Tuesday 4 June 2013

சந்தானம் என்றொரு சமூக விரோதி...


முதல் வகுப்பில் "அ ஆ" சொல்லிக் கொடுத்த நவமணி டீச்சரிலிருந்து இன்று "あい"* சொல்லித் தந்துக் கொண்டிருக்கும் பாலா せんせい** வரை பல நல்லாசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன்.  பிறிதொரு சமயம் அவர்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.

உங்களை ஒருவன் தினமும் தொடர்ந்து மூன்று வருடங்களாக துன்புறுத்துகிறான்; அவனை உங்களால் கடைசி வரை ஒன்றுமே செய்ய முடியவில்லை; இந்த லட்சணத்தில் உங்கள் பெற்றோரும் அவன் செய்வதே சரி என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?!  ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை சேலம், செயின்ட் பால் பள்ளியில் எனக்கு கிளாஸ் டீச்சராக வந்து வாய்த்த சந்தானம் என்றொரு அரக்கனிடம் நான் பட்ட மன உளைச்சல்கள் இன்று வரை தொடர்கின்றன.

CSI ஹோபார்ட்டில் மூன்றாம் வகுப்பு வரை, நாலும் ஐந்தும் செயின்ட் பால் எலிமெண்டரி பள்ளியில் co education-ல் சந்தோஷமாகக் கடந்து வந்தேன்.  ஹைஸ்கூலில் எங்கப்பாவும், அவரு நண்பர் ஒருவரின் மகனான முட்டைக்கண் செந்திலையும் சந்தானத்தின் வகுப்பில் தான் போடவேண்டும் என்று அடம் பிடித்து சேர்த்து விட்டனர்.  அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி, மனக்காடு, ஜான்சன் பேட்டை பகுதிகளில் அப்போது இந்த சந்தானம் வாத்தியார் கண்டிப்பிற்கு ரொம்ப பிரபலம்.  சந்தானத்திடம் சேர்த்து விடும் அளவிற்கு அப்போது நான் வொர்த்தும் கிடையாது ரவுடியும் கிடையாது.

சந்தானம் பற்றி ஒரு சிறு குறிப்பு:
எட்டாவது படித்து வாத்தியாரனவன்.  6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு சென்று வருவான். வகுப்பாசிரியராய் இருக்கும் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடம் எடுப்பான்.  ஆங்கிலத்திற்கு "popular நோட்ஸ்" என்ற உரையைப் பார்த்து கேள்வி பதில், meanings, கட்டுரை போன்றவற்றை  போர்டில் எழுதிப் போட்டு விடுவான்.  இரண்டாம் தாளில் வரும் லெட்டெர் writing, grammar போன்றவற்றை கேள்வித்தாள் தயாரிக்கும் ஆசிரியரிடம் வாங்கி அதையும் எழுதிப் போட்டு விடுவான்.  வேறு வகுப்புகளுக்கு சென்று பிற subject பாடங்களை எடுக்கும் போதும் இதே பாணி தான். இதெல்லாம் போகட்டும்.., கணக்குப் பாடத்திற்கும் 'வெற்றி உரையை"ப்  பார்த்து தான் போர்டில் எழுதிப் போடுவான்..!!
சரியாக கால் எட்டாதாகையால் bar இல்லாத ladies சைக்கிளில் தான் பள்ளிக்கு வருவான். எப்போதும் வெள்ளை வேட்டி-சட்டை தான்.  ஆள் சீட்டில் உக்காந்திருக்கும் போது தொப்பை ஹான்டில் பாரில் இடிக்கும்.  தீவிரமான தி.மு.க. விசுவாசி.  எங்கள் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்த பொழுது திறப்பு விழாவிற்கு அன்றைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவைக் கூட்டி வந்தது இவன் தான். தான் வகுப்பசிரியானாய் இருக்கும் வகுப்பில் உள்ள அனைவரின் பெற்றோரையும் வரவழைத்து நைச்சியாமாய்ப் பேசி அவர் பிள்ளைகளை பிரைவேட் டியூஷனில் சேர்த்துக் கொள்வான்.  இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

80-களில் எங்கள் வகுப்பில் பெரும்பான்மையான மாணவர்கள் நடுத்தர மற்றும் வறுமையான நிலையில் தான் இருந்தார்கள்.  ஹாஸ்டலில் இருந்து படித்த மாணவர்கள் அனைவரும் ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், மேட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரும் நிலக் கிழார்களின் பிள்ளைகளாக இருப்பர்.  போர்டிங் எனப்படும் இலவச விடுதியில் இருந்து பயிலும் மாணவர்களின் நிலைய சொல்லத் தேவையில்லை. போர்டிங் மாணவர்களை சந்தானம் பிரைவேட் டியூஷனுக்கு அனுமதிக்க மாட்டான்.

எட்டாம் வகுப்பு வரை என் அப்பா எனக்கு வீட்டில் பாடங்களை சொல்லித் தந்த படியால் தமிழ் மீடியத்தில் படித்த என்னால் ஆங்கிலத்தையும் பார்த்து படிப்பதில் ஓரளவுக்கு மற்ற மாணவர்களை விட ஒரு படி அதிகம் என்று சொல்லலாம்.  ஆனால் இங்கிலீஷ் மீடியம் படிக்கும் மாணவர்கள் அளவுக்கு இருக்காது.  ஐந்தாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வில் முதல் ரேங்க் எடுத்த நான் ஒன்பதாம் வகுப்பு வரை அதை மெயின்டெயின் செய்தேன்.  அதன் பின் சுயமாக சிந்திக்க ஆரம்பித்ததாலும், கால்பந்தில் பைத்தியமானதாலும், லைப்ரரி செல்லும் பழக்கத்தாலும், எனக்குப் பிடித்த இடங்களுக்கு வீட்டில் அனுமதி பெறாமல் செல்ல ஆரம்பித்தாலும் படிப்பு எனக்கு நான்காம் பட்சமானது.

காலையில் முதல் வகுப்பே எங்களுக்கு சந்தானம் தான் வருவான்.  சனியனுக்கு பாடம் நடத்தவே தெரியாது. சம்பத்தப் பட்ட அனைத்தையும் போர்டில் எழுதிப் போட்டு விடுவான். பிறகு தான் ஆரம்பிக்கும் எனக்கு ஏழரை.  பெஞ்சு மேல் ஏறி நின்று என்னை உரக்கப் படிக்கச் சொல்வான்.  மற்றவர்கள், எழுதியதை நோட்டில் விரல் வைத்து தொடர வேண்டும்.  கேள்வி பதில் சமயத்தில் என்னோடு முட்டைக் கண் செந்திலும் மாட்டிக் கொள்வான்; ஆனால் அவனுக்கு கேள்வியைப் படிப்பதோடு முடிந்து விடும். களைப்பில் கொஞ்சம் குரலை இறக்கிப் படித்தேன் என்றால், "முண்டம்.. முண்டம்.. நல்லா வாயத் தொறந்து படி" என்பான்.

வகுப்பில் வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு பிரம்புகளையாவது மாணவர்களை அடித்து உடைத்து விடுவான்.  பல சமயங்களில் அவன் காரணமே இல்லாமல் காட்டுத் தனமாக அடிப்பான்.  உதாரணத்திற்கு சில,
விடுப்பு எடுத்திருந்து லீவ் லெட்டரில் பெற்றோர், ஹெட் மாஸ்டர் கையெழுத்து இருந்தாலும் அடிப்பான்.
காசில்லாம நோட்டு வாங்க முடியலன்னு சொன்னாலும் அடிப்பான்.
நோட்டு அவன் சொன்ன கடையில (பொன்னி சூப்பர் மார்க்கெட்) வாங்கலன்னா அடிப்பான்.
ரேங்க் கார்ட் வீட்டுல கையெழுத்து வாங்கி மறுநாளே கொடுக்கலன்னா அடிப்பான்.
Fine போட்டு, கட்ட காசில்லாத பசங்கள அடிப்பான்.
ரெண்டு பசங்களுக்குள்ள சண்டைன்னா, விசாரிக்காம ரெண்டு பேரையும் காட்டடி அடிப்பான்.
டியூஷன் பீஸ் குடுக்கலன்னா அடிப்பான்.
பாடத்துல டவுட் கேட்டா அடிப்பான்.
புரியலன்னு சொன்னாலும் அடிப்பான்.
இதுக்கே இப்படின்னா, இன்னும் வீட்டுப் பாடம் செய்யலன்னா, லேட்டா வந்தா, குறும்பு பண்ணா, நோட் புக் கொண்டு வரலன்னா, ஒழுங்காப் படிக்கலன்னா என்னா அடி அடிப்பான் பாத்துக்கோங்க..

இது போகட்டும், எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கொடுமைகளை விவரித்து அடங்காது. சந்தானம் தன் வீட்டின் அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கும் காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுப்பான்.  ஆங்கிலம் படிக்கத் தெரிந்த ஒரே காரணத்திற்காக என்னை காலை 6 மணிக்கு அவன் வீட்டிற்கு வரச் சொல்லி விடுவான். என் வீட்டிலிருந்து சரியாக 1km நடந்து செல்வேன்.  8 மணிவரை படிக்க வேண்டும். முடித்தவுடன் திரும்ப வீட்டிற்கு சென்று கிளம்பி பள்ளிக்கு 9:15க்கு முன் 3km நடந்து செல்வேன்.  பள்ளியில் முதல் வகுப்பே இவனுடையது தான் என்பதால் திரும்பவும் அதையே பெஞ்சு மேல் ஏறி நின்று படிப்பேன்.  மாலை 4:15மணியிலிருந்து 5:30மணிவரை பள்ளியில் டியூஷன் என்பதால் எனக்கு மீண்டும் அதே வேலை.  திரும்பவும் 6:30இலிருந்து இரவு 8:30 வரை அவன் வீட்டில் பழியாகக் கிடப்பேன்.  இரவு மட்டும் என் அப்பா என்னை சைக்கிளில் வந்து அழைத்துச் செல்வார்.

மாலை 6:00மணிக்கு அவன் மட்டும் சைக்கிளில் கிளம்பி வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடுவான்.  நான் நடந்தே என் வீட்டிற்கு சென்று முகம் கழுவி, உடை மாற்றி 6:30க்குள் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.  5 நிமிடம் லேட்டானாலும் அடிப்பான்.  அதுவும் வீட்டில் எடுக்கும் டியூஷனில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். எனக்கு அடிவாங்கும் போது கொலைவெறியாக இருக்கும்.  பல நாட்கள் இந்த தூரத்தை ஓடியே கடந்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் ஓட ஓட திக் திக் என்று இருக்கும்.  ஓரிரு நாளல்ல; மூன்று வருடங்கள் இதைத் தொடர்ந்து செய்தேன்.

வீட்டில் சந்தானம் கணக்கு பாடம் எடுப்பது வரலாற்றில் இதுவரை எந்த வாத்தியாரும் செய்யாதது.  ராஜலக்ஷ்மி என்ற பெண் சாரதா வித்யாலயாவில் படிப்பவள். கணக்கு புத்தகத்தில் உள்ள அனைத்து கணக்குகளையும் அவள் நோட்டில் சரியான விடையுடன் அழகாக போட்டு வைத்திருப்பாள்.  அவள் நோட்டைப் பார்த்து அனைவரும் காப்பி அடிக்க வேண்டும்.  நோட்டு தீரத் தீர மீண்டும் மீண்டும் காப்பி அடிக்க வேண்டும். ஆங்கிலமும் அதே போல் தான்;  தீரத் தீர எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.  இது பத்தாதென்று சனி ஞாயிறு விடுமுறையில் நீள பேப்பர் வாங்கி அதில் எழுதிக் கொண்டு செல்ல வேண்டும்.  இதுதான் அவன் வெற்றியின் ரகசியம்.

எழுதி முடித்த நோட்டுக்களையும், பேப்பர்களையும் வாங்கிக் கொண்டு திரும்ப தரவே மாட்டான்.  பசங்க சொல்வாங்க, அவன் எல்லாத்தையும் எடைக்குப் போட்டு போண்டா வாங்கித் தின்கிறான் என்று.   ஒரு நாள் அஸ்தம்பட்டி போலிஸ் குடையின் முக்கிலுள்ள சேலம் ரெஸ்டாரென்ட் என்ற ஹோட்டலில் வடை வாங்கி சாப்பிடும் போது என், உடன் படிக்கும் வகுப்பு மாணவன் ஒருவனின் பேப்பரில் வைத்துத் தந்தார்கள்.  பிறகு மேற்கொண்ட விசாரணையில் அவனுக்கு தினமும் காலை, மாலை செய்தித்தாளும், டீயும், வடை-போண்டாவும் ரெகுலராக அந்தக் கடையிலிருந்து இலவசமாகப் போய் விடுமாம். கடையும் சந்தானத்தின் வீடும் அருகருகே தான் இருக்கும்.

ஏழாம் வகுப்பில் என்னை லீடராகவும், அன்புச் செழியன் என்பவனை துணை லீடராகவும் நியமித்தான்.  ஒரு நாள் PT வகுப்பில் அனைவரும் மைதானத்திற்கு சென்றோம். எங்கள் PT வாத்தியார் அன்று வராத படியால் அனைவரும் சென்று விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பக்கத்து வகுப்பில் இருந்து ரெண்டு பசங்கள் வந்து "அய்யா உன்னையும் அன்புச் செழியனையும் வரச் சொன்னார்" என்று சொன்னான்.  சென்றோம். அந்த வகுப்பில் வழக்கம் போல் சந்தானம் கணக்கு நோட்சை போர்டில் காப்பி அடித்து எழுதிக் கொண்டிருந்தான்.  நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்மண் தெரியாமல் ஒரு பச்சை பிரம்பால் வெளுக்க ஆரம்பித்தான்.  கதறக் கதற அடி வாங்கி முடித்த பின்னர் தான் தெரியும் PT வாத்தியார் வரலன்னா விளையாடாம வகுப்பில உக்காந்து படிக்கணுமாம்.  இது அவன் வகுப்பிற்கு மட்டும் அவன் போட்ட ரூல்.  அன்றே என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்.

எட்டாம் வகுப்பில் ஒருநாள், என்  நாக்கின் அடியில் ஏதோ அலர்ஜி காரணமாக சில கொப்புளங்கள் வந்து விட்டிருந்தன.  பேச முடியாமல், உணவை மென்று முழுங்க முடியாமல் சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன்.  என்னை பெஞ்சு மேல் ஏறி ஏதோ ஒரு இழவைப் படிக்கச் சொன்னான்.  பயத்தில் வலியைப் பொறுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  சத்தமாகப் படிக்க இயலவில்லை.  என்னை "சத்தமாகப் படி" என்றான். என்னால் முடியவில்லை.  "வாயில என்ன சாணியா இருக்கு, சத்தமா படிறா முண்டம்" என்றான்.  என் நாக்கில் இருந்து ரத்தம் கசிவதை சுவையால் உணர்ந்தேன்.  "வாயில் புண் உள்ளது, என்னால் படிக்க முடியாது" என அவனிடம் செய்கையால் சொல்லிக் காட்டி நடப்பது நடக்கட்டும் என அமர்ந்து விட்டேன்.  என்னை அடிக்க ஆவேசத்துடன் ஓடி வந்தான்.  டேபிள் மேல் தலையை கையால் முட்டுக் கொடுத்து குனிந்து கொண்டேன்.  என் முதுகில் எத்தனை அடி விழுந்திருக்கும் என்று சொல்லவே முடியாது.  மனசுக்குள் "உன் சாவு என் கையில தான்டா" எனக் கருவினேன்.  நடுவில் நண்பன் பூபதி "அய்யா அவனுக்கு வாயில புண் இருக்கு, பேச முடியாது" என்று சொல்லி முடிக்கும் முன் அவனுக்கு நான்கைந்து அடி விழுந்தது.  அடித்து ஓய்ந்து போன அவன் "வாயைத் திறந்து காமிடா" என்றான்.  காட்டினேன்.  "இத மொதல்லயே சொல்ல வேண்டியது தானே, அறிவு கெட்ட முண்டம்" என்றான்.

அன்று பள்ளி அரைநேரம் மட்டுமே இருந்தது.  எதிர்பாராத விதமாக என் அப்பா அன்று வந்து விட்டிருந்தார்.  அவரிடம் சந்தானம் ஏதோ பேசினான்.  அப்பா என்னை கூப்பிட்டார்.  நான் நண்பர்களுடன் விளையாடி விட்டு நடந்து வருகிறேன் என்று கூறினேன்.  இல்லை வந்துதான் ஆக வேண்டும் என சைக்கிளில் ஏற்றிக் கொண்டார்.  போகும் வழியில் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்.  நான் இருந்த நிலைமைக்கு  அது வெறும் உளறல்களாகவே தோன்றியது. என்னால் பதில் பேச முடியாத நிலைமை.  ம்... என்று சொன்னால் கூட வாய் வலித்தது.  ஒரே கேள்வியை இரண்டு மூன்று முறை கேட்டார்.  நான் பதில் சொல்லவில்லை.  "இவ்வளோ தூரம் கேட்கிறேன், என்ன அழுத்தம் இருந்தா பேசாமலே வருவ?!" என்றார்.  ஓடும் சைக்கிளில் இருந்து எகிறி குதித்தேன்.  சைகையாலேயே "வாயை மூடிட்டு போ, இல்ல நடக்கிறதே வேற" என்று எச்சரித்து விட்டு ஆர்ட்ஸ் காலேஜ் கிரவுண்டுக்கு ஓடி விட்டேன்.  அது தான் எங்களுக்கு ஆஸ்தான கால்பந்து திடல்.

எங்கள் வகுப்பில் இளங்கோ என்று ஒரு நண்பன் இருப்பான்.  அண்ணன் தம்பிகள் மூன்று பேர். இவன் நடு ஆள்.  இவர்களின் அப்பா, தட்டில் பால்கோவாவை ஏந்தி பேருந்துகளில் ஏறி இறங்கி விற்றுக் கொண்டிருந்தவர்.  இவர்களுக்கு மட்டும் டியூஷன் பீஸ் கிடையாது. ஏனென்றால் சந்தானத்தின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வது இம்மூன்று பேரும் தான்.  தினமும் சந்தானத்திற்கு இளங்கோ தான் மதிய உணவு போய் எடுத்து வருவான். அதாவது மதிய உணவிற்கு மணி அடித்ததும் இளங்கோ சைக்கிளில் சந்தானத்தின் வீட்டிற்க்குச் சென்று உணவை வாங்கிக் கொண்டு வந்து இவனிடம் கொடுத்து சாப்பிடும் வரை இருந்து பாத்திரம் கழுவி வைத்து விட்டு தான் சாப்பிடச் செல்வான்.  சில நாட்கள் எங்களிடம் ரகசியமாக, "டேய் இன்று அக்கா ரெண்டு முட்டை வெச்சாங்க, நான் ஒன்ன எடுத்து வழியிலியே சாப்பிட்டேன்" என்பான்.  எங்களுக்கு அல்ப சந்தோஷமாக இருக்கும். இன்று இளங்கோ கடைகளுக்கு தண்டல் விடும் ஒரு பைனான்சியர்.

ஒரு வழியாக ஒன்பதாம் வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.  சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ஒரு நிகழ்வு. மஞ்சள் காமாலையால் பாதிக்கப் பட்ட ஆறாம் வகுப்பு மாணவன், ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளிக்கு வந்திருக்கிறான்.  வழக்கம் போல் சந்தானம் அவனை கேள்வி ஏதும் கேட்காமல் வெளுத்து வாங்கியிருக்கிறான்.  நோய் முற்றிலும் குணமாகாத அம்மாணவன் மயங்கி விழுந்திருக்கிறான்.  மயங்கி விழுந்தவனை ஆட்டோவில் ஏற்றி வீட்டில் விட்டிருக்கிறார்கள். அன்று இரவு அச் சிறுவன் உயிரை விட்டான்.  அவனின் அப்பா அம்மா கூலித் தொழிலாளிகள். இன்று போல் அன்று மீடியாக்கள் கிடையாது.  கொலைகாரன் தப்பித்து விட்டான்.  நான் +1 படிக்கையில் அந்த மிருகம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றது. அவனுக்கு அன்று பள்ளியில் பெரும் பிரிவுபச்சார விழா எடுத்தார்கள்.  பார்க்கப் பிடிக்காமல் கட் அடித்து விட்டு சினிமாவிற்கு சென்று விட்டேன்.

சந்தானம் ஒரு பின் குறிப்பு:
சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சேலத்து நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம், வாத்தியார்கள் எல்லாம் சேர்ந்து குற்றாலமோ, கொடைக்கானலோ சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.  சென்ற இடத்தில் பாறையில் மோதி சந்தானத்திற்கு காலில் அடி பட்டிருக்கிறது.  அது குணமாகாமல் முற்றிப் போய் முட்டி வரை ஒரு காலை எடுத்து விட்டார்களாம்.  இருந்த ஒரே மகனும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டானாம்.  கம்பீரமாக வரும் வழியெல்லாம் "வணக்கம்" வாங்கி வந்தவன், பின்னாளில்  நடக்கக் கூட முடியாமல் வீட்டிற்குள்ளே சாகும் வரை முடங்கிக் கிடந்திருக்கிறான்.

என் குறிப்பு:
இதே செயின்ட் பால் பள்ளியில் தான் ஜான் அருள் சார், அருள் பெனடிக்ட் சார், கேன்யுட் ரோட்ரிக்யூட் சார், சுவாட்ஸ் சார், ஜார்ஜ் சார், பாதர் கப்ரியல் என என்னைக் கவர்ந்த ஒரு பெரிய நட்சத்திர நல்லாசிரியப் பட்டாளமே உள்ளது.  அனைவரும் என்னை மன்னிப்பார்களாக...!!

அன்புடன்
மலர்வண்ணன் 

* あい - ஜப்பானிய எழுத்தில் அ, இ
** せんせい -  சென்சேய் என்றால் ஜப்பானிய மொழியில் ஆசிரியர்

22 comments :

  1. சில ஆசிரியர்கள் இப்படித்தான்...!

    நன்றாக எழுதுகின்றீர்கள் தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. நிச்சயம் தொடர்ந்து எழுதுவோம்

      Delete
  2. マラルさん、わたしのこともかいてくれてありがとうございます。おもしろいです。もっとがんばってください。

    ReplyDelete
  3. //பாறையில் மோதி சந்தானத்திற்கு காலில் அடி பட்டிருக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளபடியால் அது குணமாகாமல் முற்றிப் போய் முட்டி வரை ஒரு காலை எடுத்து விட்டார்களாம். இருந்த ஒரே மகனும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டானாம். கம்பீரமாக வரும் வழியெல்லாம் "வணக்கம்" வாங்கி வந்தவன், பின்னாளில் நடக்கக் கூட முடியாமல் வீட்டிற்குள்ளே சாகும் வரை முடங்கிக் கிடந்திருக்கிறான// அப்பா! இன்னமும் வெறுப்பு மறைய வில்லை என்பதை தெரிவிக்கும் வார்த்தைகள்.

    சாதரணமான ஆசிரியர் என்றாலும் பிற்காலத்தில் அவரை புகழ்ந்துதான் சொல்வார்கள் இந்த அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி ஒரு ஆசிரியர் எந்த அளவு மாணவர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் என்பது அறிந்து வேதனையாக உள்ளது. இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க T.N.MURALIDHARAN

      //இன்னமும் வெறுப்பு மறைய வில்லை என்பதை தெரிவிக்கும் வார்த்தைகள்.//

      இது ஒரு உளவியல் ரீதியான காரணமாகத்தான் இருக்க வேண்டும். "கடைசி வரைக்கும் என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே" என்ற வெறுப்பின், ஆதங்கத்தின் உச்சகட்டமோ..!!

      Delete
  4. எனக்கும் இது போன்ற அரக்கர்கள் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். ஒரு கணக்கு வாத்தியார் அன்று வரும்போது அவர் மூட் நன்றாக இல்லை என்றால் (மனைவியிடம் பாட்டு?) அவ்வளவுதான். வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் முதுகு வீங்கும் அளவு அடி. யாராவது கருப்பு கலர் இங்கில் எழுதினால் காண்டாகிவிடுவார். என்ன எழவு காரணமோ! பேனாவை உடைத்துப்போட்டுவிடுவார்!

    ReplyDelete
    Replies
    1. //கருப்பு கலர் இங்கில் எழுதினால் காண்டாகிவிடுவார். என்ன எழவு காரணமோ!//
      இது மாதிரியும் சில சைக்கோ கேசுகள் இருக்கு...
      "கண்ணாடி போட்ட பசங்கள accused-ன்னு சொல்றது"
      "football ஆடுற பசங்கள பொறுக்கின்னு சொல்றது"
      "கருப்பா இருக்கிற பசங்கள சந்தேகப் படுறது"
      - இன்னும் சொல்லிட்டே போகலாம்

      Delete
  5. மூங்கில் காற்று திருவாளர் டி.என்.முரளிதரன் ஐயா அவர்களின் வலைத் தளத்தில், தங்களின் பதிவைக் குறிப்பிட்டுள்ளார். அதன் வாயிலாகமே தங்களின தளத்திற்கு முதல் வருகை. வாழ்வியல் அனுபவங்கள் அனைத்துமே இனிமையாக அமைந்து விட்டால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போய்விடும்.தங்கள் குறிப்பிடுவது போல் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் அமையலாம். என்ன செய்வது?
    ஓர் அன்பு வேண்டுகோள், ஆசிரியரையோ, அல்லது வயதில் மூத்தவரையோ குறிப்பிடும்போது, அவன், இவன் என்ற வார்த்தைகளைத் தவிர்க்க முயலுங்களேன். அன்பான வேண்டுகோள் என்பதை மறக்க வேண்டாம்.
    தங்களின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தென்படுகின்றது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு.கரந்தை ஜெயக்குமார்...
      வாழ்த்தியமைக்கு நன்றி...
      உங்களின் அன்பு வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது...

      Delete
  6. நல்ல எழுத்து நடை...அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.மணிமாறன்

      Delete
  7. முரளிதரன் பதிவு வாயிலாக இங்கே வந்தேன்.....

    எத்தனை காட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர்..... படிக்கவே கொடுமையாக இருக்கு அவரின் செயல்கள்.........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.வெங்கட் நாகராஜ்...

      Delete
  8. தங்களுக்கு ஏற்பட்ட கடினமான வெறுக்கத்தக்க அனுபவம் தங்களது பதிவில் தெரிகிறது்.எமுத்து நடை தங்களுக்கு வெகுவாக கை கொடுக்கிறது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி திரு.கொச்சின் தேவதாஸ்

      Delete
  9. எப்படி இதை தவற விட்டேன்? இப்பொழுது தான் பார்க்கிறேன். ஒட்டு மொத்தமா குமுரியிர்க்கிறீர்கள்!
    எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் தங்கங்கள். ஐந்தாவது வரை நான் எமன்க படித்தேன். சும்மா பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். மற்ற ஆசிரியர்கள்: Composite maths, General science and English - Best

    உங்கள் பள்ளி அனுபவம் இவ்வளவு மோசமாக மண் உளைச்சலை தரும்படி இருக்கக் கூடாது. மறப்போம் மன்னிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி சார்...

      பொதுவாக நான் கண்ட ஆசிரியர்கள் கோபத்தின் உச்சியில் திட்டுவது
      "படிக்க வர்றியா சிரைக்க வர்றியா?" (சிரைப்பது அவ்வளவு சுலபமா என்ன?)
      "சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடுறியா?"
      "பன்னி மேய்க்க கூட லாயிக்கு இல்ல.." போன்றவை....

      நம்ம சந்தானம் திட்டும் போது வரும் வார்த்தைகள்
      "உன் மூஞ்சில பொட்ட நாய் குசுவ"
      "உன் மூஞ்சில செனப் பன்னி குசுவ"
      "சட்டி பிய்யை தின்னவனே"
      "மூத்திரத்த வாங்கி குடி"
      "உங்கப்பன் எந்த நேரத்துல கோமனத்த அவுத்தானோ"
      போன்ற சரித்திரப் புகழ் பெற்ற சொலவடைகள்....

      by the way, முதன் முதலாய் என் தளத்திற்கு வந்தமைக்கு நன்றி...

      Delete
  10. வணக்கம் நண்பரே!
    இத்தனை ஆண்டுகள் கழிந்தும், இந்த அளவுக்குக் கோபப்பட்டுக் குமுறுகிறீர்கள் என்றால்... புரிந்து கொள்ள முடிகிறது...
    நான் 33ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறேன், இன்று வரை என் பணியை நான் விரும்பியே செய்கிறேன்.(த.ஆ.ஆகவிரும்பவில்லை)
    கடைசி கமெண்டில் -நம்பள்கி சாருக்கு நீங்கள் எழுதியிருக்கும் பதிலில் உள்ள ஒரு தொடரைக்கூட என் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னதில்லை... தங்களுக்கு நேரமிருந்தால், எனது வலையில் எனக்கு என்மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது எனும் கட்டுரை,
    http://valarumkavithai.blogspot.in/2012/09/blog-post.html மற்றும் சென்னை ஆசிரியர் உமாவைக் கொலைசெய்தது யார்? எனும் கட்டுரை,
    http://valarumkavithai.blogspot.in/2012/03/blog-post_10.html மற்றும் தினமணியில் வெளிவந்த நல்லாசிரியர் விருது பற்றிய என் கட்டுரை முதலானவற்றைப் படிக்க வேண்டுகிறேன்.
    நான் மாணவனாக இருந்தபோது, பாடம் நடத்திய ஆசிரியர்களில் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்த ஆசிரியர்களும் உண்டுதான்! அவர்களை மறக்காமல் மற்ற ஆசிரியர்களுக்கு அவர்களையே பாடமாக்க வேண்டும். நீங்கள் ஆக்கியிருக்கிறீர்கள். உங்கள் கோபம் நல்ல ஆசிரியர்கள் படிக்கவேண்டிய பாடம்தான்.நன்றி. உண்மை சுடட்டும், சுட்டு எரித்து நல்ல மாணவர்களைக் காப்பாற்றட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நா.முத்துநிலவன் ஐயா!!
      தலைமை ஆசிரியராக தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதே தாங்கள் மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் விளங்குகிறது. தங்கள் இரண்டு கட்டுரைகளையும் படித்தேன்.
      உமது பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்..!!



      Delete
  11. எல்லோருக்கும் ஒரு சில பிடிக்காத ஆசிரியர்கள் இருப்பர்கள். ஆனால் வளர்ந்து ஒரு பக்குவப்பட்ட நிலையை அடைந்த பின்னும் இந்த அளவுக்கு வெறுப்பும், வன்மமும் இருக்கிறாதென்றால் எந்த அளவுக்கு அவரின் நடத்தை இருந்திருக்கும் என்று தெரிகிறது.சனியன் தொலையட்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.. காமெடியன் பெயரில் ஒரு வில்லன்.

    ReplyDelete
    Replies
    1. //சனியன் தொலையட்டும்//
      அப்படித்தான் விட்டாயிற்று..!!

      Delete