Sunday, 11 August 2013

எனக்கும் "அது" வந்திடுச்சி...!!

     10.08.2013 அன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு இரைச்சல் இல்லாத சாலை, இருட்டிக் கொண்டு மேக மூட்டத்துடன் வானம், தென்காசித் தூறல்... சென்னையில் தான் இருக்கிறோமா என்பதை நம்பவே முடியவில்லை.  இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன்.  இதுபோன்ற  மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம்.  அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன.  சில தேநீர்க் கடைகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தன.
      விடுமுறை, அதுவும் மழையுடன் கூடிய விடுமுறை.. இழுத்துப் பொத்திட்டு ...ச்சே... போர்த்திட்டு படுக்காம  காலங்காத்தால அம்மணி கூட அப்படியெதுக்கு சவாரி போனேன்னா... நிற்க!! 

     வருடம் 2008.  அப்போது வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் தயவால் உடலை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன்.  அதன் பிறகு அதற்குண்டான தேவை இருக்கவில்லை.  சென்ற மாதம் அம்மணியின் பெரியப்பா கேன்சரால் இறந்ததைத் தொடர்ந்து, அம்மணி இருவரும் வாத்தியார் பரிசோதனை (அதாங்க master check-up) செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற நச்சரிப்பு.  போதாக் குறைக்கு இறப்பிற்கு வந்த உறவினர்களுள் மருத்துவர் ஒருவர் என்னிடம், "மலர், இந்த வயசுக்கப்புறம் (அப்படியென்ன நமக்கு வயசாயிட்டு..!!)  நீங்க ரெண்டு பேரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும்.." என்று அம்மணி முன்னாலேயே அறிவுறுத்தினார்.  இது போதாதா?  காகம் கரையும் முன்னர் (சென்னையில் சேவல் இல்லீங்க) எழுப்பி விடப்பட்டு சென்று கொண்டிருந்தோம்.

     டீ குடித்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்றியது.  வெறும் வயிற்றில் வரவேண்டும் என்று சொல்லியிருந்த படியால் எட்டு ரூபாய் மிச்சமானது.  நந்தம்பாக்கத்தில் உள்ள பழைய, பிரபல மருத்துவமனையை சென்றைடைந்தோம்.  உள்ளே மாணவிகளுக்கான இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இருட்டாக இருந்த வரவேற்பறையில் முதல் ஆளாக சென்று அமர்ந்தோம்.  அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி ஒரு பெண் அருகில் வந்து அமர அவர் கணவர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு பின்னாலே வந்தார்.  அப்பாடா... ஒரு hospital feeling வந்து விட்டது.

    
     Master check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய்.  ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன்.  ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார்.  சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும்.  இரத்தம்-சிறுநீர் எடுத்துக் கொண்டு, மீண்டும் காலை சிற்றுண்டியை முடித்து இரண்டு மணி நேரத்திற்குள் வரச் சொல்லினார்கள்.  தொடர்ந்து X-ray மற்றும் ECG எடுக்கப் பட்டது.  Scan செய்யும் மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார் என்பதால் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றோம். 

      மழை இன்னும் விடாமல்
லேசாக தூறிக் கொண்டிருந்தது.  ஆனால் முழுமனதுடன் ரசிக்க முடியவில்லை.  11 மணி வாக்கில் மீண்டும் ஒரு முறை இரத்தம் கொடுத்துவிட்டு Scan-க்குச் சென்றோம்.  CT மற்றும் Echo எடுக்கப் பட்டது.  நுரையீரலும் கல்லீரலும் எந்த கதியில் இருக்கிறதோ என பதட்டத்துடனே இருந்தேன்.  Scan செய்த பெண் டாக்டர்  ரொம்ப தோழமையுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே எடுத்தார்.  முடிவில் "ஒன்றுமில்லை, எல்லாம் நார்மலாக இருக்கிறது.." என்று சொல்லி பதட்டத்தைப் போக்கினார்.  அனைத்தும் இருவரின் உடலும் நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்லி விட்டன.  அடுத்து இரத்தம் மற்றும் சிறுநீருக்கான பரிசோதனை முடிவு கொடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வங்கிக்குச் சென்று வந்தேன்.


     இந்தப் பரிசோதனை முயற்சிக்கு அம்மணி ஏன் அதிகம் அக்கறை காட்டினார் என்றால்... முதலாவது,  அவர் அம்மா அப்பா இருவருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதால் தனக்கும் வந்துவிடுமோ என்ற உணர்வு; ரெண்டாவது, கடந்த பல வருடங்களாக மாதம் இரு முறையாவது (கடந்த சில மாதங்களாக சுத்தமாக இல்லை...) பார்ட்டி சென்று கொண்டிருந்த மணாளனின் உள்ளுறுப்புகள் உருப்படியாக இருக்கிறதா, இல்லை இன்சூரன்ஸ் ஏதும் அதிகப் படியாக எடுக்க வேண்டியிருக்குமோ என்ற அக்கறை தான்..!! 

     இடைப்பட்ட நேரத்தில் "உனக்கு சுகர் இருப்பதற்கான வாய்புகள் அதிகம்; இனி ராகியும், கம்பும் மளிகை லிஸ்டில் அரிசிக்குப் பதில் சேர்ந்து விடும்" என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன்.  முடிவு வந்தது....  அம்மணியின் ரிசல்ட் ஒரு குறையும் இன்றி பக்காவாக இருந்தது.  Scan report கொடுத்திருந்த தெம்பில் அலட்சியமாக என்னுடையதைப் பிரித்துப் பார்த்தோம்.  இரத்தத்தில் சர்க்கரையுடன் கொழுப்பும் ஏகத்துக்கு ஏறிக் கிடந்தது.  கடைசியில எனக்கும் "அது" வந்திடுச்சி...!! அப்போ ராகியும் கம்பும் கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் போல என் மனதிற்குள் ஓடியது.
 

     மருத்துவரைச் சென்று பார்த்தோம்.  ஒரு சில எளிய உணவுமுறை மாற்றங்களைப் பற்றி சொன்னார்.  தவிர்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பற்றி சொன்னார்.  நான் ரொம்ப ஆர்வமாக, "அப்போ மருந்து சாப்பிட தேவையில்லையா" என்று கேட்டேன்.  அவரோ, "நான் சொன்னத follow பண்ணலன்னா தான் தேவைப் படும்"ன்னு சொல்லிட்டார்.  என்னடா இது! மருந்து எழுதிக் கொடுக்காத டாக்டர் ஒரு டாக்டரா? என ஆச்சரியப்படலாம்.  ஏன்னா, அந்த டாக்டர் என்னோட மச்சான்..!!

     இப்போ அம்மணி வீட்டுல என்னை செல்லமா கூப்பிடுற பேரு..."சக்கரை..."!!- அன்புடன்
- மலர்வண்ணன்

20 comments :

 1. வாத்யார் செக்-அப்.... :)

  ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது தான்... நானும் செய்து கொள்ள வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் சார்..
   வாத்தியார் செக் அப் பண்ணுங்க...
   நம்ம வாத்தியார் மாதிரி சந்தோஷமா இருங்க...

   Delete
 2. ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது தான்...

  ReplyDelete
  Replies
  1. //நல்லது தான்...//
   யாருக்கு... யாருக்கோ..!!
   நல்லது நடந்தா சரி...

   Delete
 3. ஒரு மெடிக்கல் செக்கப்பை கூட இவ்வளவு அழகா சொல்ல முடியுமா? சுஜாதா ஞாபகம் வருகிறார்.
  டாக்டர் எதை ஃபாலோ பண்ணச் சொன்னார்னு சொல்லி இருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க முரளி சார்...
   //சுஜாதா ஞாபகம் வருகிறார்//
   இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? அவருடைய பாதிப்பு நம்மையறியாமலே பல நேரங்களில் வெளிப்பட்டுவிடும். அது தான் சுஜாதா effect..

   //டாக்டர் எதை ஃபாலோ பண்ணச் சொன்னார்னு சொல்லி இருக்கலாமே!//
   சொல்லியிருக்கலாம் தான்...
   ஒரு மாதம் கழித்து விளைவுகளுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். At least இன்னொரு பதிவு எழுத ஒரு topic வேணாமா?

   Delete
 4. இரத்தத்தில் அதிகமாய் காணப்படும் சக்கரையும் கொழுப்பும் இணைபிரியா சகோதரர்கள் மாதிரி. பின்னால் இருப்பவர் வந்தால் முன்னால் இருப்பவர் வருவார் என்று சொல்ல முடியாது. ஆனால் முதலில் சக்கரையார் வந்துவிட்டால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இணைபிரியா சகோதரர் நிச்சயம் வந்துவிடுவார். இந்த இருவருக்கும் மருந்தைவிட நாளொன்றுக்கு நாற்பது நிமிடம் வேகநடைதான் மிகவும் முக்கியம். அத்துடன் உணவில் கட்டுப்பாடு. ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்து ஒரு பத்துவருடம் கட்டுக்குள்ள் வைத்துவிட்டால் அதற்குப் பிறகு தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். இது என்னுடைய அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜோ..
   அதென்ன ஆந்தையார், கழுகார், வாழப்பாடியார், வீரபாண்டியார் மாதிரி சக்கரையார், கொழுப்பார்...!!??

   //ஒரு பத்துவருடம் கட்டுக்குள் வைத்துவிட்டால்//
   அப்புறம் அதுவா பழகிடும்..!! என்னோட target 6 மாசம் தான். அதற்குள் அற்புதம் நிகழ்த்தியே ஆக வேண்டும்.

   தங்கள் அனுபவத்தை உணர்த்தியமைக்கு நன்றி...

   Delete
 5. こんにちは。わたし は だいめい を みて びっくりしました。ないよう を よんだら いみ が わかりました。 おもしろい です。 わたしも これから いちねん に いっかい けんこう しんだん します。 ありがとうございます。

    バーラ。

  ReplyDelete
 6. ஆரம்பக்கட்டம் தானே ..கவனமாக இருந்து சரி செய்யலாம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி...

   தங்கள் அக்கறைக்கு நன்றி

   உங்கள் பெயரை "மாப்பிள்ளை"(1989)படத்தில் ஸ்ரீவித்யா சொல்வது போல் உச்சரித்துப் பாருங்கள்.. கம்பீரமாக இருக்கும்..!!

   Delete
 7. முதலில் வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.வலைசரம் மூலமாக இங்கு வருகிறேன்.
  சர்க்கரை அதிகமாயிருப்பதைக்கூட சர்க்கரை கொடுத்து கொண்டாடுகிறார் போல் அமர்க்களபப்டுகிறது பதிவு.
  ஆரம்பமாக இருந்தால் சின்ன சின்ன உணவுமுறை மாற்றங்களினால் கட்டுக்குள் வைக்கலாம் என்று டாக்டர்கள் சொல்கின்றனர். விரைவில் குணமாகும்....


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், அக்கறைக்கும், விமர்சனத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்

   Delete
 8. சோற்றுக்கு விடுதலை கொடுத்து பிற தானியங்களை சிறை பிடித்தாலே பாதி நோய் குறைந்துவிடும் சுவாரஸ்யமான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், அக்கறைக்கும், விமர்சனத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி கோவை மு சரளா

   Delete
 9. // இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன். இதுபோன்ற மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம். அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன//

  அவர்களுக்கெல்லாம் மழை அலர்ஜி போல ...! ஆரம்பமே அமர்க்களம் மலர்ஜி ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவன் சுப்புஜி...

   //மழை அலர்ஜி..! அமர்க்களம் மலர்ஜி//

   சர்தார்ஜி, பஜ்ஜி, சோனியாஜி, அலர்ஜி போல மலர்ஜியும் கூப்பிட்டுப் பார்த்தால் நல்லாத்தான் இருக்கு... யோசிச்சுப் பாத்தா அஜித்தோட "ஜி"யைத் தவிர எல்லா ஜியும் பாக்குறாப்லாதான் இருக்கு.

   வருகைக்கும் விமர்சனத்திருகும் நன்றி...
   தொடர்ந்து தொடர்பில் இருப்போம்...

   Delete
 10. வணக்கம்

  இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்..

   Delete