Saturday, 1 July 2017

வெஸ்டர்ன் யூனியனும் வெச்சு செஞ்சவங்களும்


கடந்த ரெண்டு வாரத்தில் நாலைஞ்சு தடவ western union outletகளுக்கு சென்று server வேலை செய்யல என திருப்பி அனுப்பி விட்டதால் இன்னைக்கு ஆலந்தூர் போஸ்ட் ஆபீசுக்கு காலையில 09:45க்கே போயிட்டேன். உள்ள இருந்த ஏழெட்டு கவுன்ட்டர்களில் ஆள் இருந்த ஒரே கவுன்ட்டருக்கு சென்று "வெஸ்டர்ன் யூனியன் பார்ம் ஒன்னு குடுங்க"ன்னு கேட்க, விளம்பரத்துல வர்ற டீச்சர் மாதிரி இருந்த அம்மா "வெயிட் பண்ணுங்க"ன்னு சொல்ல, பண்ணினேன்.

பக்கத்தில் இருந்த ஒருவரிடம்
"எத்தனை மணிக்கு"ன்னு கேட்க, "பத்து மணிக்குங்க, ஆனா குயிக்கா பத்தரைக்கெல்லாம் ஆரம்பிச்சுடுவாங்க"ன்னார்... 10:10 ஆனது, கவுன்ட்டர் பக்கத்துல பேசிக்கிட்டு இருந்த ரெண்டு தாய்க்குலத்துக்கிட்ட போய் பார்ம் கேட்கலாம்னு போனேன், ஒரு அக்கா சொல்லுது, "என் தங்கச்சி கிறிஸ்டியன் பையன கல்யாணம் பண்ணப்ப என் நாத்தனாரும், மாமியாரும் என்கிட்டே அவ்ளோ பேச்சு பேசுச்சீங்க, நேத்து என் மச்சான்டார் ஒரு முஸ்லீம் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்..." சொல்லும் போதே அந்தக்கா முகத்தில் இந்தியா வல்லரசான பெருமை. கேட்டுட்டு இருந்த அக்கா, "ம்ம்... இனிமே உங்க மாமியாருக்கு பிரியாணி கவலை இல்ல"ன்னு அடிச்சுவிட அவங்க நார்மல் மோடுக்கு வர்ற வெகுநேரம் ஆகும் போல் தெரிந்தது.

அடுத்த ரெண்டு சகோதரிகளை நோக்கி மெதுவா நகர, அங்கோ,
"நமீதா பார்த்தீங்களா... உடம்ப என்னம்மா குறைச்சுட்டா!!"ன்னு ஒன்னு சொல்ல, இன்னொன்னோ, "பாத்ரூம் தவிர எல்லா இடத்துலயும் கேமிரா இருக்குமாமே, இந்த கமல் சரியான அசிங்கம் புடிச்சவன்"ன்னு அளக்க, திரும்பவும் வந்து உட்கார்ந்துட்டேன்.

10:15... நம்ம கவுன்ட்டருல ஒரு பொண்ணு வர்ற, குடுகுடுன்னு ஓடிப் போயி பார்ம் கேட்டதும் டக்குன்னு குடுத்துருச்சி. பொறுமையா எல்லாத்தையும் எழுதி ஆதார் கார்ட் காப்பியும் வெச்சு குடுக்க, லொட் லொட்டுன்னு எதையோ தட்டுன புள்ள, ஆதார் கார்டையே கொஞ்ச நேரம் முறைச்சு பாத்துச்சு, அப்புறம் என் மூஞ்ச அதே மாதிரி பார்க்க, நான் அப்படியே சின்னத்தம்பி பிரபு, சின்னஜமீன் கார்த்திக் ரேஞ்சுக்கு அப்பாவி பர்பார்மென்ஸ் பண்ண, புடிக்கலையோ என்னமோ திரும்பி குனிஞ்சு வேற எதையோ தட்டச்சு. நம்ம முகம் நேர்லயே ஆதார் கார்டு போட்டோ மாதிரி தான் இருக்கும்... அந்த பாப்பாவுக்கு டவுட் வர்றது நியாயம் தானேன்னு இருந்துட்டேன்.

"இன்னொரு ஐடி புரூப் வெச்சிருக்கீங்களா?"
ன்னு கேட்க டிரைவிங் லைசென்ஸ் எடுத்து குடுத்தேன். அது பலவருசத்துக்கு முந்தி மண்டையில சாய்பாபா மாதிரி முடி இருக்கும் போது எடுத்தது. திரும்பவும் அதை உத்து பாத்துச்சு... அப்புறம் என்னைய பாத்துச்சு, "விட்டா வாயில லிங்கம் எடுத்துத் தர சொல்லுமோ"ன்னு நெனைக்க நான் குடுத்த பார்ம்லேயே இன்னும் நாலைஞ்சு எடத்துல இன்க்ட்டு மார்க் போட்டு "இங்கெல்லாம் சைன் பண்ணிக்க குடுங்க"ன்னு சொல்ல, ஐஸ்வர்யாக்கு கட்டுப்பட்ட எந்திரன் சிட்டி போல போட்டுக் கொடுத்தேன். நான் குடுத்த ஐடி ப்ரூப்ல முன்ன பின்ன கையழுத்துப் போட்டு அதுலயும் மொபைல் நம்பர் எழுதி தரச் சொல்ல... செய்தேன். நமக்கு வேலை தானே முக்கியம்...!!

மவுஸிலும் கீ போர்டிலும் சில முறை விளையாடிவிட்டு பிரின்டரையே முறைத்துப் பார்த்தது. பிறகு அடுத்த கவுன்ட்டரில் இருந்த பையனிடம் சொல்ல, அவன் பிரிண்ட்டரை ஆன் செய்தான். திரும்பவும் பிரிண்ட் தர்ற வெள்ளைத்தாள்கள் பிரிண்ட்டர் உள்ளே சென்று இன்னும் பளபளவென வெள்ளையாகவே வெளியே வந்தன. "ஒரு நிமிஷம் சார்"ன்னு எங்கயோ போய்ட்டு வந்து திரும்பவும் பிரிண்ட் தர்ற இம்முறை சரியாக வந்தது. பட்பட்டென ஆங்காங்கே கிறுக்கி சர்ரென டேபிள் டிராயரை திறக்க,
"ஆஹா பணம் வருதுடா"ன்னு பாக்க, உள்ளேயிருந்து ஒரு ஸ்டேப்ளர் எடுத்து எல்லாத்தையும் பின் பண்ணி பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் "அவர்கிட்ட சைன் வாங்குங்க... நெக்ஸ்ட்"ன்னு போயிடுச்சு.

ஓ... ஏ.எச்.எம் சைன் செல்லாது, எச்.எம்.தான் போடணும் போலன்னு அவர்ட்ட போனேன்... போறதுக்கு முன்னாடியே டி.ஷார்ட் காலரை மடக்கி விட்டு, பட்டன் போட்டு, மண்டைமேல் சொருகி வைத்திருந்த கூலர்ஸை எடுத்து பையில் போட்டுக் கொண்டு மோடியைக் கண்ட பன்னீர்செல்வமாக பவ்யமாக அவர்முன்னால் சென்று நிற்க சும்மா உட்கார்ந்திருந்தவர் என்னைப் பார்த்ததும் ஏதோ ரெண்டு பேப்பரை எடுத்து சீரியாசாக பார்த்துக் கொண்டே என்னிடம்
"ரெண்டு நிமிஷங்க" என்றார்.

பின் என்கிட்ட இருந்த பேப்பர் எல்லாம் வாங்கி ஒவ்வொன்னுலயும் நாலைஞ்சு எடத்துல டிக் பண்ணிக்கிட்டே வந்தார், கொஞ்ச நேரம் கழிச்சு தான் புரிஞ்சது அது அவரோட கையெழுத்துன்னு... 0.94 பைசான்னு இருந்ததை ரவுண்ட் ஆப் செய்து லம்ப்பான தொகையாக மாற்றி அதன் மேலே நான்கைந்து முறை இருந்த 9கள் அனைத்தையும் 0வாக மாற்ற
"விக்ஸ்ன்ற தான்டா அப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கேன்"ன்ற ரேஞ்சுக்கு அது மாறியிருந்தது. ராமானுஜத்திடம் கேட்டா கூட சத்தியமா அந்த நம்பர் சொல்ல சாத்தியம் இல்ல... ஐடி ப்ரூப் எடுத்து உத்துப் பார்த்தாரு, அப்புறம் என்னையும் பாக்க, இந்த முறை தெய்வமகன் சிவாஜி(ஜெயலலிதா ஜோடி) மாதிரி நான் முகத்தை வெச்சுக்க..., ரெண்டு சீல் எடுத்து என்னோட பேப்பர்ல ஒன்னையும் அவர் முதல்லியே பாத்துட்டு இருந்த பேப்பர்ல ஒன்னையும் ஒன்னரை டன் வெயிட்டோட அடிச்சாரு...

பிறகு தான் தெரிஞ்சது அவர் ரெண்டு சீலையும் மாத்தி அடிச்சிருக்காருன்னு... அதுமேல பேனாவால் குறுக்க நெடுக்க கிழிச்சு,
"இங்க ஒரு கவுன்ட்டர் சைன் போடுங்க"ன்னு என்கிட்ட நீட்ட, "யோவ் பெருசு, மாத்தி அடிச்சது நீ"ன்னு சொல்ல நினைச்சலும் நமக்கு வேலை தானே முக்கியம்னு போட்டேன். டிராயரை திறந்தாரு... நரி ஊளை விட்ருச்சு சக்ஸஸ், எம் பணம் வந்துரும்னு நினைக்க, உள்ள இருந்து ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்தாரு... கடைசியா இதை ரமணா படத்துல விஜயகாந்த பின்மண்டையில அடிக்கும் போது பாத்தது, இன்னும் இருக்கான்னு யோசிக்கும் போது, பேப்பரை என் கையில குடுத்து, "இதைக் கொண்டு போய் ட்ரஷரில குடுங்க"ன்னாரு... "அப்போ நீ ஓனர் இல்லையான்னு" நெனச்சிட்டு, "செகரெட்டரியேட்டுக்கா இல்ல ஏஜி ஆபீசுக்குங்களா"ன்னு அப்பாவியா நான் கேட்க, "அட, இங்கேயே இருக்கு பாருங்க"ன்னு கை காமிச்சு அனுப்பி வெச்சாரு...

கருவூலம்... டாஸ்மாக் கடை போல சுற்றிலும் கம்பிகள் போடப்பட்டு ஒரு கை நுழையும் அளவுக்கு மட்டும் இடம் இருக்க உள்ளிருந்த பெண்ணிடம் பேப்பரை கொடுத்தேன். அந்தம்மா அருகில் இருந்த ஒரு பெருசிடம்
"சார், வெஸ்டர்ன் யூனியன் பைசா கொடுக்கலாமா"ன்னு கேட்க எனக்கோ "அடிப்பாவி இத்த நான் பார்ம் வாங்கறதுக்கு முன்னாடி சொல்ல மாட்டீங்களா" என நினைக்க, அந்த பெருசோ "ஆங், குடுங்க"ன்னு சொல்லி ஆசீர்வதித்தார். பின் என்னுடைய பேப்பரை வாங்கி ஐடி ப்ரூப் பக்கத்திற்கு சென்று பின் என்னை நோக்கி ஸ்லோ மோஷனில் தலையை தூக்கி மகளின் திருமண போட்டோவை முதன்முதலாக பார்க்கும் வேலு நாயக்கரைப் போல என்னைப் பார்க்க, நானோ கற்ற வித்தை அத்தனையும் மொத்தமாக முதலிலேயே இறக்கி விட்டதால் கையறு நிலையில்... ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நிலையில் ஜிம் கேரியின் பெர்பார்மென்ஸை முயற்சி செய்ய ஆஸ்காரே கிடைத்தது.

பணத்தை எண்ணிப் பார்த்து எடுத்துக் கொண்டு வெளியே வர்ற, காக்கி சட்டையில் ஒரு ஆணும் காக்கி சுரிதாரில் ஒரு பெண்ணும் தங்கள் சட்டைகளில் இந்திய தபால் துறையின் லோகோ மின்ன
"சார், டீ க்கு ஏதாவது பாத்து பண்ணிட்டு போங்க"
ன்னு கேட்டாங்க பாரு...!!


 - அன்புடன்
 - மலர்வண்ணன்

Saturday, 17 June 2017

அன்பு அறன் அரண் உடைத்து...

டிஸ்கி:
ரெண்டு பேரை ஒரே வீட்டுலயோ வேற வேற வீட்டுலயோ வெச்சு ஓட்டுற வீரப்பரம்பரைகளுக்கும், காதலியுடன் சேர்ந்து மனைவியையோ காதலனுடன் சேர்ந்து கணவனையோ போட்டுத் தள்ளும் சைக்கோக்களுக்கும், இந்த postக்கும் சம்பந்தம் இல்ல...

கல்யாணம் பண்ணி சில பல வருடங்களுக்கு அப்புறம், அது முப்பதுலயோ நாப்பதுலயோ வேற நபர் கூட நெருங்கிப் பழகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான matured wave length இருக்கலாம். நிறைய பேசப் பழக போகப் போக 'வாவ்... இதான் என் ஆளு.."ன்னு கூட தோணலாம். சில பேர் சொல்லிடலாம், பல பேர் சொல்லாம விட்டுடலாம்... உரிமை கொண்டாட முடியலைனாலும் நெறய அன்பு செலுத்தலாம்.

சின்ன வயசுல சிலேட்டுல போட்டு பழகுற நாலுபுள்ளி கோலம் போலத்தான் இந்த relationship, ஆரம்பிக்கிற இடத்துல கொஞ்ச நாள்லயோ, கொஞ்சம் வருடங்கள்லயோ வந்து நின்னுடும்.... ஆனா வெளியிருந்து பாக்கிறவங்களுக்கு எங்க ஆரம்பிச்சது, எங்க முடிஞ்சதுன்னு தெரியாது, அவங்க பார்வையில தொடர்ந்து கோலம் வரையப்பட்டு கொண்டே இருப்பது போல் தெரியும்.

கணவன் வேறொரு பெண்ணுடன் இது போன்று ஒரு relationshipல் இருப்பது மனைவிக்கு தெரிய வந்தால் அவள் முதலில் சாடும் இடம் அந்த மூன்றாம் பெண்ணின் கேரக்டரை தான், அடுத்தது குழந்தைகள், தற்கொலை என emotional blackmailகள், arranged marriage கேஸுகள் என்றால் சொல்லவே வேண்டாம், அம்மா அப்பா அண்ணன் தம்பி தாய்மாமன் என பெரிய பஞ்சாயத்தை நடத்தி கணவனை வெறிகொண்டு தாக்கி பழிவாங்குவார்கள். அவன் சந்திரமுகியுடனே பழியாக விழுந்து கிடக்கும் தேவதாஸ் போன்ற பிம்பத்தை உருவாக்கி உருவி ஓட விடுவார்கள்...

மனைவி வேறொரு ஆணுடன் relationshipல் இருந்தால் கணவனின் முதல் வார்த்தையே உடல் ரீதியாகத்தான் இருக்கும், 'இந்த வயசுல ஏன் இப்படி அடுத்தவனுக்கு அலையுற, என் கூட உனக்கு பத்தலயா, பகல்ல அவன்கூட இருந்ததுனால தான் ராத்திரி என்கூட வரமாட்ரியா' இந்த ரேஞ்சுல இன்னும் நெறய...

மனைவியைப் பொறுத்தவரை கணவனுடைய உடமை தனக்கு மட்டுமே, கணவனைப் பொறுத்தவரை மனைவியின் உடல் தனக்கு மட்டுமே சொந்தம்ன்ற எண்ணம் வழிவழியாக ஆழப் பதிய வைக்கப் பட்டதுதான் இப் பிரச்சினையை சற்றும் யோசிக்காமல் அணுகி உறவை சின்னாபின்னப் படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

அதுவும் இந்த தமிழ் நியூஸ்பேப்பர் காரனுங்கள எவ்ளோ அசிங்கமா வேணாலும் திட்டலாம். இந்த உறவுக்கு அவனுங்க வெச்சிருக்க பேரு கள்ள காதல், அந்த பெண் ஆசை நாயகி. காதல்ல ஏதுடா நல்ல காதல் நொள்ள காதல். வெறும் தேடலும் புரிதலும் மட்டும் தான் அது.

சரியா தவறா புதிரா புனிதமான்ற சமாச்சாரத்துக்குள்ள எல்லாம் போகல. அவங்களை பொறுத்த வரைக்கும் ஒன்றாக காபி குடிப்பதும் ஒன்றாக படுக்கையில் இருப்பதும் ஒன்று தான். திருமணம்-குழந்தை-கடன்-சொந்தங்கள் போன்ற commitment அவர்களுக்கு இல்லாததால் கடைசிவரை பிரியாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை.

இதான் சான்ஸ்ன்னு மன்னிக்க முடியாத குற்றம், நம்பிக்கை துரோகம், முதுகுல குத்திட்டன்ற பெரிய வார்த்தையெல்லாம் போட்டு அவங்களை வெச்சு வெளுக்கறதுக்கு பதிலா பொறுமையா உட்கார்ந்து புரிஞ்சு பேசினா ரொம்ப சுலபமா இதை தீர்த்துடலாம். அவங்களுக்குள்ள இருக்க குற்றவுணர்வே அவர்களை பறவைகள் கூடு திரும்புவது போல ரொம்ப சீக்கிரமே திரும்ப கொண்டு வந்து சேர்த்திடும். - அன்புடன் 
 - மலர்வண்ணன்

Saturday, 22 April 2017

நண்பன் to பக்தா change over

தீவிர டேஷ்  பக்த் நண்பர் நண்பர் ஒருவர், "அது அது என்ன எப்போ பாத்தாலும் நீங்க எல்லாம் ஒரு க்ரூப்பா சேந்துக்கிட்டு மோடியை ஒட்டிட்டே இருக்கீங்க? அவரு நல்லது எதுவுமே செஞ்சதில்லையா..!? உங்க கண்ணுக்கு எதுவுமே தெரியறது இல்லையா..!? குஜராத் எவ்வளோ வளர்ச்சி அடைஞ்சு இருக்கு தெரியுமா..!?"ன்னு பொங்குனாரு...

ஆஹா.. ஆடு வாண்ட்டடா வந்து குனியுதேடா, விட்டுறக் கூடாது, லைட்டா இஞ்சி பூண்டு அரைச்சு பாப்போம்னு ஆரம்பிச்சேன்...

"உங்க வழிக்கே வர்றேங்க, நம்ம ரெண்டு பேருமே ஒரே service industry-ல தானே ஒரு பத்து வருஷமா இருக்கோம்?"

"ஆமா..."

"நம்ம business-ல unorganized எல்லாம் விட்ருங்க, organized & semi organized companies இந்தியால எத்தனை இருக்கும்?"

"organized 3, semi organized 5-6 இருக்கலாம்..."

"இந்த companies owned branches இந்தியால எந்தெந்த ஊர்ல எல்லாம் இருக்கு?"

"எல்லா major locations-லயும் இருக்கு..."

"அதான் எங்கெங்கன்னு விலாவாரியா சொல்லுங்க.."

"டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், புனே, ஹைதராபாத், கொல்கத்தா & கொச்சி..."

"மத்த ஊர்ல ஏன் இல்ல?"

"ஏன்னா அங்க potential இல்ல, இன்னும் develop ஆகாம இருக்கும்..."

"2001ல இருந்து 2014 வரைக்கும் கிட்டத்தட்ட 5000 நாட்கள் குஜராத்தோட முதல்மந்திரி மோடி தானே..."

"ஆமா..."

"அந்த சமயத்துல குஜராத் அடைஞ்ச வளர்ச்சியப் பத்தி கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க?"

"ம்ம்ம்... கல்வியறிவு!!"

"மணிப்பூர், மிசோராம், திரிபுரா, சிக்கிம்-க்கு எல்லாம் கீழே 18-வது இடத்துல இருக்கு..."

"ம்ம்.. ம்ம்.. GDP?"

"சிக்கிம், உத்தரகாண்ட், ஹிமாச்சல்க்கு கீழே 12-வது இடத்துல இருக்கு..."

"ஆனா குஜராத் எவ்ளோ விஷயத்துல develop ஆகியிருக்கு தெரியுமா?  Technology, high tech bus stands, railway stations, government offices ..."

"கடைசியா குஜராத்க்கு எப்போ போனீங்க?"

".... .... .... .... ...."

"ஒரு நாளைக்கு எத்தனை flight வந்து போகுதுன்னு தெரியுமா?"

".... .... .... .... ...."

"உங்க கம்பெனி அகமதாபாத்-லயோ, பரோடா-லயோ ஏன் branch போடல..!?

"ஒரு வேளை நம்ம business-க்குண்டான potential அங்க இல்லாம இருக்கலாம்..."

"இப்போ தான் கொஞ்சம் முந்தி develop ஆகியிருக்குன்னு சொன்னீங்க...!!"

"டெக்ஸ்டைல்ஸ்ன்னாவே குஜராத் தான் தெரியுமா?"

"மோடியை பத்தி பேசும் போது, ஏன் காந்திய பத்தி பேசுறீங்க...?"

"Foreign investors, MNC எல்லாம் வந்தாதாங்க develop ஆகும்?"

"அப்போ மோடி ஒன்னும் பண்ணல தானே..."

"அப்படி சொல்லவும் முடியாது, நெறய பண்ணியிருக்கார்..."

"குஜராத்ல இப்பவும் நெறய கிராமங்கள்ல பொது தண்ணி டேங்க்ல ஜாதிவாரியா தான் நேரம் ஒதுக்கி தண்ணி பிடிக்குறாங்க தெரியுமா?"

"சாதி பிரச்னை எல்லா ஊர்லயும் தானே இருக்கு..?"

"அய்யோ... வேற எதுலதான்யா உங்க மோடி குஜராத்தை develop பண்ணாரு...?"

"பாகிஸ்தானை காலி பண்ணாம விட மாட்டாரு, Surgical strike பார்த்தீங்க இல்ல...."

"யோவ்... அமிதாப்பச்சனை பத்தி கேட்டா அம்ரிஷ்பூரியை பத்தி சொல்ற?"

"செம தில்லா demonetization பண்ணி கருப்பு பணம் பூராவும் deposit பண்ண வெச்சாருல்ல...!!"

"நல்லாத்தான்யா இருந்த, நீ மெய்யாலுமே லூஸா? லூஸு மாதிரி நடிக்கிறியா?"

"ஒன்னு சொல்லவா?"

"சொல்லு... ஆனா வெவரமா சொல்லு..."

"மோடி எவ்ளோ பண்ணாலும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு அவர பிடிக்காது..."

"அடேய்... நான் என்ன சொல்ல வர்றேன்னா..."

"mark my words, Modi will go places..."

"இப்போ வரைக்கும் அவரு அதை மட்டும் தான்டா செஞ்சுட்டு இருக்காரு... இப்ப கூட ஆப்பிரிக்காவுக்கு கெளம்பிட்டு இருக்காரு..."

"No lets stop this, உன்ன மாதிரி இருக்க எல்லாரும் Anti Indians...
தம்பி பில் கொண்டாப்பா..."

".... .... .... .... ...."


Saturday, 11 March 2017

450-லிருந்து 150 வரை...

      "உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா'ன்னு கேக்குற அளவுக்கு, "உங்களுக்கு சக்கரை வியாதி இருக்கா"ன்னு கேக்குறது ரொம்ப சாதாரணமா போயிடுச்சு...  ஆகஸ்ட் 10, 2013 அன்னைக்கு  எனக்கும் அது வந்திருந்ததை கண்டுபுடிச்சு அதுக்கப்புறம் அலோபதி, சித்தா-ன்னு மாறி மாறி ஓடிட்டு இருந்தேன்.  அப்புறமா வரக்கொத்துமல்லி காபி, பாகற்காய், கடுக்காய் என நேச்சுரோபதி கொஞ்ச நாள்...   "சீ போ..."ன்னு உதறிட்டு இஷ்டம் போல நடுவுல கொஞ்ச நாள்...

     ஆறு மாசம் முந்தி டெஸ்ட் எடுத்தா 476 இருந்துச்சு.  டாக்டர் இன்சுலின் போட சொல்லிட்டாரு, காலையில 16, ராத்திரி 16ன்னு மாத்தி மாத்தி சின்சியரா குத்திட்டு இருந்ததுல மறுபடி டெஸ்ட் பண்ண மறந்து போயி ஒரு நாள் sugar low levelக்கு போயி குத்திக்கிறத நிப்பாட்டிட்டேன்...  அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு... ரெண்டு மாசம் முந்தி எடுத்து பாத்தா 458.

     உடம்புல சக்கரை அளவு அளவுக்கு அதிகமா இருந்தா அதனோட அறிகுறிகள் பலருக்கும் பல மாதிரி  இருக்கும்... அதீத பசி மற்றும் தாகம், தலைசுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, கண் மங்கலாக தெரிதல், களைப்பு, உடல் எடை குறைதல், உடலில் கரும்புள்ளிகள் தோன்றுதல், etc. இதில் எனக்கு உடலில் கரும்புள்ளிகள் லேசாக தோன்ற ஆரம்பித்தன, எடை இரு வருடங்களில் 72லிருந்து 62ஆக குறைந்தது.  வேறேதும் அறிகுறிகள் சுத்தமா இல்ல...
     ஏதாவது செய்யணுமேன்ற திரிசங்கு நிலையில facebook மூலம் paleo அறிமுகமானது.  அதையும்  பார்த்துடுவோம்ன்னு  அவங்க சொன்ன டெஸ்ட் எடுத்து upload பண்ணி நாலு நாள் வெயிட் பண்ணேன்... நீரிழிவு நோய்க்காரர்களுக்குன்னு தனி குரூப் இருக்கு அங்க போங்கன்னு டைவர்ட் பண்ணி விட்டாங்க..., அங்க போய் மேலும் நாலு நாள் வெயிட் பண்ணதுல, நீங்க முதல்ல போயி டாக்டர பாத்துட்டு உங்க சக்கரையை ஓரளவாவது குறைசிச்சுட்டு உள்ள வாங்கன்னு .சொல்லிட்டாங்க...

     ஆல்ரெடி அங்க இருந்து தான வர்றோம்னு நெனச்சுக்கிட்டே இந்த தடவ வித்தியாசமா ட்ரை பண்ணலாம்னு ஹோமியோபதி போனேன்...  ஓரளவு திருப்திகரமா இருந்தாலும் ரெண்டு மாசம் ஆகியும் ரிசல்ட் ஒன்னும் இல்ல...  பார்த்தேன்... நமக்கு நாமேன்னு தளபதி கணக்கா எறங்கி paleoல நமக்கு தெரிஞ்ச சர்வே  ரிஸர்ச் எல்லாம் பண்ணி எனக்கான உணவை முடிவு செய்து, வீட்ல அம்மணியோட கலந்துரையாடி Feb 20 திங்களன்று ஆரம்பித்தேன்...

     நீரிழிவின் மூலம் அவதிப்படும் பலரும் வெளியே சொல்லத் தயங்கும் ஓர் விஷயம் அவ்வப்போது genitals ஏற்படும் itching... நாலு பேர் கூட பேசிட்டிருக்கும் போது தான் சொல்லி வெச்சா மாதிரி நம்மள நெளிய விட்டுடும்.  உள்ளாடையைக் கழற்றி தரையில் போட்டால் அடுத்த சில மணிநேரங்களில் அதுல எறும்புகள் மொய்க்கும்...

      Feb 22ஆம் தேதி அதாவது 3ஆம் நாள் ஆறு மாசமா இருந்த அந்த "அரிமா அரிமா..." பிரச்சனை முடிவுக்கு வந்தது... .அடடா, மாற்றம் முன்னேற்றம்ன்னு சின்னையா மேல பாரத்தை போட்டுட்டு அதிக ஈடுபாட்டோட தொடர ஆரம்பிச்சேன்...  ரொம்ப சிம்பிள், அரிசி, கோதுமை, மைதா, ரவை,  பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், பழங்கள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு வெண்ணெய், நெய், பன்னீர், முட்டை, கோழி, ஆடு, இவற்றை மட்டும் பெருவாரியாக எடுத்துக் கொன்டேன்...
காய்கறிகளில் வெங்காயம், முருங்கை, கேரட், முட்டைகோஸ், லெட்டூஸ், ப்ரோகோலி, குடைமிளகாய், தேங்காய் துண்டுகள்... மற்றும் தினமும் ரெண்டு கொய்யாக்காய், ரெண்டு நெல்லிக்காய்... இன்னும் சிலபல

     March 9, சரியாக 18ஆம் நாள் காலை fasting-ல் டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன்... 158 !!!

Paleo நல்லதா, அங்கீகரிக்கப் பட்டதா, பக்க விளைவுகள் உண்டா என்பதையெல்லாம் வல்லுநர்கள் தீர்மானிக்கட்டும்...  ஒரே விஷயம் தான், நீரிழிவு நோயால்  பாதிக்கப் பட்டு பலவகையான மருத்துவங்களை பார்த்த யாராவது "எனக்கு diabetes இருந்தது, இப்போ குணமாகி விட்டது..." என சொல்லக் கேட்டதுண்டா?  "sugar இப்போ கொஞ்சம் controlல இருக்கு.."ன்னு சொல்றதுதான் அதிகபட்ச நலம்.
எனக்கு diabetes இருந்தது, அதுவும் 476..., இப்போ இல்ல...  இனியும் வராது...
     Inspirationஆக இருந்த நண்பர்கள் தங்கராஜ், பிரபு, பாலா, சஜி & கண்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல...

     இவனுக்கு ருசி இல்லாம எறங்காதே என்பதனை கருதி தினமும் மூணு வேளையும் மூணு விதமாக சலிக்காமல் உணவைத் தயாரித்து அளித்த, அளிக்கும் அம்மணிக்கு அநேக ஸ்தோத்திரங்கள்...!!
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய பல புத்தகங்களில் இன்னும் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை.  அம்மணி வாங்கிய ஒரே  புத்தகம் நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்", அதையும் பலமுறை படித்து விட்டார், எனக்காக...!!

ஜெய் பேலியோ...!!

 - அன்புடன்
 - மலர்வண்ணன்