Sunday 12 June 2016

அறிந்தும் அறியாமலும் - 2

சில மாதங்களுக்கு முன் அறிந்தும் அறியாமலும் என்றொரு பதிவை எழுதியிருந்தேன்.  அதைப் படித்த சகபயணி என்ற பதிவர் ஓர் அழகிய நீண்ட பின்னூட்டமிட்டிருந்தார்.  மேலும் பாலியல் குறித்த தனது பதின்வயது அறியாமையையும் அனுபவங்களையும் அருமையாக  ஒரு பதிவாகவே எழுதியிருந்தார்.  என்ன காரணத்தாலோ அதை நீக்கி விட்டார்.  தொடர்ந்து மேலும் எழுதலாம் என எண்ணியதே காயத்ரி எழுதிய பீரியட்ஸ், மற்றும் சுய இன்பம் குறித்த இரண்டு பதிவுகளும் தான்.  அவசியம் படிக்கவும்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நானும் மனைவியும் இது குறித்த எமது சிறுவயது நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தாலும், "அறிந்தும் அறியாமலும்" முதல் பாகத்தை படித்த பிறகு அம்மணி தன்னுடைய அனுபவங்களை ஒரே கோர்வையாக மீண்டும் விவரித்த போது..., பாட்டாவே படிச்சிடலாமான்னு தோன்றியதன் விளைவே இந்த 2-ம் பாகம்.

பருவமடைவது தொடர்பாக அவருக்கு எந்தவித அறிவூட்டல்களும் பெற்றோரோ, தோழிகளோ, ஆசிரியர்களோ சொல்லித் தரவில்லை.  பாட்டி மட்டும் அவ்வப்போது ஏதாவது கேட்டு வைக்க புரிந்தும் புரியாமலும் இருந்துத் தொலைத்திருக்கிறது.  உடன் படிப்பவர்கள் திடீரென நாலைந்து நாட்கள் லீவுக்குப் பிறகு வந்தால் மற்றவர்கள் குசுகுசுவென "யே.. அவ வயசுக்கு வந்துட்டாடி.." என்ற பேச்சைத் தவிர வேறேதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடுமுறை நாளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளாடை நனைய திகீரென்றாயிருக்கிறது.  முதலில் பயம்.., பின் ரத்தம் எங்கிருந்து வருகிறது என்ற குழப்பம்.., அது தெரிந்ததும் மேலும் அதிக பயம்..!!

வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லத் தயங்கி தானே கழுவி சுத்தம் செய்து உள்ளாடையை குப்பையில் வீசியிருக்கிறார்.  மனதில் பல சந்தேகங்கள்...
பூச்சி ஏதும் கடித்திருக்குமா?
புற்று நோயாக இருக்குமோ? (அதுக்கு வாயில தானே ரத்தம் வரும்!!)
உடலில் சாத்தான் புகுந்திருக்குமோ! (இயேசுவின் ரத்தம் ஜெயம்!!)
தொடர்ந்து ரத்தம் வெளியேறினால் செத்துப் போய் விடுவோமோ?!
வயிற்று வலியினூடே அரைத்தூக்கத்தில் இரவு கழிந்து விடிந்து பார்த்தால் மீண்டும் உடையெல்லாம் ரத்தம்... மறுபடியும் துணியை குப்பையில் வீசியிருக்கிறார்.

இரண்டு நாட்களில் உபத்திரவம் தொலைந்தாலும் பயம், பதட்டம் எல்லாம் நீங்கி சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  மீண்டும் பள்ளி, தோழிகள், விளையாட்டு எனக் கழிய சரியாக 28 நாட்கள் கழித்து மீண்டும் அதே அனுபவம்.  இம்முறை அழுக்குத்  துணியோடு சேர்த்துப் போடப்பட்ட ரத்தக்கறை துணியை வேலைக்காரம்மா பார்த்து விட, தினத்தந்தியில் போடாதது ஒன்று தான் குறை.

கவனிப்புன்னா சும்மா அப்படியொரு கவனிப்பு அடுத்து மூன்று நாட்களுக்கு.., அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், அக்காள்கள் என ஆளாளுக்கு லீவு போட்டுட்டு கண்டதையும் திங்கடிக்க செய்திருக்கிறார்கள்.  இதனிடையே அவருக்கு கொடுக்கப் பட்ட விளக்கம், "நீ பெரியவளாயிட்ட, இனி மாசா மாசம் இப்படித்தான் ஆகும், அதுக்கு நாப்கின் வாங்கி வெச்சுக்கணும்.., அந்த நாள் வந்துச்சினா ஸ்கூலுக்கு கையோட நாப்கின்ன கொண்டு போயிடணும், பசங்களோட விளயடாக் கூடாது, ரோட்ல பசங்களோட நின்னு பேசக் கூடாது"ன்னு பல உபதேசங்கள் இருந்தாலும் ஜெர்க் ஆன ஒரே விஷயம், "இந்த கொடுமை மாதமொருமுறை  நடக்கும்" என்பது தான்.

வீட்ல திருவிழா முடிஞ்சு ஒரு வாரம் கழித்து ஸ்கூலுக்கு போகும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றிருக்கிறது.  நமட்டுச் சிரிப்புடன் மிஸ் அனுமதிக்க, வயசுக்கு வந்த புள்ளைகள் வெல்கம் டு த க்ளப் என்பது போல் பார்க்க, வராத புள்ளைகள் "யே... அவ வயசுக்கு வந்துட்டாடி.."  என குசுகுசுப்பைத் தொடர்ந்தனர்.

பின்னாளில் ஒரு நாள் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் ஒரு மாலை வேளையில் என்னைச் சந்திக்க நேர்ந்து (அது ஒரு தனிக்கதை) பின்பு மையலுக்கும் உடன்போக்கிற்கும் இடைப் பட்ட ஒரு காலத்தில் தன் அக்காவிடம் சென்று, "முத்தமிட்டால் குழந்தை பிறக்குமா?" எனக் கேட்டுள்ளார்.
google-ம் நண்பர்களும் நமக்கு சொல்லாத, ஆனால் மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் sex.  குழந்தை பெற்றுக் கொண்டு மீசையை முறுக்கி விட்டு சந்ததியை உருவாக்க மட்டுமன்றி மனமும் உடலும் நலமாக நார்மலாக இருக்க முறையான sex தேவைப் படுகிறது.  தம்பதிகள் சராசரியாக  வாரம் ஒரு முறையாவது வைத்துக் கொள்வது அவசியமாகிறது, அதிகபட்சமாக எத்தனை முறை வைத்துக் கொள்ளலாம் என்பது அவரவர் சொந்த விருப்பம், உடல் தகுதி பொறுத்து அமையும்.  சேலம் சி.சி.வைத்தியர் சொல்வது போல எந்த சக்தியும் விரயமாகப் போவதில்லை...

கருவுருதலை இன்னமும் பலர் கடவுளின் செயல் என நினைத்துக் கொண்டிருப்பதும், குழந்தை வரம் என அதை புனிதமாக்குவதும், தாமதமானால் சொந்தக்காரர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவதும் போன்ற அபத்தங்களை உடனடியாக தூக்கி கடாசி விட்டு உடலுறவு, கருவுறுதல், குழந்தை பெறுதல் அனைத்தும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ற mind set நமக்கு ஏற்படுத்திக் கொள்வதோடன்றி குழந்தைகளுக்கும் காலப் போக்கில் சொல்லித் தருதல் அவசியப் படுகிறது.

நல்ல ஆரோக்கியமான திருப்தியான உடலுறவுக்கு அர்னால்ட், ஏஞ்சலினா போல் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.  உடலை ரொம்ப போட்டு வருத்திக் கொள்வதோ வருந்திக் கொள்வதோ தேவையல்ல.  நல்ல உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் இருந்தால் போதுமானது.  படுக்கையில் தேவைக்கேற்றபடி, விருப்பத்திற்கேற்றபடி மாறிக் கொள்வதோ ஏற்றுக் கொள்வதோ மிக நன்று.  உடலுறவு என்பது சுத்தத்தைப் பற்றியது அல்ல, பிறப்புறுப்பில் உள்ள கிருமிகளைவிட பலமடங்கு மோசமான அதிகமான கிருமிகள் நமது வாயில் உள்ளன.  இருப்பினும் குளித்துவிட்டு மெலிதான deo spray போட்டுக் கொண்டு மெல்லிய வெளிச்சத்தில் ஈடுபடுவது நலம்.  ஐம்புலன்களும் திருப்தி அடைய வேண்டுமல்லவா..!!

ஆரம்பிக்கும் முன் உணர வேண்டிய முதல் சமாச்சாரம் சாதாரண தொடுதலுக்கும் கலவிக்குண்டான சீண்டலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும்.  சிலருக்கு பிடித்திருக்கும், சிலருக்கு பிடிக்காது.  உடற்கூற்றின் படி ஆண்களை விட பெண்களுக்கு அந்த நேரத்தில் சீண்டல்கள் நிரம்பப் பிடிக்கும்.  வருந்தத் தக்க ஒரு விஷயம் என்னன்னா பெரும்பாலான தம்பதிகள் உடலுறவைப் பற்றி நிறைய பேசுவதே இல்லை.  இந்த மேட்டர்ல நேரான நேர்மையான விருப்பு வெறுப்புக்களை பேசலானா வேற எதுல பெருசா பேசித் தீத்துடுவீங்க..!?

திருமணம் ஆகாதவர்கள் என்றால் உங்கள் பார்ட்னரை sex-க்கு வற்புறுத்துவதோ, அவர்களை உணர்வுப் பூர்வமாக blackmail செய்வதோ வேண்டாம்.  அது உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.  நீங்கள் ஒரு அன்புக்குரியவராக அல்லாமல் அலைச்சல் பார்ட்டியாக அர்த்தம் கொள்ளப் படலாம்.  எல்லாவற்றிலும் போல sex-லும் அடுத்தவர்களின் உணர்வுக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.

உங்கள் பார்ட்னர் பொறாமைப் படவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களைப் பார்த்து கமென்ட் அடிக்க வேண்டாம், மிக முட்டாள்த்தனமான செயல் அது.  sex-ம், உறவும் சேர்ந்திருத்தலும் அவரவர் அணுகுமுறையைப் பொருத்தது.  உங்கள் திருப்தியையும் உங்கள் பார்ட்னரின் ஆசைகளையும் செயலில் இறங்கும் முன் பேசி, புரிந்து தீர்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது இதைப் பற்றி நாம் நம் குழந்தைகளிடம் பேசப் போகிறோம்? அவர்களுடைய வயதையும் பக்குவத்தையும் பொருத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசுவோம்.  எடுத்த எடுப்பில் அனைத்தையும் கொட்டிவிடப் போவதில்லை, சிறு சிறு விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்..!!
 தீவிரவாதம், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை, இன்டர்நெட் பலான படங்கள் போன்றவற்றை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது.  குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி கற்றுத் தருவதுதான் பெற்றோர் கடமை.  அதற்காக ஒன்னுமே தெரியாமல் வளர்ப்பதும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.  அப்பாவியாக இருந்து விடாமல் அந்தந்த பருவ வயதிற்கேற்ற விளையாட்டு, வேடிக்கைகளுடன் அவர்கள் வளர்வதே சிறந்தது.

உங்கள் பதின்ம வயது மகனோ மகளோ நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்றால், அனுமதியுங்கள்.  இளவயதில் நாலு இடம் போய் வந்து பழகுவது பின்னாளில் அவர்களுக்கு வரும் எந்தவொரு சங்கடத்தையும் சமாளிக்க உதவும்.  தேவையான அளவு பணம் கொடுத்து பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பி வைக்கலாம்.  அதை விடுத்து "உன்னுடன் யார் யாரெல்லாம் வர்றாங்க, அதுல எத்தன பசங்க, எத்தன பொண்ணுங்க" இது மாதிரியெல்லாம் கேட்டா அவர்களின் மூளை உடனடியாக தற்காப்பு mode-ல் வேலை செய்து பொய் பேசி சமாளிக்கலாம்.  அல்லது பெற்றோர் நம்மை நம்பவில்லையோ என்ற எண்ணம் தோன்றலாம்..!!

குழந்தைகளை நம்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.  குழந்தைகளுக்கு நாம் அருகில் இருத்தல் பிடிக்கும் அவர்களை நாம் ஊடுருவவது தெரியாமல் இருக்கும் வரை...!!  ஒவ்வொரு குழந்தைக்கும் "தான், தன், சுய" என ஒன்று தேவைப் படுகிறது.  பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று அலுத்துக் கொள்வது இதற்காகத்தான்.  தலைமுறை இடைவெளி என்பதை மாற்ற இயலாது.  உதாரணமாக அவர்களுக்கு வரும் பார்சலை பிரித்தல், அவர்கள் போனை எடுத்து நோண்டுதல் போன்ற வேலைகளை செய்தால் நம்மை தாண்டிச் செல்ல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

முடிந்தால் பிறிதொரு சமயம் "அறிந்தும் அறியாமலும் -3"ல் சந்திக்கலாம்.

அன்புடன்
மலர்வண்ணன்

5 comments :

  1. Replies
    1. வணக்கம் சாரே... வாங்கோ...
      ஆத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்காளா..?!

      Delete
  2. நல்ல கட்டுரை மலர். பொதுவாக இது குறித்து அறிவியல் சார்ந்து பொது வெளியில் நம்மூரில் மக்கள் பேசுவது மிகவும் குறைவு. பெரும்பான்மையானோருக்கு இதைப் பற்றிய நல்ல அறிவியல் அறிவு இருப்பதாகத் தெரியவில்லை. மட்டுமல்ல ப்ரோஜெனி என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே என்றுதான் பெரும்பாலாரும்.

    வலையில் தைரியமாக எழுதும் பெண்கள் எங்களுக்குப் பரிச்சயமான இருவர் காயத்ரி மற்றும் கௌசல்யா.

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதற்கு தைரியம் எதுக்குங்க..?!
      மொழியும், அறிவும் இருந்தால் போதாதா!! மற்றதெல்லாம் தானா வரும்...

      Delete