Saturday 27 February 2016

தீபன் - ஈரமும் கொஞ்சம் ஈழமும்


ஈழப் போரின் முடிவில் பல செய்திகளும் காணொளிகளும் இலங்கை அரசின் போர்க்குற்ற அட்டூழியங்களை உலகம் முழுதும் எடுத்துக்காட்டி, பின் ஐ.நா., நார்வே, கனடா, போர்க்குற்றவாளி, நடவடிக்கை, மறுவாழ்வு என சில காலம் செய்திகளில் அடிபட்டு பின்னர் மறக்கடிக்கவும் பட்டது.

இலங்கையில் யுத்தம் முடிந்து பலியான விடுதலை புலிகளை பனைஓலை கொண்டு எரிக்கும் நிகழ்வுடன் படம் துவங்குகின்றது. சிவதாசன் என்கிற புலி அந்த வேலையைச் செய்து முடித்து ரத்தக் காயங்களுடன் முகாமிற்குச் செல்கிறான். அங்கு யாழினி ஆதரவற்ற குழந்தை ஒன்றைத் தேடுகிறாள். போரில் பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி இல்லயாள் அகப்படுகிறாள். சிவதாசனுக்கு தீபன் என பெயர் மாற்றி மூவரும் கணவன்-மனைவி-மகள் எனச் சொல்லி தப்பித்து France-க்கு கப்பலில் பயணமாகின்றனர்.

அங்கே மூவருக்கும், மூவருக்குள்ளும், மூவரைச் சுற்றிய உணர்வுகளையும் நிகழ்வுகளையும் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் french இயக்குனர் Jacques Audiard.

ஈழப் போரின் பாதிப்புகளை பலவாறு கேள்விப்பட்டும், செய்திகளில் பார்த்தும் இருந்தாலும் இப்படத்தில் ஒரு சிறு காட்சி மூலம் அக் கொடுமையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது அபாரம்.
இல்லயாளை பள்ளியில் சேர்க்கும் இடத்தில் டீச்சர் அவர்களிடம்
"ஸ்ரீலங்காவில school-க்கு போனாளா?"
 
அதற்கு இல்லயாள், "இல்ல.."
"ஏன்?"
"school எரிக்கப் பட்டு விட்டது..."
"உன்னோட school-ஆ? எரிச்சுட்டாங்களா...!!  ஏன்? யார் எரிச்சது?!"

அவள் சற்றே யோசித்து அப்பாவிடம், "அரசாங்கம்"ன்னு english-ல எப்படி சொல்றது"ன்னு கேட்டுட்டு, "Govrenment"ன்னு சொல்லும் போது நமக்கு அதிர்வு அடங்க நேரம் பிடிக்கும்.

புலிகளின் ஒரு கர்னல் சேரன் என்பவரை தீபன் சந்தித்து உரையாடும் போது
"சிவதாசா, ஆயுதங்கள் வாங்க லெபனான்ல இருந்து 1 மில்லியன் டாலர் தயார் செய்திருக்கிறேன், இங்க இருக்க நாம தானே அங்க இருக்க நம்ம மக்களுக்கு உதவணும்..."
"ஆயுதங்கள் யாருக்கு கர்னல்..?"
"நம்ம தாயகத்துக்கு..."
"எந்த தாயகத்துக்கு?"
"நம்ம போராளிகளுக்கு..."
"கர்னல், எல்லாம் முடிஞ்சு போச்சு..., நந்திக்கடல்ல என்னோட படையை இழந்துட்டேன், மனைவி, குழந்தைகள் எல்லோரையும் இழந்துட்டேன்..."

யாழினி வேலை பார்க்கும் வீட்டில் இருக்கும் ப்ரஹிம் என்பவன், அவளிடம், அவள் உருவத்தை பார்த்துக் கொண்டே,
"நீ இந்தியாவா, பாகிஸ்தானா?"
"ஸ்ரீலங்கா"
"அது எங்க இருக்கு...?!"
"இந்தியா இங்க..., ஸ்ரீலங்கா..., ...., இங்க..."
 "ஓ... இந்தியா மாதிரியா !?"
"இல்ல..., இந்தியாக்கு கீழே..., ..."
"சரி விடு..."
வளர்ந்த நாடுகளிலுள்ள பெரும்பான்மையான மக்களின் உலக அறிவையும், பொதுப் புத்தியையும் ஒரே நொடியில் சுரீன்று உணர்த்திய காட்சியது.

இறுதிக் காட்சிகளில் தன்னை கூட்டத்தின் தலைவனாக அறிவித்துக் கொள்ளும் ப்ரஹிம்மிடமிருந்து யாழினியைக் காப்பாற்ற தீபன் கொரில்லாத் தாக்குதலை ஆரம்பிக்க, தொற்றிக் கொள்கிறது பதற்றம்...

அனைத்தையும் இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர் பலரின் நிலையை போகிற போக்கில் நமக்கு உணர்த்தி அதில் பரிதாபமோ பச்சாதாபமோ வராமல், மாறாக, ஆற்றாமையும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலாமல் செய்து விடுகிறது "தீபன்"

புலிகளின் உத்வேக ஊக்குவிப்புப் பாடல் ஒன்றை தீபன் அனைத்தையும் இழந்த வேதனையில் வெறி கொண்டு பாடும் காட்சி...
 
 A Prophet , Rust & Bone படங்களின் மூலம் பல விருதுகளை வாங்கிக் குவித்த Jacques Audiard ன் "தீபன்"னும் Cannes -ல் வென்றுள்ளது. பல சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறது. பேருக்குத்தான் french படமே தவிர முக்கால்வாசிப் படத்தின் வசனம் இலங்கைத் தமிழில் தான்... Subtitle இல்லாமலே பார்க்கலாம்.

Sunday 7 February 2016

விசாரணை - அனுபவத்திராத அனுபவம்



பொல்லாதவனில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டருடன் போனில் பேசிக் கொண்டே, "அய்யா, சொல்லுங்கய்யா, சரிங்கய்யா..." என்றவாறே தனுஷின் கம்ப்ளைன்ட் எழுதிய பேப்பரின் பின்புறம் வரிசையாக எழுதிக் கொண்டே, "ஆங்.., வஞ்சரம் தாங்க அய்யா..." என சொல்லும் போது தான் அவர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான லஞ்ச் மெனுவை எடுத்துக் கொண்டிருப்பது தெரியும். போனை வைத்து விட்டு கெட்ட வார்த்தையில் முணுமுணுப்பார். ஆடுகளத்தில் பேட்டைக்காரன் தனது சேவல்சண்டை எதிரியான இன்ஸ்பெக்டரிடம் வரம்பு மீறி பேச, எஸ்.ஐ. வேகமாக உள்ளே செல்வார், சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பாக கையை உதறிக் கொண்டே வெளியே வருவார்.

சொற்ப நேரமே வரக்கூடிய இந்தக் காவல்நிலைய காட்சிகளே நினைவே விட்டு அகலாத போது, வெறும் காவல் நிலையத்திலேயே மட்டும் நடக்கும் முழுக் கதையென்றால்..., "விசாரணை"யில் விளையாடி விட்டார் வெற்றிமாறன்!!

எடிட்டர் டி.ஈ.கிஷோருக்கு சமர்ப்பித்து, அனுராக் காஷ்யப் தொடங்கி பலருக்கு நன்றி தெரிவித்து, இறுதியில் "லாக்கப்-சாமான்யனின் குறிப்புகள்" எழுதிய மு.சந்திரகுமாரின் வார்த்தைகளோடு முடித்து, அனைவருக்கும் க்ரெடிட் கொடுத்தது சிறப்பு.

உதவாத சட்டங்களை வைத்துக்கொள்ள-கடைபிடிக்க-ஏற்றுக்கொள்ள முடியாத நிலை, மேலதிகாரிகளின் சொல்லுக்கு வேற வழியே இல்லாமல் செய்து முடிக்கும் இடைநிலை-கீழ்நிலை அதிகாரிகள், சட்டம்-நீதி என எதுவுமே தெரியாமல் இருக்கும் வசதியற்ற-பயந்த பெரும்பான்மைச் சமூகம், இவற்றிற்கிடையே நடக்கும் one side game தான் "விசாரணை".

இறுதியில் "சுபம்" போட்டே ஆக வேண்டிய கொடுமையை உடைத்து மெக்சிகன், தென்அமெரிக்க படங்களப் போல புதுப்பேட்டை, ஆரண்யகாண்டம் படங்களைத் தொடர்ந்து ராவான ஆனால் ப்ராக்டிகலான முடிவுகளைக் கொண்டப் படங்கள் வருவது பெரிய ஆறுதல். விசாரணையும் அப்படியே...
 
வசனங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

"யோவ்... நான் உன்ன என்ன, திருடனைப் புடிக்கவா சொன்னேன், கேஸை முடிக்கத்தானே சொல்றேன்..."

"கோட்டாவுல போஸ்ட்டிங்க வாங்கிட்டு வந்துட்டு ப்ரோசிஜர் தெரியாம இருக்கானுங்க..."

"பேர் என்னடா...?"
"அப்சல் சார்.."
"அல்-கொய்தாவா, ஐஎஸ்ஐஎஸ்யா..?
"நான் தமிழ் சார்..."
"எல்டிடிஈயா..?" 

"அய்யா, பிரஸ்சுக்கு இன்ஸ்பெக்டர் முத்துவேலோட யுனிபார்ம்ல இருக்க ஒரு போட்டோவும், அவரோட கல்யாண போட்டோவும், பொண்டாட்டி புள்ளைங்க அழுவுற போட்டோவும் ஒன்னு குடுத்துடலாம்யா..."

"அய்யா..., இப்ப வேண்ணா பசங்கள வெளிய அனுப்பிட்டு, நம்ம ஸ்கெட்ச் குமார விட்டு..."
"யோவ்... மூடிட்டு வெளிய போ..."

இதுபோல் நிறைய...

இறுதிக் காட்சியில் முத்துவேலுக்கும் பாண்டிக்கும் என்னவானது என்பதை வசனத்தாலேயே சொல்லி முடித்தது,
ரத்தவெள்ளத்தில் அப்சல் கிடக்கும் காட்சியை கருப்பு-வெள்ளையில் காட்டி வன்முறையை மிகைப்படுத்திக் காட்டாமல் அதன் பாதிப்பை உணர வைத்தது,
கட்டித் தொங்கவிட்ட கிஷோரை இறக்கி விட்டுக் கொண்டே உதவி கமிஷனரிடம் போனில் ‘..அய்யா.., அய்யா..’ என்றபடியே அவருக்கு முத்துவேல் பதில் சொல்வது,
மொத்த போலிஸ் குழுவும் என்கவுன்ட்டருக்கு திட்டம் போட்டு, பின் பசங்களை ஸ்பாட்டுக்கு கொண்டு போவது,
ATM கொள்ளை என்கவுன்ட்டரை இக்கதைக்கு உபயோகப் படுத்திக் கொண்டது...,
வெனிஸ்சில் வெற்றிமாறன் பெற்ற விருதுக்கு இதுபோல் பல காட்சிகள் படத்தில்...

சமுத்திரக்கனி, கிஷோர், தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சரவணா சுப்பையா, ஈ.ராமதாஸ், அனைவரும் இப்படத்தில் வாழ்ந்திருக்கின்றனர். சமுத்திரக்கனிக்கு நடிப்பில் நல்ல எதிர்காலம் உண்டு போல..., படத்தில் பெண் கேரக்டர் வெச்சே ஆகணும் என்பது போல், ஆனந்தியும், மிஷாகோஷலும் வந்து போகின்றனர். அதுவும் பெண் கான்ஸ்டபிள் மிஷாகோஷல் எழுந்து போகும் போதெல்லாம், பசங்களுக்கு மரண அடி விழுவது என்ன குறியீடோ?!

நாம் அனுபவத்திராத சில உண்மைச் சம்பவங்கள் தான் விசாரணை...!! காக்காமுட்டையைத் தொடர்ந்து இப்படத்தைத் தயாரித்த தனுஷுக்கு பாராட்டுக்கள்..!!