Tuesday 28 November 2017

இட்டேரி ரோடும் ஞானும் பின்னே பேபிக்காவும்


நான் பிறந்து எட்டு மாசத்தில இருந்து கிட்டத்தட்ட அஞ்சு வருசம் வரைக்கும் பகல் முழுக்க வளர்ந்தது பேபி அக்கா வீட்டில் தானாம். ஸ்கூல்ல அவங்க பேரு நூர்ஜஹான், வீட்டுல கூப்பிடறது பேபி, எனக்கு பேபிக்கா... பொன்னம்மாபேட்டை குமரிமுதலி தெருவிலிருந்து மாறி அஸ்தம்பட்டி இட்டேரி ரோடு வீட்டுக்கு வந்தப்பறம் தான் நான் குமாரசாமிபாட்டி மகப்பேறு மருத்துவமனையில பிறந்தேனாம். இட்டேரி ரோட்டிலுடனான உறவுகளைப் பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.

எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான் பேபிக்கா வீடு, அந்த ரோடில் அப்போதுள்ள மிகப்பெரிய வீடு அவர்களுடையது தான். அவருடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள்... அவர்கள் அம்மாவை பீபீயம்மா என அந்த ஏரியா முழுவதும் அழைப்பார்கள், அப்பா ரஷீத் பிரேக் இன்ஸ்பெக்டர். ஃபியட் கார் வைத்திருப்பார்கள். அவர்களுக்கென சில லாரிகளும் ஓடிக் கொண்டிருந்தன.

எட்டு மாதக் குழந்தையாக எட்டி வைத்த வயதில் ஒரு நாள் அம்மா எனை வெளியே வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க, பேபிக்காவின் முதல் தம்பி பாபு என்னை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றாராம். அன்றிலிருந்து அடுத்த நான்கு வருடங்களுக்கு இரவில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்தும் பேபிக்காவின் வீட்டில்தானாம், அப்பா உமாநகரில் சொந்த வீடு கட்டி வரும் வரை...

எனக்குண்டான தொட்டில் முதற்கொண்டு சாப்பிட தட்டு, உடை, செருப்பு என அவர்கள் வீட்டில் சகலமும் எனக்காக தனியாக வாங்கி வைத்து விட்டிருந்தனாராம். பிறர் என்னைப்பற்றி அம்மாவிடம் விசாரிக்கும் போது, 'எங்க உங்க பாய் பையன்?' என்று தான் கேட்பார்களாம். இவையெல்லாம் எனக்கு எதுவும் சரியாக நினைவில் இல்லை.

நினைவு தெரிந்த ஐந்தாவது வயதில் வீடு மாறி நாங்கள் வந்து விட்டாலும், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பாபு அண்ணாவோ, அவர் தம்பி அன்வர் அண்ணாவோ காலையில் வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். அப்போது CMC-யில் MBBS படித்துக் கொண்டிருந்த பேபிக்காவும் வந்து விடுவார்கள். அப்புறம் என்ன! ராஜ மரியாதை தான்... நிறுத்தாமல் பழம், பிஸ்கட் என மாறி மாறி ஊட்டி விடுவதும், ஒரு ரூம் முழுக்க விளையாட்டு பொம்மைகளை எனக்காக குவித்து வைத்திருப்பதும், நான் எதை செய்தாலும் அனைவரும் சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் என எஸ்.ஏ.ராஜ்குமார் லாலாலா இல்லாமலே நான் மகிழ்ந்திருந்த காலம்...

பேபிக்கா எனைக் கெஞ்சி கொஞ்சி சோறு ஊட்டியது எல்லாம் சொர்க்கம், ரொம்ப அடம் பிடித்தால் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மூத்த அண்ணன் ஒரு மிரட்டல் விடுவார். மதியம் சாப்பாடு முடிந்ததும் அன்வர் அண்ணாவோ பாபு அண்ணாவோ ஏதாவது ஒரு படத்திற்கு கூட்டிச் சென்று விடுவார்கள். எல்லாம் புதுப் படம் தான், போயிட்டு வந்து வீட்டில் கதை சொல்லும் போது அண்ணனும் அக்காவும் செம காண்டாவதை ரசிப்பதில் அப்படியொரு ஆனந்தம்... இரவு உணவையும் முடித்து விட்டு தான் வீடு திரும்புவோம். எட்டு மணி தாண்டி விட்டாலே அப்பா தெருமுனையில் கடுகடுவென காத்திருப்பார்...

சில வருடங்கள் கழித்து பேபிக்கா டாக்டர் ஆகி விட்டிருக்க, அவருக்கும் இன்னொரு டாக்டர் மாப்பிள்ளைக்கும் கல்யாணம் சேலம் நேஷனல் ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. சாதாரணமாகவே பேபிக்கா செம்ம அழகு, திருமண உடையில் நூர்ஜஹான் போலவே... அன்று பேபிக்கா பீபீயம்மாவை விட என்னைக் கட்டிக் கொண்டு அழுததுதான் அதிகம். ஏன் அழுகிறார்கள் என்று எனக்குப் புரியாமலே பிரியாணியை நல்லா கட்டினேன். திருமணம் முடித்த கையேடு பேபிக்கா கணவருடன் துபாய் சென்று விட்டார்கள்.

அடுத்த சில வருடங்களில் ஒரு விபத்தில் அன்வர் அண்ணா இறந்து விட, அந்த தகவலே எங்களுக்கு நான்கைந்து நாட்கள் கழித்துத்தான் தெரிய வர, தெரிந்த மறுகணமே அப்பா எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு செல்ல, அழுது முடித்த வீடு ஒரு நீண்ட அமைதியான ஓய்வில் இருந்தது... வீட்டினுள் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என ஒவ்வொருவராகச் செல்ல பாபு அண்ணா என்னை வெளியே நிறுத்திக் கொண்டு அழுக ஆரம்பித்தார். உள்ளிருந்து எந்த பேச்சுக்குரல் இல்லை... பாபு அண்ணா என்னை மெதுவாக உள்ளே அழைத்துச் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த பீபீயம்மா என்னைக் கண்டதும் கதறிய ஓலம் இருக்கிறதே... அப்படியே நடுங்கி விட்டேன்!!

அதன் பிறகு பாபு அண்ணா அவ்வப்போது வந்து எங்கள் வீட்டில் அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து செல்வார். திருமணம் முடித்து அவரும் வெளிநாடு சென்று விட்டார். அனைவரும் ஆளுக்கொரு திசையில் சென்றுவிட தாத்தாவும் பாட்டியும் பேபிக்காவின் இரண்டு குழந்தைகளை தங்களிடம் வளர்த்து வந்தனர். நானாக எப்போவாவது சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர்களை சென்று சந்திப்பேன், என் வீட்டில் என்ன காரணத்தாலோ யாருக்கும் பிடிக்காது என்பதால் சொல்லாமல் மறைத்து விடுவேன். நான் +2 படிக்கும் போது அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் பீபீயம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி தான் விடுவார் அவருடைய பேரக்குழந்தைகள் எதிரிலேயே...

சில வருடங்களுக்கு முன்பு பேபிக்கா சென்னையில் தான் இருக்கிறார் எனத் தெரிந்து அவருடைய நம்பரையும் எப்படியோ கண்டுபிடித்து அவருக்கு போன் செய்ய... மறுமுனையில் சிலநிமிடங்கள் அவரால் பேசவே முடியவில்லை... பிறகு வெகுநேரம் பேசினார் ஒரு பெண் மட்டும் தன்னோடு இருப்பதாகவும் பையன் ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெண் இங்கிலாந்திலும் இருப்பதாகக் கூறினார். 'வீட்டுக்கு வாடா' என்று கடைசியாகச் சொன்னார். 'வர்றேன்க்கா' என்று சொன்னவன் அதன் பிறகு அவரிடம் பேசவே மறந்து போனேன்...

ஒரு நாள் திடீரென அவர் ஞாபகம் வந்து போன் செய்ய, ராங் நம்பர் என்று ஒருவர் சொல்ல, மீண்டும் மீண்டும் வேறு வேறு நம்பர்களில் இருந்து டயல் செய்தாலும் அது ராங் நம்பராவே போனது. பின் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை ஏனோ விட்டுவிட்டேன்... இப்போதிருக்கும் நெட்ஒர்க்கிங்ல் அவர் நம்பரைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபம் என்றாலும், அப்போது அவரை சந்திக்காமல் விட்ட வருத்தம் தடை போட்டுக் கொண்டேயிருக்கிறது. விரைவில் பேபிக்காவை சந்திப்பேன்..


-அன்புடன்- மலர்வண்ணன்