Friday 21 February 2014

தங்கமணியுடன் தங்கம் வாங்கயில...

முகநூலில் முன்பு நான் எழுதிய  தங்கம் வாங்கிய கதை பதிவாக....
"தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை" என விதிமுறைகளை அறிவுறுத்தும் பதிவல்ல இது... அப்படி எதிர்பார்த்து வந்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மிச்சம் மீதி கொஞ்சம் காசு கையில இருந்தாலும் இவன் எங்கேயாவது டூர் அடிக்க கெளம்பிருவான்ட்டு தங்கம் வாங்கலாம்னு தங்கமணி நம்மள  11.11.12 அன்று சென்னை தாம்பரம் சானிடோரியத்திலுள்ள GRT நகைக் கடைக்கு கூட்டிட்டு போனாங்க...  "இனிமே எங்கூட கடைக்கு வருவியா"ன்னு நமக்கு தோணுற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்தாங்க... "கடை என்ன விலை"ன்னு கேக்காதது ஒன்னு தான் பாக்கி.  இறுதியா 7 கிராம் எடையுள்ள தோடு ஒரு ஜோடிய ஒருவழியா புடிச்சிட்டாங்க. எனக்குள்ள ஜன்லோக்பல்லே நிறைவேறிய திருப்தி.
நாம போன வேலை இனிமேதானே ஆரம்பம்.  கடைக்காரங்க மதிப்பை ஒரு துண்டு சீட்டில் கிராம் ஒன்றுக்கு ரூ.2891, 7 கிராம் ரூ.20237, சேதாரம் 18% ரூ.3642 , மொத்தம் ரூ.23879 என அச்சடித்துக் கொடுத்தார்கள்.  "இன்னைக்கு இவங்களா"ன்னு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே  "18% எல்லாம் கொடுக்க முடியாது, பாத்து செய்ங்க" என மெதுவாக ஆரம்பித்தேன்..
"மேனேஜர் கிட்ட பேசிப் பாருங்க" என்றார்கள்..
"நீங்களே பேசிக்கோங்க, இல்லாட்டி மேனேஜரை இங்க வரச் சொல்லுங்க" என்றேன்...

உலகவங்கி ஓனரு உகாண்டாவுக்கு கடன் குடுக்கிற ரேஞ்சுக்கு முகத்தில் பல சுருக்கங்கள் விழ அவர் கால்குலேட்டரை மீண்டும் மீண்டும் லொடலொடவென தட்டி சேதாரத்தை 15% ஆக குறைத்துக் காட்டி, "இவ்ளோ தான் சார் முடியும்"ன்னார்.  "சேதாரம் 18% அல்ல, 25% கூடப் போடுங்கள், தரத் தயாராயிருக்கிறேன், ஆனால் சேதாரம் ஆன தங்கத்தை என்னிடமே கொடுத்து விடுங்கள், ஏனென்றால் அதற்கும் சேர்த்துத்தானே என்னிடம் வசூலிக்கப் போகிறீர்கள்...  அந்தத் தங்கம் என்ன நிலையில் இருந்தாலும் நான் எடுத்துக் கொள்கிறேன், உமியோடு இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி, செம்புடன் கலந்திருந்தாலும் சரி, நான் கொடுத்த காசுக்கு என் தங்கம் என்னிடம் வர வேண்டும், அதை நான் என்னமோ செய்து கொள்கிறேன், என் தங்கம் எனது உரிமை..!! தம்பி கொஞ்சம் தண்ணி கொடு..." என்றேன்.

அவர் சீட்டை எடுத்துக் கொண்டு எங்கோ போனார், சிறிது நேரம் கழித்து சரவணபவன் சூப்பர்வைசர் போல் ரெண்டு பேரை உடன் கூட்டி வந்தார்.  அவர்கள் சற்றே தோரணையுடன் "அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்" என்றார்கள்.
"எதை செய்ய முடியாது?"
"நீங்க கேக்கிற மாதிரி சேதாரத்தை குறைச்சு போடவோ, சேதாரத் தங்கத்தை கொடுக்கவோ முடியாது.."

"வெல்... உங்களுக்கு மூன்று options தருகிறேன்...
1. செய்கூலி, சேதாரம் இரண்டிற்கும் சேர்த்து 5% தருகிறேன்..
2. 18% தருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு சேதாரம் ஆன தங்கத்தை தர வேண்டும், அல்லது ஏன் தர இயலாது என்ற  விளக்கத்தை உங்கள் பில்லுடன் சேர்த்து எழுத்து மூலம் தர வேண்டும்..
3. எனக்கு தங்கம் விற்பனை செய்ய முடியாது என்று உங்கள் வாயாலே சொல்லிவிடுங்கள், நான் சென்று விடுகிறேன்"
என்று சொன்னேன்.

அம்மணி, நம்மள பாத்து "எழவக் கூட்டிட்டியா..?! 10% கேட்டா கொடுத்திடுவாங்க, முடிச்சிட்டு வா, போலாம்"ன்னு சொல்ல,
"இது உங்கம்மா வீட்டுல புள்ளைக்கு குடுக்கிற சீதனமா இருந்தா பரவாயில்ல,.. நம்ம வாங்கறதாச்சே... அதுவுமில்லாம செலக்ட் பண்ண நீ எடுத்த நேரத்துல பத்துல ஒரு பங்குதான் நான் எடுக்கப் போறேன், காத்திரு" என்றேன்.
"எனக்குத் தெரியாது, எனக்கு அந்தத் தோடு வேணும்..." என கட்டளையிட அடிவயிற்றில் பேப்பர் வெயிட் ஒன்று உருண்டது.

அவர்கள் அங்குமிங்கும் நடந்தார்கள், யாராரிடமோ பேசினார்கள், என்னை தனியே அழைத்தார்கள், வர முடியாது என சொல்லிவிட்டு சர்விலன்ஸ் கேமராவில் முகம் நன்கு தெரியுமாறு உட்கார்ந்து கொண்டேன்.  மனதில் பல ஐடியாக்கள் ஓடின.  நண்பர்களில் மனித உரிமை ஆர்வலர், வக்கீல் போன்றோரது நம்பர்கள் செல்போனில் இருக்கிறதா என பார்த்துக் கொண்டேன்.

சரியான காரணத்தை விளக்காமல் நுகர்வோருக்கு பொருளை விற்பனை செய்ய முடியாது என்று யாராலும் சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது; விற்க மறுத்தால் சரியான காரணம் சொல்லாமல் என்னை தட்டிக் கழித்தது, நுகர்வோருக்கு பொருள் விற்பனை செய்ய மறுத்தது, வெகுநேரம் என்னை அங்கு அமரச் செய்தது என பல காரணங்களுக்காக எனக்கு அவர்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்; அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களும், சர்விலன்ஸ் கேமராவுமே சாட்சிகள், வாடிக்கையாளர் சட்டத்திற்கு புறம்பாகவோ, வரம்பு மீறியோ நடந்தால் மட்டுமே வெளியேற்றப் படலாம் போன்றவை மனதில் ஓடிக் கொண்டே இருந்தன...

இதனிடையே, "பாத்தீங்களா அநியாயத்தை.." என துணைக்கு சில என்னைப் போன்ற அப்பாவி கணவன்களையும் அழைத்துக் கொண்டேன்.   இறுதியாக 6% ஆக குறைத்து எடுத்து வந்தார்கள்.  திருப்தியாக  வாங்கிக் கொண்டு, திண்டுக்கல் வேலு ஹோட்டலில் மட்டன் பிரியாணியும் மூளை வருவலும் சாப்பிட்டு வந்தோம்.

 
- அன்புடன்
- மலர்வண்ணன்

27 comments :

  1. அடடா...! இனிமே தங்கம் வாங்க உங்களைத்தான் கூட்டிட்டு போகணும்... நுகர்வோர் தகவல்கள் வேறு தெரிகிறதே... ISO கற்றால் எங்கேயோ போயிடுவீங்க...!

    மட்டன் பிரியாணி + மூளை வருவல் எப்படியிருந்தது... 6% காலி ஆச்சா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க DD
      // ISO கற்றால் எங்கேயோ போயிடுவீங்க...!//
      "ஆங்... இப்படித்தான் உசுப்பேத்தனும்..."

      //மட்டன் பிரியாணி + மூளை வருவல் எப்படியிருந்தது... 6% காலி ஆச்சா...//
      "அதுக்குத்தானே மூச்சு விடாம கஷ்டப் பட்டு பேசினோம்..."

      Delete
  2. வெல்டன், இதைப்போல எல்லாருமே செய்தால் இந்த நகைக்கடைக்காரர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள். ஆனால் எல்லோருக்குமே இந்த தைரியமும் சமயோசிதமும் இருக்கவேண்டுமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவி...
      தைரியம் இருக்கோ இல்லையோ, நீங்க சொன்னா மாதிரி சமயோசிதம் கட்டாயம் இருக்க வேண்டும், இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது...
      மற்றபடி, பேஸ்மென்ட் வீக்கா இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கிறா மாதிரி காட்டிக்கனும்...!!

      Delete
  3. நல்ல ஐடியாங்க...இதுக்குதான் வாஉள்ள புள்ள பொழச்சுக்கும்னு சொல்லுராங்களோ?

    //தம்பி கொஞ்சம் தண்ணி கொடு..." // ரொம்பவெ ரசிஇ அ இ கோடுத்துட்டு....'சோடா' அப்படிம்பாங்கள்ல அது மாதிரீ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசியாரே...!!

      //வா உள்ள புள்ள//
      வீட்டு ஞாபகத்துலியே எப்பவும் இருப்பீங்க போல...!!

      //ரொம்பவெ ரசிஇ அ இ //
      ஏதோ ஜென் தத்துவம் மாதிரி இருக்கு... கொஞ்சம் புரியறா மாதிரி சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும்..!!

      Delete
  4. இன்று டூ வீலர் சர்விஸ் சார்ஜ் என்று 4000ரூபாய் கேட்டார்கள் ,நான்தான் போர்க் வேலை இப்போ பார்க்க வேண்டாம்னு சொன்னேனே ..என்றேன் ,அப்படின்னா 3000ரூபாய் கொடுங்க என்று வாங்கி கொண்டார்கள் !எங்கே போனாலும் ஏமாற்று வேலைதான் !
    த ம 5
    இன்று ஜோக்காளி 'தோடு 'விட்டு இருப்பதையும் பாருங்க மலர்வண்ணன் >>>
    http://www.jokkaali.in/2014/02/blog-post_21.html மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா ?

    ReplyDelete
    Replies
    1. ஏது... உங்க டூ வீலரை அப்பல்லோவில வெச்சா ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க...?!
      தோடு விட்டத பாத்தாச்சு...
      போட்டாச்சு... போட்டாச்சு...

      Delete
    2. போட்டது வந்து சேரலே ,சரி பரவாயில்லை ...
      சமையல் கத்துக்க வாங்க >>http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
      சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?

      Delete
  5. எங்கும் எதிலும் ஏமாற்றுதர்ன்

    ReplyDelete
    Replies
    1. எவன் எப்படி வேணாலும் ஏமாத்தட்டும்...
      நம்ம ஏமாறாம இருக்கணும்...!!

      Delete
  6. [[ கழித்து சரவணபவன் சூப்பர்வைசர் போல் ரெண்டு பேரை உடன் கூட்டி வந்தார்.]]]

    அது என்ன கதை? சரவணபவன் சூப்பர்வைசர் போல?
    அடியாட்களா? கொஞ்சம் விரிவா சொல்லுங்கள்

    +1

    ReplyDelete
    Replies
    1. நீங்க இன்னும் சரவணபவன் போனதில்லையோ?! அங்க பாத்தீங்கன்னா நல்லா வாட்டசாட்டமா, கட்ட மீசை வெச்சுக்கிட்டு, சஃபாரி போட்டுக்கிட்டு, வேளைக்கு ரெண்டு அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடுற ரேஞ்சுல, மப்டி போலீஸ் மாதிரி நாலைஞ்சு பேர் இங்குமங்கும் சுத்திட்டு இருப்பாங்க...
      இந்த GRT பயலுக என்னான்ட உதார் வுடுறதுக்கு சரவணபவன் சூப்பர்வைசர் கணக்கா ரெண்டுபேர இட்டாந்தானுங்க..!! மத்தபடி அடியாள் மாதிரி நடந்துகொள்ளவில்லை.

      Delete
  7. ஐயோ! அது வாய் உள்ள புள்ள.......

    ரொம்பவே ....ரசித்தோம்......நமக்கு ஜென் ஓட்டத் தெரியும் ஆனா தத்துவம் எல்லாம் ஓட்டத் தெரியாதுங்க...

    அதுக்கு அப்புறம் எனக்கே புரியலீங்க....

    இந்த blogger ல தமிழ்ல அடிக்கறது இருக்கு பாருங்க ரொம்பவே சூழ்ச்சி பண்ணுதுங்க.....நல்ல காலம் வேற எதுவும் எசகு பிசகா வராம இருந்துச்சே பொழச்சோம்.....நாங்க....ரெண்டுபேரும்!..

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ... தமிழ் ரொம்ம்ம்ப நுணுக்கமான மொழின்னு புரிஞ்சுக்கிட்டீங்களே..!!

      //நமக்கு ஜென் ஓட்டத் தெரியும் ஆனா தத்துவம் எல்லாம் ஓட்டத் தெரியாதுங்க//
      சூப்பர்... நீங்களும் பிக்கப் ஆகிட்டீங்க...!! நெறைய எதிர்பார்க்கிறோம்...!!

      Delete
  8. உள்ள போன ஒடனே... "சார் கூல் ட்ரிங்க்ஸ் வேணுமா காபி வேணுமா...?" ன்னு கேட்ருப்பாய்ங்களே...?

    அல்லாம் மகுடம் ஏத்தியாச்சு... ஏத்தியாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேக்குறீங்க... நாலைஞ்சு புள்ளைங்க தட்டுல வெச்சு சுத்தி சுத்தி வந்துட்டே இருந்தாங்க...

      Delete
  9. கேட்டா கிடைக்கும்னு நிரூபிச்சிட்டீங்க... பதினெட்டு சதவீதத்திலிருந்து ஆறு சதவீதம்னா - எவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்க.....

    ReplyDelete
    Replies
    1. கூட அம்மணி இருந்த தைரியம் தான்...

      Delete
  10. கேட்டால் கிடைக்கும்.... சரியா சொன்னீங்க ஸ்.பை....

    பல இடங்களில் இந்த ஏமாற்று தான்!

    ReplyDelete
    Replies
    1. சேலம் AVR-ல ஒரு முறை இப்படித்தான் அரை மணி நேரம் போராடி அவர்கள் என்னை ஏமாற்றுவதில் இருந்து காத்துக் கொண்டேன்...

      Delete
  11. தம்பி! என் இடுகைக்கு ஒரு ஒட்டு போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சு.. போட்டாச்சு... வாத்யாரே...!!

      Delete
  12. நுகர்வோர் உரிமையைப் போராடிப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் எல்லாம் தேவையே இல்லை சார்..., தெளிவான, நேர்மையான, நியாயமான கேள்விகள் மட்டும் உறுதியாகக் கேட்டால் போதும், தேவையானது வந்து சேரும்...

      Delete
  13. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
  14. நான் மின்னஞ்சலில் படித்ததை நீங்கள் ப்ராக்டிகலாக செய்தே காண்பித்துவிட்டீர்கள்! பாராட்டுக்கள். எல்லோருமே இப்படிச் செய்யவேண்டும். நல்ல தகவலுக்கு நன்றி!

    ReplyDelete