Wednesday, 24 October 2012

Unfaithful - (18+) விமர்சனமல்ல.. வியப்பு !!இருபதுகளில் திருமணம் செய்து இனிக்க இனிக்க இன்பமாக இருந்து, முப்பதுகளில் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் இருந்தாலும் ஊடல் கூடல் என்ற தண்டவாளத்தில் நிறைகுறைகளுடன் சென்று நாற்பதை தாண்டி செல்லும் போது தம்பதிகளுக்குள் ஓர் அசாதாரண வெறுமை அல்லது வெற்றிடம் போன்று ஒன்று வரும்.  வாய்த்திருக்கும் அனைத்தும் பற்றாக் குறையாகவே தோன்றும்.  பக்திநிலை, முக்திநிலை, சித்திநிலை, மோனநிலை என பல நிலைகளை கடந்து வந்திருந்தாலும் இந்த நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வரை உள்ள ஏழரை நிலையைக் கடந்து செல்வது நிச்சயம் ஆய கலைகளுள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

இந்த தருணத்தில் கணவனும் மனைவியும் தங்களது காதலை கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  "கிடப்பது கிடக்கட்டும், கிழவிய தூக்கி மனையில வை" என்பது போல தொழில், போட்டி, வாய்ப்புகள், வேலை, உறவினர், வெற்றி, தோல்வி, ஈகோ, லட்சியம், போன்ற அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பாக காதலை முதலிலிருந்து துவக்க வேண்டும்.  இருபது வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல வேகம் இருக்காதுதான் .  ஆனால் இப்போது இருவரும் நினைக்க, பேச, சுற்ற, வருட, குழைய, வாதிட, மேலிட, மேவிட நிறைய இருக்கும்.  இவையனைத்தையும் காதலினூடே கலந்து விட்டால் கரைந்து போனவர்கள் பின் மீள முடியாது.

Extra Marital Affair என்பது தமிழ்ப் படங்களில் அவ்வப்போது வருவதுண்டு.  பெரும்பாலும் பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்றோர் படங்களில் இதைக் காணலாம்.   பெண்களை உயர்வாகக் காட்டுகிறேன் பேர்வழி என்பதற்காகவோ, பெண்கள் கூட்டம் திரையரங்கில் குறைந்து விடுமோ என்ற நினைப்பிலோ, மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கிவிடுமோ என்ற பயத்திலோ நம் தமிழ்ப்படங்களில் இந்த Extra Marital Affair-ல் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.  சம்பத்தப்பட்ட ஆண், கதாநாயகனின் அப்பாவாகவோ, அக்கா புருசனாகவோ இருப்பார், இறுதியில் திருந்தி அந்த உறவை முறித்துக் கொள்வார்... அவரின் ஆசை நாயகி வில்லியாகவோ, ஒழுக்கம் கெட்டவராகவோ சித்தரிக்கப் படுவார் (ஒருவேளை ஆணாதிக்கமோ!!)

2002-ல் Richard Gere,  Diane Lane,  Olivier Martinez இவர்கள் நடிப்பில் Adrian Lyne இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க திரைப்படம் "Unfaithful ".

கான்னியும் (Diane Lane) எட்வர்ட் சம்மரும் (Richard Gere) தங்களது நாற்பதுகளில் இருக்கும் நியூயார்க்கின் புறநகரில் எட்டு வயது மகனுடன் இருக்கும் தம்பதியினர்.  முழுமையும் புரிதலும் இருவருக்குள்ளும் நிரம்பி இருந்தாலும், வயதின் காரணமாக அவர்களுக்கிடையேயான சொல்லென்னா உணர்வுகள் முற்றிலுமாக வெளிப் படுத்தப் படாமல் வேலையிலும், குழந்தை வளர்ப்பிலும், சமூக சேவையிலும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குளுமையான நாளில் மன்ஹட்டனில்  தன் மகன் சார்லியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பொருட்களை சுமந்து கொண்டு வரும் வழியில் கான்னி ஒரு மிதமான சுழலில் சிக்கிக் கொண்டு டாக்சி கிடைக்காமல் அல்லாடுகிறாள்.  Windstorm-ன் வேகமும் பொருட்களின் பாரமும் சேர்ந்து கான்னியை நிலைகுலையச் செய்கிறது.  அவ்வழியே புத்தகங்களைச் சுமந்து கொண்டு தடுமாறி வந்து கொண்டிருக்கும் பால் மார்டல் (Olivier Martinez) மீது மோதி இருவரும் கீழே விழுகின்றனர்.  கான்னியின் முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது.  பிரெஞ்சு மொழியில் புலம்பிக் கொண்டே சிதறிய புத்தகங்களையும், கான்னியின் பொருட்களையும் பால் கொண்டு வந்து தருகிறான்.

கான்னியின் காலில் அடிபட்டிருப்பதைக் கண்ட மார்டல் அருகே உள்ள தான் தங்கியிருக்கும் வீட்டைக் காட்டி அங்கு வந்து முதலுதவி செய்து கொண்டு நிதானமாகப் போகலாம் என்று சொல்ல கான்னியும் சம்மதித்துச் செல்கிறாள்.  மூன்றாம் அடுக்கில் உள்ள நூலகம் போலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கும் மார்டல் தன்னை இருபத்தெட்டு வயதுடைய பிரெஞ்சு எனவும், அரிய புத்தகங்களை தேடியலைந்து கண்டுபிடித்து அதை விற்கும் பணியினை செய்து வருவதாகவும் சொல்கிறான்.  கான்னி குளியலறைக்குச் சென்று தன் காயங்களை சுத்தம் செய்து கொண்டு கிளம்புவதாகச் சொல்ல, மார்டல் அவளுக்கு காபி தரும் வரை காத்திருக்கச் செய்ய, கான்னி தான் அங்கிருப்பதை சங்கடமாக உணர்ந்து வெளியே செல்ல முற்பட, அவளை அங்கிருக்கும் குறிப்பிட்ட புத்தகம் ஒன்றை எடுக்கச் சொல்லி படிக்கச் சொல்கிறான்.  உமர் கயாம்மின் கவிதைப் புத்தகம் அது.  அது மேலும் அவளைச் சங்கடமாக்கி கிளம்ப எத்தனிக்க, புத்தகத்தை அவளிடமே கொடுத்தனுப்புகிறான்.

நடந்த நிகழ்வை அன்றிரவு கான்னி, எட்வர்டிடம் சொல்கிறாள்.  எட்வர்ட் சிறு புன்னகையுடன் ""அவன் அழகானவனா, அவனுக்கு ஒரு வைன் பாட்டில் வாங்கி கொடுத்து விடு"" என போகிற போக்கில் நகைச்சுவைக்காக சொல்லி விட்டுச் செல்கிறார்.  மறுநாள் உமர் கயாமின் கவிதைகளை அவள் எடுத்து வாசிக்க மார்டலின் ஞாபகம் அவளுக்குள் வந்து செல்கிறது.  எட்வர்ட் சொன்னதுபோல் அவனுக்கு ஒரு வைன் பாட்டிலை வாங்கிக் கொண்டுத்து நன்றி சொல்லி பார்த்துவிட்டு வந்தால் என்ன என அவளுக்குத்  தோன்றுகிறது.  ரயில் நிலையத்திலிருந்து அவனுக்கு போன் செய்கிறாள்.

போன் செய்கிறாள் என அந்த ஒரு சீனை சர்வ சாதரணமாக சொல்ல முடியாது.  இந்த இடத்திலிருந்து இப்படத்தை Diane Lane, soloவாகத் தூக்கிச் செல்கிறார்.  தன்னைவிட சிறுவயதுப் பையனிடம் என்னவென்று பேசுவது, அவன் என்ன நினைப்பானோ என்ற நினைப்பு ஒருபுறம்... அவன் மேல் உள்ள இனந்தெரியாத ஈர்ப்பு ஒருபுறம்... கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு டெலிபோன் பெட்டியில் போடுவதும், யோசிப்பதும், பின் எடுப்பதும், இதை ஒரு ரிலே போல் திரும்பத் திரும்ப செய்யும் போது அவர் காட்டும் முகபாவனைகள்... அப்பப்பா... எத்தனை டேக்குகள் வாங்கினார் என்று தெரியவில்லை.  ஆனால் அசத்தல்...
அவனுக்கு  போன்  செய்கிறாள்.  அவன் வீட்டில் சென்று அவனை சந்திக்கிறாள்.  காபி...  அவள் கண்களை மூடச் செய்து ப்ரெயிலி முறையில் அவள் விரல்களைப் பற்றி ஒரு கவிதையை வாசித்துக் காட்டுகிறான்.  உணர்ச்சி மேலிட அவள் அவனை விடுத்து பட்டென்று வெளியேறி விடுகிறாள்.  குற்றவுணர்வு தூண்ட கணவனுக்கு ஒரு ஸ்வெட்டரை வாங்கிக் கொண்டு அவன் அலுவலகம் சென்று அணிவிக்கிறாள்.  இருவரும் அனைத்துக் கொள்கின்றனர்.  மறுநாள் மீண்டும் இளைஞனை சந்திக்கிறாள்.  இம்முறை இருவரும் நடனமாடுகிறார்கள்.  பாடல் இடையில் நின்றுவிட ""இது தவறு" என அவனிடம் சொல்லி வெளியேறுகிறாள்.   சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வருகிறாள்.  "என்னுடைய ஓவர்கோட்டை மறந்து விட்டேன்"  என சொல்லி அதை எடுக்கச் செல்கிறாள்.  அவன் அவளை அப்படியே அனைத்து தூக்கிச் செல்கிறான்.  

கட்...
அடுத்த காட்சி கான்னி ட்ரெயினில் செல்கிறாள்.  காலை மடக்கி உட்கார்ந்திருக்க அவள் கால்களில் அன்று அடிபட்ட காயம் தெரிகிறது.  அவள் முகத்தில் அழுகை, கோபம், மகிழ்ச்சி, நிறைவு, குற்றவுணர்வு, குழந்தைத்தனம் அனைத்தும் ஒரு கலவை போல வந்து வந்து செல்கிறது.  ஒருவரால் இப்படிக் கூட நடிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருக்கும் போதே சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போவது போல் பார்வையாளனுக்கு காண்பிக்கப் படுகிறது. மார்டல், கான்னியை அலேக்காகத் தூக்கிச் சென்று கட்டிலில் போடுகிறான்.  அவள் உடைகளைக் களைகிறான்.  அவளுக்கு வேண்டும் போலவும் இருக்கிறது, பயமும் குற்றவுணர்வும் தடுக்கிறது.  அதீத காமத்தாலும் பயத்தாலும் அவள் உடல் உதறுவது ஏதோ அந்த இடத்தில் நாமே இருப்பதுபோல் நமக்குத் தோன்றுவதை தடுக்க இயலாது.  "Body language-Body language" என்று சிலாகித்து கூக்குரலிடுபவர்கள்  Diane Lane இந்த சீனில் காட்டுவதைப் பார்க்க வேண்டும்...  அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடங்க வெகுநேரம் ஆகும்.  எனக்கு சில நாட்கள் ஆனது...

இதன் பின் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு பக்கா த்ரில்லர் படத்துக்குரிய வேகத்துடன் செல்கிறது.  கான்னி - மார்டல் சந்திப்பு தினமும் தொடர்கிறது.  எட்வர்டுக்கு சந்தேகம் வலுக்கிறது.  தன் டிடெக்டிவ் நண்பனை துப்பறியச் சொல்கிறார்.  அவர் போட்டோக்களுடன் நிரூபிக்கிறார் (இதைப் பார்த்து உங்களுக்கு "திருட்டுப் பயலே" படம் ஞாபகம் வந்து தொலைத்தால் நான் பொறுப்பல்ல).  எட்வர்ட், மார்டலின் வீட்டுக்குச் செல்கிறார்.  இருவரும் வோட்கா அருந்துகின்றனர்.  கலைந்து கிடக்கும் அவனது கட்டிலை வெறுப்புடன் எட்வர்ட் நோக்குகிறார்.  அருகில் ஒரு "snow globe", அது.... எட்வர்ட், சில வருடங்களுக்கு முன் கான்னிக்கு கொடுத்த பரிசு..!!  அதைக் கையில் எடுத்து மார்டலின் மண்டையில் அடிக்க அது அவனுக்கு மரண அடியாக விழுகிறது.

மார்டலின் உடலை எட்வர்ட் அப்புறப் படுத்த முயலும் போது அவனுக்கு ஒரு போன் வருகிறது...  யாரும் எடுக்காமல் போகவே வாய்ஸ் மெயிலில் கான்னியின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது ...

இதன்பின் வரும் சம்பவங்களையும் திருப்பங்களையும் படத்தின் முடிவையும் எழுதிவிட்டால் படம் பார்க்கும் போது ஏற்படும் சுவாரசியம் பார்ப்பவர்களுக்கு குறைந்துவிடும் என்பதால் இத்துடன் படத்தின் கதையை பற்றி அலசுவதை நிறுத்திவிடுவோம்.  Indecent Proposal, Fatal Attraction போன்ற படங்களின் வரிசையில் வரும் படம் அல்ல இது.  த்ரில்லர் மட்டுமே concept என்றில்லாமல் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து அதை நாயகியின் உடல் மொழியின் மூலம் ஒரு கவிதையாகக் காண்பித்த அற்புதமான தவற விடக் கூடாத படைப்பு இது...


- அன்புடன்
- மலர்வண்ணன்