Thursday 26 September 2013

"மூடர் கூடம்" நவீனுக்கு சில கேள்விகள்

அட்டகத்தி, ஆரண்ய காண்டம், பாலை, சூது கவ்வும், ந.கொ.ப.கா., மதுபானக்கடை, பிட்சா என அவ்வப்போது வரும் ஆச்சரியங்களில் சமீபத்தில் வந்த மூடர் கூடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன் நேற்று "Attack the Gas Station" (கொரியன்-1999) பார்க்கும் வரை.  தமிழில் வந்திருக்கும் ஒரு முழுநீள Black comedy, Dark Humor என்று பெரும்பாலான விமர்சகர்களால்  சிலாகிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் மூடர் கூடம் இயக்குனர் நவீனுக்கு சில கேள்விகள்:
பிற மொழிப் படங்களின் theme-களை  தழுவி எடுப்பதோ, one liner-களை மட்டும் எடுத்துக் கொண்டு திரைக்கதையில் வித்தியாசங்களைப் புகுத்தி விளையாடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் போது முக்கால்வாசி காட்சிகளை ஏன் அப்படியே Attack the Gas Station-ல் இருப்பது போலவே வைத்தீர்கள்? 

ஸ்மார்ட்டான டீம் லீடர், முட்டாள்னு சொன்னால் கோபம் கொள்பவன், டீம் லீடர் மேல் இம்ப்ரெஸ் ஆகும் சின்னப் பெண், கிண்டல் செய்யப் படும் குண்டு பையன், அழகான பெண் மேல் ஆசைப் படும் திருடர்களில் ஒருவன் என கதாபாத்திரங்களையும் அதே போல் ஏன் அமைத்தீர்கள்?

ஒவ்வொரு திருடனுக்கும் காட்டப் படும் சின்ன சின்ன flashback சமாச்சாரங்களையும் அப்படியேவா காட்ட வேண்டும்? அதுவும் பள்ளியில் தண்டனை வாங்குவது, பெற்றோரிடம் அடி வாங்குவது எல்லாவற்றையும் காப்பி-பேஸ்ட் பண்ணியது ஓவராகத் தெரியலையா?
தலைகீழாக இருக்கச் சொல்லி தண்டனை தருவது (அதற்கான flashback), ஒரு தடியை கையில் வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டுவது, ஒரு கட்டத்தில் பினையாளிகளில் ஒருவனிடமே தடியைக் கொடுத்து காவல் காக்க வைப்பது, அழகுப் பெண்ணின் காதலனின் சட்டையைக் கிழித்துவிட்டு பின் தன் சட்டையைத் தருவது, etc என காட்சிகளைக் கூட ஏன் உருவினீர்கள்?  அந்தளவுக்குக் கற்பனை வறட்சியா?

இந்த விஷயம் உங்கள் குரு மற்றும் தயாரிப்பாளர் பாண்டிராஜுக்கு முன்பே தெரியமா?

அனைவரையும் அழகாக நடிக்க வைத்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்த உங்களுக்கு, பாண்டிராஜிடம் பணியாற்றிய உங்களுக்கு சொந்தமாக ஒரு சப்ஜெக்ட் கூடவா கிடைக்கவில்லை?

ஜாம்பாவான்களான மணிரத்னம் தனது 6-வது படமான நாயகனிலும், கமல் தனது 100-வது படமான ராஜ பார்வையிலும் (ராஜ்கமல் பிலிம்ஸ்), கவுதம் மேனன் தனது 6-வது படமான ப.கி.மு.ச.த்திலும் தான் தங்களுடைய உருவல்களை ஆரம்பித்தனர்.  திறமையுள்ள நீங்கள் ஏன் முதல் படத்திலேயே நவீன்?

"மூடர் கூடம்"ன்ற பெயர் படத்துக்கு வெச்சீங்களா, எங்களப் பாத்து வெச்சீங்களா?

ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். Attack the Gas Station-ஐ விட மூடர் கூடம் அற்புதமாக இருந்தது.  பல இடங்களில் வசனங்களும் காட்சியமைப்பும் கூர்மையாக இருந்தன.  பொம்மைக்கான flashback-ல் "நீயும் பொம்மை, நானும் பொம்மை" பாடலைப் புகுத்தியது ஓர் உதாரணம்.  உங்களிடம் வியக்கும் திறமைகள் இருக்கின்றன.  Better Luck Next Time நவீன்...
 

- அன்புடன்
- மலர்வண்ணன்


பி.கு.: ஆரண்ய காண்டம் படத்தை "Perro come perro " என்ற ஸ்பானிஷ் படத்தின் தழுவல் என்று சிலர் சொல்லியிருந்தனர்.  அப்படத்தைப் பார்த்தேன்.  பல படங்களில் வந்த one liner மட்டுமே அது.  போதைப் பொருள் கடத்தலில் வந்த பணத்திற்காக மூன்று கும்பல்கள் அடித்துக் கொள்வதுதான்.  மற்றபடி கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், வசனம் அனைத்தும் வேறு.  தமிழுக்குப் புதிதாக இருக்கலாம்; பிரேசிலியன். மெக்சிகன் படங்களில் இது சகஜம்.

Tuesday 24 September 2013

சென்னையில் பிரியாணி - புரட்டாசி ஸ்பெஷல்

அபின், ஆல்கஹால், கிரிக்கெட், ஜிஹாத், இன்டர்நெட்  போல எனக்கு பிரியாணி.

சேலத்தில் இருந்த போது கிச்சிபாளையம் ஸ்டார் பிரியாணியும் சுக்காவும் தான் எங்கள் நண்பர் வட்டத்தின் சாய்ஸ்.  ஞாயிறு மதியம் பார்சல் கட்டிக் கொண்டு தீர்த்தத்துடன் ஏற்காடு மலையேறி விடுவோம்.  முஸ்லிம் நண்பர்களின் தயவால் மாதம் ஓரிரு முறை கல்யாண பிரியாணியையும் அட்டாக் செய்து விடுவேன்.  பொண்ணு-மாப்பிள்ளை யார்ன்னு தெரியாது, கல்யாண வீட்டுலயும் யாரையும் தெரியாது, இருந்தாலும் முதல் பந்தில உக்கார்ந்து பிரியாணியுடன் தால்ச்சாவையும் சேர்த்து அடித்து விழாவை சிறப்பித்து விட்டு வருவேன்.  அழைத்துச் செல்லும் நண்பன் தான் அமராமல் நமக்கு ரெண்டாவது ரவுண்டிற்கும் பீஸ்கள் விழுமாறு ஏற்பாடு செய்து கொண்டிருப்பான்.  இன்னி வரைக்கும் சிறுத்த சிக்கினது கிடையாது.

சென்னை வந்த பிறகு பல இடங்களில் அடித்து ஆடி செய்த பிரியாணி ரிசர்ச் தான் இந்தப் பதிவு.

அஞ்சப்பர், பொன்னுசாமி, காரைக்குடி வகையறா ஹோட்டல்களுக்குப் போவதிற்குப் பதிலாக பட்டினி கிடக்கலாம்.  விலையிலும் சுவையிலும் சாவு பயத்தைக் காட்டிடுவாங்க.
தலப்பாக் கட்டி, திண்டுக்கல் வேலு ரெண்டுலயும் ஒரே ஃபார்முலா; ஆனா பிரியாணி சாப்பிட்ட திருப்தி இருக்காது.
பெரியமேடு பிரியாணி "வில் மிக்சிங்"ன்னு ஊர்ல பாதி பேருக்குத் தெரியும்.
அல்-ரீஃப், ஆசிப் பிரதர்ஸ் பிரியாணியில் தாபா டச் இருக்கும், ஆனால் முகல் ஃபினிஷிங் இருக்காது.
கிரீம்ஸ் ரோடு ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுறதுக்கு பதிலா  பத்தியச் சாப்பாடு சாப்பிடலாம்.  அளவு சுத்தமா பத்தாது.      
ஹயாத், ரெயின்ட்ரீ, கோரமண்டல், மெரிடியன், அக்கார்ட், ராடிசன்  எதுலயும் ஒண்ணு பிரியாணியோ, இல்ல கிரேவியோ, சமயத்துல ரெண்டுமா விளங்காது.  குறிப்பா நல்லிய கடவாய்ல வெச்சு கடிச்சு உறிஞ்ச முடியாது.  கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம பிரியாணிக்கு ஸ்பூன் வெச்சு தருவானுங்க..!! (Ustad Hotel படத்தில் சில 5 ஸ்டார் ஹோட்டல்களின் பிரியாணி ரகசியத்தை உடைத்திருப்பார்கள்)

 
ஜார்ஜ் டவுன் மூர் தெருவிலுள்ள கல்யாண பிரியாணிக்கு பலமுறை சென்று க்யூவில் நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.  சுவையாகவும் நல்ல வலுவான விருந்தாகவும் இருக்கும்.  பிறகு அவர்களே எழும்பூர், பீட்டர்ஸ் ரோடு என கிளைகளைத் திறந்து கல்லா கட்டினார்கள்.  கல்யாண பிரியாணிதான் சிறந்ததென்று நினைத்திருந்தேன் பல்லாவரம் மொஹிதீன் பிரியாணியை சுவைக்கும் வரை.

பல்லாவரம் கன்டோன்மேன்ட்டுக்குப் பின்னால் உள்ளது மொஹிதீன் பிரியாணிக் கடை.  நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும்.  மதியம் சென்றால் பிரியாணி அடித்துக் கொடுக்கவும், பார்சல் கட்டவும் மட்டும் ஆறேழு பேர் இருப்பார்கள்.  அவ்வளவு கூட்டமாக இருக்கும்.  சரியாக 12:30லிருந்து 01:30க்குள் நான்கைந்து ஜீப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரான நேர இடைவெளியில் வரும்.  தயாராக இருக்கும் பார்சல்களை ஜீப்கள் அள்ளியபடி சென்றுவிடும்.  ஒரு ஹோட்டலின் சுவையை காவல் துறையையன்றி வேறாரறிவார்?

மொஹிதீனுக்கு சவால் விடும் வகையில் அடையாறு சாஸ்த்ரி நகரில் ஒரு பிரியாணி ஜாயிண்ட் உள்ளது.  ஞாயிறு மாட்டும், அதுவும் பார்சல் மட்டும், அதுவும் சனிக் கிழமையே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.  வீட்டிலேயே ஆட்டை அறுத்து சமைத்துத் தருகிறார்கள்.  1 பக்கெட் மட்டன் பிரியாணி ரூ.1100.  7 அல்லது 8 பேர் திருப்தியாக சாப்பிடலாம்.  12 டிக்கா அளவிலான துண்டுகள் அடங்கிய சிக்கன் வறுவல் ரூ.250.  வீட்டிக்கு விருந்தினர் வந்தால் எங்கள் சாய்ஸ் இந்த ஹோம் மேட் பிரியாணிதான்.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கறி வாங்க வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் கொண்டு சென்றைதைப் போன்று இதற்கும் வீட்டிலிருந்தே பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும்.  சில விஷயம் தெரியா விருந்தாளிகள் பிரியாணி சூப்பரா சமைக்கிறீர்கள் என்று வீட்டு அம்மணியைப் பாராட்டிச் செல்வார்கள்.

சென்னையில் இந்தப் பெயரில்லா சாஸ்த்ரி நகர் பிரியாணிக்குப் போட்டியாகவோ, இதை விடச் சிறந்ததாகவோ இன்னும் பிடிபடவில்லை.  தேடிக் கொண்டே இருக்கிறேன்.  என் பிரியாணிப் பயணம் தொடரும்....!!

- அன்புடன்
- மலர்வண்ணன் 

Tuesday 10 September 2013

நிறைநீர நீரவர் கேண்மை

ஈமெயிலும் செல்போனும் வந்த பிறகு தமிழின் எழுத்துப் பயன்பாடு காவல் நிலையத்தில் புகார் எழுத, அரசு அலுவலகத்தில் மனு கொடுக்க, வீடு-நிலம் கிரயம் செய்ய மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டு வந்தது wordpress, blog போன்றவை வரும் வரை.

எழுத்தாளர்களின் மற்றும் எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்களின் எழுத்தை மட்டும் தான் பிறர் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் எழுதலாம், பகிர்ந்து கொள்ளலாம், விமர்சனம் செய்யலாம் என்ற நிலையை wordpress-ம்  blog-ம் உருவாக்கிக் கொடுத்துள்ளன.  இன்ட்லி, தமிழ்மணம், கீற்று உள்ளிட்ட வலைதளங்கள் பகிர்தலை செவ்வனே செய்து வருகின்றன.  தவிர facebook, twitter போன்ற சமூக வலைதளங்களில் தமிழ் உள்ளே நுழைய ஆர்வமுடன் பலரும் தங்கள் நிலைப்பாட்டையும், சிந்தனைகளையும்(!), கருத்துக்களையும், பகடிகளையும், விருப்பு வெறுப்புக்களையும், கோஷ்டிச் சண்டைகளையும் தாய்மொழியில் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது உலகெங்கும் தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ப்ளாக்கர்ஸ் தங்கள் படைப்புகளை, கருத்துக்களை எழுதி வருகின்றனர்.  முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் பெரிய இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.  என்னைப் போல் "ஏனோ தானோ" என எழுதுபவர்கள், கும்மியடிப்பவர்கள், திரைவிமர்சனம் எழுதுபவர்கள், விளையாட்டு விமர்சகர்கள், வம்புச்சண்டைவாதிகள்  நீங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மிக சீரியஸாக வரலாறு, பொருளாதாரம், அரசியல், உலக சினிமா, நூல் விமர்சனம், தொடர்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கணம், இலக்கியம் என பட்டையைக் கிளப்புகின்றனர்.

"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற நிலை மாறி "தமிழ் இனி மிக மிக மெல்லச் சாகலாம்" என்ற நிலைக்கு தமிழ் உயரக் காரணமானவர்களில் இந்த ப்ளாகர்ஸ் முக்கிய இடம் வகிக்கின்றனர்.  இவர்களை ஒன்றிணைத்து அழகு பார்த்தால் என்ன என்ற எண்ணம் உருவாக சில மூத்த (ப்ளாக் எழுதுவதில் மட்டும்) பதிவர்கள் இணைந்து 2012-ல் முதலாம் உலகத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக நடத்தியும் காட்டினர்.  தொடர்ந்து இந்த வருடமும் மேலும் சிறப்பாக, பிரபல சமூக  எழுத்தாளர்கள் பங்கு பெற்று வாழ்த்த சென்னையில் நடத்திக் காட்டினர்.

ப்ளாகர்ஸ் பலரும் இளைஞர்கள் என்பது எதிர்பாரா மகிழ்ச்சி.  கணிசமான அளவில் பெண்களும்,  7 வயது முதல் 70 வயது உள்ள பல பிளாக்கர்களும் விழாவிற்கு வந்திருந்து வியப்பில் ஆழ்த்தினர்.   எழுத்தாளர்கள் பாமரன், வா.மு.கோமு, புலவர் ராமானுசம் போன்றோரை நேரில் சந்தித்து பேசியது பெருமையாக இருந்தது.  முகம் தெரியாத பலரும் தமிழால் இணைந்து, நாள் முழுதும் நேரம் போவது தெரியாமல், வயது வித்தியாசம் இல்லாமல், பல(ர்) கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட அற்புதமான மன நிம்மதியை கொடுத்த நாள் அது.


விழாக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..!


- அன்புடன்
- மலர்வண்ணன்