Saturday, 15 June 2013

உலு(ரு)க்கும் பாடல்கள்: பாகம் - 3


உலு(ரு)க்கும் பாடல்கள் முதல் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
உலு(ரு)க்கும் பாடல்கள் 2-ம் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
 
80-களில் தமிழ்த் திரையிசையை என்னைப் போன்ற சங்கீத ஞானம் அற்ற சாதாரண ரசிகர்கள் மூன்றாகப் பிரித்துப் பார்ப்பார்கள்.  மெலடி, டப்பாங்குத்து மற்றும் டிஸ்கோ.  ராஜாவின் ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருத்த காலம். அவர் வாசித்தார்... ரசிகர்கள் யாசித்தார்கள்...  இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார்.  அதை அவரே எப்போவாது சொன்னால் தான் நமக்கு "ஓ.. இதுல இப்படி ஒன்னு இருக்கோ"ன்னு தோணும். உதாரணமாக "ராகம் ரசமெயே வேதமாய்" என்ற தெலுங்குப் பாடலில் "ச, ரி, க" என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே உபயோகப் படுத்தியிருப்பார்.  "ராஜா.. ராஜாதி ராஜன் இந்த" பாடல் முழுவதும் ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கும், இரண்டாவது interlude-ல் rhythm. இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்த் திரை இசையில் கர்னாடிக் சங்கீதம் பெரும்பங்கு வகித்திருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும் வகையில் தாலாட்டு, நாட்டுப்புற, கஜல், மேற்கத்திய, இன்னபிற வகையுடன் குழைத்து MSV, இளையராஜா போன்றவர்கள் அளித்து வந்துள்ளனர்.  90களுக்குப் பிறகு ரஹ்மான் வித்தியாசமாக ஆப்ரிக்கன், அரபிக், அல்ஜீரிக் வகை பாணியை இணைத்து பல பாடல்களை ஹிட்டடித்துள்ளார்.  "அரபிக் கடலோரம்", "ஸ்ட்ராபெர்ரி கண்ணே", "முக்காபுலா", "அடியே.. எனை", "காதல் நயகரா" போன்ற பல பாடல்களை சொல்லலாம்.  தமிழ்த் திரையிசையில் hip hop, jazz, blues, pop, country, folk, rhythm & blue, rock, ska போன்ற genre-க்கள் ரஹ்மான் வரவிற்குப் பிறகு அதிகளவில் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன.

Rock-ல் alternative rock என்றொரு வகை உண்டு.  நம்ப வசதிக்கு இதை slow rock என்றும் வைத்துக்  கொள்ளலாம். ஆங்கிலப் பாடல்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தது இந்த slow rock genre தான்.  Phil Collins, George Michael, The Eagles, Stevie Wonder, Michael learns to Rock, Richard Marx, Foreigner, Elton John போன்றவர்கள் இந்த slow rock-ல் பட்டையைக் கிளப்பியவர்கள்.

இப்பதிவில் நான் பகிரப் போவது இளையராஜா இசையமைத்த "fast melody duets" பற்றி!! அதென்ன fast melody? எனக்கு இதற்கு சங்கீதப் பூர்வமாக விளக்கம் சொல்லத் தெரியாது... காதல் பாடல்கள் என்றாலே இயக்குனர்  மற்றும் ரசிகர் விருப்பம் மெலடியாகத்தான் இருக்கும். அதிலேயே சற்று tempo-வை ஏற்றி சுறுசுறுவென கொடுத்தால் எப்படியிருக்கும்?!  பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணம் அனைத்திலும் ஒரு சறுக்காத வேகம்!!  Interlude-லும் அதே பரபர தேடல்.  அதுதான் fast melody.  சொன்னால் விளங்காது; அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.  உணர்ந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

இதில் நாயகன் நாயகியை ஸ்லோ மோஷனில் மரத்தைச் சுற்றி ஆடுவதை தவிர்த்து தடதடவென ஓடி ஆட விடலாம்.  துணை நடிகைகள் மகாபலிபுர சிற்பங்களின் உடையில் வந்து மலர் தூவ வேண்டாம். இயக்குனர்கள் "i want more emotion.." என்று தொங்க தேவையில்லை.  தயாரிப்பாளரின் வசதிக்கேற்ப set போட்டும் எடுக்கலாம், outdoor-லும் எடுக்கலாம்.  பாடல்களுக்குள் செல்வோம்...

Fast melody வகைப் பாடல்களை நான் கண்டு கொண்டு, பிரித்து ரசிக்க ஆரம்பித்தது இந்தப் பாடலை கேட்ட பின்பு தான்.  படம்: சத்யா, பாடியவர்கள்: SPB & லதா மங்கேஷ்கர், பாடல்: "வளையோசை கலகலவென"""
புல்லாங்குழலினூடே ஆரவாரமில்லாமல் ஆரம்பிக்கும் இப்பாடல் இறுதி வரை மிதமான அலைகள் மீண்டும் மீண்டும் நம்மிடையே வந்து ஆர்ப்பரிப்பது போல இருக்கும். குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் "லா...ல...லா...ல...லா...லா..."!!  லதா மங்கேஷ்கரின் உச்சரிப்பு சரியாக இராது என்றாலும் அமலாவின் குழந்தைத்தனமான சில்மிஷங்களுக்கு சரியாக செட் ஆகும்.  இப்பாடலில் கமல் அமலாவின் உதட்டில் சேலையைப் போர்த்தி முத்தமிடும் காட்சி செம...!!  இன்று வரை பல படங்களில் நாயகன் நாயகி பஸ்ஸில் செல்லுமாறு காட்சி வந்தால் இந்தப் பாடலையே பின்னணியாக பயன்படுத்துகின்றனர்.


இன்று மொட்டைத் தலையுடன் டிவியில் சமையல் செய்து கொண்டிருக்கும் அன்றைய கோடம்பாக்க சாக்லேட் பையன் சுரேஷ், நளினி & சாதனாவுடன் இணைந்து நடித்த(!!) ஒரு த்ரில்லர் "உன்னைத் தேடி வருவேன்".  பாடல்: "என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்",  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
வேகமாகச் செல்லும் தெளிந்த நீரோடையில் பயணம் செய்வது போல இப்பாடல் உங்களை அழைத்துச் செல்லும்.  இரண்டு சரணங்களும் முடியும் தருவாயில் "வா... அன்பே அன்பே அன்பே வா...." என்ற இடம் உச்சகட்டம்.


ஜேம்ஸ் பான்ட்  மாதிரியே படம் எடுக்கணும்னு கமல் கையை சுட்டுக் கொண்ட படம் விக்ரம்.  ஜேம்ஸ் பான்ட்  படத்தில் வருவது போல மூன்று கதாநாயகிகள், ஆயுதக் கடத்தல், தேசப்பற்று, வேற்றுமொழி, பழிவாங்கல் போன்ற சமாச்சாரங்கள் இதிலும் இருந்தன.  சுஜாதாவின் கதை-வசனம்.  இருந்தும் படம் ஊத்திக் கொண்டது.   கமல் ரசிகர்கள் வேண்டுமானால் இப்படத்தை கமல் அட்வான்சாக எடுத்ததால் மக்களுக்கு புரியாமல் தோல்வியடைந்தது என்பார்கள்.  ஆனால் இதற்கு முன்பு வந்த "the spy who loved me", "moon raker", "for your eyes only" உள்ளிட்ட ஜேம்ஸ் பான்ட் படங்கள் மொழி புரியாமலே தமிழ்நாட்டில் ஹிட்டடித்தவை.  ஜேம்ஸ் பான்ட் பட பாணியிலேயே எடுக்கப் பட்ட title பாடலான "விக்ரம்...விக்ரம்..." முதன் முதலாக techno mix செய்யப் பட்டு rap style-ல் வந்த பாடல்.  "மீண்டும் மீண்டும் வா" சரியான hot, hotter, hottest!!  நம்ம fast melody "வனிதாமணி வனமோகினி வந்தாடு..."  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
பாடலின் ஆரம்பத்தில் வரும் "கண்ணே.. ஹ்ம்ம்.. கட்டிக்கவா.."-வை கமலும் அம்பிகாவும் சொந்தக் குரலில் பாடியிருப்பார்கள்.  பாடலில் எக்ஸ்பிரஸ் வேகம் இருக்கும்.  இப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்;
ஆண்: விடிந்தது.. நிறம் என்ன வெளுத்தது..
பெண்: இரவிலே.. மன்னன் வந்து வெளுத்தது..


செல்வி என்று சுரேஷும் ரேவதியும் நடித்த படம்.  காலக் கொடுமையால் சுரேஷும் ரேவதியும் பிரிந்திருக்க அவர்கள் வீட்டு நாய்கள் ஒன்றையொன்று காதல் செய்து சேர்த்து வைக்கும் படம்.  உலக சினிமா வரலாற்றில் முதன் முதலாக இரண்டு நாய்களுக்கு டூயட் வைத்த படம் செல்வி.  பாடல்: "இளமனது பலகனவு விழிகளிலே", பாடியவர்கள்: வழக்கம் போல் SPB & S.ஜானகி
பாடல் முழுவதுமே ஏதோ ரகசியம் பேசுவது போலவே இருவரும் பாடியிருப்பார்கள்.  இசையும் அதற்கேற்றது போலவே உடன் பயணிக்கும். சரணங்களின்  முடிவில் ஒரே வரியை high pitch-லும் பிறகு இன்னொருவர் அதை low pitch-லும் பாடுவது ஒரு வித்தியாசமான அனுபவம்.
"கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ, கனிகளின் பாரத்தில் வளைகிறதோ"
"விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே, வெட்கம் விலகட்டும் விலகட்டுமே"

போன்ற கலக்கலான காதல் வரிகளைக் கொண்ட பாடல்.  ஹ்ம்ம்... நாய்க்கு நிக்க நேரம் இருக்காது!!!


கமல், அம்பிகா நடித்த நானும் ஒரு தொழிலாளி படத்தில் வரும் "பட்டுப் பூவே உன்னைப் பார்த்தால்" பாடலுக்கு அம்பிகா, பாலுமகேந்திரா பட நாயகியின் ஆஸ்தான உடையில் வந்து உசுப்பேத்துவார்.  இப்படத்தில் வரும் "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும்" பாடல் சரியான fast melody.  பாடியவர்கள் மீண்டும் SPB & S.ஜானகி.  தனிமையும் கூட ஆட ஜோடியும் இருந்தால் இப்பாடலைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. பாடலின் சரணத்தில் ஜானகி "மாமா...." என்று இழுக்க, SPB, "கண் துடிக்குது பெண் துடிக்குது கை அணைச்சிட வா" என பதில் பாட, மீண்டும் ஜானகி "புது ரோஜா...." என்று இழுப்பார் பாருங்கள்.. சான்சே இல்ல..!!


கங்கை அமரன் இசையில் வந்த ஒரு musical drama சின்ன தம்பி பெரிய தம்பி.  பிரபு, நதியா, சத்யராஜ், சுதச்சந்திரன் என்று பெரிய பட்டாளம்.  "மலரின் நுனியில் பனி விழுந்தது", "எம்பாட்டை கேட்டால் போதும்", "ஜீன்ஸ் கொடுத்த மாமா", போன்ற துள்ளலான பாடல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும்.  இளையராஜா இசைன்னு சொல்லிட்டு கங்கை அமரன் பாடல்களைப் பற்றி எழுதும் காரணம் என்னன்னா, கங்கை அமரன் இப்படத்தில் இளையராஜா வேறு ஒரு படத்திற்கு போட்டு வைத்து கைவிடப்பட்ட ஒரு tune-ஐ இப்படத்தில் உபயோகப் படுத்தியிருப்பார்.  இதை கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கச்சேரியின் போது சொன்னார். drop ஆனது ரஜினி படம் என்பது கூடுதல் தகவல். அந்தப் பாடல் "ஒரு காதல் என்பது, உன் நெஞ்சில் உள்ளது..."  பாடலின் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.  பல்லவியும் அனுபல்லவியும் நிதானத்துடன் ஆரம்பிப்பது போல இருந்தாலும் முதல் interlude-ல் இருந்து வேகம் பிடிக்கும்.


படம்: காக்கி சட்டை.  இப்படம் மரண ஹிட், "பட்டுக் கன்னம்", "சிங்காரி சரக்கு", "கண்மணியே பேசு", "பூப்போட்ட தாவனி" என படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்.  படத்தின் ஹீரோ கமலா, "தகிடு தகிடு"சத்யராஜா என்றே தெரியாது.  நம்ம பாடல்: "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே" மீண்டும் கமல் & அம்பிகா.  மீண்டும் SPB & S.ஜானகி.  வித்தியாசனமான ஆரம்பம்.  பாடல் முழுவதும் வரும் இசை echo effect-ல் இருக்கும்.  படத்தின் கதையோடு ஒன்றிப் பார்த்தால் அந்த echo effect ஏன் கொடுக்கப் பட்டது என விளங்கும். இரண்டாவது சரணத்திற்கு முன்பு வரும் "லா...ல லா ல.. ல ல லா..."வை இருவரும் வேறு வேறு tempo-வில் பாடுவது சரியான செவி விருந்தோம்பல்..!!


இப்பதிவில் இடம் பெற்ற பாடல்களில் சிறந்த பாடல் என இதைத் தான் சொல்வேன்.  தினமும் ஒரு முறையாவது இப்பாடலை பார்த்தோ, கேட்டோ விடுவேன்.
"சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்"
"மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்"

போன்ற "வைரமுத்"தான வரிகள்..
வீட்ல அம்மணி கூட தகராறுன்னா சமாதானம் செய்ய இப்பாடலில் வரும் "பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே, நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே" என்ற வரிகளைத்தான் பாடிக் காட்டுவேன்.
படம்: அந்த ஒரு நிமிடம், பாடியவர்கள்: அவர்களே தான், பாடல்: "சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே". அதே கமல், அம்பிகாவிற்கு பதில் இதில் ஊர்வசி.
நான் முதன் முதலில் CD to Cassette recording செய்த பாடல்.  பாடல் முழுவதுமே காதல் காட்டாற்று வெள்ளம் போல் விரவிக் கிடக்கும்.  எந்த இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் எங்கு நோக்கினும் பிரித்து மேய்ந்திருப்பார் ராஜா.  "பழைய கனவு உனக்கு எதற்கு" என்று பாடும் முன் SPB ஒரு சிரிப்பு சிரிப்பாரே..!! ரணகளம்..!!

எழுத எழுத இன்னும் பல பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறன்றன.  "முத்தாடுதே முத்தாடுதே ராகம்", "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது", "காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ", போன்ற பல பாடல்கள் இவ்வரிசையில் உள்ளன.  "பனிவிழும் மலர்வனம்", "பொன்மானைத் தேடுதே", "மீன்கொடி தேரில்", போன்ற fast melody solo பாடல்களையும் பிறிதொரு சமயம் பிரித்து மேயலாம். மேலோட்டமாகப் பார்த்தால் எதையோ எழுதப் போய் கடைசியில் கமல் படப் பாடல்களை பற்றி எழுதியது போன்ற ஒரு உணர்வு. அதையும் தனியாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்.  அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
 
அன்புடன்
மலர்வண்ணன்


 

5 comments :

 1. வளையோசை கலகலவென - மனதும் துள்ளும் பாடல்... 'நானும் ஒரு தொழிலாளி'யில் குறிப்பிட்ட இரண்டு பாடல்களில் இரண்டு அம்பிகாவைப் பார்க்கலாம்...!! காக்கி சட்டை பாடல்கள் என்றும் கேட்கலாம்...

  இனிய தேடலுக்கும்... தொடரவும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு அம்பிகாவா? புரியலையே சார்..!!
   வாழ்த்துக்களுக்கு நன்றி...

   Delete
 2. in slow rock genre Michael learns to Rock is my fav.that too" 25 min too late" love that

  ReplyDelete
  Replies
  1. me too Baiju...
   My favorite numbers of MLTR are "I'm not a actor", "Someday", "Nothing to loose" & "Take me to your heart"

   Delete
 3. வளையோசை கலகலவென - என் ஆல் டைம் விருப்பபாடல் சார்.

  ReplyDelete