பள்ளிப் பருவத்தில் தமிழ்
இரண்டாம் தாளில் கேட்கப்படும் "நீவீர்
சென்ற கல்வி சுற்றுலா பற்றி ஒரு பக்கத்திற்கு மிகாமல் விடையளிக்க" என்ற 10
மதிப்பெண்கள் கேள்விக்கு கட்டுரை வடிவில் மனப்பாடம் செய்த பதிலை எழுதி
உள்ளேனே தவிர இதுவரை எந்த பயணக்கட்டுரையும் எழுதியது கிடையாது. ஒவ்வொரு
முறையும் எதாவது ஒரு புதிய இடத்திற்கு சென்று வந்த பின் அப்பயணத்தை பற்றி
எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி, முயற்சித்தது இல்லை. மேலும்
எஸ்.ராமகிருஷ்ணன் போல homework செய்து எழுதுவதோ, தமிழருவி மணியனின் தெளிந்த
நீரோடை போன்றோ, சுவாரசியமான பயணக்கட்டுரைகளும்
எனக்கு
எழுத வராது.
2011 ஏப்ரலில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹிமாச்சலில் உள்ள
மணிக்கரன், மண்டி, மணாலி, கோத்தி மற்றும் குலாபா பகுதிகளுக்கு சென்று
வந்தவுடன் எப்படியாவது அப்பயணத்தை பற்றி எழுத வேண்டும் என்று முடிவு
செய்து பின் அரசாங்க மேசை கோப்புகளைப் போல் தொங்கலில்
விட்டேன். ஆனால்
2012 மே மாதம் நான் கண்ட, அனுபவித்த ஓர் அற்புத இடத்தைப் பற்றி பகிர்ந்து
கொண்டே தீர வேண்டும் என்ற ஆவலுடன் எனது முதல் பயணக் கட்டுரையைத்
தொடங்குகிறேன்.
இந்தக் கோடையில் எங்களை எங்கே கூட்டிச்சென்று குஷிப் படுத்தப் போகிறாய்
என்ற எனது குடும்பத்தின் மில்லியன் டாலர் கேள்விக்கு செய்முறை விளக்கம்
மூலம் பதிலளிக்க சில இடங்களைத் தேர்வு செய்து கடைசியில் வயநாடு என்று
முடிவானது. கிளம்புவதற்கு நான்கு நாட்கள் முன்பு கல்லூரித் தோழன் நாகர்கோயிலைச் சேர்ந்த Baiju
Samuel-ன் செல்போன் நம்பர் கிடைக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழைத்து
பேச, கேரளாவின் இடுக்கியில் உச்சத்தில் உள்ள வாகமான் என்ற அதிகப்
பிரபலம் அடையாத மலைவாசஸ்தலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக
சொன்னதோடு மட்டுமல்லாமல் வாகமானின் அருமை பெருமைகளை Baiju எடுத்துச்
சொல்ல, "Vagamon, will see you tonight " என்று கிளம்பினோம்.
காலை 9 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு பவானி, பெருந்துறை,
கோயம்புத்தூர், வாளையார், பாலக்காடு, திருச்சூர், அங்கமாலி, மூவட்டுபுழா, தொடுபுழா,
மூலமட்டம், வழியாக 415km பயணம் செய்து புள்ளிக்கனம் என்ற இடத்திற்கு மாலை 5
மணிக்கு வந்தடைந்தோம். புள்ளிக்கனத்தில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. சென்னையின் 44 டிகிரியை விட்டு தற்காலிகமாக தப்பித்து மேகங்கள் உடலை வருட, இருபதடி
தூரத்திற்கு மேல் என்ன நடக்கிறது என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு பனிசூழ்
பிரதேசத்தில் அன்றைய மாலை "ரம்"மும் "ரம்மி"யும் இல்லாமலே மிகுந்த
ரம்மியமாக இருந்தது.
வாளையாரிலிருந்து மூலமட்டம் செல்லும் வரையிலான அந்தச் சாலை அட்டகாசம். வாளையார்
check post கடந்தவுடனேயே மேற்குத் தொடர்ச்சி மலைகள் நம்மை ஆரத் தழுவிக்
கொள்கின்றன. A/c-யை அனைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைக்காமல்
செல்வதாக இருந்தால் நீங்கள் "U turn" போட்டு ஊருக்கே திரும்பி சென்று
விடலாம். எத்திக்கு நோக்கினாலும் மரங்கள், மலைகள், மரங்கள். பசுமையைத்
தவிர
கண்ணுக்கு வேறதுவும் புலப்படவில்லை. ஆங்காங்கே ஓடும் ஓடைகள், சிறு நதிகள்,
வாய்க்கால்கள், சாரல்கள், குடைகளைப் பிடித்தபடி "நடந்து" செல்லும் பள்ளிக்
குழந்தைகள், பின்னலிடாத
ஈரக் கூந்தலுடன் கேரள நாட்டிளம் பெண்கள், தொப்பையில்லா ஆண்கள், ப்ளெக்ஸ்
பேனர்களும் ரசிகர் மன்றங்களும் இல்லாத கிராமங்கள், பறவைகளின் symphony.
எங்கு நோக்கினும், எதை நோக்கினும் அழகு.. கேரளாவிற்கு பலமுறை
சென்றிருந்தாலும் இம்முறை சென்ற வழி தான் அதை
சிறப்பித்துக் காட்டியது. Route போட்டுக் கொடுத்த Baiju Samuel-க்கு
நன்றி.
சென்னையில் உடனிருக்கும் மலையாளிகளிடம் சில நேரங்களில் நக்கலாக, "உங்கள்
மாநிலம் என்னதான் கல்வியறிவில் முன்னணியில் இருந்தாலும், முன்னேற்றத்தில்
பின்தங்கிதான் உள்ளது, உங்களின் கொடிபிடிக்கும் கொள்கையால் எவனும் உங்கள்
மாநிலத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முன்வர மாட்டான். அதனால்தான் நீங்கள்
உலகம் முழுக்க ஓடி பொருளைத் தேடுகிறீர்கள். சென்னை நகரத்தில் மட்டும்
உள்ள கார்களின் எண்ணிக்கையைவிட உங்கள் கேரள மாநிலத்தில் உள்ள மொத்த
கார்களின் எண்ணிக்கை குறைவு." இப்படி பலவாறு அவர்களைப் பகடி செய்வோம்.
அவர்களில் யாரேனும் ஒருவர் இது சம்பந்தமாக "ஒரே ஒரு கேள்வியைத்" திரும்பக்
கேட்டிருந்தால் நம் முகத்தை மூலையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்தக்
"கேள்வி" என்ன என்பதை இறுதியில் சொல்கிறேன்.
மூலமட்டத்திலிருந்துதான் முழு மலைச்சாலை ஆரம்பமாகிறது. ஆனால் ஆரம்பமே
அசத்தல் தான். நான்கைந்து வளைவுகள் சென்று திரும்பியதும் திடீரென்று ஒரு
பிரமாண்டமான அருவி கண்முன் வந்து நிற்கிறது. சாலக்குடி அதிரப்பள்ளி அருவி
அளவிற்கு பிரமாண்டம் இல்லையென்றாலும், அதன் அழகிற்கும் வதனத்திற்கும்
சற்றும் குறையாமல் குன்றாமல் காட்சியளித்த பெயர் தெரியாத பேரருவி. சுற்றி
ஒரு காக்கை குருவி இல்லை. பெயர்ப் பலகையும் இல்லை. இருந்தால் அருவியின்
பெயர் கேட்டுத் தெரிந்திருப்பேன். குற்றாலத்திலும், ஒகேனக்கல்லிலும்
எண்ணெய் தோய்த்த உடம்புகளுடன் உரசிக் குளிக்க விருப்பமில்லாதவர்கள்
இவ்வருவியைக் கண்டால் உடையாலும், உள்ளத்தாலும் குழந்தையாகி விடுவார்கள்.
ஆண்களில் 80kgக்கும் பெண்களில் 70kgக்கும் மேல் எடை உள்ளவர்கள் அருவியில்
குளிப்பதை தவிர்ப்பது சாலச் சிறந்தது. சாரலில் மட்டும் நனைந்து
மகிழலாம். சாயங்கால வேளையாகி விட்டதாலும், பனிசூழ ஆரம்பித்து விட்டதாலும், "உன்னை நாளை
கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறி பிரிய மனமில்லாமல் மேலே செல்ல
ஆரம்பித்தோம்.

புள்ளிக்கனத்தில் அன்றிரவு தங்கிய guest house-இல் இடிமின்னலுடன் கூடிய
மழையின் காரணமாக மின்வெட்டு. நமக்குதான் மின்வெட்டு பழகிப் போய்விட்டதே. Candle light dinner,
ராக்கோழிகளின் ரீங்காரம் மற்றும் தவளைகளின் சத்தத்துடன் கம்பளி
உறக்கத்தில் அன்றைய இரவு இனிதே கழிந்தது.
மறுநாள் புள்ளிக்கனத்திலிருந்து 10Km தொலைவிலுள்ள வாகமானை சுற்றிப்
பார்க்க அங்குள்ள வாகனத்தை வழிகாட்டி ஓட்டுனருடன் ஏற்பாடு செய்தாயிற்று.
50 வயது மதிக்கத்தக்க ஓட்டுனர் "சாரே, ஞான் அப்பச்சன் " என்று
புன்னைகைத்தார். வலியச் சென்று கை குலுக்கி அறிமுகம் செய்து
கொண்டேன். 4*4 wheel drive Willy 's ஜீப்பில் ஏறி அமர அதற்கே உண்டான
சத்தத்துடனும், குலுங்கலுடனும் உறுமிச் செல்ல ஆரம்பித்தது. ஒரு வளைவில்
திரும்பி ஒரு வீட்டைக் காட்டி அப்பச்சன், "that is my house" என்றார். "மலையாளத்திலேயே
பேசுங்கள் எனக்கு புரியும்" என்று தமிழில் சொன்னேன். அன்று முழுவதும் அவர்
மலையாளத்திலும் நான் தமிழிலும் பேசிக் கொண்டே இருந்தோம்.
லாவகமாக வளைத்து வளைத்து ஓட்ட ஆரம்பித்தார் அப்பச்சன். மலையும் மழையும்
மலை சார்ந்த அந்தப் பகுதியை பாதிக்கும் குறைவாக தேயிலை தோட்டங்கள்
ஆக்கிரமித்து இருந்தன. வழியில் ஒரு ஆறு நெளிந்து நெளிந்து ஓடிக்
கொண்டிருந்தது "இந்த ஆறு முல்லைப் பெரியார் அணைக்குச் செல்கிறது"
என்றார் அப்பச்சன். தேயிலை பறிப்பவர்களையும், பறித்த தேயிலை மூட்டையை
முதுகில் சுமந்தபடி வேக வேகமாக நடந்த முக்காடு அணிந்த பெண்களையும்,
ஆற்றையும் பார்த்த பொழுது ஒரு கணம் மாஞ்சோலையும், தாமிரபரணியும் மனக்கண்
முன் வந்து சென்றதை தவிர்க்க முடியவில்லை. மீண்டும் இயற்கையில் கவனம்
செலுத்த முயற்சித்தேன்.
அப்போது என் மனைவி கேட்டார், "இப்போது உனக்கு எந்த பாடல் ஞாபகம் வருகிறது?"
என்று. ஒரே நொடியில் கண்டுகொண்டது மட்டுமல்லாமல், அந்த பாட்டின் முதலில்
வரும் hummingயும் பாடி காட்டினேன். வாகமான் என்ற
பெயர்ப் பலகையை கடந்து உள்ளே சென்ற பொழுது செம்மொழியான தமிழில்
எழுதப்பட்ட என் கண்ணில் பட்ட முதல் பேனர், "வாகமான் சிவ-பார்வதி கோவில்
அமைக்க நன்கொடை தந்து ஆதரவு தாரீர்". அங்கிருந்து முதலில் குரிஸ்சிமலா என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்.
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
ஆசிரமத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் முன்பாகவே வண்டியை
நிறுத்திவிட்டு மேல்நோக்கி நடக்க வேண்டும். நடந்தோம். குரிஸ்சிமலா ஆசிரமத்திற்கு செல்லும் வழியின்
இருபுறமும் கோரைப் புற்கள் ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அழகான பூ
செடிகளால் அவற்றை border கட்டி maintain செய்திருந்தார்கள். ஆசிரமத்தின்
உள்ளே இரண்டு சிறிய கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. அங்கி அணிந்த ஆண்-பெண்
பாதிரிகள் சிநேக முகத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். அமைதி
என்றால் அப்படியொரு அமைதி. அவர்களின் உணவுக்குண்டான காய்கறிகளை அங்கேயே பயிர் செய்து இயற்கை உரத்தின்
மூலம் விளைவித்துக் கொள்கிறார்கள். நூற்றுக்கணக்கில் பசுக்களை வளர்த்து
ஓர் பெரிய பால் பண்ணை வைத்து சுத்திகரித்து பாக்கெட்டில் அடைத்து அவ்வூர்
முழுதும் இங்கிருத்தான் விநியோகம் செய்யப் படுகிறது. துளியும்
சத்தமில்லாமல் ஒரு தொழிற்சாலை இயங்குகிறது. நாங்கள் அங்கிருந்த நேரத்தில்
ஒரு கன்றோ, மாடோ "ம்ம்மா" என்று கூட கத்தாமல் இருந்தது ஆச்சரியத்தின்
உச்சம்.
அடுத்ததாக அங்கிருந்து "pine valley" என்ற இடத்தை நோக்கி பயணம் தொடர்ந்தது.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
அரைமணி நேர சில்லிப்பான பயணத்தின் முடிவில் "pine valley"யை அடைந்தோம்.
ஊட்டி, கொடைக்கானலில் உள்ளது போன்ற ஊசியிலைக் காடுகள் நிறைந்த பகுதிதான்
இது. 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஓங்கி உயர்ந்து
வளர்ந்து கம்பீரமாக காட்சி தரும் மரங்களினுள்ளே ஊடுருவிச் செல்லும் அனுபவம்
நிச்சயம் நம்மை குழந்தைப் பருவ "hide & seek" விளையாட்டிற்கு
அழைத்துச் செல்லும். காலணி அணியாமல் நடந்து செல்வது உத்தமம். அவ்வளவு
மரங்கள் இருந்தும், ஒரு மெல்லிய சாரல் நம்மீது உமர் கய்யாம் கவிதை
போல வீசிக் கொண்டே இருந்தது. மதியத்திற்கு கேரள கிராமிய உணவை attack செய்ய முடிவு செய்து
கிளம்பினோம். மீண்டும் வனப் பயணம்.
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
இப்பாடலை மீண்டும் நீங்கள் கேட்க நேரிட்டால், "மறவேன் மறவேன் அற்புத
காட்சி" என்பதை ஜேசுதாஸ் arputha காட்சி என்று உச்சரிப்பதற்கு பதிலாக
arbudha காட்சி என்று பாடுவதை கவனிக்கலாம். இதுபோல் நிறைய பாடல்களில்
அவருடைய மலையாள வாசனை தமிழைக் கொல்லும். ஹோட்டல் சின்னுவில் கேரளாவின்
சிவப்பரிசி சோற்றோடு மீன்வறுவல், மீன்குழம்பு, இன்னபிற உணவு ஐட்டங்களோடு
கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்தோம்.
பரிமாறியவர் 60 வயது மதிக்கத்தக்க ஒரு திண்டுக்கல் தமிழர். 1965 லேயே
இங்கு வந்துவிட்டாராம். நாங்கள் சாப்பிடுவது அவருடைய மனைவியின்
சமையல்தானாம். நன்கு கவனித்து பணிவிடை செய்தார். பில் settle செய்யும்
பொழுது அவருக்கு tips வைத்தேன். புன்னகையுடன் வாங்க மறுத்துவிட்டார். "Next" என்றேன், "முட்ட குன்னு" என்றார் அப்பச்சன். உறுமியது ஜீப்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
ஊட்டியிலுள்ள 6th மைல், மற்றும் 9th மைல் சென்றவர்கள் நேரில்
பார்த்திருக்கலாம். செல்லாதவர்கள் பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில்
பார்த்திருக்கலாம். பரந்து விரிந்த பச்சைப் பசேலென்ற பட்டு விரித்த
புல்வெளி, ஆளைக் கீழே தள்ளும் அளவிற்கு வேகமாக அடிக்கும் காற்று, இதுதான்
6th & 9th மைல். அதில் உருண்டு புரளாத ஒரே தமிழ் நடிகை
கே.பி.சுந்தராம்பாள். அதில் படுத்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளாத
honeymoon ஜோடிகளே கிடையாது. அதுபோன்ற ஒரு இடம் முட்டை வடிவில் பல
முட்டைகளை எப்படி ஒருசேர
முட்டைக்குரிய அந்த அட்டையில் அடுக்கி வைப்பார்களோ, அதுபோல பச்சை நிற
பிரம்மாண்டமான பல முட்டைகளை ஒரு இடத்தில் அடுக்கி வைத்தது போன்ற இடம் தான்
இந்த "முட்டக் குன்னு". அழகான அளவெடுத்த வடிவில் சிறு சிறு புல்வெளிக்
குன்றுகள் ஒன்றுடன் ஒன்று தகுந்த இடைவெளி விட்டு இணைந்து அணுவின்
மூலக்கூறு போல் கிடக்கிறது. அடுத்த இடம் அங்கிருந்து 40km தொலைவில் உள்ளது என்பதாலும்,
திரும்பி வரும்
வழியில் பனியிலும் மழையிலும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாலும்,
குழந்தைகளை வைத்துக் கொண்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என திரும்ப ஆயத்தம்
ஆனோம்.
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
Guest House க்கு திரும்பி வந்தோம், அதன் கண்காணிப்பாளர், "சாரே, கரண்ட் வந்நு" என்றார்.
அதற்கடுத்த நாட்களில் சுற்றிப் பார்த்த மூணார், தேக்கடி பற்றி சொல்ல
பெரிதாக ஒன்றும் இல்லை. மூணாரில் குளுமை இருந்தது, தேக்கடியில் அதுவும்
இல்லை. A/c rooms available என்று விளம்பரம் வேறு செய்கிறார்கள்.
பொதுவான சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். வாகமானில் ATM கிடையாது,
Wine Shop கிடையாது, மாசு கிடையாது, தூசு கிடையாது. காலி பாட்டில்களோ,
கண்ணாடி சில்லுகளோ என் கண்ணில் படவில்லை. கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களைத்
தவிர பிற மாநில வாகனங்களை கண்டு கொள்ளவே முடியவில்லை. ஊட்டியையும்,
கொடைக்கானலையும், ஏற்காட்டையும், குடகையும், மூணாரையும், தேக்கடியையும்
குதறி வைத்ததவர்கள் என்ன காரணத்தாலோ வாகமானை இன்னும் விட்டு
வைத்திருக்கிறார்கள். பெங்களுருவாசிகளும், சென்னைவாசிகளும் உள்ளே சென்று
நோண்டி நுங்கு எடுப்பதற்குள் இயற்கையை நேசிப்பவர்கள் இந்த இடத்திற்கு ஒரு
முறையாவது சென்று வாருங்கள். ஆங்காங்கே எச்சரிக்கை மணி போல ரிசார்ட்டுகள் முளைக்க
ஆரம்பித்துவிட்டன. November to May சரியான தருணம். பிற மாதங்களில் மழையோ
மழை.

ஆரம்பத்தில் நான் சொன்னது போல கேரளத்தவர்களில் ஒருவர் இந்த கேள்வியைக்
கேட்டிருந்தால் என்பதன் கேள்வி, "உங்கள் ஊரில் ஓடும் கார்களின் எண்ணிக்கைப்
பற்றி சொல்கிறீர்கள். எங்கள் ஊரில் ஒரு மாவட்டத்தில் உள்ள மரங்களின்
எண்ணிக்கை உங்கள் மாநிலத்தில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கைக்கு
ஈடாகுமா?" என்று கேட்டால் நம் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வது?
- அன்புடன்
- மலர்வண்ணன்