Saturday, 10 September 2016

ராஜாவும் விமர்சக வித்துவான்களும்

குற்றமே தண்டனை படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை சுத்த மோசம் என ஒரு சில இசை வித்துவான்கள் கடந்த சில நாட்களாக 80-களில் டைப்ரைட்டிங்கில் லோயர் பாஸ் பண்ண ஒரே காரணத்தால் கீபோர்டில் தட்டி தீர்க்கின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் முக்கிய காரணம் இசை சர்வதேச தரத்தில் இல்லையாம்...!!

ஹாடின், ச்கோவ்ஸ்கி, மொசார்ட், பாக், ப்ராம்ஹ்ஸ், பீத்தோவன் இசையைக் கேட்டே வளர்ந்த புள்ளைங்க போல, ராஜாவின் இசையை சகித்துக் கொள்ள முடியலயாம்... நாம ஏதாவது கமெண்ட் போட்டா, "ஒரு வித்துவான பார்த்து கேக்குற கேள்வியாடா இது?!"ன்னு திருப்பி கேக்குறாங்க!!


அதுக்கு நாலு பேர் சம்பந்தமே இல்லாம "Chunhyang-ல Kim Jung-gil சும்மா உருக்கியிருப்பாரு"ன்னு ஒருத்தர் கமெண்ட் போட, இன்னொருத்தர், "ப்ரோ, Blanche Neige-வ விட்டுட்டீங்களே, Gustav Mahler பிரிச்சிருப்பாரு"ன்னு எச பாட்டு பாடுவாரு... வெரி டேஞ்சரஸ் மெடீரியல்ஸ்!!

இளையராஜாவின் முரட்டு பக்தர் கூட்டம் ஒரு பக்கம், "டாய்..."ன்னு சுறாவுல விஜய்ண்ணா ஓப்பனிங்க்ல வர்றா மாதிரி வந்து பதிவாளரையும் அவருடைய பரம்பரையின் கல்தோன்றா காலத்தின் மூத்த குடி வரை இழுத்து வசை பாடுவார்கள்... டாஸ்மாக் டயபாலிக்ஸ்!!

அடுத்து வருவது புள்ளிராஜா கூட்டம், ராஜாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் என டவுசர்ராமராஜன், மைக்மோகன் படங்களா எடுத்து குடுத்து, ரமணா விஜயகாந்தே காண்டாகி லிஸ்ட் போட்டு தூக்குற அளவுக்கு புள்ளி வெவரம் அடிச்சு விடுவார்கள்... ஹார்ம்லெஸ் பீப்புள்!!

நம்ம லோயர் பாஸ் கீபோர்டு வித்துவான்கள் அப்படியே மேலே போவது போல மதப்பில் மிதப்பார்கள். ஆக்சுவலி இது ஒரு வகையான உளவியல் சிக்கல். இவர்கள் ஒரு டைப்பான maniacs . நட்பு வட்டத்தில் ஒரு ரெண்டு மூவாயிரம் பேரை சேர்த்துக் கொண்டு அவர்களை தினமும் மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு கண்டதையும் போட்டு கும்மி அடிப்பவர்கள். கமெண்ட்டுகளில் தங்களுக்கு வரும் வசவுகளையும், ஒரு சிலர் அடித்துக் கொள்வதையும் டைம் டேபிள் போட்டு ரசிப்பவர்கள்... க்ரேசி லூனாட்டிக்ஸ்!!
 ரெண்டு நாள் கழிச்சு,
"இப்படி நான் ஆனதில்லை...
புத்தி மாறிப் போனதில்லை...
முன்னபின்ன நேர்ந்ததில்ல...
மூக்குநுனி வேர்த்ததில்ல..."
"ஆஹா ராஜா சார், கொன்னுட்டாரு, பின்னிட்டாரு.."ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவாங்க. அதே முரட்டு பக்தர் கூட்டம் இம்முறை தூக்கி வைத்துக் கொண்டாடும். ரெண்டு நாள் கழிச்சு ரிப்பீட்டு, இம்முறை ரஜினியோ, ரஹ்மானாவோ இருக்கலாம்!! ஆனா சீரான இடைவெளியில் இவர்களின் பதிவுகளில் இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.

"இவ்ளோ பேசுறியே, உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும்? சங்கதி தெரியுமா? கர்நாடகா தெரியுமா? காவேரி தெரியுமா? சுதியை ஏத்தி இறக்க தெரியுமா?"ன்னு எந்த வித்துவானாவது கேட்டா அதுக்கு என்னோட ஒரே பதில்,
"ஆமா, எனக்கு இசையைப் பத்தி ஒரு கூந்தலும் தெரியாது, ஆனா இளையராஜாவோட இசை இல்லன்னா ஒரு வேளை நான் பாலா பட ஹீரோ மாதிரியோ, பெண்ணா இருந்தா பாலச்சந்தர் பட ஹீரோயின் மாதிரியோ ஆகியிருக்கலாம்..."Sunday, 4 September 2016

பெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்

பாமக தலைமையில் சமீபத்தில் தலித்துகள் அல்லோதார் கூட்டத்தின் கருத்தரங்கின்(!) முடிவில் எடுக்கப்பட்ட அவங்களே சொல்லிக்கிற தீர்மானங்கள், தஞ்சாவூர் மட்டுமன்றி அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, பிரமிட், சீனப் பெருஞ்சுவர், கொலோசியம், ஈபில் டவர்  உள்ளிட்ட அனைத்து கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை...

1.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்த பின்னர் தான் காதலிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
 - சூப்பரப்பு... அப்புறமா இவுங்களே கட்சி செலவுல லவ் பண்றதுக்குண்டான எல்லா வசதியும் பண்ணி குடுத்து, சீர் செனத்தி எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வெப்பாங்க..!!

2.தமிழக அரசு இரு பாலர் கல்வி முறையை ஒழித்து விட்டு பெண் பாலினத்திற்கு தனி கல்வி நிலையங்களும், ஆண் பாலினத்திற்கு தனி கல்வி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும்.
 - இதுக்கு பதிலா சாதி வாரியான பள்ளிக்கூடங்களை தொறந்து வெச்சுட்டா எந்தப் பிரச்னையும் இருக்காதே!! இஸ்கூலுக்கு அனுப்பினா மாதிரியும் ஆச்சு, வரன் பாத்தா மாதிரியும் ஆச்சு..

3.ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பி.சி.ஆர்., சட்டம் என்று இருக்கிறதாம்.  நாம் அனைவரும் சேர்ந்து பி.சி.ஆர். சட்டத்தை விட பெரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
 - ஆமாமா... நல்லா பெருசா 300-க்கு 300 அடியில பெரிய சட்டமா செஞ்சு வைங்க... பாக்குறவன் ச்சும்மா மிரளணும்..!!

4.காதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 1 கோடி வழங்கவேண்டும்.
 - பெண்களுக்குண்டான சுய வேலை வாய்ப்பை இத்திட்டம் வெகுவாக நிறைவு செய்யும்.  பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 பேர் கொண்டு குழு அமைக்கப் படும்.

5.பத்திரிக்கைகள் ஒரு தலை காதல் என்று எழுத கூடாது, பெண்கள் மீதான வன்முறை என்று தான் எழுத வேண்டும்.
 - நல்லா கேட்டுக்கோங்க பத்திரிக்கைகளே..., இனிமே வன்முறை, ஒரு தலை வன்முறை, கூடா வன்முறை, கள்ள வன்முறை, மச்சினி மேல் வன்முறை, பக்கத்து வீட்டு வன்முறை-ன்னு தான் எழுதணும்.  இது மக்கள் தொலைக்காட்சியில் உடனடியாக நடைமுறை படுத்தப் படும்.  தலைவர் டமில்குடிடாங்கி வீட்ல கூட வன்முறை திருமணம் நடந்துச்சாமே, மெய்யாலுமா..?!

6.பெண்களுக்கு தனி பள்ளி, தனி போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடம் அமைத்து தர வேண்டும்.
 - அப்படியே பெண்களுக்கான தனி கோயில், தனி சினிமா தியேட்டர், தனி கல்யாண மண்டபம், தனி விமானம்-கப்பல், தனி ஷாப்பிங் மால், தனி டாஸ்மாக் அனைத்தும் அமைத்துத் தரப்பட வேண்டும்.  கழிப்பிடம் பாதுகாப்பற்றது என்பதால் அடக்கிக் கொண்டு வீட்டில் மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.

7.பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும்.
 - ஆம்... மரக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், பத்தலன்னா கா.வெ.கு. தலைமையில் ஹைவேயில் மிச்சம் மீதி உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உபயோகப் படுத்தப் படும்.

8.பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
 - அது கான்டியும் பத்தாது, பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் செல்போன், டெலிபோன், கிராமபோன், இயர்போன், ஹெட்போன், மெகாபோன், சாக்ஸோபோன், ஸ்பீக்கர்போன், பாலிபோன், மைக்ரோபோன் உள்ளிட்ட அனைத்து வகையான போன்களையும் தடை செய்ய வேண்டும்.  பொம்மை சைனா போன் கூட வாங்கித் தரக் கூடாது.

9.பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிப்பதோடு செக் பண்ண வேண்டும்.
 - இதற்காக ஏரியா வாரியாக தனித் தனிக் குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களையே எந்நேரமும் வெறிக்க வெறிக்க கண்காணிப்பார்கள்..  அவ்வப்போது செல்போனை பிடுங்கி சிக்னல், பேட்டரி, பேலன்ஸ் எல்லாம் சரியா உள்ளதா என செக் பண்ணுவார்கள்..!!

லேகியம் விக்கிறவனாட்டம் காதுல ஒரு மிசின மாட்டிக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே "மாற்றம்-முன்னேற்றம்",  "மொத நாள், மொதா கையெழுத்து", "அன்புமணியாகிய நான்..."ன்னு அபிராமியை பாத்த குணா கணக்கா இருந்தவரை குணமாக்கிட்டு பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்து அன்பு சகோதரியே, திராவிடத் தலைவரே, இளைஞர்களை கெடுக்கும் ரஜினியே-ன்னு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிங்க டாக்டர் சாரே...!!

எங்களுக்கும் பொழுது போகணும்ல...!!

குற்றமே தண்டனை

ஆரஞ்சுமிட்டாய், விசாரணை படங்களைத் தொடர்ந்து பாடல்கள் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக நறுக்கென்று ஒரு படம்.
ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள், இருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், விசாரணை நடக்கிறது, சம்பந்தப் பட்டவர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக பிடி இறுகுகிறது, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் இறுதியில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் மற்றும் குற்றமே தண்டனை...

பார்வைக் குறைபாடால் பாதிக்கப்பட்டு அதை வெளியே தெரியாமல் மறைக்க இயல்பாகத் தடுமாறும் விதார்த்,
மகனின் பிரிவால் விதார்த்திடம் பரிவுடன் இருக்கும் நாசர்,
கூர்மையான பார்வையுடன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து,
வெறும் பார்வையிலேயே அள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்,
பயத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு கம்பீரமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ரஹ்மான்,
குறிப்பாக "ஜி.., ஜி..." எனப் பேரம் பேசும் சோமசுந்தரம்!! பின்னிட்டாங்க...

இயல்பான சுருக் வசனங்கள்!!

"எது தேவையோ அது தர்மம்..."(ஆ.கா.ரிப்பீட்டு)

"ஒண்ணும் தெரியாதுன்றங்க, ஆனா வரும் போதே வக்கீலோட வந்துடுறாங்க.."

"பக்கத்து வீட்ல இடியே விழுந்தாலும், டிவில நீயா நானா பாத்துகிட்டிருந்தோம்னுதான் சொல்லுவாங்க..."

"நம்ம ரேட்டை நாம தான் முடிவு பண்ணனும்..."

"உன்னை யாரு அந்தப் பையனை அடையாளம் காட்ட சொன்னா?"
"ஆக்சுவலா, உங்களைப் போட்டுக் கொடுக்கத்தான் போனேன்..."

"அவன் ஜீ.. போட்டு பேசுறத கேட்டாலே எரிச்சலா வருது..." இதற்கு கட்டாயம் குரு சோமசுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். பார்க்கிற நமக்கே வெறுப்பாகிறது. காளையன், ஜோக்கர் தொடர்ந்து மீண்டும் இதில் ஒரு negative mediator கேரக்டராகவே வாழ்கிறார்.

க்ரைம் த்ரில்லர் என நிச்சயமாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ணத்தில் உள்ள வெறி, ஆசை, இரக்கம், குரூரம், பயம், அன்பு, காமம், தேவை உள்ளிட்ட உணர்வுகளை உள்ளது உள்ளபடி காட்டும் முயற்சி. இதில் இயக்குனர் வெற்றி பெற்று விட்டார். மிஷ்கின் அளவிற்கு இல்லையென்றாலும் மணிகண்டன் இதில் ஆங்காங்கே சில குறியீடுகளை சிதற விட்டிருப்பார்.

அயர்ன் கடை வைத்திருக்கும் 'பசி' சத்யா விதார்த்திடம், 'உங்களை அந்தப் பக்கம் பார்த்த மாதிரி இருந்துச்சு' என சொல்லி விட்டுப் போவது...,
கூண்டுப் பறவைகளின் சத்தம் விதார்த்திற்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பது...,
பின்னாளில் அப்பறவைகள் செத்துக் கிடப்பது...,
"இனிமேல் நீ இங்க வராதே.." என நாசர் சொல்வது...
விதார்த் சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் வட்டங்கள்...

பின்னணிக்கு சவால் விடும் படம் என்றாலும் ராஜா ச்ச்சும்மா கலக்கிவிட்டார். குருட்டுப் பெண்ணை ரோடு க்ராஸ் செய்து விடுகையில், பறவைகளின் சத்தம் விதார்த் மண்டையில் ஓடும் இடத்தில், மற்றும் கோர்ட்டிலிருந்து விதார்த் வெளியேறி இறுதிக்கு காட்சியில் பூஜாவுடன் நடந்து செல்லும் வரை வெறும் விஷுவலாக காட்டிய காட்சிகளின் உயிருக்கு உயிரூட்டிய பின்னணி - முன்னணி..!!

மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவு... விதார்த்தின் tunnel vision-ஐ பைப் வழியே பார்ப்பது போல் பார்வையாளனுக்கு தேவையான இடங்களில் மட்டும் காட்டியதில் மணிகண்டன் முத்திரையிடுகிறார்.

உலகத் தரத்தில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம்... இதுபோல் நிறைய வர வேண்டும்... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...!! சினிமா பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்...

--------------------------------------------------------------------------------------------------

ஸ்வாதி கொலையை சம்பந்தப் படுத்தி எடுத்த படம்னு சில பேரு ஏன் ஜல்லியடிச்சிட்டு இருக்காங்கன்னு சத்தியமா புரியல..!!

- மலர்வண்ணன்