Saturday, 15 December 2012

அந்த மூன்று கதைகள்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு "ரம்"மிய மாலையில் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  பேச்சு பல தலைப்புகளைக் கடந்து சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது.  நண்பர் என்னைவிட 14 வருடங்கள் வயதில் மூத்தவர்.  பல முன்னணி உலகளாவிய பயண ஏற்பாட்டாளர் (travel agent) நிறுவனங்களில் பணியாற்றியவர்.  பல நாடுகளை சுற்றியவர், இன்னும் சுற்றிக் கொண்டிருப்பவர்.  இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் போது உண்டாகிய நட்பு அது.

பேச்சினிடையே, இன்னொரு நண்பனைப் பற்றிய பேச்சு எழுந்தது.  அவனைப் பற்றி அவர் கேட்க, "சில வாரங்களுக்கு முன்புதான் கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டனர்" என்று சொன்னேன்.  "நீங்க போகலியா?" என்று கேட்டார்.  "போகணுமா!" என்று நான் கேட்க, ஒரு சிரிப்புடன் வெயிட்டரிடம் "repeat" என்று சொல்லி நிமிர்ந்து உட்கார்ந்தார்.  சரி, பெரிசு "full"form க்கு தயாராயிட்டார் போல என நினைத்து "நிம்மதியா வேலை செய்து, கைநிறைய சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க எந்த நாடு சிறந்தது?" என்று கேட்டேன்.

"என் அனுபவத்தில் நான் கண்ட மூன்று நிகழ்வுகளை சொல்கிறேன், பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தார்.  இனி அனுபவங்கள் third person-ல்...

கனடா...!! அமெரிக்க கனவில் தோற்பவர்களின் அடுத்த இலக்கு.  ஒரு இந்திய பல் மருத்துவர், அவர் மனைவி மற்றும் மகளுடன் கனடாவில் 8 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.  தனி வில்லாவில் ஆளுக்கொரு காருடன் நல்ல வசதியான வாழ்க்கை.  வருடம் ஒரு முறை இந்தியா வருவார்கள்.  ஸ்டார் ஹோட்டலில் தங்கிக் கொண்டு பார்க்க விரும்புவர்களை கார் அனுப்பி கூட்டி வரச் செய்து கூடி மகிழ்வார்கள்.  'ஏன், வீட்டில் தங்க மாட்டார்களா?' எனக் கேட்கக்  கூடாது.  கொசுத்தொல்லை, பேப்பர் இல்லாத டாய்லெட், பெப்ஸி இல்லாத உணவு, வேலை சிபாரிசுகள், பெண் கேட்டு வரும் பெரிசுகள் போன்றவற்றை தவிர்க்கவே ஹோட்டல் வாசம்.

19-வது வயதில் இருந்த அவர்களின் ஒரே மகள் கனடாவில் உள்ள கல்லூரியில் Bio Chemistry படித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் மகளின் படிப்பு சம்பந்த ஒரு ப்ராஜெக்ட்டிற்கு, உடன் படிப்பவர்கள் மற்றும் புரொபசர்கள் உடன் 10 நாட்கள் கேம்ப்பிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி கல்லூரியிலிருந்து நமது பல் டாக்டருக்கு கடிதம் வர, மனைவியிடம் கலந்தாலோசித்து மகிழ்ச்சியுடன் மகளை அனுப்பி வைத்தனர்.  மகளுடன் தினமும் செல்போனில் அவள் தங்குமிடம், ப்ராஜெக்ட், உணவு, இத்யாதிகள் பற்றி தினமும் பேசினர்.  அவளும் போன வேலையை முடித்து திரும்பி வந்தாள்.

ஒரு மாதம் வழக்கம்போல் நன்றாக போய்க் கொண்டிருந்தது.  இரண்டாவது மாதத்தின் இறுதியில் மகளின் உடல்நலத்தில் மாற்றம் தெரியவே மருத்துவரை அணுகினர்.  சில  டெஸ்ட்டுகளுக்குப் பிறகு அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெளிவு படுத்தினார். தம்பதிகள் இருவரும் சில நொடிகளில் மனதளவில் இந்தியப் பெற்றோராக மாறினர், செயலளவில் மாற நினைத்தாலும் இயலாது. தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள்.  பெண்ணை வைக்கோல் போரில் போட்டு எரிக்கவோ, கும்பலாக ஊருக்குள் புகுந்து காலனியை எரிக்கவோ நினைத்தும் பார்க்க முடியாது.

பெண்ணை வீட்டில் உட்கார வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.  "யாரடி அவன்?",
செல்ல மகள் சொன்னாள், "தெரியல"
அதிர்ந்தனர் பெற்றோர்.  பல வற்புறுத்தல்கள், கவுன்சலிங், தெரபிகளுக்குப் பிறகு அவள் சொன்னவற்றின் சாராம்சம் இது தான்.  ஒவ்வொரு நாள் இரவும் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக பார்ட்டி கொண்டாடுவர். பார்ட்டியின் உச்சகட்ட உறவுகளுக்கு boyfriend-girlfriend ஜோடியாக இருப்பவர்கள் தனியே தத்தம் அறைகளுக்கு சென்று விடுவார்கள்.  மீதமுள்ள singles தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரே இரவில் ஒருவரிடமோ, ஒன்றுக்கு மேற்பட்டவரிடமோ, அல்லது கூட்டாகவோ உணர்சிகளை வடித்துள்ளனர்.  10 நாட்களும் தொடர்ந்து இதுபோல் Bio-Chemistry  ப்ராஜெக்ட் செய்து வந்துள்ளனர்.  நம்ம பெண் இதில் single வேறு.

புரொபஸர்களையும் ப்ரின்ஸிபாலையும் விட்டேனா பார் என்று பல் வைத்தியர் மனைவியுடன் கல்லூரியை நோக்கி புயலெனப் புறப்பட்டார்.  அனைவரையும் எதிரே உட்கார வைத்து நடந்தவற்றை விளக்கி சும்மா வெளுத்து வாங்கினார். 
அவரை மூச்சு வாங்க விட்டு பிரின்ஸிபால் பேச ஆரம்பித்தார், "உங்க பொண்ணுக்கு safe sex பத்தி நீங்க இதுவரை சொல்லித் தந்ததே இல்லியா" என்று கேட்க, நம்மாளு பெண்டாட்டியை மேலும் கீழும் பார்க்க, அம்மணி பக்கவாட்டில் தலையாட்டினார். 
"சரி அதாவது போகட்டும், கேம்ப் போற பொண்ணுக்கு நீங்க condom வாங்கிக் கொடுத்திருக்கலாமே,
ஏன் செய்யல?" என்று சொல்ல, நம் பல் வைத்தியருக்கு பல்லைத் தவிர மற்ற அனைத்தும் நடுங்கியது.
"அதெப்படி ஆண்-பெண்ண ஒன்னா நீங்க தங்க வைக்கலாம்" என்று நம்மாளு கேட்க அவரை வடிவேலு ரேஞ்சில் எல்லோரும் பார்த்தனர்.
"பதினெட்டு வயது நிரம்பியவர்களை கட்டுப் படுத்தும் உரிமை இந்த நாட்டில் யாருக்கும் கிடையாது" என்று அந்நாட்டு சட்டத்தை புரியவைத்து அவரை அனுப்பி வைத்தனர்.

அடுத்தது என்ன, கருக்கலைப்பு தான்.  மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.  அங்கேயும் சட்டம் தன் கடமையை செய்தது.  கனடாவில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் தகுந்த காரணமற்ற கருக்கலைப்புகள் அங்கு தடை செய்யப் பட்டுள்ளது.
"அப்பன் பேர் தெரியாத புள்ளைய வெச்சு நாங்க என்ன செய்ய" என்று வைத்தியர் எகிற,
"don't worry sir, பெத்து எங்க கிட்ட குடுத்துடுங்க, தாய்-சேய் இருவரையும் நாங்க பாத்துக்கிறோம்" என்று சொல்லி அனுப்பி விட்டனர்.  அவரை கண்காணிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.  சில நாட்கள் பொறுத்து இந்தியா செல்ல முடிவு செய்தனர்.  ஒரு வழியாக இந்தியாவும் வந்து சேர்ந்தனர்.  முதன் முதலாக ஸ்டார் ஹோட்டலை தவிர்த்து ஸ்டார் ஹாஸ்பிடலுக்கு சென்றனர். மகளுக்கு மீண்டும் பல டெஸ்டுகளுக்குப் பிறகு கரு நன்கு வளர்ந்து விட்டதாகவும் இப்போது கலைப்பது பெரிய சிக்கலாகிவிடும் என்பதை டாக்டர்கள் தெரிவித்தனர்.  ஒரு package கொடுத்து விட்டால் காதும் காதும் வைத்த மாதிரி அவர்களே பிரசவம் பார்த்து நல்ல படியாக ஒப்பைடைத்து விடுவதாகவும் வலையை விரித்தனர். 

நம்மாளு யோசித்தார்.  லட்ச லட்சமா இவனுங்களுக்கு கொட்டிக் குடுத்து பிரசவம் பாத்தாலும், இது இந்தியா, நம்ம சாதி சனத்துல எவனுக்காவது தெரிஞ்சுடும்...  அதுனால கனடாவுக்கே போய் இலவசமாகவே இதை முடித்து விடுவோம் என்று குடும்பத்துடன் வண்டி ஏறினார். 
மகளுக்கு சுகப் பிரசவம் ஆனதா?  பேரனா, பேத்தியா? இந்தியாவிலுள்ள சொந்தங்களுக்கு அந்தத் தகவல் தெரிந்ததா? அவர்கள் மீண்டும் இந்தியா வந்தார்களா? மகளுக்கு திருமணம் ஆனதா? குஷ்பூ சொன்னது போன்ற கணவன் அப்பெணிற்கு அமைந்தானா? அப்போ அந்த குழந்தை? போன்ற கேள்விகளுக்குள் செல்லாமல்
அடுத்த கதைக்கு செல்வோம்...

ஆஸ்திரேலியா..!!
 பேரைக் கேட்டாலே கங்காருகளும், சிட்னி ஹார்பர் பாலமும், ஒபேரா மாளிகையும் கண் முன் வந்து போகும்.  நமது நண்பர் ஒரு வயது முதிர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணிற்கு, தான் சென்ற காரில் 500 மைல் தூரம் லிப்ட் கொடுக்க, அப்பெண் தன் வீட்டிற்கு வந்து ஏதாவது சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அழைத்து சென்றிருக்கிறார்.  நன்கு விசாலமான பண்ணை வீடு.  உள்ளே சென்றதும் 2, 4 மற்றும் 7 வயதுடைய பொடிப் பசங்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருவன் வெள்ளைக் காரனாகவும், ஒருவன் இந்தியனைப் போலவும், இன்னொருவன் ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலவும் இருந்தனர்.

சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அக் கிழவி, தன்னுடைய மருமகள் என்று ஒரு இந்தியப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.  நண்பர் மேலும் கீழும் பார்க்க அப்பெண் தொடர்ந்தார்.  கணவன் மனைவி சகிதம் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்கு வந்தனர்.  முதல் குழந்தை பிறந்ததும், குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற கருத்து வேறுபாட்டில் கணவன் விவாகரத்து செய்து விட்டு வேறு நாட்டுக்கே சென்று விட்டான்.  அதன் பிறகு வேலை பார்த்த இடத்தில் ஒரு ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவனுடன் ஏற்பட்ட காதலில் இரண்டாம் குழந்தை பிறந்தது.  பின் இருவரும் ஓரிரு வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளனர்.  700 மைல்களுக்கு அப்பால் அவனுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க அவளையும் குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை அவனக்கு, அவளோ மறுத்து விட்டாள்.  அவன் மட்டும் சென்று விட்டான்.

நாட்கள் ஓடின..சுற்றுலா வந்த ஒரு ஸ்பானிஷ்காரன் இவள் வீட்டருகில் கொஞ்ச நாள் வாடகைக்கு தங்கியிருக்கின்றான்.  நம் இந்தியப் பெண் பொழுது போகவில்லை என்று இவனுக்கு கைடு வேலை பார்த்திருக்கிறாள்.  பத்திக்கிச்சு... டூரிஸ்ட் விசாவில் மீண்டும் இருமுறை வந்து காதலை வளர்த்திருக்கிறான்.  கூடவே தன் வாரிசையும் வளர்த்து விட்டான். பிறகு போய் வருகிறேன் என்று போனவன் தான்.

மூணு பசங்களுக்கும் விளக்கம் கொடுத்தாச்சா?  அப்போ இந்த ஆஸ்திரேலிய மாமியார்?? 

மூத்த மகனின் பள்ளி முதல்வர் ஒரு விவாகரத்து பெற்ற ஆஸ்திரேலியன்.  பள்ளிக்கு சென்று வரும் போது அவரோடு பழக்கம் கொஞ்சம் நெருக்கமாகி, மீண்டும் காதலாகி கசிந்துருகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  அவரின் தாயார் தான் இந்த மாமியார்.  ஆனால் அவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார். விவாகரத்தும் அப்ளை செய்தாகி விட்டதாம்.  அவருடைய குழந்தையும் இப்போது இவர் வயிற்றில்.... ஆனால் மாமியார் இவரோடுதான் இருப்பேன் என்று இருந்து கொண்டார். பண்ணை வீடும் அவருடையது தான்.  மூன்று குழந்தைகளுக்கும் சேர்த்து அரசாங்கம் தான் சோறு போடுகிறது. இந்தியா, பெற்றோர், உடன்பிறந்தோர், சொந்தங்கள் என்று கேட்ட கேள்விக்கு அப்பெண், "நீ இங்கு வராதே, நாங்களும் அங்கு வர மாட்டோம் என்று சொல்லி விட்டனர் ******* ******" என்று அலட்சியமாக சொன்னார்.
ம்ஹூம்... அடுத்த கதைக்குப் போவோம்...


வளைகுடா என்றாலே எண்ணெய் கிணறுகளும், ஷேக்குகளும், ஒட்டகங்களும், பர்தாவுக்குள் தெரியும் கண்களும், துபாயும், ஷார்ஜாவும், பஹ்ரைனும், குவைத்தும், இன்னும் பலவும் நிழலாடும்.  சவூதி மேல் ஒரு இனம் புரியாத வெறுப்பும் படரும்.

1988-ல் இந்தியாவிலிருந்து நமது ஹீரோ குவைத்துக்கு வண்டி ஏறுகிறார்...
ஒரே ஒரு சூட்கேசுடன்...  அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.  8 வருடங்கள் கடுமையான உழைப்பு... நல்ல வலுவான சேமிப்பு... தன் சொந்த ஊரே வியக்கும் அளவில் திருமணம்... திருமணம் முடிந்த கையேடு மனைவியுடன் மீண்டும் குவைத்... மீண்டும் கடின உழைப்பு... வருடங்கள் உருண்டோடின... இரண்டு குழந்தைகள்... தங்கத் தட்டும், பென்ஸும் வாழ்வின் அங்கமானது... ஒரே நிறுவனத்தில் 15 வருட அனுபவம், அதே கம்பெனிக்கு வெளிநாட்டிலிருந்து தேவையான பொருட்களை தருவித்துத் தரும் தொழிலை சொந்தமாக தொடங்கினார் நமது ஹீரோ... அவர் தொட்டதெல்லாம் துலங்கியது...

20 வருட குவைத் வாழ்வில் ஓர் இரவில் அந்த செய்தி அவருக்கு வருகிறது... உள்நாட்டு பிரசினைகள், கலவரங்கள், பொருளாதாரக் கொள்கை போன்ற ஏதோ காரணத்தால் அவருடைய தொழிலை அரசாங்கம் எடுத்துக் கொண்டது.  வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன.  எந்நேரமும் அவர் கைது கூட செய்யப் படலாம் என்ற நிலை... இரவோடு இரவாக இந்தியாவிற்கு தன் குடும்பத்தினருடன் வண்டி ஏறுகிறார்... ஒரே ஒரு சூட்கேசுடன்...!!!

"நிம்மதியா வேலை செய்து, கைநிறைய சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க எந்த நாடு சிறந்தது?"  என்று நான் கேட்ட கேள்வியை rewind செய்து பார்த்தேன்.
நிம்மதியா வேலை செய்து - இது நம்ம கையில் தான் இருக்கு, இல்லன்னா வேற வேலை.. இதுதான் நம்ம பாலிசி...
கை நிறைய சம்பாதித்து - செலவுக்கு
த்த மாதிரி சம்பாதிக்கணும், இல்லன்னா சம்பாத்தியத்துக்கு ஏத்த மாதிரி செலவுகளை வெச்சுக்கணும்...
குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க - இப்போதைக்கு இந்தியா, அதுவும் தமிழ்நாடு தான்....

வெயிட்டரிடம் "repeat" என்றேன்...

- அன்புடன்
- மலர்வண்ணன்