Saturday, 1 July 2017

வெஸ்டர்ன் யூனியனும் வெச்சு செஞ்சவங்களும்


கடந்த ரெண்டு வாரத்தில் நாலைஞ்சு தடவ western union outletகளுக்கு சென்று server வேலை செய்யல என திருப்பி அனுப்பி விட்டதால் இன்னைக்கு ஆலந்தூர் போஸ்ட் ஆபீசுக்கு காலையில 09:45க்கே போயிட்டேன். உள்ள இருந்த ஏழெட்டு கவுன்ட்டர்களில் ஆள் இருந்த ஒரே கவுன்ட்டருக்கு சென்று "வெஸ்டர்ன் யூனியன் பார்ம் ஒன்னு குடுங்க"ன்னு கேட்க, விளம்பரத்துல வர்ற டீச்சர் மாதிரி இருந்த அம்மா "வெயிட் பண்ணுங்க"ன்னு சொல்ல, பண்ணினேன்.

பக்கத்தில் இருந்த ஒருவரிடம்
"எத்தனை மணிக்கு"ன்னு கேட்க, "பத்து மணிக்குங்க, ஆனா குயிக்கா பத்தரைக்கெல்லாம் ஆரம்பிச்சுடுவாங்க"ன்னார்... 10:10 ஆனது, கவுன்ட்டர் பக்கத்துல பேசிக்கிட்டு இருந்த ரெண்டு தாய்க்குலத்துக்கிட்ட போய் பார்ம் கேட்கலாம்னு போனேன், ஒரு அக்கா சொல்லுது, "என் தங்கச்சி கிறிஸ்டியன் பையன கல்யாணம் பண்ணப்ப என் நாத்தனாரும், மாமியாரும் என்கிட்டே அவ்ளோ பேச்சு பேசுச்சீங்க, நேத்து என் மச்சான்டார் ஒரு முஸ்லீம் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்..." சொல்லும் போதே அந்தக்கா முகத்தில் இந்தியா வல்லரசான பெருமை. கேட்டுட்டு இருந்த அக்கா, "ம்ம்... இனிமே உங்க மாமியாருக்கு பிரியாணி கவலை இல்ல"ன்னு அடிச்சுவிட அவங்க நார்மல் மோடுக்கு வர்ற வெகுநேரம் ஆகும் போல் தெரிந்தது.

அடுத்த ரெண்டு சகோதரிகளை நோக்கி மெதுவா நகர, அங்கோ,
"நமீதா பார்த்தீங்களா... உடம்ப என்னம்மா குறைச்சுட்டா!!"ன்னு ஒன்னு சொல்ல, இன்னொன்னோ, "பாத்ரூம் தவிர எல்லா இடத்துலயும் கேமிரா இருக்குமாமே, இந்த கமல் சரியான அசிங்கம் புடிச்சவன்"ன்னு அளக்க, திரும்பவும் வந்து உட்கார்ந்துட்டேன்.

10:15... நம்ம கவுன்ட்டருல ஒரு பொண்ணு வர்ற, குடுகுடுன்னு ஓடிப் போயி பார்ம் கேட்டதும் டக்குன்னு குடுத்துருச்சி. பொறுமையா எல்லாத்தையும் எழுதி ஆதார் கார்ட் காப்பியும் வெச்சு குடுக்க, லொட் லொட்டுன்னு எதையோ தட்டுன புள்ள, ஆதார் கார்டையே கொஞ்ச நேரம் முறைச்சு பாத்துச்சு, அப்புறம் என் மூஞ்ச அதே மாதிரி பார்க்க, நான் அப்படியே சின்னத்தம்பி பிரபு, சின்னஜமீன் கார்த்திக் ரேஞ்சுக்கு அப்பாவி பர்பார்மென்ஸ் பண்ண, புடிக்கலையோ என்னமோ திரும்பி குனிஞ்சு வேற எதையோ தட்டச்சு. நம்ம முகம் நேர்லயே ஆதார் கார்டு போட்டோ மாதிரி தான் இருக்கும்... அந்த பாப்பாவுக்கு டவுட் வர்றது நியாயம் தானேன்னு இருந்துட்டேன்.

"இன்னொரு ஐடி புரூப் வெச்சிருக்கீங்களா?"
ன்னு கேட்க டிரைவிங் லைசென்ஸ் எடுத்து குடுத்தேன். அது பலவருசத்துக்கு முந்தி மண்டையில சாய்பாபா மாதிரி முடி இருக்கும் போது எடுத்தது. திரும்பவும் அதை உத்து பாத்துச்சு... அப்புறம் என்னைய பாத்துச்சு, "விட்டா வாயில லிங்கம் எடுத்துத் தர சொல்லுமோ"ன்னு நெனைக்க நான் குடுத்த பார்ம்லேயே இன்னும் நாலைஞ்சு எடத்துல இன்க்ட்டு மார்க் போட்டு "இங்கெல்லாம் சைன் பண்ணிக்க குடுங்க"ன்னு சொல்ல, ஐஸ்வர்யாக்கு கட்டுப்பட்ட எந்திரன் சிட்டி போல போட்டுக் கொடுத்தேன். நான் குடுத்த ஐடி ப்ரூப்ல முன்ன பின்ன கையழுத்துப் போட்டு அதுலயும் மொபைல் நம்பர் எழுதி தரச் சொல்ல... செய்தேன். நமக்கு வேலை தானே முக்கியம்...!!

மவுஸிலும் கீ போர்டிலும் சில முறை விளையாடிவிட்டு பிரின்டரையே முறைத்துப் பார்த்தது. பிறகு அடுத்த கவுன்ட்டரில் இருந்த பையனிடம் சொல்ல, அவன் பிரிண்ட்டரை ஆன் செய்தான். திரும்பவும் பிரிண்ட் தர்ற வெள்ளைத்தாள்கள் பிரிண்ட்டர் உள்ளே சென்று இன்னும் பளபளவென வெள்ளையாகவே வெளியே வந்தன. "ஒரு நிமிஷம் சார்"ன்னு எங்கயோ போய்ட்டு வந்து திரும்பவும் பிரிண்ட் தர்ற இம்முறை சரியாக வந்தது. பட்பட்டென ஆங்காங்கே கிறுக்கி சர்ரென டேபிள் டிராயரை திறக்க,
"ஆஹா பணம் வருதுடா"ன்னு பாக்க, உள்ளேயிருந்து ஒரு ஸ்டேப்ளர் எடுத்து எல்லாத்தையும் பின் பண்ணி பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் "அவர்கிட்ட சைன் வாங்குங்க... நெக்ஸ்ட்"ன்னு போயிடுச்சு.

ஓ... ஏ.எச்.எம் சைன் செல்லாது, எச்.எம்.தான் போடணும் போலன்னு அவர்ட்ட போனேன்... போறதுக்கு முன்னாடியே டி.ஷார்ட் காலரை மடக்கி விட்டு, பட்டன் போட்டு, மண்டைமேல் சொருகி வைத்திருந்த கூலர்ஸை எடுத்து பையில் போட்டுக் கொண்டு மோடியைக் கண்ட பன்னீர்செல்வமாக பவ்யமாக அவர்முன்னால் சென்று நிற்க சும்மா உட்கார்ந்திருந்தவர் என்னைப் பார்த்ததும் ஏதோ ரெண்டு பேப்பரை எடுத்து சீரியாசாக பார்த்துக் கொண்டே என்னிடம்
"ரெண்டு நிமிஷங்க" என்றார்.

பின் என்கிட்ட இருந்த பேப்பர் எல்லாம் வாங்கி ஒவ்வொன்னுலயும் நாலைஞ்சு எடத்துல டிக் பண்ணிக்கிட்டே வந்தார், கொஞ்ச நேரம் கழிச்சு தான் புரிஞ்சது அது அவரோட கையெழுத்துன்னு... 0.94 பைசான்னு இருந்ததை ரவுண்ட் ஆப் செய்து லம்ப்பான தொகையாக மாற்றி அதன் மேலே நான்கைந்து முறை இருந்த 9கள் அனைத்தையும் 0வாக மாற்ற
"விக்ஸ்ன்ற தான்டா அப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கேன்"ன்ற ரேஞ்சுக்கு அது மாறியிருந்தது. ராமானுஜத்திடம் கேட்டா கூட சத்தியமா அந்த நம்பர் சொல்ல சாத்தியம் இல்ல... ஐடி ப்ரூப் எடுத்து உத்துப் பார்த்தாரு, அப்புறம் என்னையும் பாக்க, இந்த முறை தெய்வமகன் சிவாஜி(ஜெயலலிதா ஜோடி) மாதிரி நான் முகத்தை வெச்சுக்க..., ரெண்டு சீல் எடுத்து என்னோட பேப்பர்ல ஒன்னையும் அவர் முதல்லியே பாத்துட்டு இருந்த பேப்பர்ல ஒன்னையும் ஒன்னரை டன் வெயிட்டோட அடிச்சாரு...

பிறகு தான் தெரிஞ்சது அவர் ரெண்டு சீலையும் மாத்தி அடிச்சிருக்காருன்னு... அதுமேல பேனாவால் குறுக்க நெடுக்க கிழிச்சு,
"இங்க ஒரு கவுன்ட்டர் சைன் போடுங்க"ன்னு என்கிட்ட நீட்ட, "யோவ் பெருசு, மாத்தி அடிச்சது நீ"ன்னு சொல்ல நினைச்சலும் நமக்கு வேலை தானே முக்கியம்னு போட்டேன். டிராயரை திறந்தாரு... நரி ஊளை விட்ருச்சு சக்ஸஸ், எம் பணம் வந்துரும்னு நினைக்க, உள்ள இருந்து ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்தாரு... கடைசியா இதை ரமணா படத்துல விஜயகாந்த பின்மண்டையில அடிக்கும் போது பாத்தது, இன்னும் இருக்கான்னு யோசிக்கும் போது, பேப்பரை என் கையில குடுத்து, "இதைக் கொண்டு போய் ட்ரஷரில குடுங்க"ன்னாரு... "அப்போ நீ ஓனர் இல்லையான்னு" நெனச்சிட்டு, "செகரெட்டரியேட்டுக்கா இல்ல ஏஜி ஆபீசுக்குங்களா"ன்னு அப்பாவியா நான் கேட்க, "அட, இங்கேயே இருக்கு பாருங்க"ன்னு கை காமிச்சு அனுப்பி வெச்சாரு...

கருவூலம்... டாஸ்மாக் கடை போல சுற்றிலும் கம்பிகள் போடப்பட்டு ஒரு கை நுழையும் அளவுக்கு மட்டும் இடம் இருக்க உள்ளிருந்த பெண்ணிடம் பேப்பரை கொடுத்தேன். அந்தம்மா அருகில் இருந்த ஒரு பெருசிடம்
"சார், வெஸ்டர்ன் யூனியன் பைசா கொடுக்கலாமா"ன்னு கேட்க எனக்கோ "அடிப்பாவி இத்த நான் பார்ம் வாங்கறதுக்கு முன்னாடி சொல்ல மாட்டீங்களா" என நினைக்க, அந்த பெருசோ "ஆங், குடுங்க"ன்னு சொல்லி ஆசீர்வதித்தார். பின் என்னுடைய பேப்பரை வாங்கி ஐடி ப்ரூப் பக்கத்திற்கு சென்று பின் என்னை நோக்கி ஸ்லோ மோஷனில் தலையை தூக்கி மகளின் திருமண போட்டோவை முதன்முதலாக பார்க்கும் வேலு நாயக்கரைப் போல என்னைப் பார்க்க, நானோ கற்ற வித்தை அத்தனையும் மொத்தமாக முதலிலேயே இறக்கி விட்டதால் கையறு நிலையில்... ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நிலையில் ஜிம் கேரியின் பெர்பார்மென்ஸை முயற்சி செய்ய ஆஸ்காரே கிடைத்தது.

பணத்தை எண்ணிப் பார்த்து எடுத்துக் கொண்டு வெளியே வர்ற, காக்கி சட்டையில் ஒரு ஆணும் காக்கி சுரிதாரில் ஒரு பெண்ணும் தங்கள் சட்டைகளில் இந்திய தபால் துறையின் லோகோ மின்ன
"சார், டீ க்கு ஏதாவது பாத்து பண்ணிட்டு போங்க"
ன்னு கேட்டாங்க பாரு...!!


 - அன்புடன்
 - மலர்வண்ணன்