Sunday 4 September 2016

குற்றமே தண்டனை

ஆரஞ்சுமிட்டாய், விசாரணை படங்களைத் தொடர்ந்து பாடல்கள் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக நறுக்கென்று ஒரு படம்.
ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள், இருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், விசாரணை நடக்கிறது, சம்பந்தப் பட்டவர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக பிடி இறுகுகிறது, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் இறுதியில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் மற்றும் குற்றமே தண்டனை...

பார்வைக் குறைபாடால் பாதிக்கப்பட்டு அதை வெளியே தெரியாமல் மறைக்க இயல்பாகத் தடுமாறும் விதார்த்,
மகனின் பிரிவால் விதார்த்திடம் பரிவுடன் இருக்கும் நாசர்,
கூர்மையான பார்வையுடன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து,
வெறும் பார்வையிலேயே அள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்,
பயத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு கம்பீரமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ரஹ்மான்,
குறிப்பாக "ஜி.., ஜி..." எனப் பேரம் பேசும் சோமசுந்தரம்!! பின்னிட்டாங்க...

இயல்பான சுருக் வசனங்கள்!!

"எது தேவையோ அது தர்மம்..."(ஆ.கா.ரிப்பீட்டு)

"ஒண்ணும் தெரியாதுன்றங்க, ஆனா வரும் போதே வக்கீலோட வந்துடுறாங்க.."

"பக்கத்து வீட்ல இடியே விழுந்தாலும், டிவில நீயா நானா பாத்துகிட்டிருந்தோம்னுதான் சொல்லுவாங்க..."

"நம்ம ரேட்டை நாம தான் முடிவு பண்ணனும்..."

"உன்னை யாரு அந்தப் பையனை அடையாளம் காட்ட சொன்னா?"
"ஆக்சுவலா, உங்களைப் போட்டுக் கொடுக்கத்தான் போனேன்..."

"அவன் ஜீ.. போட்டு பேசுறத கேட்டாலே எரிச்சலா வருது..." இதற்கு கட்டாயம் குரு சோமசுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். பார்க்கிற நமக்கே வெறுப்பாகிறது. காளையன், ஜோக்கர் தொடர்ந்து மீண்டும் இதில் ஒரு negative mediator கேரக்டராகவே வாழ்கிறார்.

க்ரைம் த்ரில்லர் என நிச்சயமாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ணத்தில் உள்ள வெறி, ஆசை, இரக்கம், குரூரம், பயம், அன்பு, காமம், தேவை உள்ளிட்ட உணர்வுகளை உள்ளது உள்ளபடி காட்டும் முயற்சி. இதில் இயக்குனர் வெற்றி பெற்று விட்டார். மிஷ்கின் அளவிற்கு இல்லையென்றாலும் மணிகண்டன் இதில் ஆங்காங்கே சில குறியீடுகளை சிதற விட்டிருப்பார்.

அயர்ன் கடை வைத்திருக்கும் 'பசி' சத்யா விதார்த்திடம், 'உங்களை அந்தப் பக்கம் பார்த்த மாதிரி இருந்துச்சு' என சொல்லி விட்டுப் போவது...,
கூண்டுப் பறவைகளின் சத்தம் விதார்த்திற்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பது...,
பின்னாளில் அப்பறவைகள் செத்துக் கிடப்பது...,
"இனிமேல் நீ இங்க வராதே.." என நாசர் சொல்வது...
விதார்த் சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் வட்டங்கள்...

பின்னணிக்கு சவால் விடும் படம் என்றாலும் ராஜா ச்ச்சும்மா கலக்கிவிட்டார். குருட்டுப் பெண்ணை ரோடு க்ராஸ் செய்து விடுகையில், பறவைகளின் சத்தம் விதார்த் மண்டையில் ஓடும் இடத்தில், மற்றும் கோர்ட்டிலிருந்து விதார்த் வெளியேறி இறுதிக்கு காட்சியில் பூஜாவுடன் நடந்து செல்லும் வரை வெறும் விஷுவலாக காட்டிய காட்சிகளின் உயிருக்கு உயிரூட்டிய பின்னணி - முன்னணி..!!

மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவு... விதார்த்தின் tunnel vision-ஐ பைப் வழியே பார்ப்பது போல் பார்வையாளனுக்கு தேவையான இடங்களில் மட்டும் காட்டியதில் மணிகண்டன் முத்திரையிடுகிறார்.

உலகத் தரத்தில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம்... இதுபோல் நிறைய வர வேண்டும்... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...!! சினிமா பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்...

--------------------------------------------------------------------------------------------------

ஸ்வாதி கொலையை சம்பந்தப் படுத்தி எடுத்த படம்னு சில பேரு ஏன் ஜல்லியடிச்சிட்டு இருக்காங்கன்னு சத்தியமா புரியல..!!

- மலர்வண்ணன்

No comments :

Post a Comment