Wednesday 1 January 2014

ராவான ராவுகள்

முனைவர் கு.ஞானசம்பந்தம், மதுரை முத்து போன்றோர் அடிக்கடி தமது மேடைப் பேச்சுக்களில் சொல்வது, "நகைச்சுவை என்பதை நாம் எங்கேயும் தேடிப் போகவோ, ரொம்ப யோசிக்கவோ தேவையில்லை, நம்மைச் சுற்றியே அது இருக்கிறது" என்று சொல்வார்கள்.  மயிலாடுதுறையைச் சேர்ந்த நண்பன் Er.முருகன் ஒருமுறை சேத்தியாதோப்பு வரை சென்ற பஸ்ஸில் நடந்த சுவாரசியமான நிகழ்வை எங்களுடன் பகிர்ந்தார், அதை என் பார்வையில் நான் பகிர்கிறேன்.

நாமக்கல்-சேலம், திண்டுக்கல்-மதுரை அடிக்கடி போவது போல் எங்களுக்கு மயிலாடுதுறை-சேத்தியாதோப்பு.  ஒரு முறை சே.தோ.விலிருந்து ம.து. வர இரவில் ஒரு 9மணி வாக்கில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.  கண்டக்டர் டிக்கட் போட ஆரம்பித்த முதல் ஆளே, அரசுக் கடையிலிருந்து நேரே வந்து பஸ்ஸில் உட்கார்ந்த ஆள், லேசான தள்ளாட்டத்தில் இருந்தார்.  கண்டக்டர் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு காசைக் கேட்க... குடிமகனோ, "நீ தான் எனக்கு மீதி காசு குடுக்கணும்"ன்னு ஆட்டத்தை ஆரம்பித்தார்.
"யோவ்... உன்கிட்டதான்யா மொத டிக்கட் போடுறேன், எப்படி மீதி கொடுப்பாங்க, கலாட்டா பண்ணாம காசு குடுக்கிற வழியப் பாரு..."
"அதெப்படி, நாங்கதான் கொடுத்தோம்ல, குடுத்துட்டு இல்லன்னு சொல்லுவாங்களா, நீ நல்லா பாரு இருக்கும்..."
"இப்ப காசு குடுக்கப் போறியா, எறக்கி விடவா..?

வாக்குவாதம் இப்படியே வளர்ந்து கொண்டிருக்கையில பஸ்ஸில் ஒருவர் ஏறினார்.  சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் சில வினாடிகள் மாறி மாறி பார்த்தவர் தன் பையிலிருந்து பணம் எடுத்து, ஒரு டான் போல நடந்து சென்று கண்டக்டரிடம் கொடுத்து, "சண்ட போடாதீங்கப்பா, இந்த காசை வெச்சுக்கோ... அமைதியா வாங்க..." என்றாரே பார்க்கலாம்.  மொத்த பஸ்சும் அவரை நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்குப் பார்த்தது.  சம்பந்தம் இல்லாத இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கூடத் தாங்க முடியாமல் தன் சொந்தக் காசைக் கொடுத்து பிரச்சனையைத் தீர்க்கும் புண்ணியவான்கள் இன்னும் இருக்கிறார்களா என அனைவரும் அடுத்த நொடி முதல் அவரையே கவனிக்க ஆரம்பித்தோம்.

விடுவாரா குடிமகன், "நீ யார்றா எனக்குப் பணம் தர..."என டானிடம் எகிற, நம்ம டானின் கை குடிமகனின் முகத்தில் பொளேர் என வெடித்தது.  குடிமகன் சகல துவாரங்களையும் மூடிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.  படைத்தல், காத்தல், அழித்தல் என முப்பெரும் தெய்வங்களாக டான் இப்போது அனைவரின் கண்ணுக்கும் தெரிய ஆரம்பித்தார்.

கண்டக்டர் டானிடம் சில்லறை பிறகு தருவதாக சொல்ல, டான் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, "ஆங்... ஆங்... கெளம்பு... கெளம்பு... ஆகட்டும்... ஆகட்டும்..." என பஸ்ஸில் உட்கார இடமிருந்தும், நடுவில் நின்று கொண்டே வந்தார்.  இதுல, "லெப்ட்ல போ... நேரா போ... வேகமா போ... இங்கெல்லாம் டிக்கெட் ஏறாது வண்டிய எடு... பொம்பளையாள் ஏர்றாங்க மெதுவா எடு..." என டிரைவரை இவர் ஓட்டிக் கொண்டு வர, டிரைவரும் ஏதும் சொல்லாமல் (வேற வழி) ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஊரை விட்டு வெளியே வந்து சிறிது நேரம் கழித்து வழியில் உள்ள நிறுத்தத்தில் இருவர் ஏற எத்தனித்தனர்.  இருவரும் பக்கா டாஸ்மாக் டயபாலிக்ஸ்.  ஒரு டயபாலிக் உள்ளே ஏறி விட வெளியே இருந்த மற்றொரு டயபாலிக் "மாப்ள, இதுல வேணாம், இன்னும் கொஞ்சம் சாப்ட்டு அடுத்த வண்டியில போவோம்"ன்னு சொல்ல,
"இல்ல மாப்ள ஊருக்குப் போய் சாப்பிடுவோம்..."
"நம்ம போற நேரத்துக்கு கடைய மூடிருவான்டா..."
"ப்ளாக்ல வாங்க்கிலாம்டா..."
"டேய்.. அதுல டூப்ளிகேட்டா ஓடுதுடா..."
"இப்போ ஏர்றியா இல்லியா..."

பஸ் பொறுமையாக நின்று கொண்டிருந்தது.  டிரைவர் கண்டக்டரைப் பார்க்க, கண்டக்டர் டானைப் பார்க்க, ஒட்டு மொத்த பஸ்சும் "டான்... டான்... டான்... டான்..." என மனசுக்குள் எக்கோ எப்பெக்ட்டுடன் கூவிக் கொண்டே அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற ஆவலுடன் டானையேப் பார்க்க, டான் முன்னே நடந்து சென்று படியில் இருந்த ஒரு டயபாலிக்கை மேலே இழுத்து, "ஏம்ப்பா உங்க பஞ்சாயத்தை உள்ள வந்து வெச்சுக்கோங்க..." என்று சொல்ல, வெளியே இருந்த இருந்த இன்னொரு டயபாலிக் டானின் அப்பத்தாவை இழுத்துத் திட்டி, "நாங்க எதுல வேணாலும் போவோம், உன் வேலை மயிரைப் பாரு..." என சொல்ல, தன் வேலையே இதுதான் என்பது போல் உள்ளே இருந்தவன் முகரையில் டான் ஓங்கி வலுவாக அப்பினார்.

இப்போ வெளியே இருந்தவனும் படியில் ஏறி டானை வெளியே இழுத்தான்.  நடந்த கைகலப்பில் டானுடைய வேட்டியின் இரு முனைகளும் இருவரிடமும் மாட்டியிருந்தது... இருவரும் இருபுறமும் இழுக்க டானின் நிலைமை உடுக்கை இழந்தவன் நிலையானது... சிறிது நேரத்தில் வேட்டிக்கும் டானுக்கும் இருந்த இடைவெளி அதிகமானது.  ஒருவன் வேட்டியை இழுத்துக் கொண்டு பஸ்ஸின் கீழேயே இறங்கி விட்டான்.

இந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத அந்த ட்விஸ்ட் நடந்தது.  அறை வாங்கிய அரை மணி நேரமாக சோனியாவிடம் டோஸ் வாங்கிய மண்ணுமோகன் நிலையில் இருந்த குடிமகனுக்கு திடீரென மானம், மரியாதை, ரோசம் எல்லாம் சேர்ந்து மம்மியைக் கண்ட கேப்டன் போல் பொங்கி பீறிட்டு எழ, நேரே டானிடம் சென்று, அவர் குடும்பத்தினரைத் திட்டி, "எனக்கு டிக்கெட் எடுக்க நீ என்ன பெரிய புடுங்கியா?  நீ என்ன அவ்ளோ பெரிய மயிரா?.." என அவரின் பிறப்பு, வளர்ப்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்பி திட்டினார்.  அதோடு விடாமல் டயபாலிக்ஸ் உடன் சேர்ந்து இவரும் தாக்க ஆரம்பித்தார்.

இந்த நன்றி கேட்ட உலகம் அதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது... (என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்...?!)  சில பல குத்துக்கள் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பிறகு ஒரு வழியாக டான், டயபாலிக்சை கீழே தள்ளி விட்டு தன்னையும், தன் வேட்டியையும் மீட்டுக் கொண்டு மூச்சு வாங்க மேலே ஏறினார்.

"அடி ரொம்ப பலமா.."ன்னு ஆதரவா கூட யாருமே கேட்கல... டான் இம்முறை வேட்டியை நன்றாக இறுக்கிக் கட்டிக் கொண்டு குடிமகனை வெறியுடன் தேட, குடிமகனோ கடைசி சீட்டில் ஓரமாக பவ்யமாக டீச்சர் கேள்விக்கு பதில் தெரியாத பச்சைப் புள்ளை போல அமர்ந்திருந்தார்.  சினங்கொண்ட சிறுத்தையாக, வெறிகொண்ட வேங்கையாக, ஃபுல்லடிச்ச புலியாக டான் வேகமாக குடிமகனை நோக்கி முன்னேறினார்.  ஹெட்லைட்டைத்  தவிர ஒட்டு மொத்த பஸ்சின் பார்வையும் கடைசி இருக்கையை சொல்லென்னா ஆர்வத்துடன் நோக்கியது.  டான் குடிமகனை உறவுப் பெயர் கொண்ட ஒரு சேவைத்தொழில் குறித்த சொல்லாடலோடு ஓங்கி அறைந்தார்.  பின்பு நடுவில் வந்து நின்று கொண்டார்.

ஏதோ முடிஞ்சிடுச்சின்னு பார்த்தா அதுதான் ஆரம்பமே.... ICU-ல் உள்ள நோயாளிக்கு டெஸ்ட் எடுப்பது போல் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் சரியான இடைவெளி விட்டு பின்னால் சென்று குடிமகனை அடிப்பதும், பின்பு வந்து நடுவில் நின்று கொள்வதுமாக இருந்தார்.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி வசவுகள், வேறு வேறு இடத்தில் மசாஜ்கள்... ஒவ்வொரு முறையும் நடுவில் வந்து நிற்பது அதற்காக யோசிக்கத் தானோ என்னமோ..!!  கரகாட்டக்காரனில் "என்னைப் பாத்து ஏன்டா அந்த கேள்வியக் கேட்ட"ன்னு கவுண்டமணி யோசித்து யோசித்து அடிப்பாரே, அதே கதைதான் live-ஆக ஓடிக் கொண்டிருந்தது.  ஆனால் ஒரே வசனத்தை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார். "டேய்... அவனுங்களக் கூட சும்மா விட்றலாம்டா, ஆனா உனக்கு டிக்கெட் வாங்கின எம்மேலயே கை வெச்சுட்டியேடா..." என்பது தான் அது. 

வேட்டி கழண்ட அவமானம் டானை ரொம்பவே பாதித்திருந்தது, அவரை சமாதானப் படுத்த யாருக்குமே துணிவு வரவில்லை, நேரம் ஆக ஆக அவருடைய வன்மமும் வசவும் அதிகமானது.  குடிமகனோ தன்னுடைய உடலை மேலும் மேலும் சுருக்கிக் கொண்டு அடியின் வீச்சிலிருந்து வரும் வேகத்தைக் குறைத்து வாங்கிக் கொண்டிருந்தார்.  ஒரு வழியாக டான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.  மீண்டும் ஒருமுறை குடிமகனின் குலதெய்வத்திலிருந்து அனைவரையும் இழுத்து வசைபாடி, மேலும் ரெண்டு மொத்து போட்டுவிட்டு இறங்கினார்.  அவர் இறங்கும் போது அந்தப் பயணம் அக்கணமே முடிந்து போவது போல் பலர் உணர்ந்தனர்.

அப்பொழுதுதான் யாரும் எதிர்பாராத அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.  இறங்கிய டான், குனிந்து நாலைந்து கற்களைப் பொறுக்கி பஸ்ஸை நோக்கி கண்டபடி கத்தியபடியே விட்டெறிய ஆரம்பித்தார்.  பஸ் வேகம் பிடித்தது, இரண்டு கண்ணாடிகள் உடைந்திருந்தன, நல்ல வேளையாக யாருக்கும் அடி ஏதும் படவில்லை.  சண்டையில் சட்டை-வேட்டி கிழிந்ததோ, சண்டையின் போது பஸ்ஸில் இருந்த யாரும் தனக்கு சப்போர்ட் பண்ணவேயில்லை என்ற ஆதங்கமோ ஏதோ ஒன்று அவர் கோபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அடுத்த பத்து நிமிடங்கள் பஸ்ஸில் பெரும் அமைதி நிலவியது.  கண்டக்டர் உடைந்த கண்ணாடியைத் தடவிப் பார்த்துக் கொண்டே ஓனருக்கு என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டே இருந்தார்.  விக்கிரமாதித்தன் சுமந்து வந்த உடலில் உள்ள வேதாளம் மெல்ல நெளிந்து எழுவது போல் குடிமகன் எழுந்து கண்டக்டரிடம் சென்றார். கண்டக்டர் அவரை "என்ன.." என்று  பார்வையால் கேட்க, குடிமகன் மீண்டும் நெளிய, கண்டக்டர் மீண்டும் "என்னய்யா வேணும்..?" என கேட்க,
"சார்... அந்த பேலன்ஸ்...!!"
"எந்த பேலன்ஸ்...?"
"அதான் சார்... டிக்கெட் வாங்கினது போக பேலன்ஸ்...!!"
கண்டக்டர் தன்னுடைய பையை ஒரு பயணியிடம் கொடுத்து விட்டு எழுந்தார்.  "ங்கொக்கா மவனே, உடைஞ்ச கண்ணாடிக்கு என் தலையில அரைப்பானுங்களோன்னு நான் இருக்கேன், அவன் குடுத்த காசுக்கு உனக்கு பேலன்ஸ் வேணுமா?"ன்னு  ஆரம்பிச்சு டான் செய்த அனைத்தையும் ஆடியோ-வீடியோ இரண்டையும் கண்டக்டர் மறுஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்.  யார் தடுத்தும் அடங்கவில்லை... பஸ்ஸில் உள்ளவர்களுக்கு மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
அடி வாங்கிக் கொண்டே  குடிமகன் சொன்ன வார்த்தைகள், "ஏன்டா, குடிச்சிட்டு வந்து ஒருத்தன் அடிப்பான், கண்ணாடிய உடைப்பான், பாத்துட்டு சும்மா இருப்பீங்க, நியாயமான காசைக் கேட்டா அடிப்பீங்களாடா?"  அடப் பன்னாடைகளா...!!  ரெண்டு பேருமே குடிகாரப் பயலுகளாடா..!!

 பயணங்கள் தொடரும்....

- அன்புடன்
- மலர்வண்ணன்


இதே போன்ற எனது பிற இடுகைகள்:
பாம்பின் கால்
பிக்கப் பண்ணியாச்சா
இவாலியாவுடன் ஓர் இரவு

24 comments :

  1. சுவாரஸ்யமான நகைச்சுவையான பயணம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க DD
      ஒவ்வொரு பயணத்திலும் சுவாரசியம் இருக்கிறது, நாம தான் பல நேரங்கள்ல தவற விட்டுர்றோம்...

      Delete
  2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    ReplyDelete
    Replies
    1. நன்றி...
      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக....

      Delete
  3. Excellent one.. Very Well written and narrated, i could imagine the even in front of me while reading... What Murugan was (Don or Drunken or Driver or Conductor or Passenger). However beautifully narrated. Trust soon we shall be attending your book releasing function. God bless your mind and hand to write more... Thank you for sharing with us.

    Regards
    AGS

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments and wishes Arun
      Murugan told that he was a passenger, but must be the drunken...!!

      We really missed YOU when this incident was narrated by Murugan on our way back to Chennai from Kerala

      Delete
  4. Malar ji,
    Simply superb.Great.
    Regards,
    Shankar Narayan

    ReplyDelete
  5. நகைச்சுவைப் பயணம் அருமை

    ReplyDelete
  6. உங்களின் எழுத்து நடை பயணத்தை மிகவும் ரசிக்கும்படி செய்தது.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி பாலாஜி

      Delete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி DD
    வலைச்சர குழுவினருக்கும் நன்றி...

    ReplyDelete
  9. அட என்ன ஒரு ஸ்வாரசியமான பயணம். பல சமயங்களில் இப்படி நிகழ்வுகளைப் பார்க்க முடிகிறது - டாஸ்மாக் உபயத்தினால்.....

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் பார்க்கலாம் வெங்கட்ஜி,
      பல நேரங்களில் டாஸ்மாக் பயணம் ஆபத்திலேயே முடியும்...!!

      Delete
  10. சூப்பர்!! நல்ல சுவரசியமான பதிவு!!! விவரண நடை அருமை!!

    ReplyDelete
  11. தங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசி சார்...
      உமக்கும் எமது வாழ்த்துக்கள்..!!

      Delete
  12. டான் (திரும்பவும்) டாஸ்மாக் போய் வேறு பஸ்ஸில் ஏறியிருப்பாரோ? சரளமான நடை.. நகைச்சுவையும் அபாரம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெகா..!!

      Delete