Sunday, 18 November 2012

Julia's Eyes (Spanish-2010) - சீரியல்(ஸ்) கில்லர்ஈரானிய, கொரிய, ஆங்கில மொழிப் படங்களைப் போல் ஸ்பானிஷ் படங்கள் இருப்பதில்லை.  காரணம், ஸ்பானிஷ் திரைப்படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட  நாடுகளில் இருந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் இருந்தும் வெளி வருவதால் ஒவ்வொரு படமும் ஒன்றுக்கொன்று துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும்.  Y Tu Mama Tambien (மெக்ஸிகோ), La Nina Santa(அர்ஜென்டினா), Miss Bala(மெக்ஸிகோ), Ameros Perros(மெக்ஸிகோ), Maria Full of Grace(கொலம்பியா), City of God(பிரேசில்), Central Station(பிரேசில்) என நான் பார்த்த வெகு சில ஸ்பானிஷ் படங்களின் மூலம் இதை தெரிந்து கொண்டேன்.

Art வகைத் திரைப் படங்கள் என்று நாம் வகைப்படுத்தக் கூடிய படங்கள் ஸ்பானிஷில் சொற்பமே.  எந்த நாட்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் படமாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட படத்தின் one line concept-ஐ விட்டு வெளியே செல்லாமல், விறுவிறுப்பு குறையாமல், திரைக்கதையில் விளையாடி நம்மை பரவசப்படுத்தும் படங்களாகவே இருக்கின்றன.   ரஷாமோன் வகை திரைக்கதை யுக்திக்கு இன்றுவரை  Ameros Perros மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  (இந்த வகையில் மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து" தான் தமிழில் இதுவரை வந்த ஒரே படம்!!)

Los Ojos De Julia (ஸ்பெயின்), ஆங்கிலத்தில் Julia's Eyes, 2010-இல் வெளிவந்த ஒரு பக்கா ஸ்பானிஷ் த்ரில்லர். 

பிறவியிலேயே கண்பார்வை இல்லாமல் இருப்பது ஒரு வகை.  ஆனால் நன்றாக இருந்த பார்வை சிறிது சிறிதாக முற்றிலுமாக பறி போய் வெளிச்சத்தையும், வண்ணங்களையும் இழந்து ஆழ்ந்த இருட்டில், ஒலிக்கும் ஒவ்வொரு சத்தமும் குழப்பத்தையும், பயத்தையும் உருவாக்கி செத்துத் தொலையலாம் என்ற முடிவை எடுக்க தூண்டுகிறது.

படத்தின் Opening...

ஸாரா தன் கைகளால் துழாவிக் கொண்டு வீட்டின் கீழ்ப் பகுதிக்கு வருகிறாள்.  பார்வை பறி போன நிலை.  கைகளை விரித்துக்கொண்டே பயத்துடன் அங்குமிங்கும் அலைகிறாள். அவளது காலில் ஒரு ஸ்டூல் தட்டுப்படுகிறது .  அதில் ஏறி, கூரையிலிருந்து தொங்கும் ஒரு சுருக்குக் கயிறை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறாள்.  திடீரென அங்கே யாரோ இருப்பது அவளுக்குத் தெரிகிறது.

“இங்குதான் இருக்கிறாயா? உன் கண்முன் இறந்து, நான் துடிதுடித்துச் சாகப்போகும் இன்பத்தை உனக்குத் தரமாட்டேன். இங்கிருந்து போய்விடு”  என்று சொல்கிறாள்

பயத்திலும் பரபரப்பிலும் தனது கழுத்தில் இருக்கும் சுருக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். அவளது கைகள் நடுங்குகின்றன.  திடீரென அவள் நின்றுகொண்டிருக்கும் ஸ்டூல் உதைக்கப் பட்டு ஒரு ஸ்டில் காமெராவின் பிளாஷ் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அறையெங்கும் தெறிக்கிறது. 

தொங்கிக் கொண்டே துடிக்க ஆரம்பிக்கிறாள் ஸாரா.

அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் ஸாராவின் இரட்டைச் சகோதரியான ஜூலியா மயங்கி விழுகிறாள். படம் துவங்கிய பின் படுவேகமாக க்ளைமாக்ஸை நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மர்மம் இருக்கிறது.  த்ரில்லர் என்பதற்கு ஒரு உதாரணக் காட்சி:

கண் தெரியாத சில பெண்கள், குளியறையில் நின்று சாராவைப் பற்றி பேசி கொண்டிருகின்றனர்... அவர்கள் கவனிக்கா வண்ணம் அவர்களிடையே வந்து நிற்கும் ஜூலியா அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருக்கிறாள்.  திடீரென்று அவர்கள் தங்கள் அருகில் இன்னொரு நபர் இருப்பதை உணர்ந்து காற்றில் கைகளை வீசி ஜூலியாவை பிடித்து விடுகின்றனர், அதன் பின்னர் அவள் தன்னை யாரென்று அறிமுகம்  செய்து கொண்டு அவர்களுக்கு சமாதானம்  சொல்கையில், ஒருத்தி  கேட்கிறாள்  "சரி, இருக்கட்டும்... யாரவன்?" "எவனும் இங்கில்லையே" என ஜூலியா சொல்ல," அப் பெண், "உன்னுடன் இங்கு ஒரு ஆண் வந்திருக்கிறான்.. உனக்கு பின்னே தான் நிற்கிறான்.... யாரவன்?" எனக் கேட்கிறாள்.  ஜூலியா திரும்பிப் பார்க்க, ஒருவன் ஓடுகிறான்.


Degenerative eye disease என்னும் நோயால்  கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்து  கொண்டே வரும் ஜூலியாவை கொலைகாரனும் பின் தொடர்கிறான்!  இதனிடையே  ஜூலியா தன் கணவனையும் தொலைத்து விடுகிறாள்.  பின்னர் எப்படி அந்த கொலைகாரனை கண்டு கொள்கிறாள், அவன் கண் தெரியாத சாராவையும், பின்னர்  ஜூலியாவையும்  துரத்தக் காரணமென்ன?  இறுதியில் ஜூலியா என்ன ஆகிறாள்? என்பதை  அவ்வளவு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்னொரு காட்சியில், ஆபரேஷனுக்குப் பின் கண்களில் கட்டுடன் ஜூலியா இரவில் படுத்திருக்கும் போது அந்நியனின் இருப்பை அறிந்து கொள்கிறாள்.  தன் உதவியாளரிடம் போனில் பேசிக் கொண்டே காலடிகளால் அளந்து வீட்டை விட்டு வெளியேறும் காட்சி பரபரவென்று இருக்கும்.  


படத்தின் முதல் காட்சியில் கண் தெரியாத சாரா கொலைகாரனிடம் பேசிக்கொண்டே தற்கொலை செய்து கொள்வதிலிருந்தே  நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பின் ஜூலியா, சாரா சென்ற ஒவ்வொரு இடமாக சென்று விசாரிக்க தொடங்க, அவளை கொலைகாரனும் பின் தொடர்கிறான்.  விசாரணையில் சம்பத்தப் பட்ட மேலும் இருவர் கொல்லப்  படுகிறார்கள்.  (அவர்கள் யாரென்று சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய்விடும்). ஒரு கட்டத்தில் கண் பார்வை முற்றிலும் பறி போய், மாற்றுக்கண் பொருத்தப்பட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு, கண்களில் கட்டு போட்டுக்கொண்டு திரிகிறாள்.. அப்போது நடக்கும் காட்சிகள் தான் உச்சக்கட்டம்.

படத்தில் ஜூலியவிற்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதனால் அவள் பார்வை  வழியே  தெரியும் காட்சிகள் எல்லாம் அவளுக்குத் தெரிவது போலே நமக்கும் மங்கலாக காண்பிக்கப் படும்.  ஜூலியா பார்க்க முடியாமல் தடுமாறும் இடங்களில் நாமும் தடுமாறுவோம்.  ஒரு கட்டத்தில் ஜூலியாவிற்கு ஆபரேஷன் செய்து கண்களில் கட்டு போட்ட பின்பு அவளால் யார் முகத்தையும் பார்க்க முடியாததால் நமக்கும் யார் முகத்தையும் காட்ட மாட்டார்கள்.   கொலைகாரனை யூகிக்க முடிந்தாலும் அவன் முகத்தை நாம் பார்க்க முடியாது.

Guillem Morales இயக்கத்தில் Belén Rueda சாரா, ஜூலியா  இரு வேடங்களிலும் கலக்கியிருப்பார்.  The orphanage படத்தில் நடித்த வயதானவரா இவர் என்று வியக்க வைத்திருப்பார்.கொட்டும் மழையில் ஜூலியா கயிறைப் பிடித்துக் கொண்டே தப்பிச் செல்லும் காட்சி, கொலையாளி ஜூலியாவிற்கு கண்பார்வை தெரிகிறதோ என சந்தேகித்து அவன் செய்யும் சோதனைகள், பக்கத்து வீட்டுப் பெண்ணின் முடிவு என பல காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சிகளில் ஒன்று...- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday, 4 November 2012

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 2உலு(ரு)க்கும் பாடல்கள் முதல் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும் 

இப்பதிவில் இளையராஜா பாடிய சில உலு(ரு)க்கும் duet பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இளையராஜாவைப் பற்றியோ அவர் இசையை சிலாகித்து எழுதுவதோ தேவையில்லா ஒன்று.  பல வருடங்களாக பலரும் பல விதங்களில் அதைச் செய்துவிட்ட படியால் புதிதாக அவர் இசை பற்றி நான் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. 

இணையத்திலோ, கடைகளிலோ இளையராஜா வாய்ஸ் ஹிட்ஸ் என்று தேடிப் பார்த்தீர்களானால் பெரும்பாலும் duet  பாடல்களில் நமக்குக் கிடைப்பது 

கடலோரக் கவிதைகளில் வரும் "அடி ஆத்தாடி இள மனசொன்னு",
தர்மபத்தினியில் வரும் "நான் தேடும் செவ்வந்திப் பூ", 
கீதாஞ்சலியில் வரும் "ஒரு ஜீவன் அழைத்தது", 
கரகாட்டக்காரனில் வரும் "இந்தமான் உந்தன் சொந்தமான்", 
நாடோடித் தென்றலில் வரும் "மணியே மணிக்குயிலே", 
தெய்வ வாக்கில் வரும் "வள்ளி வள்ளியென வந்தான்", 
பகல் நிலவில் வரும் "பூமாலையே தோள் சேரவா", 
அலைகள் ஓய்வதில்லையில் வரும் "காதல் ஓவியம் பாடும் காவியம்",
அவதாரத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது"

solo பாடல்களில் ராமராஜன், ராஜ்கிரண் படங்களில் இளையராஜா பாடிய தத்துவப் பாடல்கள் மற்றும்  தாயைப் பற்றிய சென்டிமென்ட் பாடல்களுடன் 

நாயகனில் வரும் "தென்பாண்டி சீமையிலே"
சின்னக் கவுண்டரில் வரும் "கண்ணுப் படப் போகுதய்யா"
பணக்காரனில் வரும் "உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி" (ராஜா பாடியதில் எனக்குத் துளியும் பிடிக்காத பாடல்)
இதயம் படத்தில் வரும் "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே"

போன்ற பாடல்களே மிகுந்து காணப்படும்.  எப்.எம்.இலும், டிவி சானல்களிலும் மேற்கண்ட பாடல்களே பெரும்பாலும் ஒலி/ஒளி பரப்பப் படுகிறது.  ராஜாவும் தான் நடத்தும் கச்சேரிகளில் தானே பாடும் போது இப்பாடல்களிலிருந்தே தேர்வு செய்து பாடுகிறார்.  அவர் பாடிய duet பாடல்களில் நாம் அதிகம் miss செய்த அருமையான பாடல்களில் சிலவற்றை  இங்கே தருகிறேன்.
Over To இளைய(சைய)ராஜா....

Feel Good Movies என திரைப்படங்களில் சிலவற்றை விமர்சகர்கள் தரம் பிரிப்பார்கள்.  இவ்வகை திரைப் படங்கள்  தமிழில் எப்போதாவது அபூர்வமாக வருவதுண்டு.  தயாரிப்பாளர்களும் பெரும்பான்மையான ரசிகர்களும் இவ்வகைப் படங்களை வரவேற்காதபடியால் தமிழில் இந்த genre குறைவே.  மகேந்திரன், ராதாமோகன், வி.ப்ரியா, வசந்த் போன்ற ஒரு சிலரின் வரிசையில் இயக்குனர் அகத்தியனையும் எடுத்துக் கொள்ளலாம். காதல்கோட்டை, விடுகதை படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கிய படம் 1998-இல் வெளிவந்த "காதல் கவிதை".  பாராக் காதலையும், இளமைVsமுதுமைக்குமான காதலையும் தனது முதல் இரு படங்களில் வழங்கியவர்  இப்படத்தில் முதன்முறையாக  இளையராஜாவுடன் இணைந்து கவிதைகளால் கவரப் படும் காதலைப் பற்றி எடுத்திருப்பார்.  ஆனால் படம் என்னவோ ஊத்திக் கொண்டது.

இப்படத்தின் டைட்டில் பாடலான "ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா" என்ற பாடலை இளையராஜாவும் சுஜாதாவும் பாடியிருப்பார்கள்.  பாடலுக்கேற்றாற்போல் இருவரும் கொஞ்சிக் கொஞ்சி பாடியிருப்பார்கள்.  முதல் சரணத்தில் "ஹேய்... நீரே மறைக்குற  நீரே..." என சுஜாதா  ஆரம்பிப்பது அசத்தலாக இருக்கும்.  படத்தின் டைட்டிலில் இசை: "இசைப் பிதா" இளையராஜா என காட்டியிருப்பார்கள்.  இப்படத்தில் இஷா கோபிகர் அறிமுகம், பிரசாந்த் இறங்குமுகம்.


1994-இல் R.K.செல்வமணியின் மொக்கை இயக்கத்தில் பிரசாந்த் & மோகினி நடிப்பில் வெளிவந்த படு பயங்கர flop ஆன படம் கண்மணி.  "உடல் தழுவ தழுவ", "ஓ என் தேவ தேவியே", "ஆசை இதயம் எழுதும் கடிதம்" போன்ற கலக்கல் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம்.  

இப்படத்தில் "நேற்று வந்த காற்று உன் பாட்டை கொண்டு வந்து தந்ததா" என்ற பாடலை ராஜாவும் ஜானகியும் பாடியிருப்பார்கள்.  ஒரு அழகான "PEP" பாடலுக்கு சரியான உதாரணம் இப்பாடல் தான்.  படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக்ராஜா என்று கேள்விப் பட்டேன். இதே மெட்டை கார்த்திக்ராஜா தான் இசையமைத்த "Grahan" என்ற இந்திப் படத்திலும் உபயோகப் படுத்தியிருப்பார்.


1995-இல் BR விஜயலட்சுமி இயக்கத்தில் SPB, ரகுமான், லாவண்யா நடிப்பில் வெளிவந்த படம் "பாட்டு பாடவா".  பெரிய ஹீரோக்களோ, இயக்குனரோ இல்லாத படமாயிருந்தும் சுமாராக ஓடி குறிப்பிட்ட வசூலைப் பெற்றது. படத்தில் கொடுமை என்னன்னா நம்ம SPB மனநலம் குன்றியவரா நடிச்சிருப்பார், ஆனா பாட்டு மட்டும் நல்லா பாடுவார், நம்ம சின்னத்தம்பி மாதிரி.  "சின்ன கன்னனுக்குள்ளே வந்த செல்ல""", "வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்"", கோரஸ் பாடுறகோஷ்டி நிக்குது"", "பூங்காற்றிலே சாலையோரம் பூ பூத்ததே" போன்ற மனதை மயக்கும் பாடல்களால் நிரம்பிய படம்.

"வழிவிடு வழிவிடு" பாடல் SPBயும் இளையராஜாவும் பாடிய duet. (இருவர் சேர்ந்து பாடினாலே அது duet தாங்க!!).  படத்தின் இன்னொரு டூயட் இளையராஜாவும் உமாரமணனும் பாடிய "நில்..நில்.. நில்.. பதில் சொல்..சொல்..சொல்.." என்ற slow rock வகையைச் சேர்ந்த பாடல்.  பாடலின் முதல் சரணத்தில் "தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மணம் வேண்டிடாதோ, நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்ந்திடாதோ"" என்ற வரிகளினூடே புல்லாங்குழலும் சேர்ந்து பாடும் ஒரு வித்தையை ராஜாவினன்றி யாரறிவார்!!


தமிழ்ப் படங்களில் அவ்வப்போது ஒரு trend வருவதுண்டு.  அதில் ஒன்று, புதுமுகங்களை வைத்து வித்தியாசமான காதல் கதையைத் தருகிறேன் என்ற பேரில் கண்ட கருமத்தைத் தருவது.  அப்படி வந்த காலத்தால் அழிந்து போன படைப்புகளில் ஒன்றுதான் சுந்தர் K விஜயன் என்பவரின்  இயக்கத்தில் குரு-பிரியங்கா என்ற புதுமுகங்களின் நடிப்பில்(!!) 1991-இல் வெளிவந்து, வந்த வேகத்தில் காணாமல் போன "என்னருகில் நீ இருந்தால்" என்ற காதல் காவியம்.

சும்மா சொல்லக் கூடாது, இப்படத்திற்கான  பாடல்களை இளையராஜா பிரித்து மேய்ந்திருப்பார்.  குறிப்பாக "ஓ.. உன்னாலே நான் பெண்ணாநேனே" பாடல் இன்றும் எனது one of the favorite melody.  படத்தில் ராஜாவும் ஜானகியும் பாடிய melody "இந்திர சுந்தரியே சொந்தம் என்று சொல்ல வா..."  ஜானகிக்கு கொஞ்சிப் பாட சொல்லியா தர வேண்டும்!?  பல்லவியின் முதல் வரி முடிந்ததும் "ஓ..ஹோ..ஓ..ஹோ..ஓ..ஹோ.." என்பதுதான் இப்பாடலின் சிறப்பம்சம்.


ஹீரோக்கள் எல்லாம் ஆளாளுக்கு பொம்பள வேஷம்  கட்டுறாங்க.. நானும் கட்டுறேன் என்று நம்ம பிரசாந்த் காட்டுன... ச்சே!! கட்டுன படம்,  அவங்கப்பா தியாகராஜன் இயக்கத்தில் 1995-இல் வெளிவந்த "ஆணழகன்". (வேஷம் கட்டாமலேயே பிரசாந்த் பாக்க "அப்படி"த்தான் இருப்பாருன்றது வேற விஷயம்..)  படம் நெடுக non stop காமெடியை சும்மா அள்ளி இறைத்திருப்பார்கள்.

இதில் மறைந்த ஸ்வர்ணலதாவும் இளையராஜாவும் இணைந்து பாடிய பாடல் "நில்லாத வெண்ணிலா நில்லு..நில்லு.. என் காதலி".  இப்பாடலில்  ராஜா பாடும் வரிகள் தமிழிலும் ஸ்வர்ணலதா பாடும் வரிகள் மலையாளத்திலும் இருக்கும்.  இந்தப் பதிவிலேயே இதைத் தான் the best song எனலாம். முதல்முறை கேட்கும் போது மிகச் சாதாரணமாகத் தோன்றும் இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் போது நம்மை அல்லேக்காக உள்ளிழுத்துக் கொள்(ல்லு)ளும்.  (ஆணழகனை மீண்டும் மீண்டும் காட்ட வேண்டாம் எனக் கருதி audio clip மட்டும் இப்பாடலுக்கு இணைக்கப் பட்டுள்ளது)


மேலே உள்ள அனைத்துப் பாடல்களும் 90-களில் வெளிவந்தவை.  என்பதுகளில் தான் இளையராஜா தன்னுடைய best ஐக் கொடுத்தார் என பலர் சொல்வது சரியானதன்று.  அக்னி நட்சத்திரம், அஞ்சலி படப் பாடல்கள் இப்போதைய trend க்கு ஏற்ப அன்றே இசைக்கப் பட்டவை.  இன்று கேட்டாலும் புதிதாகக் கேட்பது போல் இருக்கும்.  

80-களில் வெளிவந்த அருமையான ராஜாவின் duet-கள் பற்றி இன்னும் இரண்டு பதிவுகள் போடலாம்.  அதில் சில பாடல்கள் மட்டும்  உங்களுக்காக கீழே தொகுக்கப் பட்டுள்ளன. 

பாடல்: "பொன்னோவியம் கண்டேனம்மா பேரின்பம்"""
படம்: கழுகு (1981)
இணைந்து பாடியவர்: ஜானகி
 பாடல்: "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட"
படம்: மெட்டி (1982)
இணைந்து பாடியவர்: ஜானகி


பாடல்: "மலரே பேசு மௌன மொழி"
படம்: கீதாஞ்சலி
இணைந்து பாடியவர்: சித்ராபாடல்: "சின்னபொண்ணு சேலை"
படம்: மலையூர் மம்பட்டியான் 
இணைந்து பாடியவர்: ஜானகி
பாடல்: "சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்"
படம்: கல்லுக்குள் ஈரம்
இணைந்து பாடியவர்: ஜானகி- அன்புடன்
- மலர்வண்ணன்