Tuesday, 19 March 2013

விதைகள்... விருட்சமாக...

சேலத்தில் நான் படித்த பள்ளிக்கும், அரசு கலைக் கல்லூரிக்கும் இடையே ஒரே ஒரு மதில் சுவர் மட்டும் தான்.  மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையாடவும், வின்சென்ட் பஸ் ஸ்டாப்பிற்கு குறுக்கு வழியில் செல்லவும் அச் சுவர் இரண்டு இடங்களில் ஒரு ஆள் செல்லும் அளவிற்கு உடைக்கப் பட்டிருக்கும்.  பள்ளி மைதானத்தில் விளயாடிதை விட அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நான் விளையாடியது தான் அதிகம்.  முழுவதும் புல் தரையாதலால், சறுக்கி விழுந்தாலும் ரத்தம் வராமல் கால்பந்து விளையாட அது தான் ஏற்ற இடம்.

அப்போது அடிக்கடி கல்லூரி மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டம் நடத்துவார்கள்.  அதில் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் ஒன்று.  என்றாவது ஒரு நாள் அவர்கள் போராட்டம் மதியத்திற்குள் வலுப்படும்.  அப்போது அவர்கள் உடனடியாக முற்றுகையிடுவது எங்கள் பள்ளியைத்தான்...  மணி அடிக்கப் படும், நாங்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கோ, கல்லூரி மைதானத்திற்கோ சென்று விடுவோம்.  வாத்தியார்களும் நாலரை மணி வரை அரட்டை அடித்தபடி சென்று விடுவார்கள்.  மறுநாள் பள்ளி வரும் போது போராட்டம் நடந்த சுவடே இருக்காது.

அது ஒரு MGR காலம்.  ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த நாளின் மாலையில் சில ஆசிரியர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.  எங்கள் வீட்டு வானொலியில் மாலை அந்த செய்திகளை கேட்கிறோம்.  கைது செய்யப் பட்ட இருவர் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.  அடுத்த இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு.

திங்கள் கிழமை காலை வகுப்பில் தேர்வு நடந்து கொண்டிருந்தது.  திடீரென்று ஹோ...வென்ற பெரும் கூட்டத்தின் சத்தம். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் பள்ளி மைதானம் முழுவதும் வெள்ளை சட்
டை-காக்கி பேன்ட், வெள்ளை சட்டை-நீல பேன்ட்  சீருடையில் வேற்று பள்ளி மாணவர்களால் நிரப்பப் பட்டது.  கைது செய்யப் பட்ட ஆசிரியர்களை விடுவிக்கச் சொல்லி பள்ளி மாணவர்கள் நடத்தும் போராட்டம் அது என எங்களுக்கு உணர சிறிது நேரம் ஆனது. அடுத்த அரை நாழிகைப் பொழுதில் எங்கள் பள்ளியின் நீல சட்டை-காக்கி பேன்ட் சீருடைகளும் அதில் கலந்தன. பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அதில் ஐக்கியமாகி அடுத்த பள்ளியை நோக்கி புறப்பட்டார்கள்.  மணி அடிக்கப் பட்டது...

மறுநாளும் இதே நிகழ்வு நடந்தது.  கிட்ட தட்ட இரண்டு மடங்கு பள்ளிப் போராளிகள்.  மீண்டும் மணி அடிக்கப் பட்டது.  தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றது.  மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தூண்களாக இருந்த காலம் அது.  தொடர்ந்து இரண்டு மாத போராட்டம்.  அரசு பணிந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டன.  மணி அடித்தது.  பள்ளி மீண்டும் திறந்தது.

வருடங்கள் ஓடின.  கல்லூரி வாழ்க்கை சென்னையில்.  பெரும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரவே இல்லை அல்லது நான் தேடிப் போகவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.  ஏனென்றால் நான் படித்த கல்லூரி அப்படி. ஒரே டிபார்ட்மென்ட், 3 க்ளாஸ் UG, 2 க்ளாஸ் PG, க்ளாசுக்கு 35 பேர், அதில் பாதி பேர் வர மாட்டார்கள்.  மீதியில் பாதி பேர் மதியம் வர மாட்டார்கள்.  அப்புறம் எங்கிருந்து சமூக நீதியைக் காப்பது? அவ்வப்போது சட்டக் கல்லூரி மாணவர்களும், அரசுக் கல்லூரி மாணவர்களும் செய்யும் போராட்டங்களை பெருமையுடன் பேசி பகிர்ந்து கொள்வோம்.

2000-மாவது வருடத்திற்கு பிறகு ரமணா படத்தை தவிர மாணவர் போராட்டம் வேறு எங்கும் பெரிய அளவில் நடந்ததாக தெரியவில்லை.  நடந்து முடிந்த நிகழ்விற்கு மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதேயே பெரிய போராட்டமாக  ஊதிக் காட்டப் பட்டது.
சுயநிதிக் கல்லூரிகளின் ஆதிக்கம், கார்ப்பரேட் கம்பெனிகளின் கேம்பஸ் மற்றும் கை நிறைய சம்பள ஆர்வம்,
சம்பளத்தை செலவு செய்ய பல கேளிக்கைகள், அமெரிக்கக் கனவுகள்,
மொபைல் மற்றும் இன்டர்நெட்டின் தாக்கம், படக்கென்றால் பார்ட்டி, தடுக்கி விழுந்தால் டாஸ்மாக்,
படிப்பிலோ-விளையாட்டிலோ யார் பெரியவன் என்பதை விட கல்ச்சுரல் நடத்துவதில் எந்த கல்லூரி சிறந்தது என்ற நிலை,
பணம் அதிகம் சம்பாதிப்பவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்ற நீதி போதனை,
விஜய மல்லையா, வாரன் பப்பெட், லக்ஷ்மி மிட்டல் போன்ற உதாரண புருஷர்கள்
இவையனைத்தும் மாணவர்களை காயடித்த பந்தயக் குதிரைகளாக மாற்றி விட்டனவோ என நினைத்திருந்தேன்... லயோலா மாணவர்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்ணாநிலை இருக்கும் வரை...

வழக்கம் போல் கலைக் கல்லூரியில் ஆரம்பித்து சட்டக் கல்லூரியில் விருத்தியடைந்த இப்போராட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது வியப்பையும் நெகிழ்வையும் ஒரு சேர வர வைத்தது.  இலங்கையில் ஒரு இன ஒழிப்பு நடந்து முடிந்து விட்டது.  தமிழக மீனவர்களின் ஒழிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  இது இப்படியே தொடர்ந்தால் லெமூரியா என ஒன்று இருந்தது என்று இன்றைய வரலாற்றில்  நாம் படிப்பது போல், டமில் நாடு என ஒன்று இருந்தது, அங்கு டமில் பேசுவார்கள் என நாளைய வரலாற்றில் தமிழர் அல்லாதோர் படிக்கும் நிலை ஏற்படலாம்.

அன்புத் தம்பிகளே, தங்கைகளே..
அன்று எப்படி எம் பள்ளிகளை மூடினார்களோ, அதே போல் இன்று உங்கள் கல்லூரிகளை மூடியிருக்கிறார்கள்.  இன்று போல் உள்ள தகவல் தொழில்நுட்பம் அன்று இல்லாமல் இருந்தும் வென்று காட்டினார்கள் உங்கள் மூத்தவர்கள்.  "கல்லூரியை மூடினால் ஒன்று சேர முடியாமல் வீட்டுக்குப் போய் விடுவார்கள், போகவில்லையென்றால் பெற்றோருக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்ற நம்பியார் கால ராஜ தந்திரத்தை புறந்தள்ளி, பெற்றோரைப் புரிய வைத்து, வென்றிட வாழ்த்துக்கள்...

அடிப்படை வசதிகள் வேண்டி அடிக்கடி போராடும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதில் கலந்து கொண்டால் உலகளவில் இப்போராட்டம் பெரும் கவனம் பெறும்.  நாளைய மருத்துவர்கள் மீது யாரும் கை வைக்க துணிய மாட்டார்கள், அப்படி நடந்தால் இன்றைய  மருத்துவர்ககள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்று குழந்தைக்குக் கூட தெரியும்.


வாழ்த்துக்களுடன்
- மலர்வண்ணன்