Saturday, 10 September 2016

ராஜாவும் விமர்சக வித்துவான்களும்

குற்றமே தண்டனை படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை சுத்த மோசம் என ஒரு சில இசை வித்துவான்கள் கடந்த சில நாட்களாக 80-களில் டைப்ரைட்டிங்கில் லோயர் பாஸ் பண்ண ஒரே காரணத்தால் கீபோர்டில் தட்டி தீர்க்கின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் முக்கிய காரணம் இசை சர்வதேச தரத்தில் இல்லையாம்...!!

ஹாடின், ச்கோவ்ஸ்கி, மொசார்ட், பாக், ப்ராம்ஹ்ஸ், பீத்தோவன் இசையைக் கேட்டே வளர்ந்த புள்ளைங்க போல, ராஜாவின் இசையை சகித்துக் கொள்ள முடியலயாம்... நாம ஏதாவது கமெண்ட் போட்டா, "ஒரு வித்துவான பார்த்து கேக்குற கேள்வியாடா இது?!"ன்னு திருப்பி கேக்குறாங்க!!


அதுக்கு நாலு பேர் சம்பந்தமே இல்லாம "Chunhyang-ல Kim Jung-gil சும்மா உருக்கியிருப்பாரு"ன்னு ஒருத்தர் கமெண்ட் போட, இன்னொருத்தர், "ப்ரோ, Blanche Neige-வ விட்டுட்டீங்களே, Gustav Mahler பிரிச்சிருப்பாரு"ன்னு எச பாட்டு பாடுவாரு... வெரி டேஞ்சரஸ் மெடீரியல்ஸ்!!

இளையராஜாவின் முரட்டு பக்தர் கூட்டம் ஒரு பக்கம், "டாய்..."ன்னு சுறாவுல விஜய்ண்ணா ஓப்பனிங்க்ல வர்றா மாதிரி வந்து பதிவாளரையும் அவருடைய பரம்பரையின் கல்தோன்றா காலத்தின் மூத்த குடி வரை இழுத்து வசை பாடுவார்கள்... டாஸ்மாக் டயபாலிக்ஸ்!!

அடுத்து வருவது புள்ளிராஜா கூட்டம், ராஜாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் என டவுசர்ராமராஜன், மைக்மோகன் படங்களா எடுத்து குடுத்து, ரமணா விஜயகாந்தே காண்டாகி லிஸ்ட் போட்டு தூக்குற அளவுக்கு புள்ளி வெவரம் அடிச்சு விடுவார்கள்... ஹார்ம்லெஸ் பீப்புள்!!

நம்ம லோயர் பாஸ் கீபோர்டு வித்துவான்கள் அப்படியே மேலே போவது போல மதப்பில் மிதப்பார்கள். ஆக்சுவலி இது ஒரு வகையான உளவியல் சிக்கல். இவர்கள் ஒரு டைப்பான maniacs . நட்பு வட்டத்தில் ஒரு ரெண்டு மூவாயிரம் பேரை சேர்த்துக் கொண்டு அவர்களை தினமும் மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு கண்டதையும் போட்டு கும்மி அடிப்பவர்கள். கமெண்ட்டுகளில் தங்களுக்கு வரும் வசவுகளையும், ஒரு சிலர் அடித்துக் கொள்வதையும் டைம் டேபிள் போட்டு ரசிப்பவர்கள்... க்ரேசி லூனாட்டிக்ஸ்!!
 ரெண்டு நாள் கழிச்சு,
"இப்படி நான் ஆனதில்லை...
புத்தி மாறிப் போனதில்லை...
முன்னபின்ன நேர்ந்ததில்ல...
மூக்குநுனி வேர்த்ததில்ல..."
"ஆஹா ராஜா சார், கொன்னுட்டாரு, பின்னிட்டாரு.."ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவாங்க. அதே முரட்டு பக்தர் கூட்டம் இம்முறை தூக்கி வைத்துக் கொண்டாடும். ரெண்டு நாள் கழிச்சு ரிப்பீட்டு, இம்முறை ரஜினியோ, ரஹ்மானாவோ இருக்கலாம்!! ஆனா சீரான இடைவெளியில் இவர்களின் பதிவுகளில் இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.

"இவ்ளோ பேசுறியே, உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும்? சங்கதி தெரியுமா? கர்நாடகா தெரியுமா? காவேரி தெரியுமா? சுதியை ஏத்தி இறக்க தெரியுமா?"ன்னு எந்த வித்துவானாவது கேட்டா அதுக்கு என்னோட ஒரே பதில்,
"ஆமா, எனக்கு இசையைப் பத்தி ஒரு கூந்தலும் தெரியாது, ஆனா இளையராஜாவோட இசை இல்லன்னா ஒரு வேளை நான் பாலா பட ஹீரோ மாதிரியோ, பெண்ணா இருந்தா பாலச்சந்தர் பட ஹீரோயின் மாதிரியோ ஆகியிருக்கலாம்..."