச் சென்றுவிட்டனராம்.  இரண்டு நாட்கள் கழித்து நம்ம எஞ்சினியர் வழக்கம் போல் வீட்டுக்கு வர அவர் அம்மா, "தெரியமா சேதி" என ஆரம்பித்து முழுக் கதையும் சொல்ல, எஞ்சினியர் மனதுக்குள் சிரித்துக் கொண்டே மாமியார் வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானப் படுத்தி மாமியாரை சாப்பிடுமாறு வற்புறுத்திவிட்டு வந்தார்.

ஒன்றல்ல ரெண்டல்ல, நான்கு வருடங்கள் ஓடி விட்டன.  ஒரு நாள் திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி எஞ்சினியரின் அப்பா அவர் வீட்டில் வந்து நிற்க மருமகள் பேத்தியுடன் வரவேற்றிருக்கிறார்.  பெரியவர் தலை சுற்றி கீழே விழாத குறைதான்.  அதிர்ச்சி அடங்க அவருக்கு ஆறு மணிநேரம் ஆனது.  பிறகென்ன, பேத்தியுடன் இரண்டு நாட்கள் விளையாடிவிட்டு இதை தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லி சென்றார்.  முதலில் தன் மனைவிக்கு சேலத்திற்கு மாற்றுதல் வாங்கி குடும்பத்துடன் சேலம் வந்து விட்டார்.  ஒரு நாளில் டீச்சரின் அப்பாவை சேலத்திற்கு வரவைத்து நடந்த கதையைச் சொல்ல.. பிறகென்ன, பேத்தியைப் பார்க்க பெரிசுகள் அனைவரும் கேரளாவிற்கு கிளம்பி விட்டனர்.  ஆனால் இன்று வரை டீச்சரின் அண்ணன் தன் மருமகளைப் பார்க்க வரவேயில்லை என்பது தான் அவர்களுக்கு பெரிய குறையாக உள்ளது.  மச்சான்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள், ஆனால் அண்ணனுக்கு தங்கை மேல் உள்ள வறட்டுக் கோபம் இன்னும் தீரவேயில்லை.  இதை அவர் எனக்கு சொன்ன வருடம் 1996.  அண்ணனும் தங்கையும் இப்போவாவது இணைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

வருடம் 1998.  முதல் கடையை ஊத்தி மூடிவிட்டு அடுத்த கடையை திறப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் சேலத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சில காலம் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என ஒதுக்கியிருந்தார்கள்.  நாமக்கல்லில் இருந்த எங்கள் கம்பெனியைச் சேர்ந்த சர்வீஸ் எஞ்சினியர் நன்கு பழக்கமாகி விட்டிருந்தார்.  மேலும் எனது சொந்தக் கிராமமும் நாமக்கல் பக்கம் என்பதால் நாமக்கல்லில் வேலை செய்வது பிடித்தமாகத்தான் இருந்தது.  நண்பர் நாமக்கல்லில் ஓரளவு பிரசித்தி பெற்றவர், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த பொழுது அவர் மனைவி கவுன்சிலராக இருந்தார்.  சரி கதைக்குள் செல்வோம்..

நானும், சர்வீஸ் என்ஜினியரும் ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருப்போம்.  அவருக்கு ஆபீஸ் வேலையை விட சொந்த வேலைதான் அதிகமாக இருக்கும்.  அப்படி இருக்கையில் ஒரு நாள் அவருடைய அண்ணனின் லாரி பட்டறையில் ஒரு பஞ்சாயத்து வந்தது... இந்த இடத்துல அப்படியே Freeze பண்றோம், Open பண்ணா...

பத்தாம் கிளாஸ் படிக்கும் ஒரு அழாகான பொண்ணு பாவாடை சட்டையோட ஸ்கூல் முடிஞ்சு சைக்கிள் ஒட்டிக்கிட்டு வீட்டுக்கு போறா.. திடீர்னு சைக்கிளின் பின் சக்கரத்துல பெண்ணோட பாவாடை சிக்கி இடுப்பிலிருந்து முழுவதுமாக அவிழ்ந்து சக்கரத்தினுள்ளே சுற்றிக் கொள்ள தடுமாறி கீழே விழுந்தாள்.  ரோட்டில் அந்த நேரம் பார்த்து பெண்கள் யாருமில்லை.  அவள் அணிந்திருந்த சட்டை அவள் தொடைகளை மறைத்துக் கொள்ள போதுமானதாக இல்லை.  அவமானத்தில் குறுகி கால்களைக் குறுக்கிக் கொண்டு அப்படியே ரோட்டில் அமர்ந்து விட்டாள்.  ஒரு ஆண் தனது இருசக்கர வாகனத்தை அவளை மறைக்குமாறு நிறுத்தி விட்டு பாவாடையை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.  ரோட்டில் சென்ற பலரும் என்ன நடக்கிறது என ஆவலுடன் எட்டிப் பார்த்து குரூர சிரிப்புடன் சென்று கொண்டிருக்க, அப்போது சைக்கிளில் வந்த ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சைக்கிளை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து தன்னுடைய வேஷ்டியை கழட்டி அமர்ந்திருந்த அவள் இடுப்பில் சுற்றி விட்டு அவளை எழுப்பி நன்கு கட்டி விடச் செய்தான்.


அப்பெண்ணிடம், "உன் அட்ரஸ்ஸ கொடுத்துட்டு வீட்டுக்குப் போ, உன் சைக்கிளை நான் எடுத்துட்டு வந்து தரேன்"ன்னு அவன் சொல்ல, அவள் செய்தாள்.  ஒரு மணி நேரம் கழித்து பையன் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து செல்ல, வாசலில் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தவள் ஓடி வந்து சைக்கிளை வாங்கிக் கொள்ள, பையன் அவள் சொன்ன நன்றியைக் கூட காதில் வாங்காமல் திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டான்.  பாரதிராஜா படத்தைப் பார்த்து வளந்த புள்ள போலிருக்கு, பையன் போனவுடன் வெள்ளுடை தேவதைகள் சுற்ற பகல் கனவில் மிதந்திருக்கிறாள் அவள்.

 
அவளின் ஒருதலைக் காதலினூடே +2 வையும் முடித்து விட்டாள்.  வீட்டில் அத்தை மகனுக்கு கட்டி வைக்க ஏற்பாடானது. ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்திருக்கிறாள்.  பலரின் பல வற்புறுத்தல்கள், சில பல அடி உதைகளுக்குப் பிறகு கட்டினால் எனக்குப் பாவாடை கட்டிவிட்டவனைத்தான் கட்டுவேன் என போட்டுடைத்து விட்டாள்.  அவனை எங்கு போய் தேடுவது.  இந்த இடத்தில் இரு குடும்பங்களின் நிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  பெண் கா.வி.க.கு. வைச் சேர்ந்தவள்.  அவள் அப்பா நாமக்கல்லில் பல லாரிகள், பெட்ரோல் பங்க், நிலபுலங்கள், அரசியல் செல்வாக்கு, ஆள்பலம் என வலம் வந்து கொண்டிருப்பவர்.  பையனுக்கு அம்மா கிடையாது, அப்பா பஸ் ஸ்டாண்டில் செருப்பு தைக்கும் தொழிலாளி.  ஒரு வழியாக பையனை டிகிரி படிக்க வைத்துவிட்டு இனி பையன் நம்மை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருப்பவர்.


நம்ம பொண்ணு கில்லாடி, இந்த ரெண்டு வருசத்துல பையனோட வீடு, காலேஜ், நண்பர்கள், எங்க எப்ப இருப்பான் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கா.  வீட்டுல "யாருடி அவன்"னு கேட்க அவளும் ஆள், அட்ரசோட சொல்லிட்டா.  பொண்ணு வீட்டுல ஆளாளுக்கு தனித் தனியா சாமியாட ஆரம்பிச்சுடாங்க.. சரி, இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்னுட்டு நேரா போய் பையனையும் அவன் அப்பாவையும் ஜீப்ல அள்ளி போட்டுட்டு வந்து, "வேணுங்கற அளவுக்கு துட்டு தர்றோம், வெளியூர்ல போய் பொழச்சிக்குங்க, இங்க இருக்க வேணாம், மீறி இருந்தா காலி பண்ணிடுவோம்னு" அன்பா சொல்லி அனுப்பியிருக்காங்க.  அதுல இருந்தா கைத்தடி ஒன்னு பையனிடம் உண்மையான காரணத்தை அப்புறமா போட்டு கொடுத்திட்டான்.  நம்ம பயலுக்கு அப்பத்தான் பழைய பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்திருக்கு.  அட, "உங்க பொண்ணு அலைஞ்சா அதுக்கு நான் ஏன் ஊரை விட்டு போகணும், நீ உன் பொண்ணை என்ன வேணுமின்னாலும் செஞ்சிக்கோ, நான் போக மாட்டேன்"னு பிடிவாதமா சொல்லிட்டான்.


பாத்தாரு ஓனரு.. "தூக்குடா அவனை"ன்னு சொல்லி மூணு நாளைக்கு வெச்சிருந்து துவைச்சிருக்காங்க.  பையனோட அப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க அவரை போலிஸ் ஸ்டேஷன்ல வெச்சு நல்லா கவனிச்சிருக்காங்க.  ஒரு வழியா அப்பாவும் பையனும் ஊரைவிட்டு போகிற நேரத்துல பெண்ணோட தோழி மூலமா பையனுக்கு ஒரு தகவல் வருது.  இன்ன தேதியில, இன்ன நேரத்திற்கு, இன்ன இடத்திற்கு வேணுங்கிற அளவிற்கு பணம்-நகையோட  வந்து காத்திருக்கப் போவதாகவும், பையன் வரலன்னா அங்கேயே செத்துப் போயிடப் போவதாகவும் வந்த தகவல்ல இருக்கு.  பாத்தான் பையன், "தக்காளி செய்யாத தப்புக்கு நம்மள மூணு நாள் வெச்சிருந்து திணற திணற அடிச்சானுங்களே, வெக்குரண்டா உங்களுக்கு பெரிய ஆப்பு"ன்னு முடிவு செஞ்சுட்டான்.  இந்த இடத்துலதான் நம்ம பயலுக்கும் புள்ளை மேல காதல் பத்திக்கிச்சு...


அப்பாவோட கடையை காலி பண்ணிட்டு அவரை பாதுகாப்பா வெளியூர்ல தங்க வெச்சுட்டான்.  பெண்ணோட அப்பாவின் தொழில் போட்டியாளர் ஒருவரிடம் உண்மையைச் சொல்லி தப்பித்துச் செல்ல லாரி உதவி கேட்க அவர் சந்தோசமா ஒத்துக்கிட்டார்.  அந்த நாளும் வந்தது, அந்த நேரமும் வந்தது, அவளும் வந்தாள், பத்து வருடங்களுக்கு உட்கார்ந்து தின்னும் அளவிற்கு பணமும் நகையும் கொண்டு வந்தாள், லாரியும் வந்தது, அவர்களின் முதல் காதல் பயணம் ஆரம்பமானது.  லாரி வடக்கு நோக்கி சிட்டாகப் பறந்தது.  பையனின் நண்பர்களை ஒரு பத்து நாள் காவலில் வைத்து காவல்துறை தன் கடமையை செய்தது.  பெண் வீட்டு டாட்டா சுமோக்கள் ஒரு வாரம் தமிழகமெங்கும் கோவில் கோவிலாக, லாட்ஜ் லாட்ஜாக சுற்றியது.  அநேகமாக பையன் அந்நேரம், "சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது" என ராஜஸ்தான் ஒட்டகத்தில் ஏறி பாட்டுப் பாடிக் கொண்டிருந்திருப்பான்...

மற்றொரு சம்பவம்... அரசியல், சட்டம் மற்றும் காவல் துறையில் உச்ச பதவியில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டது.  விறுவிறுப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாத பல திடுக் திருப்பங்களுடன் கூடிய வெறித்தனமான காதல் அது.  பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்...

- அன்புடன்
- மலர்வண்ணன்