Friday, 16 August 2013

மூன்று பேர்; இரண்டு காதல்

இந்த வாரத்தில் ஒருநாள் அலுவல் குறித்து காரைக்கால் செல்ல வேண்டியிருந்த படியால் சென்னையிலிருந்து அதிகாலையில் கிளம்பி பஸ்ஸில் பாண்டிக்குச் சென்று அங்கிருந்து காரில் காரைக்கால் சென்று வேலையை முடித்து மாலை பாண்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பொழுது மணி 6.  இது இந்த பதிவுக்கு தேவையில்லாத விபரம்... நிற்க வேண்டாம்... மேலே...

பஸ்ஸில் அப்போதைக்கு என்னுடன் சேர்த்து ஏழெட்டு பேர் தான் இருந்தனர்.  ECR வழி என நினைத்து வலதுபுறம் சன்னலோரம் அமர்ந்தேன், ஆனால் வண்டி திண்டிவனம் வழி போனது வேறு கதை.  20 அல்லது அதிகபட்சமாக 21 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் பையனும் ஏறி எனக்கு இடது புறம் முந்தின சீட்டில் அமர்ந்தனர்.  பெண் பயணிப்பவள், பையன் வழியனுப்ப வந்தவன் என்று பார்த்தவுடன் தெரிந்தது.  இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டும், சீண்டிக்கொண்டும், மேலோட்டமாக(!!) தழுவிக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்.  உள்ளுக்குள் இவர்களை வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்று பட்டாலும், மிக அருகில் நடக்கும் நிகழ்வாகையாலும், குறுக்கில் வேறு யாரும் இல்லாததாலும் நிழல் போன்ற அசைவுகள் மூலம் அவர்களின் இயக்கங்கள் மூளைக்குள் படம் போட்டு காட்டின.
 

வெயில் தடுப்பு காகிதம் ஒட்டப்பட்டு உள்ளே நடப்பது ஏதும் வெளியே தெரிய வாய்ப்பில்லாமலிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகள் நிறைய ஆரம்பித்தன.  கைக் குழந்தையுடன் வந்த தம்பதிகள் நேரே என்னிடம் வந்து "சார் கொஞ்சம் முன்னாடி மாறி உக்காந்துக்குறீங்களா?"-ன்னு கேட்டனர்.  பஸ்ஸில் இன்னும் சில பேர் ஒற்றையாக உக்காந்திருக்க கரெக்டா ஆளைக் கண்டுபிடிச்சு எப்படித்தான் வந்து கேக்குறாங்களோ?  அவங்க நம்மளத்தான் அப்ரோச் பண்ண வர்றாங்கன்றத தெரிஞ்சு டெரர்றா இருக்கணும்னு முயற்சி பண்ணாலும்  நம்ம மூஞ்சி இன்னும் பிஞ்சாவே மத்தவங்களுக்குத் தெரியும் போல!!  எந்திருச்சி எடம் கொடுக்கலன்னா குழந்தைய விட்டு அடிக்கச் சொல்லிடுவாங்க போல இருந்த படியால் எழுந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தேன்.  இப்போ அந்த இளஞ்ஜோடிகள் எனக்கு மிக அருகில்.

கையில் பாட்டில், டம்ளர் சகிதம் இரு நடுவயது நாளைய பாரதங்கள் லேசான தள்ளாட்டத்துடன் ஏறின.  நடத்துனர் "ஏம்பா, இது bar கிடையாது, எறங்கு"ன்னு சொல்ல பிளாஸ்டிக் டம்ளர்களை தூக்கியெறிந்து விட்டு, "குடிக்கல"ன்னு சொல்லிவிட்டு பின் சென்று அமர்ந்தனர்.  நடத்துனர் மீண்டும், "இது ஏசி பஸ், நீங்க குடிச்சிட்டு வந்து ஏறினா, மத்தவங்க எப்படி நாத்தத்தைப் பொறுத்துக்கிட்டு கூட வருவாங்க, இறங்குங்க"ன்னு சொல்ல; அந்த சிங்கங்கள், "எறங்க முடியாது, உன்னால ஆனதை பாத்துக்கோ, எங்களை முடிஞ்சா இறக்கிக் காட்டு" என சித்திரைத் திருவிழாவில் "முடிஞ்சா வழக்குப் போடுங்க"ன்னு சொன்ன தலைவர் மாதிரி சவால் விட்டனர்.  நடத்துனர் சிரித்துக் கொண்டே டிக்கெட் போட ஆரம்பித்தார்.

இப்போது அந்த ஜோடிகளை நன்கு கவனித்தேன்.  பார்ப்பதற்கு இருவருமே நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இருந்தனர். நல்ல அழகுடன் பொருத்தமாகவே இருந்தனர்.  நாடகக் காதல் போல் தெரியவில்லை; அப்பெண்ணும் ஜீன்சுக்கும், கூலிங்கிளாசுக்கும் மயங்குபவள் போலும் இல்லை.  நாற பரம்பரை, நோண்ட பரம்பரை, நொங்கு பரம்பரை என்று காட்டு விலங்குகளின் படங்களை ப்ளெக்ஸ் பேனரில் அடித்துக் கொண்டு திரியும் கூட்டம் இவர்களைப் பிரிக்காமலிருப்பார்களாக என நினைத்துக் கொண்டேன்.  வண்டி நகர ஆரம்பித்தது... பையன் பிரியாவிடை கொடுத்து இறங்கினான்.  நடத்துனர் இன்னொரு பெண்ணை அங்கு அமர்த்த முயற்சிக்க இவளோ "ஆள் வரும்" என்று சொல்லிவிட்டாள்.

பஸ், நிலையத்தை விட்டு வெளியே வந்து ஒரு திருப்பத்தில் திரும்பி நின்றது.  சீருடையில் இரு காவலர்கள் ஏறி நேரே நமது சிங்கங்களிடம் சென்று இறங்கச் சொன்னனர்.  "டிக்கெட் வாங்கியிருக்கோம்"ன்னு சிங்கங்கள் ரூல்ஸ் பேச, "வாங்க, வேற வண்டியில அனுப்பி வைக்கிறோம்"ன்னு காவலர்கள் கொஞ்சியழைத்தும் எழ மறுத்தனர்.  பிறகென்ன... பொத்.. பொத்தென்று இருவருக்கும் பின்னங்கழுத்தில் சில-பல பட்டாயா, கோட்டக்கல் மசாஜ் செய்து பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.  "சார், அடிக்காதீங்க..சார், அடிக்காதீங்க..சார்!!" என்ற வசனத்தையே இருவரும் திரும்பத் திரும்ப சொல்லியபடி ரிங் மாஸ்டர்கள் உடன் இறங்கினர்.

நடத்துனர், "ஏம்மா இன்னுமா ஆள் வரல" என்று கேட்க அவள், "வருவாங்க.." என்று சொல்லிக் கொண்டே பரபப்புடன் நாட்டுக் கோழி தீனி பொறுக்குவதைப் போல செல்போனை நோண்டிக் கொண்டே எழுந்து நின்று வெளியே கண்களை ஓட விட்டாள்.  அடுத்த திருப்பத்தில் வண்டியை நிறுத்தி இவள் வயதையொத்த வேறொரு பையன் ஏறினான்.  அவனைக் கண்டதும் புன்னகையுடன் இவள் அமர, அவனோ உடனே உட்காராமல் அடுத்த ஏரியாவிற்கு போன தெரு நாயாக பம்மிக் கொண்டே இருபுறமும் நோட்டம் விட்டபடி சிறிது நேரம் கழித்து அவளருகில் அமர்ந்தான்.  சரி, உடன் படிப்பவனாகவோ, உடன் வேலை செய்பவனாகவோ, நண்பனாகவோ, சகோதரனாகவோ இருக்கலாம் என நினைத்தேன்..

பஸ், டோல் பிளாசா தாண்டியதும் உள்ளே இருந்த விளக்குகள் அணைக்கப் பட இயர் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தேன்.  கட்டணக் கழிப்பறையில் ஒட்டியிருக்கும் பிட் நோட்டீசில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் இருப்பது போல்  பக்கத்து சீட் பையன் நெளிந்து கொண்டிருக்க, என்னதான் செய்யுறான் இவன் என்று பார்வையை ஓட்டினேன்.  பையன் # 1 என்னவெல்லாம் செய்து விட்டுச் சென்றானோ அதே வேலைகளை பையன் # 2 தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்..!! அவளும் தான்..!! "இருட்டு பஸ்ஸில் முரட்டு கிஸ்ஸு"-ன்னு ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு கமல்ஹாசனுக்கே சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.


"காதல்ன்றது செடியில ஒரே முறை பூக்குற பூ மாதிரி; மரத்துல காய்க்கிற காய் மாதிரி; தட்டுல நக்குற நாய் மாதிரி; சந்துல நிக்குற பேய் மாதிரி; கமுந்து படுக்கிற பாய் மாதிரி"ன்னு வசனம் எழுதுறவன் எல்லோரையும் நினைக்க, அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.  பலருடன் காதல் வரலாம்.. தப்பில்லை, அது இயல்பு; பலருடனும் ஒரே நேரத்தில் எப்படி வருகிறது??  அதுவும் 10 நிமிட இடைவெளியில் அடுத்த ஆளா..!!

அவளைக் குறை சொல்வதா? அந்தப் பசங்களைக் குறை சொல்வதா? அச் செல்வங்களைப் பெற்றெடுத்தவர்களை குறை சொல்வதா? சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்க்கும் பல நவீன வாத்திகளை குறை சொல்வதா? என்னைப் போல் வேடிக்கை பார்த்த சமூகத்தை குறை சொல்வதா?  மீண்டும் கண்களை மூடி இசையை ரசிக்க ஆரம்பித்தேன்...
"ஆதலால்... ஆதலால்... காதல் செய்வீர்..." என யுவன் ஷங்கர் ராஜா உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார்..!!- அன்புடன்
- மலர்வண்ணன்

4 comments :

 1. I happened to experience the same when i traveled from Kumbakonam to karaikaal in june. But only Phone. Whole 3 1/2 hrs the girl was talking / juggling to 2 different boys alteranatively every 10 minute. The point to note is one guy who seems to be the lover got doubt( he tried many times when the other guy was on line) and she could manage him by using just one sentence. "Don't you beleive me?"

  ReplyDelete
  Replies
  1. Audio:7 Video:8

   //But only Phone//
   அடுத்த முறை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்..

   //"Don't you believe me?"//
   Third degree of fleecing romance

   Delete
 2. இந்தியா வல்லரசு ஆயாச்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டாக்டர் சார்..

   //வல்லரசு ஆயாச்சு!//
   வல்லரசுன்றது கேப்டன் விஜயகாந்த் படமாச்சே..!!
   இந்தியா ஏன் அவர் கிட்ட ஆய் போகணும்..?!!

   Delete